தண்டனை
வானதி அந்த பர்ஃயூமை ரேக்கில் இருந்து எடுத்து, தான் தள்ளி வந்து கொண்டிருந்த பக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டு நடந்தாள்.
வானதி அந்த பர்ஃயூமை ரேக்கில் இருந்து எடுத்து, தான் தள்ளி வந்து கொண்டிருந்த பக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டு நடந்தாள். நல்ல உயர்தரமான வாசம் வீசும் ஒரிஜினல் பர்ஃப்யூம் அது. மகள் ஜனனி உபயோகப்படுத்துவது. வானதிக்கும் அந்த வாசனை ரொம்பப் பிடிக்கும். உண்மையில் ஆளை மயக்கும் வாசனை உடையதுதான் அது.
டிபார்ட்மென்ட் ஸ்டோருக்குப் போவதாக காலையில் சொன்னபோதே ஜனனி சொன்னாள், 'அம்மா... என்னோட பர்ஃப்யூம வாங்க மறந்துடாதே. இன்னும் ரெண்டு நாள்ல தீர்ந்துடும்...'
'சரிடி... கத்தாம போ...' என்றாள் வானதி. 'மறக்காம வாங்கிட்டு வந்துடணும்.' மனதில் அப்போதே குறித்துக் கொண்டாள்.
வானதி ஒரு சிங்கிள் பேரன்ட். ஜனனி ஒரே மகள்.
எம்பிஏ ஃபினான்ஸ் படித்தவள். ஒரு பெரிய கம்பெனியில் அக்கவுன்ட்ஸ் அசிஸ்டன்ட் மேனேஜர்.
ஆறிலக்கச் சம்பளம்... கம்பெனி குவார்ட்டர்ஸ்... கார்... இத்யாதி... இத்யாதி...
இருபத்து மூன்று வயது ஜனனி ரோசாப்பூ கலரில் மின்னினாள். 'தேவதையின் மறு உருவம்' என்று பார்த்தவர்கள் சொன்னார்கள். அவளுக்கு வந்த ப்ரபோசல்கள் கணக்கிலற்றவை.
வானதி டைவர்ஸ் வாங்கியபோது ஜனனி ஐந்தாவது படித்துக் கொண்டிருந்த பத்து வயதுச் சிறுமி.
'மேடம்... சோப்பு எடுத்திட்டிங்களா? எடுத்துட்டிருந்தா மூவ் பண்றிங்களா? அடுத்தது நானும் எடுக்கணும் ...'
பின்னால் தள்ளுவண்டியுடன் நின்றிருந்த அந்த முப்பத்தைந்து மதிக்கத்தக்க பச்சை கலர் சுடிதார் பெண் சொன்னதும் திடுக்கிட்டுப் போய் சுய நினைவுக்கு வந்தவள், 'ஸாரி...' என்றபடி வழி விட்டு நகர்ந்தாள்.
'அடுத்ததாக கொஞ்சம் பருப்பு, எண்ணெய் ஐட்டங்கள் வாங்க வேண்டும்' என்று நினைத்தபடியே வண்டியை முன்னால் தள்ளிக் கொண்டு போனவள், தடாலென்று எதிரே வந்தவன் மேல் கவனிக்காமல் மோதியபோது திடுக்கிட்டுப் போய் 'ஸாரி' கேட்க தலையை நிமிர்த்தினவள் கரென்ட் கம்பியைத் தொட்டவள் போல் ஷாக்கடித்து, 'ஸாரி' அதிர்ச்சியாகி நின்று போனாள்.
உலகம் ஒரு கணம் நின்று விட்டுச் சுழலுவது போல இருந்தது.
காரணம் அவன்... ஐந்தடி பத்தலங்குலத்தில் சற்றே தொப்பை போட்ட உடம்புடன் மாநிறத்தில் பொசு பொசு தலைமுடியுடன் வெள்ளை நிற ஷர்ட்டை கறுப்பு ஜீன்சில் இன் பண்ணி நின்றிருந்த அவன்... பரசுராமன்.
ஐம்பத்திரண்டு வயது நிரம்பிய அவளின் முன்னாள் கணவன். ஆம்... அவளின் முன்னாள் கணவன். சத்தியமாக அவள் அவனை அங்கு எதிர்பார்க்கவில்லை.
அவனுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும் போல. முகத்தின் அதிர்ச்சியும், அவளை அங்கு எதிர்பாராத கண்களின் அதிர்ச்சியும் நாற்பத்தி ஏழு வயதான தன் முன்னாள் மனைவியைப் பார்த்ததும் அவனுக்கும் இருக்கும்தானே?
'நீ... நீங்க...' அவன்தான் முந்திக் கொண்டான்.
அவளுக்குத் தயக்கம் ஒரு புறமும், அவனை அங்கு அப்போது எதிர்பாராத அதிர்ச்சி ஒரு புறமும் போட்டு அவளைப் பேசாமல் ஊமையாக்கி இருக்க, மனதில் ஒருபுறம் அவனைப் பார்த்த சந்தோஷம் ஏன் ஊற்றெடுக்கிறது என்பது அவளுக்கே புரியாத புதிராக இருந்தது.
'நல்லா இருக்கியா?'
'ம்... நீங்க எப்படி இருக்கீங்க? நீங்க எப்படி இங்க?'
'இந்த ஸ்டோர் ஓனர் என் ஃப்ரென்டுதான். அவனைப் பார்க்க வந்தேன்...நீ?'
'நல்லாருக்கேன்... ஜனனியும் நல்லா இருக்கா. நான் வீட்டுக்குத் தேவையானது வாங்கறது இங்கதான்...'
'ஓ...வெரிகுட். நான் இங்க எப்பவாவதுதான் வர்றது. உன்னைப் பார்த்ததுல சந்தோஷம்...'
'எனக்கும்தான்... இப்ப உங்க வீடு?'
அவன் அட்ரசை சொன்னான். இங்கிருந்து ஆட்டோவில் கால் மணி நேரத்தில் போய் விடலாம்.
'ஓகே... உங்களைச் சந்திச்சதுல சந்தோஷம்...' வேறென்ன பேசுவது எனத் தெரியவில்லை.
'எனக்கும்தான்... பார்ப்போம்...' சொன்னவன் கிளம்பி விட்டான்.
அவன் முதுகையே வெறிக்க சிறிது நேரம் பார்த்தவளுக்கு அதற்கு மேல் அங்கிருக்கத் தோன்றவில்லை. வாங்கியதற்கு பணத்தைக் கொடுத்து விட்டுக் கிளம்பினாள்.
வாழ்க்கை விசித்திரமானது... அது ஆச்சரியம், அதிர்ச்சி, சந்தோஷம், துக்கம், கவலை, துரோகம், அவமானம் என்ற சகலத்தையும் தன்னுள் ஒளித்து வைத்திருக்கிறது. எதை எப்போது யாருக்குத் தரும் என்பதுதான் பிரபஞ்ச ரகசியம்.
ஆட்டோவில் எல்லாவற்றையும் ஏற்றிக் கொண்டு வீடு திரும்பியவள் இறக்கிப் போட்டுவிட்டுப் படுக்கையில் வந்து தொப்பென்று விழுந்தாள்.
பரசுராமனைக் காதலித்து வீட்டை எதிர்த்துக் கொண்டு கல்யாணம் செய்த அந்த நாளை இன்னும் மறக்க முடியவில்லை அவளால். இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்தபோது ஏற்பட்ட காதல் கசிந்துருகிப் பின் இரு வீட்டு எதிர்ப்பில் கல்யாணத்தில் முடிந்தது. இருவருமே அது குறித்துக் கவலைப்படவில்லை. நல்ல வேலை... கை நிறைய சம்பளம் தந்த தைரியம் அது.
'அப்பா, அம்மா ஏத்துக்கலைனு கவலைப்படறியா வானதி?' நண்பர்கள் முன்னிலையில் தாலி கட்டிய கையோடு கேட்டான் அவன்.
'அதான் நீங்க இருக்கீங்களே... அப்புறமென்ன கவலை. உங்க குடும்பமும்தானே நம்மளை ஏத்துக்கலை...' என்றாள் காதலோடு.
எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.
அன்று காலை காய்கறி எடுத்துக் கொண்டு வந்த அந்தப் பையனிடம் கால் மணி நேரம் பேரம் பேசி காய்களை வாங்கிக் கொண்டு உள்ளே வந்தாள் வானதி.
'அப்பப்பா... என்ன விலை சொல்றான். யானை விலை, குதிரை விலை...' காய்களை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டே சொன்னாள்.
எல்லாவற்றையும் அமைதியாக உள்ளே சேரில் உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பரசுராமன் கேட்டான்.
'கால் மணி நேரம் காய் வாங்கி இருப்ப போல...'
'பின்னே... ஒவ்வொரு காயையும் பேரம் பேசி வாங்கினேனாக்கும்...'
'பேரம் பேசுனியா? இல்ல பையன் அழகா இருக்கான்னு அவனை ரசிச்சுட்டு இருந்தியா?' சுவரை வேடிக்கை பார்த்தபடி மெதுவாய் அவன் கேட்டதை கேட்டவள் அதிர்ந்து போனவளாக அவனைப் பார்த்தாள். கையில் இருந்த காய்கள் நழுவின.
'என்ன சொன்னீங்க... என்ன சொன்னீங்க?' என்று கோபத்துடன் கேட்டாள்.
'தமிழ்லதான சொன்னேன் வானதி? கேக்கலியா?'
'நல்லா கேட்டது... இதென்ன புது பழக்கம்? என்ன சந்தேகமா? உங்களுக்கே அசிங்கமா இல்ல?'
'நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரல வானதி...'
'சே...'
அவனை காலில் மிதித்த அசிங்கத்தைப் பார்ப்பது போலப் பார்த்தபடி உள்ளே போனாள். அவனைப் பார்க்கவே அருவருப்பாக இருந்தது.
மூன்று மாதம் ஓடி இருக்க, அன்று ஆபீசில் ஒரு முக்கிய வேலை மேனேஜருடன். இவள் சம்பந்தப்பட்ட டிபார்ட்மென்ட் வேலை என்பதால் கஸ்டமர் கம்பெனிக்கு இருவரும் செல்ல வேண்டி இருந்தது. காலையிலேயே கிளம்பும் முன்பே இவனிடம் சொல்லி விட்டாள்.
'ஸ்ரீராம் அசோசியேட்சுக்கு இன்னைக்கு நானும் மேனேஜரும் போக வேண்டி இருக்கும். டிரான்சாங்ஷன்ல கொஞ்சம் பிரச்னை... லஞ்ச்சுக்கு வந்துடுவேன். ஒரு வேளை வரமுடியாட்டி என்னை எதிர்பார்க்காதீங்க. சாப்டுடுங்க...'
அவன் எதுவும் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அன்று அங்கு வேலை மதியம் தாண்டியும் நீண்டதால் வெளியிலேயே மேனேஜருடன் சாப்பிட்டுவிட்டு வந்து விட்டாள்.
ஆபீஸ் வந்தவள் முதலில் அவன் கேபினுக்குச் சென்று, 'சாப்பிட்டீங்களா?' என்றாள்.
'என்ன... நல்லா சந்தோஷமா இருந்தீங்களா ரெண்டு பேரும்?' என்றான்... குரலில் அத்தனை நக்கல்.
அதிர்ந்து போனவளாக அவனை விட்டு விலகி நின்றாள். என்ன பேசுவது என்று தெரியவில்லை. அத்தனை பெரிய தாக்குதலாகத் தெரிந்தது அவன் வார்த்தைகள். கண்ணில் நீர் சுரக்க,
'என்ன... என்ன சொல்றீங்க?'
அவன் முகத்தை கரப்பான்பூச்சியாகப் பாவித்து பார்த்தாள். 'ச்சீ...' என்ற ஒற்றை வார்த்தையில் அத்தனை வெறுப்பையும் கொட்டிவிட்டு வேகமாக வெளியேறியவள் பாத்ரூமுக்குள் நுழைந்து 'ஓ' வென்று மனதின் புழுக்கம் தீரும் வரை அழுதாள்.
ஆறுதல் கூற, அழுகை துடைக்க கை இல்லாத மனிதர்களுக்கு அழுகைதான் ஆறுதலும், துன்பம் போக்கும் மருந்தும்... ஒரு அழுகை தரும் ஆறுதலும், தன்னம்பிக்கையும் ஆண்டவனாலும் தர முடிவதில்லை. ஒரு அழுகைக்குப் பிறகு வரும் மன தைரியம் ஆயிரம் யானை பலம்.
அன்று அவன் முகம் பார்க்கப் பிடிக்காமல் ஆட்டோவில் வீட்டுக்குப் போனாள்.
அதன் பின் அவனுடனான வாழ்க்கை அவளுக்கு நெருப்பின் மத்தியில் இருப்பதைப் போன்றதானது.
இதற்கு மத்தியில் ஜனனியும் பிறந்து விட்டாள்.
நாளுக்கு நாள் அவன் சந்தேகம் வலுவடைந்து கொண்டே போனது. அவர்களுக்கு மத்தியிலான உறவு குறைந்து கொண்டே போனது. அவன் முகத்தைப் பார்க்கவே வெறுத்தாள்.
சில சமயங்களில் இப்படிப்பட்டவனையா காதலித்தோம் என அவள் தன்னையே அதிர்ச்சியாகக் கேட்டுக் கொண்டாள்.
காதலிக்கும்போது மற்ற ஆண்களிடம் பேசும்போது அவன் கோபப்பட்டதையும், அதை அவள் 'தன் மீதான அளவு கடந்த காதல்' என்றும், 'பொசசிவ்னஸ்' என்றும் சந்தோஷப்பட்டதும் எவ்வளவு அபத்தம் என்பதும் இப்போது புரிந்தது.
செல் ஒலிக்க நிகழ்காலத்துக்கு வந்தாள் வானதி. கல்யாண புரோக்கர்.
பத்து நாள்களுக்கு முன்னால் ஜனனியைப் பெண் பார்த்துவிட்டுப் போனார்கள். போன் செய்வதாகச் சொன்னார்கள். அந்த விஷயமாகத்தான் இருக்க வேண்டும்.
'மேடம். மாப்பிள்ளை வீட்டாருக்கு நம்ம பொண்ணை ரொம்பப் பிடிச்சுப் போச்சு. மேற்கொண்டு மத்த விஷயம்லாம் பேச எப்போ வரலாம்னு கேக்கச் சொன்னாங்க. சொன்னீங்கன்னா சொல்லிடுவேன்...'
கல்யாண விஷயம் நல்லபடியாக முடிந்ததில் வானதிக்கு சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருந்தது. சந்தோஷத்தைவிட நிம்மதிதான் அதிகம். இனி அலைய வேண்டியதில்லை.
'ஞாயிறு வரச் சொல்லிடறீங்களா?'
'ஓகே மேடம்... வந்துடறோம்...' செல்லை கட் செய்தாள் வானதி.
செல்லை வைத்து விட்டு மீண்டும் கட்டிலில் சாய்ந்தாள் வானதி. ஆயாசமாக இருந்தது.
தங்களுக்கு டைவர்ஸ் நடந்த அந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது.
அன்று ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு வர பஸ்ஸூக்குக் காத்திருந்தபோது அவனைப் பார்த்தாள். அன்று பரசுராமன் ஆபீசுக்கு லீவு. அவளின் தூரத்து உறவு. ஒரு வகையில் அத்தை பையன். அடிக்கடி பார்ப்பதோ சந்திப்பதோ இல்லை. இப்படி எப்பொழுதாவது எதேச்சையாகச் சந்தித்துக் கொண்டால்தான் உண்டு.
அவனும் பார்த்துவிட்டான். 'வானதி...' என்று கூப்பிட்டுக் கொண்டே பக்கம் வந்தவனிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவளிடம், 'வண்டியில ஏறு. வீட்ல விட்டுட்டுப் போறேன்...' அவன் சொல்ல ஏறி உட்கார்ந்தாள்.
வீட்டில் கொண்டு வந்து விட்டவனுக்கு காபி கொடுத்து அனுப்பியவளை முறைத்தான் பரசுராமன்.
'இது எவ்வளவு நாளா நடக்குது?'
'அவன் என் தம்பி மாதிரி...'
'தம்பி மாதிரிதானே? தம்பி இல்லையே?'
அவன் என்ன நினைப்பில் அப்படிக் கேட்கிறான் என்பதால் இவனிடம் பேசுவது வேஸ்ட் என்று நினைத்தவள் பேசாமல் உள்ளே போனாள்.
'ஏன் மனசாட்சி உறுத்துதா?'
'தப்பு பண்றவங்களுக்குத்தான் உறுத்தும்...'
'தப்பு பண்ணவங்களுக்கும் உறுத்தும்...'
அவளுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததெனத் தெரியவில்லை...
வேகமாகப் போய் அவன் முன்னால் காறி உமிழ்ந்தாள். 'தூ...'
அவன் அதை எதிர்பார்க்கவில்லை. விதிர்விதிர்த்துப் போனான்.
இரவு முழுவதும் அவள் தூங்கவில்லை. சாப்பிடவும் இல்லை. அழவும் இல்லை. மனம் இறுகிக் கல்லாய் கிடந்தது. அடி வாங்கி வாங்கி பழகியது இறுதியில் கல்லாய்தான் மாறும். உள்ளுக்குள் ஏதோ ஒன்று அறுந்து விழுந்தது புரிந்தது.
'இனி இவனுடன் சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லை.' என்பது மட்டும் நன்றாக விளங்கி இருந்தது.
'ஜனனியும் வளர்ந்து விட்டாள். இனி இவனோடு சேர்ந்து வாழ்வது தனக்கு அசிங்கம்...'
அடுத்த வாரம் டைவர்ஸூக்கு அப்ளை பண்ணினாள்.
தெரிந்த தோழி ஒருத்தி உதவியுடன் வேறு கம்பெனிக்கு முயற்சிக்க, தோழியின் ரெக்கமன்ட்டில் வேலை கிடைக்க, ஆபீசின் அருகிலேயே வீடு பார்த்துக் கொண்டாள்.
இரண்டு வருடத்தில் டைவர்ஸ் கிடைத்தது. அடுத்த ஆறு மாதத்தில் பரசுராமன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக பழைய ஆபீஸ் தோழிகளின் மூலம் தகவல் வர அவள் மனமும், இதயமும் ஏன் வலித்தது என அவளுக்கே புரியவில்லை.
காலம் ஓடின ஓட்டத்தில் அல்லது விரட்டின விரட்டலில் அவனை இவள் மறந்தே போனாள்.
நான்கைந்து வருடங்கள் ஓடி இருக்க, அவன் இரண்டாவது மனைவியும் டைவர்ஸ் செய்த தகவல் கிடைத்தது.
அதன் பின் அவனை மறந்தே போனாள். இதோ இன்றுதான் பல வருடங்களுக்குப் பின் பார்க்கிறாள்.
மாலை ஆறு மணி. ஆபீசில் இருந்து வந்த ஜனனிக்கு காபியைக் கொடுத்துவிட்டு புரோக்கர் சொன்ன செய்தியைச் சொன்னாள் வானதி.
'வரட்டும்மா...' என்றாள் ஜனனி.
ஞாயிற்றுக்கிழமை மாப்பிள்ளை வீட்டார் வந்தார்கள். மேற்கொண்டு பேச வேண்டியதைப் பேசி கல்யாணத் தேதியையும் முடிவு செய்தார்கள். இதோ... இப்போது பத்திரிகை அடித்து கையில் வந்திருந்தது.
'ஜனனி... உன் அப்பாவுக்கு பத்திரிகை வச்சுக் கூப்பிடணும்...' அம்மா சொன்னதைக் கேட்டு திகைத்தாள் ஜனனி.
'அப்பாவா? என்னம்மா சொல்ற? அவரை எங்க தேடுவ?'
அவள் கேட்டதும் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் அவனைப் பார்த்ததைச் சொன்னாள் வானதி.
'அம்மா...'
'நீ என்ன சொல்ல வரேன்னு புரியுதுடி. அவர் எனக்கு புருஷனா இல்லாம இருக்கலாம். ஆனா உனக்கு அப்பா. ஒரு அப்பாவா அவரை முன்ன நிறுத்தற கடமை, மரியாதை, செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கு...'
'அந்தக் கடமையை அவர் செய்யலையே...'
'விட்டு தள்றி. இப்பவும் நாம ஒண்ணும் குறைஞ்சு போயிடலையே. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை ஜனனி. ஒண்ணு தெரியுமா? எனக்கே அப்ப இருந்த கோவமும், வெறுப்பும் இப்ப அவர் மேல இல்லை... ஒருவேளை நாங்க ஒண்ணா சேர்ந்து வாழ்ந்திருந்தா இருந்துருக்குமோ என்னமோ... எனக்கு அவரை இன்னும் பிடிக்கும்டி...'
ஜனனி அம்மாவைப் புரியாமல் பார்த்தாள். 'மனித மனம்தான் எத்தனை வினோத விசித்திரமானது...என்ன வாழ்க்கை இது?'
'மனிதர்கள் ரொம்பவும் நுட்பமான மனச் சிக்கல்கள் கொண்டவர்கள். அதற்குள் ஒரு வினோதம் இருக்கும். ஆச்சரியம் இருக்கும். புரியாமை இருக்கும். ஆனால், அது அவர்களுக்கே தெரியாது...' எப்போதோ, எங்கோ படித்தது ஞாபகம் வந்தது ஜனனிக்கு. ஒரு பெரு மூச்சை விட்டபடி எழுந்தாள்.
அடுத்த நாள் ஆட்டோ பிடித்தாள் வானதி. அவன் சொன்ன முகவரி ஞாபகம் இருந்தது.
அதற்கடுத்த நாள் லஞ்ச் டைம். பரசுராமனும் எதிரில் அவன் நண்பன் மணிகண்டனும்...
'நேத்து வானதி வீட்டுக்கு வந்திருந்தா மணி.' பரசுராமன் சொன்னதும் மணிகண்டனுக்கு நம்ப முடியாத ஆச்சரியம். பரசுராமன் விஷயம் முழுவதும் மணிகண்டனுக்குத் தெரியும்.
'நிஜமாவா? நம்ப முடியல... என்ன விஷயம்?'
'என் பொண்ணுக்குக் கல்யாணம் மணி. அதுக்குக் கூப்பிட வந்தா...'
'அதெப்படி பரசுராமா?'
'கேட்டேனே... நீங்க எனக்கு புருஷனா இல்லாம இருக்கலாம். ஆனா அவளுக்கு அப்பா... அப்பாவா முன்ன நின்னு செய்ய வேண்டிய கடமைகளைச் செஞ்சாகணும்னு சொல்றா... யோசிச்சா சரினுதான் படுது...'
'அப்போ நீ கல்யாணத்துக்குப் போகப் போறீயா?'அவன் கேட்க... அவனை ஒரு விநாடி உற்றுப் பார்த்த பரசுராமன் சொன்னான்.
'கண்டிப்பா போவேன்... அவ முன்னால நான் கை கட்டி நிக்கணும் மணி...'பார்த்தியா... நீ என்னை விட்டுட்டுப் போன. நான் என் வாழ்க்கையில வெற்றி அடைஞ்சு இன்னைக்கு என் பொண்ணை இந்தச் சமுதாயம் மதிக்கற அளவுக்குக் கொண்டு வந்து என் வாழ்க்கையில வெற்றி அடைஞ்சுட்டேன். ஆனா நீ தோத்து நிக்கறடா... என் பொண்ணு வாழ்க்கைக்காக என் புலன்களை அடக்கி முன்னேத்தி இருக்கேன்.
வாழ்க்கையில வெற்றிங்கறது தன்னை, தன் புலன்களை அடக்கறதுதான். ஆனா நீ அதுலயும் தோத்துப் போயிருக்கே. உன்னோட மொத்த வாழ்க்கையுமே தோல்விடா'ன்னு என்னைப் பார்க்கறப்ப அவளோட ஈகோ ரகசியமா பெருமிதப்படும். தனக்குத் தானே சந்தோஷப்பட்டுக்கும். அது சின்ன வயசுல வாழ்க்கையை இழந்த அவ மனசை, ஈகோவைத் திருப்திப்படுத்தலாம். நிறைவைத் தரலாம்.
அது இயல்புதான மணி. இந்த வெற்றி அவளை என் முன்னால தலை நிமிர்ந்து நடக்கச் செய்யும். எனக்கும் இப்படி ஒரு தலைகுனிவு தேவை. நான் செய்த தப்புகளுக்கு மனசளவுல குறுகிப் போய் அவ முன்னால தலை குனிஞ்சு நிக்கற தண்டனை தேவை. ஒரு புருஷன்னு அவளுக்கு நான் எந்த சந்தோஷமும் கொடுக்கலை. எங்க கல்யாண வாழ்க்கைல
நான் அவளுக்குக் கொடுக்கற சந்தோஷம் இதுவா இருக்கட்டும். அதுக்காகவே போகப்போறேன்...' என்று சொன்னவனைப் பார்த்துக் கொண்டே இருந்தான் மணிகண்டன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

