ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வலி தீர்க்கும் மருந்து
சிறுநீர்ப்பாதைத் தொற்று, தோல் அரிப்பு, தடிப்பு, நிறமாற்றம் போன்ற உபாதைகளுக்கான சிறந்த ஆயுர்வேத மருந்து உள்ளதா?
உடலில் ஏற்படும் மூட்டுவலி, தசைவலி, உடல் இறுக்கம் போன்ற சில வாதம் தொடர்பான உபாதைகள், செரிமானக் குறைபாடு, மூலநோயினால் மல வெளியேற்றத்தில் ஏற்படும் ஆசனவாய் வலி, சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல், சிறுநீர்ப்பாதைத் தொற்று, தோல் அரிப்பு, தடிப்பு, நிறமாற்றம் போன்ற உபாதைகளுக்கான சிறந்த ஆயுர்வேத மருந்து உள்ளதா? அதன்விவரம் தெரிவிக்கவும்.
-சாதிக் பாட்ஷா, புதுவை.
'தேவதார்வ்யரிஷ்டம்' எனும் மருந்து நீங்கள் குறிப்பிடும் உபாதைகளில் சாப்பிடக்கூடிய தரமான மருந்தாகும். மூலிகைக் கஷாயத்துடன் வெல்லம் அல்லது சர்க்கரை போன்ற நொதித்தல் பொருள்களைச்சேர்த்து, குறிப்பிட்ட காலம் பக்குவப்படுத்துவதன் மூலம் அரிஷ்ட மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த மருந்து குறிப்பாக வாதம் மற்றும் கபம் தொடர்பான சில உபாதைகளில், நோயாளியின் உடல் நிலை மற்றும் நோயின் தன்மையைக் குறித்து ஆராயப்பட்டு மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகிறது.
தேவதாரு, ஆடாதோடை, மஞ்சிட்டை, இந்திரயவம், நாகதந்தி, மஞ்சள், மரமஞ்சள், சித்தரத்தை, கோரைக்கிழங்கு, சீந்தில்கொடி ஆகியவற்றுடன், தாத்ரிபூ, சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், இலவங்கப்பட்டை போன்ற பலமூலிகைகளும் இம்மருந்தின் தயாரிப்பில் இடம்பெறுகின்றன.
இந்த மூலிகைகள் ஒவ்வொன்றும் தனித்தனி மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளன. அவற்றைச் சரியான விகிதத்தில் இணைத்துத் தயாரிப்பதே இம்மருந்தின் சிறப்பாகும்.
பைஷஜ்ய ரத்னாவளி எனும் ஆயுர்வேத நூலில் பிரமேஹம், வாதநோய்கள், கிராணி, மூலம், சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் கஷ்டம், தோல் சார்ந்த உபாதைகளில் இதன் பயன்பாடு குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரமேஹம் என்பது சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் உடலின் வளர்சிதை மாற்றம் தொடர்பான பல்வேறு நிலைகளைக் குறிக்கும் ஒரு விரிவான நோய்த்தொகுப்பாகும். நவீன மருத்துவத்தில் நீரிழிவு நோய் தொடர்பாகவும் பிரமேஹம் விவாதிக்கப்படுகிறது.
வாதம் அதிகரித்த நிலையில் ஏற்படும் உடல் அசெüகரியங்களைக் கையாள்வதில் இதன் மூலிகைக் கலவை பாரம்பரிய முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதுபோலவே, செரிமானக் குறைபாட்டினால் ஏற்படும் அடிக்கடி மலம் கழித்தல், உணவு செரிக்காமை, வயிற்றில் அசெüகர்யம் போன்ற அறிகுறிகள் காணப்படும்போது நோயின் தன்மையை ஆராய்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மூலநோயினால் உண்டாகும் மலச்சிக்கல், வலி, ரத்தம் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் துணை மருந்தாகப் பரிசீலிக்கப்பட வேண்டிய நல்ல ஒரு மருந்தாக இதனைக் குறிப்பிடலாம்.
அரிஷ்டம் என்பது இயற்கையான நொதித்தல் முறையில் தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்து வகையாகும். பொதுவாக இதன் தயாரிப்பு முறையில் குறிப்பிட்ட மூலிகைகளைத் தேர்ந்தெடுத்து சுத்தம் செய்து, அவற்றை நீரில் கொதிக்கவைத்து கஷாயம் தயாரிப்பார்கள். கஷாயத்தை வடிகட்டி, தேவையான இனிப்புப் பொருள்கள் மற்றும் நொதித்தலுக்கு உதவும் மூலிகைகளைச் சேர்க்கின்றனர். குறிப்பிட்டகாலம் முடிய பாத்திரத்தில் வைத்து இயற்கையான நொதித்தல் நடைபெற அனுமதிக்கின்றனர். பக்குவமடைந்த பிறகு வடிகட்டி, தரப்பரிசோதனை செய்து மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.
இந்த நொதித்தல் முறையின் காரணமாக அரிஷ்டங்களில் இயற்கையாகவே சிறிதளவு ஆல்கஹால் உருவாகிறது. இது மருந்தின் தயாரிப்பு முறையின் ஒருபகுதியாகும். எனவே அரிஷ்டங்களை சாதாரண மூலிகைக் கஷாயம் என்று கருதக்கூடாது. காலை, இரவு உணவுக்குப் பிறகு முப்பது மில்லி லிட்டர் வரை சாப்பிடலாம்.
சர்க்கரை நோயாளிகள், கல்லீரல் நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், சிறுநீரக நோயாளிகள், குழந்தைகள், ஏற்கெனவே பல மருந்துகளை உட்கொள்பவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படிதான் இம்மருந்தைச் சாப்பிடவேண்டும்.
நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள், சிறுதானியங்கள் மற்றும் முழுத்தானியங்கள், போதுமான அளவு தண்ணீர், எளிதில் செரிக்கக்கூடிய உணவுகள், அளவான பழங்கள் போன்றவை உணவில் சேர்த்துக் கொள்ளுதல் நலம். அதிக இனிப்பு, துரித உணவுகள் எண்ணெயில் பொரித்தவை, அதிக சர்க்கரை கலந்த உணவுகள் தவிர்க்கப்படவேண்டியவை.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

