மனஅமைதிக்கு மண்டலா ஓவியங்கள்!

மண்டலா ஓவியத்தை வரையும்போது மனதை ஒருமுகப்படுத்துவதால், உடல் முழுதும் அமைதி நிலைக்குச் செல்லும்.
மனஅமைதிக்கு மண்டலா ஓவியங்கள்!
Updated on
2 min read

'மண்டலா ஓவியத்தை வரையும்போது மனதை ஒருமுகப்படுத்துவதால், உடல் முழுதும் அமைதி நிலைக்குச் செல்லும். மன அழுத்தம் நீங்கும். இதிலுள்ள வடிவமைப்பு திரும்பத் திரும்ப வருவது போல் இருக்கும். இந்த ஓவியத்தை வரையும்போது அந்த ஓவியமும், நானும் மட்டுமே இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படும். ஓவியம் வரையும்போது பல பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்துவிட்டதாகத் தோன்றும்' என்கிறார் சென்னையைச் சேர்ந்த இளம் ஓவியர் சிந்துஜா.

மென்பொருள் நிறுவனப் பணியை உதறி, ஓவியக் கலையில் முழு ஈடுபாட்டுடன் இருந்துவரும் சிந்துஜாவிடம் பேசியபோது:

'சிறு வயதிலிருந்தே ஓவியங்களை வரைந்து வருகிறேன். முறைப்படி பயிற்சி எடுத்துக் கொள்ளவில்லை. பள்ளி, கல்லூரிகளில் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வாங்கியிருக்கிறேன்.

2018-ஆம் ஆண்டில் மண்டலா ஓவியங்கள் குறித்து அறிந்தேன். ரங்கோலி கோலத்தைப் போன்ற மண்டலா ஓவியங்களின் வடிவமைப்பு மிகவும் பிடித்துப் போனது. நுணுக்கமான கலைநுட்பமும், நேர்த்தியும், வண்ணங்களின் கலவையுமாக, காண்பவர் கண்களைக் கட்டிப் போடும் தன்மை இந்த ஓவியங்களுக்கு உண்டு.

சிறிய ஓவியத்திலிருந்து பெரிய ஓவியம் வரை விதவிதமான, வித்தியாசமான மண்டலா ஓவியங்களை வரைந்திருக்கிறேன். இந்த வகையான ஓவியங்களை வரையும்போது எனக்கு மன நிம்மதியும், அமைதியும் கிடைக்கிறது. நான் வரைவதுடன், இந்த ஓவியக் கலையைப் பலருக்குக் கற்றுக் கொடுத்தும் வருகிறேன். இதற்காகவே, 7 ஆண்டுகளுக்கு முன் மென்பொருள் நிறுவனப் பணியைத் துறந்தேன்.

சென்னை விமான நிலைய ரன்வே ஹால் சுவரில் என்னுடைய மண்டலா ஓவியம் இடம்பெற்றிருக்கிறது. அதைப் பார்த்துவிட்டு கிண்டி ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் உள்ள ஒரு சுவரில் மண்டலா ஓவியம் வரையும் வாய்ப்பைத் தந்தனர். அங்கிருந்த மேஜர்கள் எனக்கு 'மண்டலா க்வின்' என்ற பட்டமும் வழங்கினர்.

கீழ்ப்பாக்கம் பால விஹார் பள்ளி, திருவண்ணாமலை அரசுப் பள்ளி, சென்னை சேத்துபட்டு அரசுப் பள்ளிகளின் சுவர்களிலும் என்னுடைய ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. கேரள மாநிலத்துக்கு உள்பட்ட வர்கலாவிலுள்ள ஒரு ரிசார்ட்டில் என்னுடைய மண்டலா ஓவியம் இடம்பெற்றிருக்கிறது.

என்னிடம் மண்டலா ஓவியம் கற்க விரும்பிய எண்பது வயது மூதாட்டிக்காக, அவர் தங்கியிருந்த ஆசிரமத்துக்கே சென்று தங்கியிருந்து, கற்றுக் கொடுத்தது மறக்கவே முடியாத அனுபவம்.

குழந்தைகளின் சிறு வயது உடைகளை எனக்கு அனுப்பி வைத்தால், அதைக் கொண்டு வண்ணமயமான 'க்வில்ட்டிங்' தயாரித்துத் தருகிறேன். என்னுடைய சமூக ஊடகப் பக்கத்தைப் பார்த்துவிட்டு, பலரும் ஆர்டர்களை அளிக்கின்றனர்.

கரோனா காலத்தில், '100 நாள் 100 தீம்' என்ற தலைப்பில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஓவிய வடிவத்தை வரைய வேண்டும் என்று சவால் விடுத்திருந்தேன். மண்டலா ஓவியம், மதுபாணி ஓவியம், கலம்காரி, வோர்லி எனப் பல வகையான ஓவியங்களை வரையும் இந்த சவாலில் ஓவியக் கலைஞர்கள் பலரும் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். மீண்டும் இதுபோன்றதொரு ஓவிய சவாலை தொடங்கும் எண்ணமுள்ளது' என்கிறார் சிந்துஜா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com