- செந்தில்குமார் அமிர்தலிங்கம்
இந்த ஃபிளாட் வசந்திக்கு மிகவும் பிடித்துப்போனது. அவளது அலுவலகத்துக்கு டூவீலரிலேயே போய்விடலாம். ஆனால், எனக்குத்தான் தினமும் இரண்டு நகரப் பேருந்துகளில் ஏறி, நெரிசலைச் சமாளித்து அலுவலகம் போய்ச் சேரவேண்டியிருக்கும்.
காலையிலும் சீக்கிரம் கிளம்ப வேண்டியிருக்கிறது. மாலையும் வீடு திரும்ப தாமதமாகிவிடுகிறது. புதிய வீட்டுக்குக் குடிபெயரும் உற்சாகத்தில் இரண்டு நாள்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு பழைய வீட்டை காலிசெய்து, கொண்டுவந்திருந்த பொருள்களை எல்லாம் ஒவ்வொன்றாக உரிய இடங்களில் அடுக்கினோம். காலையில் எட்டரை மணி வாக்கில் பிரீத்தியைப் பள்ளியில் கொண்டு விட்டுவிட்டு வந்தேன்.
அவளுக்கும் பள்ளிக்கூடம் பக்கம்தான். பள்ளிப்
பேருந்து நேரடியாக வீட்டின் அருகிலேயே வந்து செல்வதால், அடுத்த திங்களில் இருந்து அவளுக்குப் பள்ளிப் பேருந்திலேயே ஏற்பாடு செய்துவிட்டோம்.
மதியம் ஏனோதானோவென்று சமைத்துச் சாப்பிட்டுவிட்டுக் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தோம். மணி நாலரை ஆனதும், பிரீத்தியை பள்ளியிலிருந்து அழைத்துக்கொண்டு வந்தேன். பின் நாங்கள் மூவரும் பால்
கனியில் உட்கார்ந்து சூடான டீயும் ஸ்நாக்ஸýம் கொறித்துக்கொண்டே தூரத்தில் தெரிந்த நீலக்கடலைக் கண்டு ரசித்தோம்.
'ஏங்க, நாம இனிமே எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடற்கரைக்குப் போகலாமில்ல?' என்று பற்கள் தெரியச் சிரித்துக்கொண்டே கேட்டாள் வசந்தி.
வசந்திக்குக் கடல் என்றால் கொள்ளைப்பிரியம். எவ்வளவு நேரம் என்றாலும் கடலில் கால்களை நனைத்துக்கொண்டே நிற்பாள்.
மறுநாள் காலை எப்போதும் போல அலாரம் அடிப்பதற்கு முன்பே விழித்துக்கொண்டேன். வழக்கத்தை விட மிகச் சீக்கிரமாகவே தயாராகி, குளிர்ந்த காற்றுடன் பேருந்து நிறுத்தத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது.
'ஏங்க, பாத்து பத்திரமா போயிட்டு வாங்க. சாயங்
காலம் சீக்கிரம் வந்துடுவீங்களா?' என்று கதவருகே நின்று வழிஅனுப்பி வைத்த வசந்தியின் முகத்தில் சிறு கவலை இழையோடியது.
'அதெல்லாம் பார்த்துக்கலாம் மேடம். எனக்கு என்ன, பஸ்ல ஜாலியா வேடிக்கை பாத்துட்டே போவேன்' என்று அவளது கன்னத்தைத் தட்டிச் சிரித்துவிட்டு இறங்கி நடந்தேன்.
மாலையில் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பியதும் பிரீத்தியின் கொஞ்சலும், வசந்தி சூடாகப் போட்டுக் கொடுத்த காபியும், பால்கனியில் வீசிய கடல் காற்றும் அத்தனை களைப்பையும் ஒரே நொடியில் பறந்தோடச் செய்தன.
ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை. வசந்தி சொன்னது போலவே மூவரும் கடற்கரைக்குக் கிளம்பினோம். பிரீத்தி மணலில் சிறிய வீடு கட்டி விளையாடத் தொடங்கினாள். என் அருகில் வந்து அமர்ந்த வசந்தி, என் தோளில் மெல்லத் தலை சாய்த்துக்கொண்டாள்.
'உங்களுக்குத் தினமும் அவ்வளவு தூரம் போயிட்டு வர்றது கஷ்டமா இருக்குன்னு எனக்குத் தெரியுது. ஆனா, இந்த வீட்டோட பால்கனில நிக்கும்போதும், இப்படி சாயங்காலம் உங்களோட கடற்கரைல வந்து இருக்கும்போதும் மனசுக்கு அவ்வளவு நிம்மதியா இருக்குங்க. தேங்க்ஸ்ங்க' என்று கண்கலங்கி நெகிழ்ச்சியோடு சொன்னாள்.
அவள் சொன்ன அந்த ஒரு வார்த்தையில், தினமும் நான் பேருந்தில் படும் அத்தனை சிரமங்களும் என் நினைவிலிருந்தே முற்றிலும் மறைந்துபோயின.
புது வீட்டுக்கு வந்து சில வாரங்கள் ஆகிவிட்ட போதிலும், அந்த அப்பார்ட்மெண்டில் பக்கத்து ஃப்ளாட்டுகளில் யார் யார் இருக்கிறார்கள் என்று எங்களுக்குச் சரியாகத் தெரியவில்லை. காலையில் அவசர அவசரமாகக் கிளம்புவதும், இரவில் களைப்போடு திரும்புவதுமாகவே நாள்கள் ஓடிவிட்டன. எதிர் ஃப்ளாட்டில் மட்டும் ஒரு சிறுவனின் கத்தல் அவ்வப்போது கேட்கும்.
அன்று ஞாயிற்றுக்கிழமை காலை. திடீரெனக் கதவு தட்டும் சத்தம் கேட்டுப் போய் திறந்தேன். எதிரே எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவரும், முகத்தில் புன்னகையுடன் ஒரு தட்டில் சுடச்சுட ரவா கேசரியுடன் ஒரு பெண்மணியும் நின்று கொண்டிருந்தார்கள்.
'வணக்கம் தம்பி, நாங்க எதிர் வீட்ல இருக்கோம். என் பேரு ராமநாதன், இவங்க என் மனைவி சுந்தரி. உங்களைப் பாக்கலாம்னு வந்தோம். உங்களுக்குத் தொந்தரவு கொடுத்துட்டோமா?'
'ஐயோ, வாங்க சார், உள்ள வாங்க' என்று அவர்களை மிகுந்த மரியாதையோடும் அன்போடும் வரவேற்றேன்.
சமையலறையிலிருந்து வந்த வசந்தி, 'வணக்கம்மா, வாங்க' என்று உபசரித்து அமர வைத்தாள். பிரீத்தியும் ஓடிவந்து, 'குட் மார்னிங் தாத்தா, குட் மார்னிங் பாட்டி' என்றாள்.
வசந்தி உடனே அவர்களுக்குச் சூடாகத் தேநீர் போட்டு எடுத்து வந்தாள்.
'கேசரி ரொம்ப சுவையா இருக்குங்கம்மா' என்று வசந்தி பாராட்ட, சுந்தரி அம்மாளின் முகம் பூரித்துப் போனது.
'இனிமே என்ன உதவி வேணும்னாலும் யோசிக்காம கதவைத் தட்டுங்க வசந்தி. பிரீத்தியை பள்ளிக்கூடப் பேருந்தில் ஏற்றி விடணும்னாலும் என்கிட்ட சொல்லிட்டுப் போங்க, நான் பாத்துக்கறேன்' என்றார் அன்பும் உரிமையும் கலந்த குரலில்.
ஒரு நாள் மாலை நான் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது, வரவேற்பறையில் ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான். அவனுக்கு எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கும்.
'இவன் பேரு ஆகாஷ். ராமநாதன் சாரோட பொண்ணோட பையன். பாவம், அவர் பொண்ணும் மாப்பிள்ளையும் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு விபத்துல இறந்துட்டாங்க. இவன் கொஞ்சம் 'சிறப்புக்குழந்தை', அதான் அவங்களே கூட வச்சு ரொம்பப் பாசமா வளர்க்குறாங்க' என்று வசந்தி என் காதோரம் மெதுவாக விளக்கினாள்.
அந்தக் குழந்தையைப் பார்க்கும்போது எங்களுக்குள்ளும் ஒருவிதப் பரிதாபம் எழுந்தது. ஆனால், போகப் போக நிலைமை கொஞ்சம் மாறத் தொடங்கியது.
ஆகாஷ் அடிக்கடி எங்கள் வீட்டுக்குள் வர ஆரம்பித்தான். அப்படி ஒரு நாள் வந்தவன் அமைதியாக இருக்காமல், பிரீத்தியின் செல்லமான டெடிபியர் பொம்மையைப் பிடுங்கிக்கொண்டான்.
'ஆகாஷ், அது பாப்பா பொம்மைடா, குடுத்துடு' என்று வசந்தி மிக மென்மையாகக் கேட்டுப் பார்த்தாள்.
ஆனால் அவன் கொடுக்க மறுத்து, கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு உரக்கக் கத்தத் தொடங்கினான்.
அவனது அந்தத் தீராத கத்தல் அந்த பிளாட் முழுதும் எதிரொலித்தது. பிரீத்தி பயந்துபோய் வசந்தியின் புடவையைப் பிடித்துக்கொண்டு அழத் தொடங்கிவிட்டாள்.
'சரி சரி, கத்தாதப்பா. நீயே வச்சுக்கோ' என்று வசந்தி வேறு வழியின்றி அவனைச் சமாதானப்படுத்த முயன்றாள். ஆனால் அன்றிலிருந்து அது வாடிக்கையாகிவிட்டது.
வசந்தியின் கைப்பேசி, பிரீத்தியின் வண்ண பென்சில்கள், அலமாரியில் இருக்கும் சிறிய அலங்காரப் பொருள்கள் என எதையாவது எடுத்துக்கொள்வான்.
'தாடா செல்லம்' என்று கையை நீட்டினால் போதும், கத்திப் பெரிய ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்துவிடுவான்.
ராமநாதன் சாரும் சுந்தரி அம்மாவும் பல முறை ஓடிவந்து, 'மன்னிச்சுக்கோங்க வசந்தி, இவனை எங்களாலயும் கட்டுப்படுத்த முடியல. ஆசிரமத்துல சேர்த்துடச் சொல்லி எல்லாரும் சொல்றாங்க. அது எப்படி எங்க மனசு ஒத்துக்கும்? எங்க பொண்ணு உசுரோட இருந்தா இவனை ஆசிரமத்துல சேர்ப்பாளா?' என்று கலங்கிய கண்களோடு மன்னிப்புக் கேட்கும்போது எங்களுக்கும் அழுகை வந்துவிடும். எங்களால் அவர்களிடம் கோபப்படவும் முடிவதில்லை.
'ஏங்க, அந்தப் பையனை நினைச்சா பாவமாதான் இருக்கு. ஆனா இவன் இப்படி பண்றது பிரீத்திக்கு ரொம்ப பயத்தை ஏற்படுத்துது. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலங்க...' என்று மிகவும் கவலையோடு சொன்னாள் வசந்தி.
எங்களின் அமைதியான இயல்பு வாழ்க்கையில் மெல்லிய ஒரு பதட்டக் கோடு விழுந்ததாக உணர்ந்தேன்.
ஆகாஷ் கெட்ட பையன் இல்லை. அவனுக்குத் தன் செயல்களின் விளைவு என்னவென்று தெரியவில்லை என்பது எங்களுக்குப் புரிந்ததுதான். ஆனால், அவனது தொடர்ச்சியான வருகை எங்கள் வீட்டின் நிம்மதியையும், பிரீத்தியின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியது.
ஒரு நாள் மாலை, பிரீத்தி தன் பள்ளி புராஜக்ட்டுக்காக பல மணி நேரம் உட்கார்ந்து வரைந்து ஒட்டிக்கொண்டிருந்த வண்ணப் படங்களை ஆகாஷ் திடீரெனப் பிடுங்கி ஒரே இழுப்பாகக் கிழித்துப்போட்டுவிட்டான்.
நாள் கணக்கில் மெனக்கெட்டு வரைந்த படங்கள் துண்டு துண்டாகத் தரையில் சிதறவே, பிரீத்தி அதிர்ச்சியில் உறைந்துபோய், பின் கதறி அழத் தொடங்கினாள்.
சமையலறையிலிருந்து ஓடிவந்த வசந்தி, கிழிபட்டுக் கிடந்த படங்களையும், தேம்பி அழுதுகொண்டிருந்த பிரீத்தியையும் பார்த்ததும் அவளுக்குள் அதுவரை அடக்கி வைத்திருந்த அத்தனை சகிப்புத்தன்மையும் ஒரே விநாடியில் முற்றிலுமாக நொறுங்கிப்போனது.
நாளும் பொழுதும் அவனது தொந்தரவுகளைப் பொறுத்துக்கொண்டு, முகம் மலரப் புன்னகையோடு கடந்து வந்த வசந்தியின் பொறுமைக்கு அன்று முற்றுப்புள்ளி விழுந்தது.
'ஆகாஷ், அறிவு இருக்காடா உனக்கு? என்ன காரியம் பண்ணி வச்சிருக்க?' என்று தன் குரலின் எல்லையை மீறி உச்சகட்ட ஆத்திரத்தில் கத்தியவள், அவனைப் பிடித்து நகர்த்தி அவன் முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்தாள்.
அவளது கத்தலிலும், எதிர்பாராத அடியிலும் அந்த வரவேற்பறையே அதிர்ந்தது.
அவளுடைய இந்தக் கோபமான முகத்தையும், அடியையும் ஆகாஷ் இதற்கு முன் பார்த்ததே இல்லை. வசந்தியின் கண்களில் தெரிந்த அந்தத் தீவிரமான கோபத்தைக் கண்டு மிரண்டுபோன ஆகாஷ், கையில் வைத்திருந்த மீதி காகிதங்களையும் கீழே போட்டுவிட்டு, அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினான்.
அவன் ஓடிய பிறகே வசந்திக்குத் தான் நடந்துகொண்ட விதம் உறைத்தது. தான் ஒரு சிறப்புத் தேவைகள் கொண்ட, பெற்றோரை இழந்து தவிக்கும் ஒரு குழந்தையை அடித்துவிட்டோமே என்ற பெரிய அதிர்ச்சியில் அவளது கைகள் நடுங்கத் தொடங்கின. அப்படியே தளர்ந்து போய் நாற்காலியில் சரிந்தாள். கோபத்தின் சுவடு மெல்ல மறைய, அவளது மனதில் ஒருவிதக் கடுமையான குற்ற உணர்ச்சியும் பயமும் வந்து சூழ்ந்துகொண்டன.
நான் அலுவலகத்திலிருந்து அப்போதுதான் உள்ளே நுழைந்தேன். என்ன நடந்தது என்பதை தேம்பித்தேம்பி என்னிடம் தெரிவித்தாள் பிரீத்தி.
அடுத்த சில நிமிடங்களில், ராமநாதன் சாரும் சுந்தரி அம்மாவும் எங்களது வீட்டுக் கதவருகே வந்து நின்றார்கள். சுந்தரி அம்மாவின் கண்கள் கலங்கியிருந்தன.
'மன்னிச்சுக்கோங்க வசந்தி. பையன் ரொம்ப தொந்தரவு பண்ணிட்டான் போல. இனிமே உங்க வீட்டுப் பக்கமே வராம நாங்க பாத்துக்குறோம்' என்று ராமநாதன் சாரும், சுந்தரி அம்மாவும் மிகவும் தாழ்ந்த குரலில் சொன்னார்கள்.
அவர்கள் பேசிய அந்த விதம் எங்களை மிகவும் வருத்தியது.
'அப்படியில்லைங்க சார், பாப்பா புராஜெக்ட்...' என்று வசந்தி தயங்கித் தயங்கி விளக்க முயன்றாள்.
'பரவாயில்லைம்மா, எங்களுக்குப் புரியுது. அவனுக்குத் தாய் தகப்பன் இல்லங்கிற ஆதங்கத்துல நாங்களும் கொஞ்சம் செல்லம் கொடுத்துட்டோம். கடவுளும் அவனை தண்டிச்சிட்டார்' என்று சொல்லிவிட்டு அவர்கள் நகர்ந்தார்கள்.
அன்று இரவு எங்கள் வீட்டில் வழக்கமான சிரிப்பும், செல்லச் சீண்டல்களும் இல்லை. ஒரு பெரிய அமைதி சூழ்ந்திருந்தது.
'ஏங்க, நான் அப்படி நடந்துகிட்டு இருக்கக்
கூடாது. அவங்க மனசு ரொம்ப கஷ்டப்பட்டிருக்கும்ல?' என்று மிகுந்த வருத்தத்துடன் கேட்டாள் வசந்தி.
'சூழ்நிலை அப்படி ஆயிடுச்சு வசந்தி. இதுல யார் மேலயும் தப்பில்லை' என்று நான் அவளைத் தேற்றினாலும், பக்கத்து வீட்டு வயதான தம்பதியினரின் முகத்தில் இருந்த அந்த வேதனை என் மனதை மிகவும் பாரமாக்கியது.
அடுத்தடுத்த நாள்களில் ஆகாஷ் எங்கள் வீட்டுக்கு வரவில்லை. எங்கள் கண்களிலும் படவில்லை. அவனது சிரிப்போ அல்லது கத்தலோ கேட்காதது ஏதோ செய்தது.
சில தினங்கள் கழித்து ஒரு நாள் இரவு ராமநாதன் சாரின் வீட்டுக்கதவைத் தட்டினோம். அவர்தான் கதவைத் திறந்தார். முழுவதும் திறக்கவில்லை. அவரது பார்வை மட்டுமே வெளிவரும் சிறிய இடைவெளிதான் இருந்தது.
'என்ன?' என்பது போல் பார்த்தார்.
'ஆகாஷ் எப்படி இருக்கான் சார்?' என்று தயங்கியபடி கேட்டாள் வசந்தி.
ராமநாதன் சார் பெருமூச்சுடன் சொன்னார், 'அவனை ஆசிரமத்துல கொண்டு போய்ச் சேர்த்துட்டோம்.'
அவர் கண்கள் கலங்கியிருந்தன. உள் அறையில் சுந்தரி அம்மா படுத்திருப்பது போல் தெரிந்தது.
அதற்கு மேல் அவரிடம் என்ன பேசுவதென்று எங்களுக்குத் தெரியவில்லை. எங்களைப் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தபடி அவரும் மெüனமாக நின்றிருந்தார்.
நாங்கள் எந்த வார்த்தையும் சொல்லாமல் அமைதியாகத் திரும்பினோம். அவர் கதவை மெல்ல மூடிக்கொண்டார்.
அன்று இரவு நாங்கள் வழக்கம் போல் பால்கனியில் அமர்ந்தோம். அப்போது வீசிய கடல் காற்று, எப்போதும் போல் குளிர்ச்சியாக இல்லாமல், மிகவும் கனமாகவும், எங்களைச் சுடுவது போல் ஒரு சூடான அனலாகவும் வீசிக்கொண்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

