மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு! கோவை, நீலகிரி, தேனியில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் மாற்றியமைப்பு! திருச்சி சிவா, கனிமொழிக்கு மீண்டும் தலைமைப் பொறுப்பு!தேஜஸ் போா் விமானத் திட்ட தாமதத்தால் பாதிப்பு: விமானப் படை தலைமைத் தளபதிபிரேஸிலில் இன்று அதிபா் தோ்தல்ஹசீனா நாடு கடத்தல்: காலக்கெடு இல்லை - இந்தியா

அன்றைய நீர்ப் பங்கீடு!

வானம் பார்த்த வன்புலப் பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்தில், மழைக் காலத்தில் கிடைக்கும் சொற்ப நீரை முறையாகப் பகிர்ந்து அளித்துள்ளதையும், இதற்காக நீர்ப்பாசனக் கட்டமைப்பில் நீர்ப் பங்கீடு செய்யப்பட்டுள்ளதையும் கல்வெட்டுகளில் இன்றும் அறியலாம்.

Published On :

பொ.ஜெயச்சந்திரன்

வானம் பார்த்த வன்புலப் பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்தில், மழைக் காலத்தில் கிடைக்கும் சொற்ப நீரை முறையாகப் பகிர்ந்து அளித்துள்ளதையும், இதற்காக நீர்ப்பாசனக் கட்டமைப்பில் நீர்ப் பங்கீடு செய்யப்பட்டுள்ளதையும் கல்வெட்டுகளில் இன்றும் அறியலாம்.

பாசன நிலத்துக்கு நீரைப் பெறும் உரிமை, அதாவது முறைமையானது அன்றைய காலத்திலேயே தோன்றி வளர்ந்துவிட்டது. இந்த முறை 'பண்டாடு பழநடை' எனச் சொல்லப்பட்டது. மடைக் கால்களை குமிழிக்கால், கற்கால், குமரிக்கால், மணவாளக்கால், பெட்டைக்கால் உள்ளிட்ட பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டதை மடைக் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. மடையின் உறுப்புகளான மடைக்கால் பெண்ணாகப் பாவிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள குளங்களின் பெயர், அவற்றின் சிறப்பு, மடைகள், நீர்ப் பங்கீட்டின் அமைப்பு முறை, பாசனக் கட்டமைப்பு போன்றவை கல்வெட்டுகளால் சிறப்புப் பெற்றுள்ளன. பாசனக் குளத்துக்கு ஏரி, குளம், ஏந்தல், கண்மாய் எனப் பல பெயர்கள் உண்டு. மழைக்காலத்தில் ஒவ்வொரு பாசனக் குளத்துக்கும் அதிக நீர் வந்து சேரும். அப்போது, மிகை நீர் செல்வதற்கு கண்மாயில் 'கலிங்கு' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கலிங்குக்கு 'தாம்போகி', 'மறுகால்', 'கடைக்கால்' எனப் பல பெயர்கள் உண்டு.

குளங்களில் ஆடிப்பெருக்கு:

ஆடிப் பெருக்கு சமயத்தில், பல ஆறுகளில் தண்ணீர் இல்லாதபோது, பலர் குளங்களில் கொண்டாடினர். செம்பாட்டூரில் ஊர் மக்கள் குழி அளந்து வெட்டிப் பராமரித்ததும், குளங்களைச் சீரமைத்ததும், புல்வயலில் உமையாண்டி ஏரி என்ற குளத்தையும் மக்களே வெட்டியதும், செப்பனிட்டதும் அங்குள்ள கல்வெட்டுகள் மூலம் தெரியவருகின்றன.

புதுக்கோட்டையில் உள்ள கல்வெட்டு ஒன்றில், 'கலிங்கில் வழியும் மிகை நீர் செல்வதை கடைவிடும் நீர்' என்று குறிக்கப்பட்டுள்ளது. மடைக்கால்கள், கரைப் பக்கம் சாய்ந்து விடாமல் இருப்பதற்கு 'சாத்துக்கல்' என்ற பலகைக்கல் சாய்த்து வைக்கப்பட்டுள்ளது.

நீர்ப் பங்கீடு குறித்து கல்வெட்டு ஆர்வலர் கரு.இராசேந்திரன் கூறியது:

'ஓர் ஆயக்கட்டில் மொத்த நிலங்களுக்கும் ஒரே நேரத்தில் நீர்ப் பாய்ச்ச இயலாது. இதை ஒழுங்குப்படுத்தவே ஒவ்வொரு குளத்திலும் முறைவைத்து, நில அளவுக்கேற்ப நீர்ப் பாய்ச்சப்பட்டது. கோட்டூர் வட்டத்துக்கு உள்பட்ட ஆதன்குடி குளத்தில் 'வட்டத்தால் இரண்டு நாழிகை நீரும் விட' என்ற தொடர் நீர்ப் பாய்ச்சுவதை வட்டமாகக் கொள்ளப்பட்ட செய்தி இதனை உறுதி செய்கிறது. நீர்ப் பங்கீட்டில் நாழிகை, பொழுது, நாள் என்ற காலக் கணக்கீட்டில் நீர் வழங்கப்பட்டது.

குன்றாண்டார்கோவில் என்ற ஊரில், பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் காலத்தில், 793-ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த கலிமூர்க்க இளவரையன் ஒரு ஏரியை வெட்டி, அதற்கு 'வாலி ஏரி' எனப் பெயரிட்டதும், விராலிமலைக்கு அருகேயுள்ள இராசாளிப்பட்டி என்ற ஊரில் அதே மன்னனின் காலத்தில் புல்லயக் கடம்பன் என்பவர் ஒரு குளத்துக்கு மதகு அமைத்துள்ளதும் கல்வெட்டுகளில் இன்றும் உள்ளன.

நார்த்தாமலையில் 9-ஆம் நூற்றாண்டில் தமிழதியரையன் மல்லன் விடுமன் அங்குள்ள ஏரிக்கு ஒரு மடை அமைத்துக் கொடுத்துள்ளதும், கவிநாட்டுக் குளத்தின் பெரிய மடையை முதலாம் மாறஞ் சடையன் என்ற பாண்டிய மன்னன் காலத்தில் வல்லநாட்டுக் கவிர்ப்பாலிருந்து பெருந்திணை வெண்கன் என்பவர் செய்துள்ளதும் அந்த மடை தூண் கல்வெட்டு தெரிவிக்கிறது.

ஆரியூர் மேலக் கண்மாயின் நடுமடைத் தூணில் ஸ்வஸ்திஸ்ரீ இராஜராஜன் என்ற தொடர் மட்டும் காணப்படுவதால், அவரது நேரடிப் பார்வையில் இம்மடை செய்வித்ததையும், அரசமலை பெரிய குளத்தின் பெரியமடையை முதலாம் இராசேந்திர சோழனின் கண்காணிப்பில் குன்றியூர் நாட்டு சிந்தாமணிப் பெரையன் என்ற மூவேந்த வேளார் இந்தக் குமிழியை செய்ததையும் அறியலாம்.

வாகவாசல் என்ற ஊரில், சுந்தர சோழன் காலத்திய கல்வெட்டில், 'வெள்ளனூருடையான் என்பவன் பெரிய குளம் பூலாங்குளத்தின் பராமரிப்புக்கு அக்குளங்களின் விவசாயிகளிடம் இருந்து 83 கலம் நெல் அவ்வூரின் சபையாருக்குச் செலுத்த வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. முதலாம் பராந்தக சோழன் காலத்தில் பொன்னாண்டி என்பவர், முத்தூற்றுக் கூற்றத்து மாவூர் கல்லம்பலத் தலைவன் நெரிஞ்சிக்குடி கண்மாயை பழுது பார்ப்பதற்கு பொன் வழங்கிய செய்தி அங்குள்ள இரு கல்வெட்டுகளில் உள்ளன.

ஐந்நூற்றுவர் என்ற வணிகக் குழுவினர், முதலாம் பராந்தகன் காலத்தில் முனியந்தை என்ற முனசந்தை ஊரில், ஐந்நூற்றுவர் ஏரியைப் பராமரித்து வந்த செய்தியும், சித்தூரில் உள்ள கண்மாய் சீரமைக்கப்பட்டு பாசன வசதிக்காக மதகுகளும், சில வாய்க்கால்களும் அமைக்கப்பட்டு வேளாண்மை விரிவாக்கம் செய்யப்பட்ட செய்தியும் அங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.

1012-13-ஆம் ஆண்டைய கல்வெட்டு ஒன்றில், திருவிளாங்குடி கண்மாயினைச் சுற்றியுள்ள நிலங்களுக்கு அந்தக் கண்மாயிலிருந்து பிரியும் வாய்க்கால்கள் நான்கு எல்லைகளாகக் குறிப்பிட்டுள்ளன. அந்தக் கல்வெட்டுகளில் உத்தமசோழன் வாய்க்கால், விக்கிரமகேசரி வாய்க்கால், மாதேவி வாய்க்கால், சண்டேசுவர வாய்க்கால், பரமேசுவர வாய்க்கால் என அரசர்கள், அரசிகள், அரசு அலுவலர்களின் பெயர்களால் கால்வாய்கள் அழைக்கப்பட்டதையும் அறியலாம்.

இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சியில் 1135-1150 இரும்பாளித் தலைவன் ஆயைப்ப நாடாள்வான் என்பவன் கவிநாட்டுக் குளத்துக்கு கலிங்கு ஒன்றைக் கட்டியுள்ளார். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில் திருவப்பூர் அருகிலுள்ள தாவடி விளாங்குளம் என்ற குளம் தூர் வாரப்பட்டு பாசன வசதிக்கு ஏற்புடையதாக ஆக்கப்பட்டதும், அக்குளத்து பாசன வசதி பெரும் குடிமக்கள் ஒருமாநிலத்தில் ஒரு நாள் நெல் வரியாக ஊர்ச்சபைக்கு அளிக்க வேண்டும் எனவும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதுபோல பல நீர்ப் பாசனம் சார்ந்த விஷயங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதிந்துள்ளன' என்கிறார் கரு.இராசேந்திரன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.