

ராமனுடன் இணைந்த கிருஷ்ணன்
இந்தியாவில் பிறந்து, இங்கேயே பயின்று, இங்கேயே ஆய்வு செய்து நோபல் பரிசு பெற்ற ஒரே அறிவியல் அறிஞர் சர் சி. வி. ராமன் என்று அழைக்கப்படும் சந்திரசேகர வெங்கடராமன். 98 ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் உலகம் ஏற்ற 'ராமன் விளைவு' ஏற்படுத்திய தாக்கம் அதிகம்.
ராமனின் ஆய்வகத்தில் இணைந்து பணியாற்றிய இன்னொரு அறிஞர் கே.எஸ்.கிருஷ்ணன் என்று அழைக்கப்படுகிற கரியமாணிக்கம் சீனிவாச கிருஷ்ணன். இவரது அறிவியல் பங்களிப்பு குறித்து பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
தமிழ்நாட்டில், தற்போதைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிற்றூரான வத்திராயிருப்பில், 1898 டிசம்பர் 4-இல் கே.எஸ். கிருஷ்ணன் பிறந்தார். ஸ்ரீவில்லி
புத்தூர் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, அவருக்கு அறிவியல் ஆர்வம் அதிகரித்தது. அவரது தீவிர அறிவும், கற்றல் ஆர்வமும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உயர்கல்வியை முடிக்கவும், பின்னர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் சேரவும் வழிவகுத்தது.
இயற்பியலுக்கான வருடாந்திர 'அபெர்டீன்' பரிசை வென்ற அவர், 1918-இல் கல்லூரியில் வேதியியலில் ஒரு செயல்விளக்கப் பணியாளரின் வேலையைப் பெற்றார். அங்கு பணியில் இருந்தபோது, அறிவியல், கணிதம் குறித்த முறைசாரா மதிய உணவு நேர விவாதங்களை ஏற்பாடு செய்தார். இது மற்ற மாணவர்களை ஈர்த்தது.
1920- ஆம் ஆண்டில், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுகலைப் பட்டத்தைப் பெற்ற கிருஷ்ணன், இந்திய அறிவியல் வளர்ப்புச் சங்கத்திலும், அதன் பின்னர் 1923- ஆம் ஆண்டில், ஆராய்ச்சி அறிஞராக ராமனின் குழுவிலும் சேர்ந்தார். பெரும்பாலும் விடியற்காலையில் அவர் தனது ஆய்வகப் பணிகளைத் தொடங்குவார். பல்வேறு திரவங்களில் ஒளிச் சிதறலை ஆராய்ந்தார். இது ராமன் விளைவின் புதிய கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது.
1928-இல் மூலக்கூறுகளால் ஒளி திசை திருப்பப்படும்போது, ஒளியின் அலைநீளத்தில் ஏற்படும் மாற்றத்தை விவரிக்கும் ஒரு நிகழ்வு.
இந்தக் கண்டுபிடிப்பில் கிருஷ்ணன் ஒரு முக்கியப் பங்கைக் கொண்டிருந்தார். ராமன் விளைவின் அடிப்படையை உருவாக்கிய சிதறல் நிகழ்வுகளை தனிமைப்படுத்தி, புரிந்துகொள்வதில் அவரது சோதனைத் திறனும் பகுப்பாய்வு நுண்ணறிவும் முக்கியப் பங்கு வகித்தன.
1930 டிசம்பர் 11-இல், ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற தனது நோபல் சொற்பொழிவின்போது, புதிய கண்டுபிடிப்புப் பணியில் கிருஷ்ணனின் முக்கியப் பங்கை ராமன் தானே ஒப்புக் கொண்டார். கிருஷ்ணனும் ராமனின் சாதனையைக் கொண்டாடி, தனது பணியைக் குறையாத உற்சாகத்துடன் தொடர்ந்தார்.
கிருஷ்ணனின் பங்களிப்புகள் ராமன் விளைவுடன் மட்டும் நின்றுவிடவில்லை. 1928 -ஆம் ஆண்டில் டாக்கா பல்கலைக்கழகத்தில் அவர் படிகங்களின் காந்தப் பண்புகள் குறித்த முன்னோடி ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
படிகங்களின் காந்தத் திசையொற்றுமை குறித்த அவரது ஆராய்ச்சி, திசையைப் பொறுத்து காந்தப் பண்புகள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கான அடித்தளத்தை அமைத்தது. இது பொருள் அறிவியல், பொறியியல் போன்ற துறைகளில் முக்கியத்துவம் பெறுகிறது. அவரது நுணுக்கமான சோதனை நுட்பங்கள் எதிர்கால ஆய்வுகளுக்கு ஓர் அளவுகோலாக மாறியது.
பின்னர், அலகாபாத் பல்கலைக்கழகம், தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் திடப்பொருள்களின் இயற்பியல், வெப்ப கடத்துத்திறன், வெப்ப இயக்கவியல் ஆகியவற்றில் தனது ஆராய்ச்சியை விரிவுபடுத்தினார். ராமனுடன் இணைந்து பல முக்கிய ஆய்வு முடிவுகளை 'நேச்சர்' போன்ற முன்னணி இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகளாக வெளியிட்டுள்ளார் கிருஷ்ணன்.
நாடு சுதந்திரம் அடைந்தவுடன், அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் 1947- ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட முதல் ஆய்வகமான தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் தொடக்க இயக்குநர் பொறுப்பில் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். நாட்டின் அறிவியல் உள்கட்டமைப்பின் வளர்ச்சிக்குக் கணிசமாக அவர் பங்களித்தார்.
பணிவு, தாராள மனப்பான்மைக்குப் பெயர் பெற்ற கிருஷ்ணன், ஒரு முறை ஒரு சிக்கலான இயற்பியல் கருத்தை இளம் மாணவர்கள் குழுவுக்கு விளக்குவதற்காக ஒரு முழு மதிய நேரத்தையும் செலவிட்டார். இவரது சாதனையை பிரதமர் நேருவும் பாராட்டியுள்ளார்.
1940-இல் ராயல் சொசைட்டியின் ஃபெலோவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946-இல் 'நைட்' பட்டத்தையும், 1954-இல் பத்ம பூஷண் விருதையும், 1958-இல் முதன் முதலாக பட்நாகர் நினைவு விருதையும்பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.