ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சளி, மூக்கடைப்பு பிரச்னை விலக...
எனக்கு வயது 82. அடிக்கடி சளி, மூக்கடைப்பு போன்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றன.
FaustFoto
எனக்கு வயது 82. அடிக்கடி சளி, மூக்கடைப்பு போன்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றன. அதனுடன் மலச்சிக்கலும் உள்ளது. இதற்கு ஆயுர்வேதத்தில் என்னென்ன சிகிச்சைகள், உணவு முறைகளைப் பின்பற்றலாம்?
-ஆர்.எஸ்.துரைசாமி, ஈரோடு.
இந்த வயதிலும் உடல் நலத்தைப்பற்றி அக்கறையுடன் கேள்வி எழுப்பியிருப்பது பாராட்டத்தக்கது. வயது அதிகரிக்கும்போது உடலின் செரிமான சக்தி, உடல் இயக்கம், தாகம், பசி, குடலின் இயற்கையான இயக்கம் போன்றவை படிப்படியாகக் குறையலாம். இதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்படுவதும், பருவநிலை மாற்றம், குளிர்ந்த காற்று, தூசி போன்ற காரணங்களால் சளி, மூக்கடைப்பு, இருமல் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதும் பொதுவாகக் காணப்படுகின்றன.
ஆயுர்வேதத்தின் பார்வையில், முதுமைப் பருவத்தில் வாத தோஷத்தின் ஆதிக்கம் அதிகரிப்பதாகக் கருதப்படுகிறது. வாதம் அதிகரிக்கும்போது, உடலில் வறட்சி, குடல் இயக்கம், குறைதல், மலச்சிக்கல், மூட்டுவலி போன்றவை ஏற்படலாம். அந்தச் சமயம் கபம் அதிகரிக்கும் சூழலில் சளி, மூக்கடைப்பு, தொண்டைச் சளி போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
5 கிராம் வைஸ்வாரை சூரணத்தை 100 மில்லி வெந்நீரில் கலந்து, காலை மாலை உணவுக்கு அரைமணி நேரம் முன்பாகச் சாப்பிட்டுவர மலச்சிக்கல் நீங்கும், குடல்வாயு அடங்கி, பசி நன்றாக ஏற்படும்.
மருந்து சூரணமாக இருப்பதாலும், வெந்நீருருடன் கலப்பதாலும், குடல் பிரச்னைகள் ஒய்ந்து போனாலும், அதன் வறண்ட தன்மையால் குடலில் வழுவழுப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை. அதனால் இம்மருந்தை சுமார் 10-12 நாள்களுக்குச் சாப்பிட்ட பிறகு, நிறுத்திவிட்டு, பசியின் தன்மைக்கு ஏற்ப 8-10 சின்ன வெங்காயத்தைத் தோலுரித்து, விளக்கெண்ணெய்யில் வதக்கி, காலை இரவு உணவுக்கு அரை மணி முன் சாப்பிடவும்.
இதனால் குடலுக்குத் தேவையான வழுவழுப்பு கிடைப்பதுடன், குடலின் இயற்கையான அசைவுகளை மேம்படுத்தித் தரும். அதனால் மலச்சிக்கல் நீங்குவதுடன், குடலும் சுத்தமாக இருப்பதால், ஜீரண திரவங்கள் குடல் உட்புறச் சவ்வுகளிலிருந்து நன்கு வெளிப்படும். துôய்மையாகவும் இருக்கும்.
சூடான சாதத்துடன் நெய்விட்டுப் பிசைந்து முதல் உருண்டையைச் சாப்பிடுவதை நீங்கள் வழக்கமாக்கிக் கொண்டால், வாயுவின் உபாதைகளிலிருந்து நிரந்தரமான தீர்வைப் பெறலாம். ஒருநாளில் இருவேளையாவது நீங்கள் இவ்வாறு பழக்கமாக்கிக்கொள்வது நலம்.
தோலிலுள்ள வறண்ட தன்மை நீங்க, நல்லெண்ணெய்யை இளஞ்சூடாக உடலெங்கும் தேய்த்து, அரை-முக்கால் மணிநேரம் ஊறியபிறகு, வெந்நீரில் குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளவும். திங்கள்-புதன்-சனிக்கிழமைகள் உங்களுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க உகந்த நாள்களாகும்.
காய்கறிகள், கீரைகள், பழங்கள், முழுத்தானியங்கள், பருப்பு வகைகள் போன்ற நார்ச்சத்து கொண்ட உணவுகளை வயதுக்கும் செரிமான சக்திக்கும் ஏற்ற அளவில் சேர்த்துக்கொள்ளவும். காய்கறிகளை நன்றாக வேகவைத்து உண்பது வயதானவர்களுக்கு எளிதில் செரிமானமாக உதவும். பப்பாளி, கொய்யா, பேரிக்காய் போன்ற பழங்களை சற்று அதிகமாகச் சாப்பிடவும். சிட்டிகை காருப்பை (பிளாக் சால்ட்) பழங்களின்மீது தூவிவிட்டுச் சாப்பிடவும். பழத்தின் சத்து உடலில் நன்கு ஒட்டும். பசியும் கெடாது.
ஆயுர்வேத மருந்துக் கடைகளில் விற்பனையாகும் கந்தர்வ நஹஸ்தாதி எனும் விளக்கெண்ணெய் மருந்து உங்களுக்குப் பயன்படலாம். சுமார் 10-15 மில்லி மருந்தை நக்கிச் சாப்பிட்ட பிறகு சிறிது வெந்நீர் அருந்தவும். மலம் நன்கு கழியும். பசியும் நன்றாக எடுக்கும். குடலில் வாயுவின் தேக்கமும் நன்றாக ஏற்படும். இப்படி நான்கு வகையான குணங்களை ஒரே மருந்தின் மூலம் நீங்கள் பெறலாம்.
தவிர்க்க வேண்டியவைகளில் - போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, நீண்டநேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, மலம் கழிக்கும் உணர்வைத் தடுத்து வைப்பது, தூக்கம் குறைவு போன்றவையாகும். ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் செய்யப்படும் மசாஜ், வியர்வை வரவழைக்கும் சிகிச்சைகளால் உங்கள் உடல்நலம் மேம்படும். உடல் உபாதைகளையும் தவிர்க்கலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






