நியாயத் தராசு
நான் என்ன எம்.பி.ஏ. படிச்சேனா... ஏணிப்படி செருப்பை மாட்டிக்கிட்டு ஸ்கூட்டர்ல ஏறி ஆபீசுக்குப் பறக்கிறேனா...
'நான் என்ன எம்.பி.ஏ. படிச்சேனா... ஏணிப்படி செருப்பை மாட்டிக்கிட்டு ஸ்கூட்டர்ல ஏறி ஆபீசுக்குப் பறக்கிறேனா... தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி பார்சலோட வந்து ஒங்கம்மா கால்ல விழுந்து கும்புட்டு 'அம்மா... போனஸ் வந்ததும் மொதல் வேலையா நல்லிக்குப் போய் ஒங்களுக்குப் பிடிச்ச
எம்.எஸ்.ப்ளூ புடவை வாங்கீட்டு வந்திருக்கேன்... ஒங்க நெறத்துக்கு எடுப்பா இருக்கும்'னு இமயமலையைப் பேத்து ஒங்க அம்மா தலையில எறக்கிவச்சிட்டு, ஜாய் ஆலுக்காஸ்ல வாங்கின கல்வளையலை கண்ணுல காட்டாம எடுத்திட்டுப்போய் காத்ரெஜ்ல வச்சுப் பூட்டற அளவுக்கு சாமர்த்தியசாலியா?'
-கல்யாணியின் பொருமல் ஒரு தொடர்கதை.! ரஞ்சனி அந்தக் குடும்பத்தின் இரண்டாவது மருமகளாக அடியெடுத்துவைத்த நாள்முதலாகத் தொடுக்கப்படும் புலம்பல் தோரணம்.
'இந்த ஓரகத்திக்காய்ச்சல் இன்னும் குணமாகலையா கல்யாணி? 'நீ வேலைக்குப் போகலே... சம்பாதிக்கத் துப்பில்லே'ன்னு அம்மா ஒருநாளாவது குத்தம் சொல்லீருக்காங்களா...' என்று சமாதானப்படுத்த முயன்றான் ரகு .
'ஒங்க அம்மா வாயைத் தொறந்து சொன்னாத்தானாக்கும்..? மாவு சலிக்க இங்கிலீஸ் பேப்பரை எடுக்கிறேன்... 'விஷால் வேலை சம்பந்தமா நாலஞ்சு விளம்பரத்தை ரஞ்சனி குறிச்சு வச்சிருக்காள்'ன்னு பேப்பரை வெடுக்குனு பிடுங்கி வைக்கிறாங்க. 'வான்டட் காலம்' பாத்து ஒடனே நான் ரஞ்சனிக்கு போட்டியா வேலைக்குப் போய்டப் போறேன் பாருங்க...'
'அப்படி ஏன் நினைக்கிறே... அவன் படிப்புக்கு ஏத்த வேலை என்ன ஏதுன்னு விளம்பரத்தைப் பாத்து ரஞ்சனி குறிச்சு வச்சிருப்பா... அவன் ஜிம்மிலேர்ந்து வந்தவொடனே ஞாபகப்படுத்தணும்னு அம்மாகிட்டசொல்லீருப்பா...'
'ஏன்... மாவு சலிக்கிறப்ப விளம்பரம் என் கண்ணுல பட்டா எனக்கு சொல்லத் தோணாதாக்கும்... ஒங்க கடைக்குட்டித் தம்பி எனக்கும் கொழுந்தன்தானே... இவ ஒருத்திதான் அண்ணியா? விஷால் படிப்பு , சாப்பாடு, டிரஸ், வேலை, ஸ்போர்ட்ஸ் எல்லாத்தையும் இவதான் தீர்மானிக்கணுமா?'
'அட புரியாதவளே...! அவங்க ரெண்டுபேருமே காலேஜில ஒண்ணா படிச்சவங்க... தனக்கு எது பிடிக்கும்னு இவனும் சொல்லியிருப்பான். எது அவசியம்... எது ஏத்ததுன்னு அவளும் திருத்தியிருப்பா... அந்த உரிமையில இப்ப நம்மவீட்டு மருமகளா வந்ததுக்கு அப்பறமும் அவன்மேலே அக்கறை எடுத்துக்கிறா...'
'ஐயா சாமீ, அந்த அக்கறையை அவன் படிப்பு, டிரஸ் , ஜிம்மோட நிறுத்திக்கட்டும்... நான் வந்தநாளா சமைச்சு வச்சதை சத்தம்போடாம சாப்பிட்டுட்டுப் போனவன்தான் ஒங்க சின்னதம்பி... இவ வந்தாலும் வந்தா டேபிள்ள நான் மூடிவச்ச பாத்திரத்தை எல்லாம் தொறந்து தொறந்து பாத்து, 'என்னக்கா... விஷாலுக்கு முள்ளங்கி, முட்டைக்கோùஸல்லாம் கூடாது'ன்னு தெரியாதா... அத்தனையும் வாயு... தள்ளுங்க... நேத்தே ஸ்ப்ரெளட் ஊற வச்சுருக்கேன்... லேசா பெப்பர் சால்ட் தூவி கிண்ணத்துல போட்டுக் கொடுக்கிறேன்'னுட்டு அத்தனை பாத்திரத்தையும் இடதுகையால ஒதுக்கீட்டு கிண்ணத்தை ஏந்திக்கிட்டு போவா... 'அடியேய் ... அவன் வளர்ற பிள்ளைடீ ... பசி தாங்கமாட்டான்'னு கிண்ணத்தைப் பிடுங்கினா 'அவன் ஹைட்டுக்கு இப்பவே ஓவர் வெயிட். ஐ.பி.எஸ். ஆகணும்னு ஆசைப்பட்டா போதாதுக்கா... அதுக்கு ஏத்தமாதிரி உடம்பை ஃபிட்டா வச்சுக்கணுமில்லே... புரோட்டீன், ஃபைபர், எதெதுலெ இருக்கு ... கொலெஸ்ட்ரால் எதனால கூடும்... நியூட்ரிஷியஸ் டயட் எது... கலோரியை எரிக்கிறதுக்கு எத்தனை மைல் நடக்கணும்... எவ்வளவு நேரம் ஒர்க் அவுட் பண்ணனும்னு நான் ஒரு பக்கம் க்ளாஸ் எடுக்குறேன்... நீங்க நெய் ஒழுகுற ரவா கேசரி, முந்திரி பக்கோடான்னு தெனம் ஒண்ணா செஞ்சு கொடுத்து வெய்ட் போட வைக்கிறீங்கன்னு என்னையே குத்தம் சொல்றா ஒங்க கொழுந்தியா.'
'சரி ... அவன் சாப்பிடலேன்னா என்ன... நானும் ஒன் பெரிய கொழுந்தன் ரங்காவுமே எல்லாத்தையும் காலி பண்றோம்... இனிமே நீ விஷால் விஷயத்தில...'
'மூக்கை நுழைக்காதே... சும்மா முணுமுணுக்காதே -அதானே சொல்லப் போறீங்க? இப்பவே இந்தக் குடும்பத்துமேல எனக்கு துளிகூட அக்கறையில்லேன்னு அவ அக்கம் பக்கமெல்லாம் டமாரம் அடிக்கிறா... வாக்கப்பட்டு வந்ததுக்கு இருபத்துநாலு மணி நேரமும் அடுப்படியில வேகணும், கிணத்தடியில கரையணும்... மூத்த மருமகளுக்கு இந்த அவமானமும் அடிமைச்சிறுக்கிப் பட்டமும்தான் மிச்சம்!'
கல்யாணியின் குமுறலுக்கு வடிகால் வேண்டும் என்பதை உணர்ந்ததால் அமைதியாகக் கேட்டபடி அவள் தலையை வருடிக் கொடுத்தான் ரகுராமன்.
தீபாவளி வந்தாலே மத்தாப்புச் சிதறலும் சரவெடி முழக்கமும் ஊரையே கலகலப்பாக்கிவிடும். பார்வதி - சாம்பசிவம் குடும்பத்தின் மகிழ்ச்சிக் கொண்டாட்டம் -கேலியும் கிண்டலும் சிரிப்பும் சீண்டலும் தெருவையே பொறாமையுடன் திரும்பிப்பார்க்க வைத்துவிடும். காரணம், இரண்டு சம்பந்திகள் குடும்பத்தினரின் வருகை !
மூத்த மருமகள் கல்யாணியின் அப்பா அம்மா, தம்பி குடும்பம் முதல்நாளே சீர்வரிசைப் பொருள்களுடன் வந்து சேருவார்கள். பூ, பழம், கல்கண்டு, புடவை துணிமணி, ஒரு தாம்பாளம், மூன்றுவகை இனிப்பு, இரண்டுவகை காரம் தனித்தனிப் பாத்திரங்களில்... இதுபோக அதிரசத்துக்காகப் பிசைந்தமாவு ஒரு தூக்குநிறைய... சம்பந்திகள் அரட்டையடித்தபடியே விடிய விடிய தட்டித்தட்டி சுட்டெடுப்பார்கள்.
இரண்டாவது மருமகள் ரஞ்சனியின் பெற்றோர் கொஞ்சம் நாசூக்குப் பேர்வழிகள். அதிகாலையில் வீட்டிலேயே தீபாவளி கொண்டாடிவிட்டு காரில் புறப்பட்டு வந்துசேருவார்கள். பெட்டி பெட்டியாக காஜூகத்லி, சோன் பப்டி, பாம்பே மிக்சர் என வடக்கத்தி பண்டங்கள் அகர்வால்பவனில் வாங்கியதை ஊஞ்சலில் எடுத்தெடுத்து கொலு வைப்பார்கள். மகளுக்கும் மருமகனுக்கும் மட்டுமல்லாமல் சம்பந்திகளுக்கும் பட்டுப்புடவை, ஐரிகைவேட்டி, ஜிப்பா என்று வாங்கிவந்து கொடுத்து பாதம்தொட்டு வணங்குவார்கள்.
பூஜையறையில் கல்யாணியிடம் தனிமையில் பேசிக்கொண்டிருக்கும் தாய் மரகதம் பொருமுவாள்.
'ஏன் கல்யாணி? நாங்களும் ஒன் மாமனார் மாமியாருக்கு புதுத்துணி எடுத்து வந்திருக்கணுமோ...'
'சும்மா கெடம்மா! தலைதீபாவளியோட நிறுத்திடாம பதினைஞ்சு வருஷமா நீ எங்களுக்கு புதுத்துணி கொண்டுவர்றதே அதிகப்படி. அதைக் கணக்கு போட்டுப் பாத்தா , ரஞ்சனி அம்மா நாலு வருஷமா கொண்டுட்டு வர்ற துணிமணி செலவைப்போல எட்டுப் பங்குக்கு மேலேயே இருக்கும். அவங்களுக்கு சமமா செய்யணும்னு செலவை இழுத்துவிட்டு அப்பாவை ஓட்டாண்டி ஆக்கீராதே' என்று கல்யாணி எச்சரித்தாள்.
ஹாலில் எல்லோரும் கூடியிருந்து தீபாவளி பட்சணங்களைக் கொறித்தபடியே அரட்டையடித்துக்கொண்டிருந்தபோது மாடியிலிருந்து விஷால் இறங்கி வந்தான்.
'ஹாய்... ஹேப்பி தீவாளீ! என்றான் எல்லோருக்குமாக.
கல்யாணியின் தம்பி பிரபு எழுந்துவந்து, 'கங்கிராட்ஸ் விஷால். சிவில் சர்வீஸ் நல்ல ரேங்க்ல பாஸ் பண்ணீட்டீங்களாம். அத்தான் சொன்னாங்க...' என்று கைகுலுக்கி வாழ்த்தினான்.
எல்லோருக்கும் காஃபி எடுத்துவந்த ரஞ்சனி, 'ஒங்க அக்காவும் அத்தானும் செல்லங்கொடுக்காம இருந்திருந்தா அவன் ஃபர்ட்ஸ் ரேங்க்கே எடுத்திருப்பான்' என்று சீறினாள்.
கல்யாணியின் தந்தை காரணம் புரியாமல் முகத்தைச் சுளித்தார்.
'சின்ன மாப்பிள்ளை பர்ஸ்ட் ரேங்க் வாங்கமுடியாத அளவுக்கு அப்படி என்ன செல்லங்கொடுத்து கெடுத்தாங்க எம் மகளும் மாப்பிள்ளையும்?'
சாம்பசிவம் குறுக்கிட்டு, 'அதை ஆராய்ச்சி பண்ண இதுவா நேரம். காபியைக் குடிச்சிட்டு சீட்டைப் பாத்து ஆடுங்க சம்பந்தி' என்று கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்தார் . ஆனால், ரஞ்சனி விடுவதாக இல்லை!
'நீங்களே நியாயம் சொல்லுங்க பெரியப்பா... ராத்திரி கண்முழிச்சு விஷால் படிக்கணும்னா பாதி வயிறுதான் சாப்பிடணும். தடித்தடியா அடையை சுட்டுசுட்டுப் போட்டு தின்னுடான்னு திணிச்சா தூக்கந்தானே கண்ணை சொக்கும்! காலையில அஞ்சு மணிக்கு அலாரம் வச்சா...
'இப்பவே ஏண்டா எழுந்திரிக்கிறே... இன்னுங் கொஞ்சநேரம்தூங்குடா ராசா'ன்னு ஒங்க மருமகன் அலாரத்தை நிறுத்திட்டுப் போவாரு. விஷால் ஐ.பி.எஸ். ஆகணும்னா, சாப்பாடு, தூக்கமெல்லாம் ஒரு அளவோடு இருக்கணும்னு சொல்லிச் சொல்லி போராடுறதே எனக்கு முழுநேர வேலையா போச்சு. அஞ்சு மணிக்கு எழுந்திரிச்சாதானே யோகா, ஜாகிங், ஒர்க் அவுட் எல்லாத்துக்கும் நேரம் கிடைக்கும். ஐ.ஏ.எஸ்ஸூக்கு மூளை ஷார்ப்பா இருக்கணும். ஐ.பி.எஸ்.ஸூக்கு உடம்பு ட்ரிம்மா இருக்கணுமில்லே பெரியப்பா?'
பூஜையறையில் மரகதம் பொருமினாள்.
'ஏன் கல்யாணீ ... ஒன் சின்னக்கொழுந்தனைப் பெத்தது உன் மாமியாரா... இல்லே இந்த மகாராணியா?'
'ஒரு நாள் பாத்ததுக்கே ஒனக்கு இப்படி கோபம் வருதேம்மா. நானும் நாலு வருஷமா பாத்துக்கிட்டுதான் இருக்கேன். வாயைத் தொறக்கமுடியுதா?' என்றாள் சலிப்புடன்!
பார்வதி ஒரு கிண்ணத்தில் மைசூர் பாகு, ஜாங்கிரி, முள்ளுத் தேங்குழல், ரிப்பன் பகோடா என நிறைத்து எடுத்துவந்து மரகதத்திடம், 'என்ன அண்ணீ... ஒங்களுக்காக எடுத்துவச்ச பண்டமெல்லாம் அப்படியே டைனிங் டேபிள்ள இருந்திச்சே... மக கிட்ட பேசுங்க... வேணாங்கலே... நான் செஞ்ச பட்சணத்தை சாப்பிட்டுக்கிட்டே பேசுங்க ன்னுதான் இங்கியே எடுத்தாந்திட்டேன். கல்யாணி... ஒங்க அம்மா எதையும் பாக்கிவைக்காம சாப்பிடவைக்கவேண்டியது ஒம் பொறுப்பு...' என்று சொல்லி கிண்ணத்தைக் கொடுத்தாள்.
'ஒண்ணுகூட மிச்சம் வைக்காம தின்னு தீத்திடுறேன் அண்ணீ. சின்ன மருமகனுக்கு புடிக்குமேன்னு நேத்து வந்தவொடனே ரெண்டு அதிரசத்தையும் சுசியத்தையும் தட்டுல வச்சுக் கொடுக்கிறேன். ஒங்க சின்ன மருமக 'நெய்
அதிரசம் கொலஸ்ட்ரால் ... சுசியம் எண்ணெய் கமறும்' ன்னு தட்டைப் புடுங்கி கீழே வைக்கிறா. கல்லைத் தின்னாலும் செரிக்கிற சிறுவயசுப் புள்ளையோ அதைத் தொடாதே, இதைத் திங்காதே ன்னு வாயைக் கட்டிப்போடுறாளே. என்னையுமா இவ கார்வார் பண்ணப்போறா ? நான் என்ன ஐப்பீயெஸ் ஆப்பீசராவா ஆகப் போறேன்... பத்து நிமிஷத்தில பாத்திரத்தை காலி பண்ணீரமாட்டேன்?' என்று நொடித்தபடியே பாத்திரத்தைத் துழாவி தேன்குழலை எடுத்தாள் மரகதம்.
'என்ன அண்ணீ... முறுக்கு வேறே, தேங்குழல் வேறென்னு செஞ்சிருக்கீங்க. அதுவும் தேங்குழல்லயே ரெண்டு வெரைட்டி எதுக்கு ?'
'முள்ளுத்தேங்குழல்தான் பிழிஞ்சேன்... ரஞ்சனி அதைத் தொடமாட்டா.. . அதான் தேங்காய்ப்பால் தேங்குழலும் செஞ்சிட்டேன் அண்ணீ...'
'செஞ்ச முள்ளுத்தேங்குழல் வீணாப்போகக்கூடாதுன்னுதான் அள்ளிக்கொண்டாந்து எனக்கு கொடுக்குறீங்களாக்கும்...' என்று செல்லமாகச் சீண்டினாள் மரகதம்.
'நல்லா கேட்டீங்களே... எதுவும் வீணாப்போகாது அண்ணீ. எதைக் கொடுத்தாலும் தட்டாம சாப்பிடுவா கல்யாணி...' என்று சிலாகித்துச் சிரித்தபடியே அறையைவிட்டு வெளியேறினாள் பார்வதி.
அவள் போவதை உறுதிப்படுத்திக்கொண்டபிறகு மகளிடம், 'நல்ல கதையா இருக்குடீ ஒன் மாமியா பேசுறது... ரெண்டு மருமககிட்டேயும் பாசத்தைக் காட்டுற லட்சணத்தைப் பாத்தியா... சின்னவளுக்கு தேங்காய்ப்பால் முறுக்கு... மூத்தவளுக்கு முள்ளுத் தேங்குழல்... பட்சணத்துல மட்டுமில்ல... அவங்க ஒன்னெப் பார்க்குற பார்வையிலேயும் முள்ளுதாண்டீ!' என்றாள்.
கல்யாணியின் இதயத்தில் தணிந்திருந்த தணல் அவள் அம்மாவால் விசிறிவிடப்பட்டு விட்டது.
மார்கழி மாதம் முடியட்டும் என்று காத்திருந்த பார்வதி ஏழெட்டு ஃபோட்டோக்களையும் மூலைகளில் மஞ்சள் தடவிய ஜாதகங்களையும் எடுத்துக்கொண்டுவந்து ஊஞ்சலில் உட்கார்ந்தாள்.
அலுவலகம் செல்லத் தயாராக வந்த ரஞ்சனி ஸ்டாண்டிலிருந்து ஸ்கூட்டர் சாவியை எடுக்கும்போது மாமியாரைத் திரும்பிப் பார்த்தாள்.
'என்ன அத்தே... விஷாலுக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சாச்சா...?' என்றாள்.
'ஆமா...' என்ற ஒற்றை வார்த்தையுடன் பேச்சைப் பட்டென்று கத்தரித்தாள் பார்வதி. ஒரு விநாடி தயங்கி நின்ற ரஞ்சனி முகத்தை நொடித்துக்கொண்டு வெளியேறினாள்.
பார்வதி சமையலறையை நோக்கி, 'கல்யாணீ...' என்று குரல் கொடுத்தாள்.
'இனிமேதான் குக்கர் வைக்கப்போறேன் அத்தே... அரைத் தம்ளர் காபி கலந்து எடுத்திட்டு வரட்டுமா...'
'கேஸை நிறுத்திட்டு வா சொல்றேன்... சோறு, காபி எல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்... ராகுகாலம் வர்றதுக்குள்ளே இதெல்லாத்தையும் பாத்து சொல்லு...'
'எதைப் பார்த்துச்சொல்லணுமோ... மளிகை சாமான் லிஸ்டா இருக்கும்... இல்லேன்னா சலவைக் கணக்கு ..!' என்று மனசுக்குள் பொருமியபடி முந்தானையில் ஈரக்கையைத் துடைத்துக்கொண்டே கூடத்துக்குள் வந்தாள்.
'இப்படி ஊஞ்சல்ல உக்காரு. இதெல்லாம் பெண்களோட ஜாதகம் ... விஷால் ஜாதகத்துக்குப் பொருந்தினது... பொண்ணுங்க
ஃபோட்டோ... அவங்க அப்பா, அம்மா பேரு... விலாசம்... ஃபோன் நம்பர் எல்லாமே இருக்கு... நாலு பொண்ணுங்க வேலைக்கும் போறவங்க... இதுல நம்ம குடும்பத்துக்கு ஏத்த ஒருத்தியை பார்த்துச் சொல்லு... '
'நீங்க பெரியவங்க பார்த்து செலக்ட் பண்றதை விட்டுட்டு...' என்று கல்யாணி தயங்கினாள்.
'நான் அந்தக் காலத்து மனுஷிமா. இன்னும் எத்தனை வருஷம் இருக்கப் போறேன். நீதான் இந்தக் குடும்பத்தைக் குடைசாயாம கட்டிக் காப்பாத்தப்போற மூத்த மருமக. எல்லாரையும் அனுசரிச்சு அரவணைச்சுக் கொண்டுபோற ஒன்னைமாதிரியே ஒரு பொண்ணை விஷாலுக்குப் பார்த்துவைக்கிற பொறுப்பும் தகுதியும் ஒனக்குத்தான் இருக்கு கல்யாணி... ரங்கன் கல்யாணந்தான் அவன் இஷ்டத்துக்கு நடந்திருச்சு... இந்த வீட்டுக்கு ஒரு ரஞ்சனியே போதும் ... கடைசி மருமக இன்னொரு கல்யாணியா வரணும்னு நான் ஆசைப்படறேன்... அந்தப் பொறுப்பையும் ஒங்கிட்ட ஒப்படைக்கறதுதானே நியாயம்?' என்று வாஞ்சையுடன் கூறி ஜாதகங்கள்,
ஃபோட்டோக்கள் அடங்கிய பையை கல்யாணியிடம் ஒப்படைத்தாள் பார்வதி.
'ரஞ்சனியைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறாளே' என்று மாமியாரை தவறாக எண்ணிய கல்யாணி கண்கலங்கினாள் .
மாமியார் - காலில் தைத்த நெருஞ்சி முள் அல்ல... குடும்ப கெளரவத்துக்காக மனித உறவுகளைத் துல்லியமாக எடைபோடும் தராசுமுள்!
நியாயத்தராசில் அவரவர் நியாயங்களை அள்ளி வைத்தாலும் நிஜத்தின் பக்கமே சாய்கிறது தராசு முள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

