

எனக்கு வயது 63. அடிக்கடி தலைச்சுற்றல், மயக்கம் ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் மிக அதிகமாக உள்ளது. இது எதனால்? எதிர்காலத்தில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்? எப்படிச் சமாளிப்பது?
-ரவீந்தர், பட்டாபிராம்.
ரத்தக் குழாய்கள் விரியவும், சுருங்கவும் அடையும் இயல்பு பெற்றிருப்பதால் ரத்த அழுத்தத்தைச் சமாளிக்க சாத்தியமாகிறது. இவ்வாறு இயங்கும் ரத்தக்குழாய்களை இயக்குவிக்கும் சில நரம்புகள் உண்டு. இவற்றை 'வாஸோ மோட்டார்' நரம்புகள் என்பர்.
சில தாதுப்பொருள்கள் ரத்தக் குழாய்களில் தங்குவதால் அவற்றின் சுருங்கி விரியும் சக்தி குறைகிறது. அதனால் ரத்த அலைகளின் மோதலால் அதிகரித்த அழுத்தம் ரத்தக் குழாய்களின் மேல் உண்டாகிறது. அதனால் அக்குழாய்களை இயக்குவிக்கும் நரம்புகள் அதிர்ச்சியுறுகின்றன. இவ்வதிர்ச்சி அலை அலையாக மூளைக்கும் எட்டுகிறது. தலைச்சுற்றல் உண்டாவதற்கு அதுவே காரணமாகிறது.
மேற்சொன்ன வகையில் பெரிய ரத்தக் குழாய்களே தமது சுருங்கி விரியும் சக்தியை இழந்த நிலையில் ரத்த அழுத்தத்தால் தாக்கப்படுகின்றன என்றால், நாடி எப்படி இருக்கும்? சம்மட்டிக்கொண்டு அடிப்பது போல் இருக்கும். இவ்வகைத் தாக்குதலை மூளையில் உள்ள மிக மிக மெல்லிய ரத்தக் குழாய்கள் எப்படித் தாங்கும்? முடியாது தான். இதன் விளைவு என்ன?
சில சமயம் தலையில் பாரமும் தலைச்சுற்றலும் ஏற்படும். மயக்கமும் உண்டாகும். எதிர்காலப் பாதிப்புகளாக மெல்லிய மூளை ரத்தக் குழாய்கள் ரத்த அழுத்தம் காரணமாக வெடித்து மூளையின் உட்புறங்களில் ஒழுகிப் பாய்ந்து உறைந்து கட்டி நின்றுவிடும். இதனால் மூளையின் கேந்திரங்கள் நசுங்குவதால் 'பாரிச வாயு' எனும் பக்கவாதம் எனும் உபாதையும் ஏற்படலாம். இவற்றைத் தடுக்க சில உபாயங்களைக் கையாளலாம்.
எளிதில் செரிக்கக் கூடியதும், விபரீதமான ஊட்டத்தைத் தடுப்பதுமான சாதாரண உணவுகளைத் தான் அதிகமாக உபயோகிக்க வேண்டும். பச்சைக் கறிகாய்களும் முக்கியமாகக் கீரைகளும் மற்றும் கமலா, சாத்துக்குடி, பச்சைத் திராட்சைப்பழம் போன்ற நீரின் அம்சம் அதிகமுள்ளவைகளையும் அதிகமாக ஏற்பது நல்லது. பருப்புகளில் பயத்தம் பருப்பு நல்லது.
மலச்சிக்கல் சந்தேகத்துக்குக்கூட இருக்க இடம் கொடுக்கக் கூடாது. குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இரவில் படுக்கும் முன்போ, பகலில் ஓய்வுள்ள நேரத்திலோ பாதங்களின் அடிப்புறத்தில் மட்டும் விளக்கெண்ணெய்யை அழுத்தித் தேய்த்து விட்டுக் கொள்வதும் நல்லதே.
அடிக்கடியும், முடியுமானால் தினந்தோறுமே எண்ணெய்க் குளியல் செய்வது மிகவும் நல்லது. இதனால் உடலின் சகிப்புத்தன்மை மேம்படுவதுடன் வயோதிகத்தின் விபரீத விளைவுகளையும் தடுத்துக் கொள்ள முடியும்.
புளியை சமையலில் அறவே நீக்கி, நெல்லிக்காய் அல்லது புளிப்பு மாதுளை அல்லது அளவோடு எலுமிச்சைப் பழ ரசம் ஆகியவற்றைப் புளிக்குப் பதிலாக உபயோகிக்க வேண்டும்.
பொதுவாக அரிசிக்கு மாற்றாக கோதுமை, பார்லி ஆகியவற்றை உபயோகிப்பதும், கூடுமானால் இரவு உணவை நிறுத்தி, ஏதாவது பலகாரம், பழம், பால் இவற்றுடன் இருப்பது நல்லது.
உடல் பருமன், சர்க்கரை உபாதையில் முழுப் பட்டினி போடக் கூடாது. பட்டினி காரணமாகவே ஒருவகை தலைச்சுற்றல் வரலாமே! ரத்தக் குழாய்களை இயக்குவிக்கும் நரம்புகளின் இனக் கேட்டால் விளைந்த தலைச்சுற்றல் முதலியவற்றிலும் மேற்சொன்னவை அனுசரிக்கத் தக்கவை. மேலும் இதற்கு நிலப்பூசணி, நிலப்பனை, அமுக்கராக் கிழங்கு இவற்றில் ஒன்றையோ இரண்டையோ மூன்றையுமோ சூரணம் செய்து வைத்துக்கொண்டு இவற்றுடன் கொஞ்சம் கற்கண்டின் பொடியையும் கூட்டி, அரை ஸ்பூன் அளவில் தினம் காலை, மாலை சிறிது பாலுடன் உட்கொள்வதும்; க்ஷீரபலா தைலத்தை உடம்புக்கும் தலைக்கும் எண்ணெய்க் குளியலுக்காக தினசரி உபயோகிப்பதும், க்ஷீரபலா 101 என்னும் சொட்டு மருந்தை அல்லது கேப்சூலை தினமும் காலை, மாலை சிறிது பாலிலோ, சீரகக் கசாயத்திலோ சாப்பிட்டு வருவதும் நல்லது.
பாதாம் எண்ணெய்யில் ஒன்று, இரண்டு டீஸ்பூன் அளவைப் பாலில் இரவு படுக்கும் போது மட்டும் உட்கொள்ளுவதும் இதற்கு நல்லது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.