ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த...
உடலின் அகச் சுத்தத்தையும் செரிமானத்தையும் கல்லீரல் செயல்பாட்டையும் மேம்படுத்த உதவும் பாரம்பரிய ஆயுர்வேத மாத்திரை மருந்து உள்ளதா?
கல்லீரல்
உடலின் அகச் சுத்தத்தையும் செரிமானத்தையும் கல்லீரல் செயல்பாட்டையும் மேம்படுத்த உதவும் பாரம்பரிய ஆயுர்வேத மாத்திரை மருந்து உள்ளதா? அதன் பெயர், அதிலுள்ள மூலிகைப் பொருள்கள், விற்பனையாளர் பெயர் போன்றவை குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.
-ஞானவேல், கள்ளக்குறிச்சி.
ரஸரத்ன ஸமுச்சயம் என்ற ஆயுர்வேத நூலில் 'ஆரோக்யவர்த்தினி' என்ற பெயரில் மாத்திரை ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சுத்திகரிக்கப்பட்ட பாரதம் (மெர்குரி), கந்தகம், லோஹபஸ்மம், அப்ரக பஸ்மம், தாமிர பஸ்மம் போன்ற கனிம/உலோகச் சேர்மங்கள் உள்ளன. எனவே, இது சாதாரண மூலிகை மாத்திரை அல்ல; தகுதி பெற்ற ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே பயன்படுத்த வேண்டிய 'ரஸ' மருந்தாகும். கல்லீரல் சோர்வு, செரிமானக் கோளாறு, பசியின்மை, உடல் பருமன், சில தோல் பிரச்னைகள் போன்றவற்றில் இந்த ஆரோக்யவர்த்தினி எனும் மாத்திரை மருந்து நன்கு செயல்படக்கூடியது.
நமது உடலில் உணவைச் செரிப்பது மட்டுமல்லாமல், உடலில் உருவாகும் பல்வேறு பொருள்களை மாற்றி அமைத்து, தேவையற்றவற்றை வெளியேற்றுவதிலும் கல்லீரல் முக்கியப் பங்கு வகிக்கிறது. செரிமானம் சரியாக இல்லாதபோது வயிற்றுப் பொருமல், பசியின்மை, மலச் சிக்கல், நாக்கில் படலம், சோர்வு போன்ற பல தொந்தரவுகள் ஏற்படலாம்.
ஆயுர்வேதத்தில் அக்னி, ஆமம், தோஷ சமநிலை, குறிப்பாக யக்ருத் எனும் கல்லீரல், பித்தத்தின் இயல்பான செயல்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்தப் பின்னணியில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான ரசெளஷதம் 'ஆரோக்யவர்த்தினி' எனும் மாத்திரையாகும். ஆரோக்யவர்த்தினி என்ற பெயரே ஆரோக்யத்தை வளர்ப்பது என்ற பொருளைக் கொண்டது.
இந்த மாத்திரை பல்வேறு நிலைகளில் ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டாலும், நோயின் தன்மை, தோஷநிலை, நோயாளியின் வயது, உடல் நிலை மற்றும் பிற மருந்துகள் ஆகியவற்றைப் பார்த்தே பயன்படுத்த வேண்டும். மேலும் நோயின் தன்மைக்கு ஏற்ப இஞ்சிச் சாறு, தேன், வெந்நீர், பால் போன்ற அனுபானங்களில்
ஒன்றைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடலாம். எந்த அனுபானம் ? எவ்வளவு? உணவுக்கு முன்பா / பின்பா? எத்தனை நாள்கள்? என்பதை நோயாளியின் நிலையைப் பார்த்து மாறும்.
ஆரோக்யவர்த்தினி எடுத்துக்கொள்வதுடன் உணவு மற்றும் வாழ்க்கைமுறையை மாற்றாமல் இருந்தால், எதிர்பார்க்கும் பயன் கிடைக்காமல் போகலாம்.
சாப்பிட வேண்டியவை (தனிநபரின் உடல் நிலைக்கு ஏற்ப) : காய்கறிகள், கீரைகள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், அளவான முழுத்தானியங்கள், பருப்பு வகைகள், நெல்லிக்காய், போதுமான தண்ணீர். அளவோடு எளிதில் செரிக்கக் கூடிய உணவு என்பது முக்கியம்.
குறைக்க வேண்டியவை (குறிப்பாக கல்லீரல், கொழுப்பு, செரிமான பிரச்னை உள்ளவர்கள்) : அதிக எண்ணெய்யில் பொரித்த உணவு, துரித உணவு, அதிக கொழுப்பு உணவு, அதிக சர்க்கரை, இனிப்புப் பானங்கள், அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகள், அளவுக்கு மீறிய உப்பு, அதிகமாகச் சாப்பிடுதல். மது - முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
இம்மருந்தில் சுத்த சிலாஜித், சுத்த குக்குலு, கொடுவேலி, கடுகரோஹிணி, வேம்பு போன்றவையும் சேர்க்கப்படுகின்றன. அதனால் இதன் சிறப்பு, அதன் பல்வேறு மூலிகை, கனிமக்கூறுகளின் ஒருங்கிணைந்த பயன்பாட்டில் உள்ளது. கோட்டக்கல் ஆயுர்வேத மருந்து தயாரிப்பில் இம்மருந்தும் இடம்பெற்றுள்ளது. மேலும் பல வட இந்திய ஆயுர்வேத மருந்துக்கம்பெனிக்காரர்களும் இதைத் தயார்த்து விற்பனை செய்துவருகின்றனர்.
சுருக்கமாக கல்லீரல் பாதுகாப்பு: மஞ்சள் காமாலை, கொழுப்பு கல்லீரல் , கல்லீரல் வீக்கம் போன்ற கோளாறுகளைக் குணப்படுத்த ஆயுர்வேதத்தில் முதன்மையாகப் பரிந்துரைக்கப்படும் மருந்து இதுவாகும்.
செரிமானம், பசியைத் தூண்டுதல்: வயிற்று உப்புசம், அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளை நீக்கி, ஜீரண சக்தியைப் பலப்படுத்துகிறது.
சரும நோய்கள்: ரத்தத்தை சுத்திகரிக்கும் சக்தியைக் கொண்டதால் முகப்பரு, அரிக்கும் தோலழற்சி மற்றும் தோல் தடிப்பு அழற்சி போன்ற நாள்பட்ட சருமநோய்களை உள்ளிருந்து குணமாக்குகிறது.
உடல் எடை, கொலஸ்ட்ரால் குறைப்பு: உடலின் வளர் சிதை மாற்றத்தை அதிகரித்து தேவையற்ற கொழுப்பைக் கரைத்து உடல் எடையையும் கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்க உதவுகிறது.
நச்சு நீக்கம்: தேவையற்ற நச்சுப் பொருள்களை மலக்குடல் வழியாக வெளியேற்றி, ஒட்டுமொத்த நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுகிறது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






