நிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு! தமிழ்நாட்டில் 8 மணிநேரமாக மின்தடை நீட்டிக்கப்படுகிறதா? மின்வாரியம் விளக்கம்! வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்! சத்தியபாமா உருவகேலி: மு.க. ஸ்டாலினை விமர்சித்த முதல்வர் விஜய்!மின் கட்டணம், விலைவாசியைப் பார்த்துவிட்டு வாக்களியுங்கள்: தாராபுரம், மதுராந்தகம் மக்களுக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் ஜந்தர் மந்தர் போராட்டத்தில் காவலர்களால் பாலியல் சீண்டல்; 3 பெண் பத்திரிகையாளர்கள் புகார்!

கேளீர் தமிழ் வரலாறு - 8: அடிமைத்தனத்தின் திருநாளில் உலகத் தமிழின் உதயம்!

இருபதாம் நூற்றாண்டே இன்னும் பிறக்கவில்லை. அதற்கு மூன்றாண்டுகள் இருந்தன.

manikandan Y

Published On :

இருபதாம் நூற்றாண்டே இன்னும் பிறக்கவில்லை. அதற்கு மூன்றாண்டுகள் இருந்தன.

திராவிட இயக்க ஆட்சியல்ல, இயக்கமே தோன்றாத காலம். காங்கிரஸ்...? பெரிதாக வேரூன்றாத, வீறுகொள்ளாத காலம்!

'புதிய விழிப்பின் முன்னோடி' களுள் ஒருவரான ஜி. சுப்பிரமணிய ஐயர் சுதேசமித்திரன் நாளிதழை இன்னும் தோற்றுவிக்கவில்லை.

பாரதிக்குப் பதினைந்து வயது. பெரியாருக்குப் பதினெட்டு வயது. இருவரும் தீவிர அரசியல் திசையில் மட்டுமல்ல, விடுதலை இயக்க, காங்கிரஸ் பக்கம்கூடப் பார்வையைச் செலுத்தியிருக்க வாய்ப்பில்லை.

ஆனால் தமிழின், தமிழ்ச் சமூகத்தின் புதிய விடியலுக்கான ஒரு குறிப்பிடத்தக்க இதழின் பயணம் தொடங்கிவிட்டது.

ஆம். 1897-ஆம் ஆண்டு ஜூன் 21- உணர்வில், அறிவில் ஓங்கிய ஒரு தமிழன் செய்த பெருமுயற்சி திசைகள்தோறும் தமிழைக் கொண்டுசேர்த்தது. தமிழருக்குப் புதிய உலகங்களை அறிமுகம் செய்துவைத்தது.

அப்போது திருவனந்தபுரம் சுந்தரம் பிள்ளை என்னும் மனோன்மணீயம் பெ. சுந்தரனார் இறந்து இரு மாதங்கள்தாம் ஆகியிருந்தன. ஆனால், அவர் அளித்த ஊக்கமும் உணர்வும் அந்த இதழ்முயற்சியில் கலந்திருந்தன.

அந்தப் பெருமுயற்சிதான் ஜே.எம். நல்லசாமி பிள்ளையின், 'உண்மை விளக்கம் அல்லது சித்தாந்த தீபிகை' (தி லைட் ஆப் ட்ரூத் ஆர் சித்தாந்த தீபிகா) என்னும் ஆங்கில மாத இதழின் தோற்றம்! சமயச் சொல்லாடல் தலைப்பிலிருந்தாலும் சைவ சமயத்துக்கு முக்கிய இடம் தந்திருந்தாலும் சமயந் தாண்டிய ஒட்டுமொத்தத் தமிழுக்கும் தமிழருக்குமான உலகளாவிய இதழ்தான் அது!

ஒருவகையில் தனிநாயக அடிகளின் முயற்சிக்கும் முன்னோடியாக உலகளாவிய நிலையில் வீறுநடைபோட்ட உலகத் தமிழ் இதழ் இது!

Story image

சமஸ்கிருதத்தின் மீது பெருங்காதல் கொண்டு பெரும் பணிகள் செய்த மாக்ஸ் முல்லர், ஆக்ஸ்போர்டிலிருந்து தமிழ் மாணவனாக வாழ்ந்து தமிழ்த்தொண்டு புரிந்த ஜி.யு. போப், பிரான்சிலிருந்து தமிழ்ப் பணி செய்த ஜூலியன் வின்சோன், இலங்கையின் வழக்கறிஞர் கி. பிரிட்டோ, இலங்கை அறிஞர் தம்பிப் பிள்ளை, தமிழ் யாப்பியலின் முன்னோடி தி. வீரபத்திர முதலியார், திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியின் தமிழாசிரியர் பண்டிட்

டி.சவரிராயன், திருமணம் செல்வக்கேசவராயர் எனப் பெரும் அறிஞர்களின் பார்வையையும் பங்களிப்பையும் தொடக்கத்திலேயே பெற்ற உலகத் தமிழுக்கான முன்னோடி இதழ்தான் 'சித்தாந்த தீபிகை'.

1897 ஜூன் 20 - ஒரு பெண்ணின் வாழ்வில் முக்கியமான நாள்! ஒரு தேசத்தின் வாழ்விலும், ஏன் உலகத்தின் வரலாற்றிலும்கூடத்தான்!

அந்த நாளினையும் 22-ஆம் தேதியையும் இங்கிலாந்து, கனடா, இந்தியா என முக்கியமான நாடுகள் கொண்டாடிக் கொண்டாடி மகிழ்ந்தன.

அயர்லாந்தில் மட்டும் சவப்பெட்டி ஊர்வலம் நடந்து கொண்டாட்ட மறுப்பும் எதிர்ப்பும் நிகழ்ந்தன.

அப்படி என்ன முக்கியமான நாள் அது?

'காலனி ஆதிக்கத் தொழுநோய்த் தேமலைப் பூமியின் முகத்தில் எழுதிய புல்லர்கள்' எனப் பிற நாடுகளை அடிமைப்படுத்துபவர்களைப் பற்றி மக்கள் கவிஞர் இன்குலாப் ஒருமுறை எழுதியிருந்தார். ஆங்கிலேயர் நம்மை அடிமைகொண்டிருந்தனர். நம்மை ஆண்டவர் விக்டோரியா மகாராணி. அவர் தன் சொந்த நாடாம் இங்கிலாந்தில் அரியணை ஏறி அறுபது ஆண்டுகள் நிறைவுபெற்ற நாள் அது!

நம் மகாராணியல்லவா? நாமும் கொண்டாடித்தானே ஆகவேண்டும்!

அடிமைத்தனத்தின் கொண்டாட்டங்களுக்கு நம் தேசத்தில் எப்போதுமே பஞ்சமிருப்பதில்லை.

தீமையிலும் விளைந்த ஒரு பெருநன்மை - ஜே.எம். நல்லசாமி பிள்ளை ஆங்கிலத்தில் 'சித்தாந்த தீபிகை' என்னும் இதழை மகாராணியாரின் வைர ஜூபிளி தினத்தில் ஆரம்பிக்கப்பட்டது எனச் சொல்லித் தொடங்கியதும் உலகின் பார்வைக்குத் தமிழைக் கொண்டுசென்றதும்!

Story image

manikandan Y

அது மட்டுமல்ல, இதழின் முகப்பில் விக்டோரியா மகாராணியின் வைரவிழா தின ஞாபகார்த்தமாகத் தொடங்கப்பட்டது என்னும் வாசகத்தைத் தொடர்ந்து தாங்கியே பல்லாண்டுகள் வெளிவந்தது. ஒருவேளை காரியம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக இராஜவிசுவாசம் போலக் காட்டிக்கொண்ட இராஜதந்திரமாகவும் இது இருக்கலாம். ஏனென்றால், நல்லசாமி பிள்ளை தாய்மொழிப் பற்றோடு தாய்நாட்டுப் பற்றும் கொண்டவர்.

மாவட்ட நீதிபதியாகவும், தமிழிலும் ஆங்கிலத்திலும் அறிஞராகவும், பதினான்கு சைவ சித்தாந்த நூல்களுக்கும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பும் விரிவுரையும் ஆக்கியோராகவும், சைவ சமய வல்லாளராகவும் வரலாற்றில் இடம்பெறுபவர் ஜே.எம். நல்லசாமி பிள்ளை. அவரது பல பெரும்முயற்சிகளுக்காக முன்னோடித் தமிழர் தலைவர்களுள் ஒருவர் என்றுகூட அவரைச் சொல்லலாம்!

20-6-1897 என்னும் அந்த நாளினை அன்றைய தமிழ்ச் சமுதாயம் எப்படிப் போற்றியது, பார்த்தது என்பதற்கு இன்னும் ஓர் உதாரணம்!

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையையும் உ.வே.சா.வையும் சி.வை.தா.வையும் மாயூரம் வேதநாயகம் பிள்ளையையும் அரவணைத்தவர் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் சுப்பிரமணிய தேசிகர். அவருக்குப் பிறகு பட்டத்திற்கு வந்த மடாதிபதி அம்பலவாண தேசிகர்.

ஒருமுறை இராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி மன்னர் நவராத்திரி விழாக் காலத்தில் புலவர்களின் தமிழ் பருகி அவர்களையெல்லாம் சிறப்பித்து மகிழ்ந்தார். பழந்தமிழ் மீட்புப் பணியில் தலைப்பட்டிருந்த உ.வே.சா.வை அவர் அந்த விழாவுக்குச் சிறப்பாக வரவழைத்திருந்தார். உ.வே.சா.விற்கு விலைமதிப்புமிக்க ஒன்றிற்கு இரண்டு சாதராக்களைப் போர்த்திச் சிறப்புச் செய்தார். சாதரா என்பது சால்வை. ஊர் வந்து சேர்ந்தார் உ.வே. சாமிநாதய்யர். இரட்டைச் சாதராக்களைப் பெற்றோரிடம் காட்டினார். பெற்றோர் மகிழ்ந்தனர்.

சிலப்பதிகாரத்தைப் பதிப்பித்து வெளியிட்ட கடன் நெருக்கடியில் உ.வே.சா. இருந்த நேரம் அது. பெற்றோருக்கு அடுத்து ஆதீனகர்த்தர் அம்பலவாண தேசிகரிடம் அவற்றைக் காட்டினார். ஆதீனகர்த்தர் மிக உயரிய சன்மானம் எனப் பாராட்டினார். உ.வே.சா., இவை என்ன விலை பெறும் எனக் கேட்டார். முந்நூறு ரூபாய்க்கு மேல் இருக்கும் என்றார் தேசிகர். நான் இதை வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறேன், மடத்தில் இதைச் சேர்த்துவிடுகிறேன், சிலப்பதிகாரத்தை அச்சிட்டதால் ஏற்பட்ட சிரமம் இருக்கிறது என்றார் உ.வே.சாமிநாதய்யர். விருப்பமில்லாவிட்டாலும் உ.வே.சா.வின் குறிப்பையுணர்ந்து மடத்தில் அவற்றைப் பெற்றுக்கொண்டு முந்நூறு ரூபாய் கொடுக்கச் செய்தாராம் ஆதீனகர்த்தர். (போர்த்தப்படும் சால்வைகளின் சுழற்சி அப்போதே தொடங்கிவிட்டது போலும்!) அதற்கு முன்னும்பின்னும் கூடப் பொருளுதவி செய்துவந்தவர் தேசிகர்.

உ.வே.சா.வின் வாழ்விலும் தமிழ்ச் சமூக வரலாற்றிலும் சைவ சமயக் குருபீடமான திருவாவடுதுறை ஆதீனம் முதலியவற்றுக்கு முக்கிய இடமுண்டு. அப்படிப்பட்ட திருவாவடுதுறையின் ஆதீனகர்த்தர் அம்பலவாண தேசிகர் 20.6.1897ஆம் நாளுக்காக இங்கிலாந்திலிருக்கும் மகாராணிக்கு ஒரு தந்தி அனுப்பியிருந்தார். பணிவோடு மகாராணிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். இறைவனின் ஆசியை வேண்டுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

Story image

manikandan Y

இப்படித்தான் அந்த நாளை எல்லாரும் கொண்டாடியிருக்கின்றனர்.

இந்தச் செய்தியும் 'சித்தாந்த தீபிகை' முதல் இதழிலேயே இடம்பெற்றிருந்தது.

'சமயம், தத்துவம், இலக்கியம், அறிவியல் முதலியவற்றுக்காக நடத்தப்படும் மாத இதழ்' என்னும் அறிவிப்பைத் தலைப்பையடுத்துத் தாங்கியிருந்தது இதழ்.

முதல் இதழிலேயே இதழின் நோக்கத்தை விரிவாக எடுத்துரைத்திருந்தார் நல்லசாமி பிள்ளை.

இந்திய தமிழ்ச் சமயங்கள், இலக்கியம், தத்துவம், வரலாறு முதலிய துறைகளில் மேல்நாட்டு அறிஞர்கள் ஆற்றும் பணிகளை நம்மவர் அறியச்செய்வது, இந்தத் துறைகளில் நம்மவர் சிறந்த பணிகளைச் செய்யத் துணைநிற்பது, மொழிபெயர்ப்புகளுக்கு முக்கிய இடமளிப்பது, இந்தியச் செம்மொழிகள், தாய்மொழிகளின் இலக்கிய, தத்துவ, சமயத் துறைகளின் ஆராய்ச்சியை மேம்படுத்துவது, ஈடுபாட்டை ஏற்படுத்துவது, மேலை நாடுகளின் சிறந்த இலக்கியங்களையும் தத்துவங்களையும் தமிழுக்குக் கொண்டு

வருவது, வரலாறு, அறிவியல் துறைகளில் நமக்குள்ள குறைபாடுகளைப் போக்க முயல்வது, தென்னிந்திய திராவிட மொழிகளின் இலக்கியம், சமயம், தத்துவம், வரலாறு ஆகியவற்றுக்கு இடமளிப்பது முதலியன இதழின் நோக்கங்களாகும்.

மகாகவி பாரதி பின்னாள்களில் அழுத்தமாக முன்வைத்த பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல், புத்தம் புதிய கலைகள் தமிழில் தோன்ற வேண்டும் முதலிய எண்ணங்களின் முன்னோடிக் குரலாக இந்த இதழின் நோக்கங்கள் பலவும் இருப்பதைக் காணமுடிகின்றது.

தமிழ்மொழியின், தமிழ்ச் சமூகத்தின் மேம்பாட்டுக்கான முன்னோடிக் குரல் 'சித்தாந்த தீபிகை' இதழின் குரல்!

இந்த நோக்கப் பகுதி நம்மிடையே உள்ள சாதி, மூடப் பழக்க வழக்கங்கள் பற்றியும் சுட்டிக் காட்டியிருந்தது.

ஆங்கிலத்தில் மட்டும் இதழ் வெளிவந்தால் இந்தக் கருத்துகள் அனைவரையும் சென்றடைய வாய்ப்பில்லை என்பதால் இந்த இதழ் தமிழிலும் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார் நல்லசாமி பிள்ளை. சொன்னது மட்டுமல்ல செய்தும் காட்டினார். ஓராண்டு இந்த இதழ் தமிழிலும் தனியே வெளிவந்தது. இது ஒரு முதல் முயற்சி! புது முயற்சி! முன்னோடி முயற்சி!

'உண்மை விளக்கம் அல்லது சித்தாந்த தீபிகை' எனும் பெயரில் முதல் இதழும், 'உண்மை விளக்கம் எனும் சித்தாந்த தீபிகை' எனும் சிறு பெயர் மாற்றத்துடன் இரண்டாம் இதழ் தொடங்கியும் தமிழ் இதழ்கள் வெளிவந்தன. தமிழ் இதழ் ஆங்கில இதழிலிருந்து மிகச் சிறு மாற்றங்களைக் கொண்டிருந்தது. தமிழ் இதழ் ஓராண்டே வெளிவந்தது. ஆங்கில இதழ் 1897 முதல் 1914 வரை நடைபோட்டது.

ஆங்கில இதழ் 1909-ஆம் ஆண்டளவில் நிருவாக அமைப்பு முதலியவற்றில் முக்கியமான சில மாற்றங்களையும் பெற்றது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில், சென்னை மாகாணக் கல்வித் துறையில் தமிழ்மொழி உள்ளிட்ட தாய்மொழிகளின் கல்விக்கு எதிரான குரல்களும் செயல்களும் மேலோங்கின. இவற்றுக்கு எதிராகத் தமிழின் உரிமைக்கான ஓர் இயக்கமாகவே 'சித்தாந்த தீபிகை' தீவிரமாகச் செயல்பட்டது.

ஒருமுறை தென்னிந்தியாவைப் பற்றித் தவறான கண்ணோட்டத்தை நீதிபதியாக இருந்த புகழ்பெற்ற இரானடே வெளியிட்டிருந்தார். கடுமையான பதிலடியைத் தந்தது சித்தாந்த தீபிகை. தமிழ், தமிழர், தமிழ்மண் ஆகியவற்றின் உரிமைக்காகவும் மலர்ச்சிக்காகவும் மானங்காக்கவும் முன்னோடியாகச் செயல்பட்டது 'சித்தாந்த தீபிகை'.

இப்படி ஏராளமான முதன்மையான வரலாற்றுத் தருணங்களின் ஆவணக் கருவூலமாக உள்ளது 'சித்தாந்த தீபிகை'!

1911-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 - தமிழறிஞராக மலர்ந்துகொண்டிருந்த ஒருவர் 'ஜே.எம். நல்லசாமி பிள்ளை விரும்பினால் தான் 'சித்தாந்த தீபிகை'யின் ஆசிரியப் பொறுப்பேற்பேன்' எனப் பதில் கடிதம் எழுதியிருந்திருக்கிறார். நல்லசாமி பிள்ளை முதற் கடிதத்தில் என்ன எழுதியிருந்தார் எனத் தெரியவில்லை.

அவர் விரும்பினால் 'சித்தாந்த தீபிகை'யின் ஆசிரியப் பொறுப்பேற்பேன் என எழுதியவர் இன்று தமிழ்ச் சமூகத்தின் பேராளுமையாக நன்கு அறியப்பட்டுள்ளார். ஆனால், அந்த இதழைத் தோற்றுவித்த, நடத்திய, ஆசிரியராகத் திகழ்ந்த முன்னோடிப் பேராளுமை ஜே.எம். நல்லசாமி பிள்ளை இன்று பெரிதாக அறியப்படவில்லை.

'விரும்பினால் ஆசிரியப் பொறுப்பேற்பேன்' என எழுதியவர் யார் தெரியுமா?

மறைமலையடிகள்!

இன்னும் புரட்டிப் பார்ப்போம் 'சித்தாந்த தீபிகை'யின் பக்கங்களை!

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.