கோலிவுட் ஸ்டூடியோ - 15-11-2026
சி.ஜோசப் விஜய் முதல்வரானவுடன் பல நடிகர்களின் அரசியல் என்ட்ரிக்கான அறிகுறிகள் தெரிய வருகின்றன.

அரசியலுக்கு வரமாட்டேன்! - சூர்யா
சி.ஜோசப் விஜய் முதல்வரானவுடன் பல நடிகர்களின் அரசியல் என்ட்ரிக்கான அறிகுறிகள் தெரிய வருகின்றன. இதன் ஒரு படியாக, நடிகர் தனுஷ் அடுத்தடுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற 'சீன்' திரைப்பட நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
'நான் அரசியலுக்கு வரப்போவதில்லை. அதற்காக அரசியலை வெறுப்பதாக அர்த்தமில்லை. நான் மெளனமாக, உன்னிப்பாக அரசியலைக் கவனித்து வருகிறேன். இளைஞர்கள் அரசியலை முழுமையாகப் புரிந்து கொண்டு வர வேண்டும்.
அரசியல்வாதிகள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஊழலை மூன்றாவது நபர் ஒழிக்க முடியாது. முழு அர்ப்பணிப்புடன் யார் வேண்டுமானாலும் அரசியலில் ஈடுபடலாம்' என்று பேசியுள்ளார்.
அனஸ்வர ராஜன் - மமிதா பைஜு
மமிதா பைஜு எனக்குத் தைரியத்தைக் கொடுத்தார்! - அனஸ்வர ராஜன்
நடிகை அனஸ்வர ராஜன் தற்போது தெலுங்கில் அதிகமாகக் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடித்திருக்கும் 'இட்லு அர்ஜுனா' என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. 'சூப்பர் சரண்யா', 'பிரணய விலாசம்' ஆகிய திரைப்படங்களில் மமிதா பைஜுவும் அனஸ்வர ராஜனும் இணைந்து நடித்திருக்கிறார்கள். மமிதா பைஜுவுடனான நட்பு குறித்து அண்மையில் 'இட்லு அர்ஜுனா' படத்தின் புரொமோஷனுக்குக் கொடுத்த நேர்காணலில் அனஸ்வர ராஜன் பேசியிருக்கிறார்.
அதில், 'எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போன பல தருணங்களில், மமிதா என் பக்கத்திலேயே இருந்து என் கைகளைப் பிடித்துக்கொண்டு எனக்கு மிகப்பெரிய தைரியத்தையும் ஆதரவையும் கொடுத்தார். ஒரு நல்ல மனிதராகவும், சிறந்த நடிகையாகவும் மமிதாவை நான் எப்போதும் வியந்து பார்க்கிறேன்.
எங்கள் நட்பு வெறும் சினிமா வேலைகளோடு முடிந்துவிடுவதில்லை; அது உண்மையான அன்பிலும், அக்கறையிலும் கட்டமைக்கப்பட்டது' என்றவர், 'தொடக்க காலத்தில் மற்ற நடிகைகளோடு ஒப்பிட்டுப் பேசப்பட்டவை என் மனதைப் பாதித்திருக்கலாம். ஆனால், இப்போது இதுபோன்ற ஒப்பீடுகளை நான் ஒரு போட்டியாகப் பார்ப்பதில்லை; இவை எதுவுமே என்னை இப்போது பாதிப்பதும் இல்லை' எனப் பேசியிருக்கிறார்.
ரன்பீர் கபூர்
நடிப்பை விட்டு விலகுகிறேனா? தெளிவுபடுத்திய ரன்பீர் கபூர்
நடிகர் ரன்பீர் கபூர் நடித்த 'ராமாயணா' திரைப்படம் வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நிதேஷ் திவாரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யஷ்ஷும் நடித்திருக்கிறார்கள். அண்மையில் பிபிசி ஏசியன் நெட்வொர்க்குக்கு அளித்த பேட்டியில், திரைப்படம் இயக்கும் ஆர்வம் குறித்தும், தனது நடிப்பு வாழ்க்கைக் குறித்தும் ரன்பீர் கபூர் பகிர்ந்திருக்கிறார்.
அதில், 'அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் எனது முதல் திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளேன். இதற்காகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பே திரைக்கதை எழுதத் தொடங்கிவிட்டேன். திரைக்கதை அமைப்பது என்பது எவ்வளவு கடினமான விஷயம் என்பதை இப்போதுதான் உணர்கிறேன். எனது இயக்கத்தில் உருவாகும் படத்தில் நான் நிச்சயமாக நடிக்க மாட்டேன். முற்றிலும் ஓர் இயக்குநராக மட்டுமே பணியாற்றுவேன்' என்றவர், 'ஆண்டுக்கு 100 முதல் 125 நாள்கள் மட்டுமே நான் படப்பிடிப்பில் பங்கேற்கிறேன்.
இதனால் கதைகள் எழுத எனக்குப் போதிய நேரம் கிடைக்கிறது. 'நடிப்பில் இது எனது கடைசிப் பத்தாண்டு' என்று நான் கூறியது, கதாநாயகனாக நான் நடிக்கும் முதன்மையான கதாபாத்திரங்களைக் குறித்தே தவிர, முற்றிலும் நடிப்பை நிறுத்துவது பற்றி அல்ல. தற்போது கைவசம் உள்ள பெரிய படங்களை முடித்துவிட்டு இயக்குநர் நாற்காலியில் அமர ஆவலாக இருக்கிறேன்' எனக் கூறியிருக்கிறார்.
ரெஜினா
ஜான்வியின் குற்றச்சாட்டுக்கு ரெஜினா பதில்
அண்மையில் கரண் ஜோஹரின் 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஜான்வி கபூர், தான் நடித்த 'பெத்தி' திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் சித்திரிக்கப்பட்ட விதம் குறித்துப் பேசியிருந்தார்.
'தென்னிந்தியப் படங்களில் முழுமையான திரைக்கதை இருப்பது அரிது' என்று அவர் ஏற்கெனவே கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், 'மூக்குத்தி அம்மன்' படத்துக்காக பேட்டி அளித்தபோது ரெஜினாவிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், 'உங்களுக்கு ஏதேனும் அசெளகரியமாகவோ அல்லது பிடிக்காமலோ இருந்தால், தயவுசெய்து அந்தப் படத்திலிருந்து வெளியேறுங்கள். வடஇந்திய நடிகர்கள் தென்னிந்திய சினிமாவைப் பற்றி இதுபோன்று பேசும்போது எனக்கு அதில் உடன்பாடில்லை. அப்படிச் செய்யக்கூடாது. அறியாமலேயே நீங்கள் வடக்கு-தெற்குப் பிரிவினையை உருவாக்குகிறீர்கள். அது முற்றிலும் தவறானது.
நான் கரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்தேன். அந்தப் படத்தில் எனக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம் இருந்தது. ஆனால், என்னை விளம்பரப்படுத்த வேண்டாம் என்று அவர் முடிவு செய்தார். எந்தக் காரணமும் சொல்லாமல், எந்த விளக்கமும் கொடுக்காமல் விளம்பரப் பணிகளில் இருந்து என்னுடைய பெயரை நீக்கிவிட்டார்கள். இதை நான் என்னவென்று சொல்வது? தென்னிந்திய நடிகையாக இருப்பதால்தான் எனக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது என்று சொல்லலாமா?' என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

