ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தோள்பட்டை வலி குணமாக...

58 வயதான எனக்கு வயது தோள்பட்டையில் தொடர்ந்து வலி உள்ளது.

தோள்பட்டை வலி

Updated On :

58 வயதான எனக்கு வயது தோள்பட்டையில் தொடர்ந்து வலி உள்ளது. கையை மேலே தூக்குவதிலும், உடை அணிவது, தலை முடியை வாருவது, பின்னால் கையை எடுத்துச் செல்வது போன்ற அன்றாடச் செயல்களிலும் சிரமம் உள்ளது. எம்ஆர்ஐ பரிசோதனையில் உட்புற தசைநார்களில் கிழிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் ஆயுர்வேதத்தில் என்ன சிகிச்சை செய்யலாம்?

-மகேஸ்வரி, சேலம்.

தோள்பட்டை என்பது மிகுந்த இயக்கங்களைக் கொண்ட ஒரு முக்கியமான மூட்டு. அதன் இயக்கத்துக்குத் தசைகள் மற்றும் தசைநார்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். வயது அதிகரிக்கும்போது தசைநார்களின் நெகிழ்ச்சித்தன்மை குறையலாம். ஒரே மாதிரியான கை இயக்கங்கள், வீட்டுப்பணி, அதிக எடையைத் தூக்குதல், மீண்டும் மீண்டும் கையைத் தலைக்கு மேலே உயர்த்துதல், பழைய காயம் போன்றவை பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் தசைநார் சிதைவு ஏற்பட்டு, அதுவே பின்னர் சிறிய கிழிசல், பிறகு பெரிய கிழிசல் என நிலை மாறலாம்.

ஆயுர்வேதத்தில் தோள்பட்டை வலி மற்றும் இயக்கக்குறைவு போன்ற நிலைகள் ஒரே ஒரு நோயின் பெயருக்குள் மட்டுமே அடங்கவேண்டிய அவசியமில்லை. வலியின் தன்மை, இயக்க வரம்பு, வீக்கம், பிடிப்பு, வயது, உடல்தன்மை, செரிமானநிலை, தூக்கம் மற்றும் ஏற்பட்டுள்ள உபாதையின் காலம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மதிப்பிட வேண்டும்.

இத்தகைய தசைக்கூட்டு கோளாறுகளில் வாத தோஷத்தின் சீற்றத்தினால் திசுக்களின் தேய்மானம், வறட்சி, பிடிப்பு மற்றும் வலி அதிகரிக்கும் நிலைகளில் அதன் குணங்களாகிய வறட்சி, லேசு, குளிர்ச்சி, சொரசொரப்பு, நுண்ணிய தன்மை ஆகியவற்றுக்கு எதிரான உணவு மற்றும் சிகிச்சையினால் நிவாரணத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நெய்ப்பு, கனம், சூடு, வழுவழுப்பு, ஸ்தூலத்தன்மை போன்ற குணங்கள் நிறைந்த உணவு மற்றும் கஷாயம், தைலம், நெய், லேஹிய மருந்துகளால் சிகிச்சை செய்வதால் பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.

மூலிகைப் பொடிகளாகிய கொட்டஞ்சுக்காதி, உத்வர்த்தனம், ராஸ்னாதி, ஜடாமயாதி போன்றவற்றில் ஒன்றை புளித்த மோரில் கலந்து சூடாக்கி, வலி உள்ள இடத்தில் பற்றிட வேண்டும். சிலநாள்களுக்குத் தொடர்ந்து பற்றிட்ட பிறகு, கார்ப்பாஸாஸ்த்யாதி, முரிவெண்ண, தான்வந்திரம், மஹாமாஷம் போன்ற தைலங்களில் நிலைமைக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுத்து பற்றிட்ட பகுதியில் இளஞ்சூடாகப் போட்டு வைத்திருந்து, மூலிகை நீராவியை அவ்விடத்தில் காண்பிக்கவேண்டும். இதனால் கிழிந்த தசை நார்கள் கூடுதல், வலி மற்றும் வீக்கம் குறைதல், அதனால் கை அசைப்பு எளிதாகுதல் போன்ற நன்மைகளை அடைவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறோம்.

ஒரு சில மூலிகைத் தைலங்களை மூக்கினுள்விட்டு நிதானமாக உறிஞ்சிய பிறகுத் துப்பி விடும் சிகிச்சையால் பலனடையலாம். க்ஷீரபலா101, கார்ப்பாஸாஸ்த்யாதி தைலம், அணுதைலம் போன்றவை இதற்கு ஏற்றவை. இதனால் தோள்பட்டையினுள் இருக்கும் நரம்பு மண்டலங்கள் வலுப்பெற்று, தேவையற்ற நீர்சேர்க்கையை வெளியேற்றுகிறது. அதுபோலவே, தலையில் மூலிகைத் தைலங்களாகிய பலாதைலம், மஞ்சிஷ்டாதி தைலங்களை ஊறவைப்பதன் வாயிலாக, கைத்தோள்பட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடிநரம்புகள் வலுப்பெறும்.

சித்தரத்தை, குக்குலு, தசமூலம், மஹாராஸ்னாதி போன்றவை கஷாயமாக உள்ளுக்குச் சாப்பிட உகந்தவை. அதில் தோள்பட்டையைச் சார்ந்த தசைகள், தசைநார்கள் வலுப்பட, க்ஷீரபலா 101, மஹாபலாதைலம், கார்ப்பாயாஸ்த்யாதி தைலம் ஆகியவற்றில் ஒன்றைச் சேர்த்துப்பயன் படுத்தலாம், வாத தோஷத்தின் சீற்றத்தை அடக்கக்கூடிய 'வஸ்தி' எனும் சிகிச்சைமுறை சிறந்தது. ஆசனவாய் மூலம் உள்ளே செலுத்தப்படும் மூலிகைத் தைலம் மற்றும் கஷாயங்களால் வாதம் கீழடங்கி, உபாதையின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும்.

நீங்கள் கவனிக்க வேண்டியவை - பாதிக்கப்பட்ட கையால் அதிக எடையைத் தூக்கவேண்டாம். தூக்கத்தில் கையை நீண்ட நேரம் தலைக்குமேல் வைத்திருக்க வேண்டாம். வலியுள்ள தோளில் தூங்குவதைத் தவிர்க்கலாம். திடீரெனக் கையைஇழுப்பது, குலுக்குவது செய்யக் கூடாது. வீட்டுப்பணிகளில் வேலை பாரத்தை மாற்றிமாற்றிச் செய்யவேண்டும். நீண்ட நேரம் ஒரே நிலையில் இருப்பதைத் தவிர்க்கவும்.

திசுக்கள் நல்ல ஊட்டச்சத்தைப்பெற - பாசிப்பருப்பு, உளுந்து, காய்கறிகள், கீரைகள், நெல்லிக்காய், எள், பாதாம், வால்நட், பால் மற்றும் பால்பொருள்கள், போதுமான புரதம் அடங்கிய உணவு, முழுதானியங்கள் உணவில் சேர்க்கலாம். தவிர்க்க வேண்டியவை- அதிக சர்க்கரை, அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிகம் எண்ணெய்யில் பொரித்தவை, துரித உணவக வகைகள் போன்றவை.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.