வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!விஜயகாந்த், தேவா இருவரும் சொர்க்கத்தில் சந்திப்பார்கள்: பிரேமலதாஒருநாள் மழைக்கே சென்னை மாநகரமே தத்தளிக்கிறது: தவெக அரசை விமர்சித்த டிடிவி தினகரன்

சரித்திரம் படைத்த நாயகி!

1984-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக் போட்டியில் பி.டி. உஷா 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 55.42 விநாடிகளில் இலக்கை எட்டி, தேசிய சாதனை படைத்திருந்தார்.

SACHIN DWARAGA

Updated On :

1984-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக் போட்டியில் பி.டி. உஷா 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 55.42 விநாடிகளில் இலக்கை எட்டி, தேசிய சாதனை படைத்திருந்தார். இந்த நிலையில், 42 ஆண்டுகால வரலாற்றுச் சாதனையை முறியடித்து, ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று புதிய வரலாற்றைப் படைத்துள்ளார் கோவையைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ்.

ஜப்பானில் நடைபெற்ற 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 400 மீ. தடை ஓட்டப் பிரிவில், பந்தய தூரத்தை 54.75 விநாடிகளில் கடந்து இந்த அசாத்திய சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். இதே போட்டியில் மகளிர் 400 மீ. தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், கலப்பு 400 மீ. தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளார்.

சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் தகுதிச் சுற்றில் இந்த நேரத்தை சமன் செய்திருந்த வித்யா, தற்போது அதை 0.67 விநாடிகள் முன்கூட்டியே (54.75 விநாடிகள்) கடந்து, புதிய அத்தியாயத்தைப் படைத்துள்ளார். பந்தய இலக்கைக் கடந்ததும், தனது சாதனை குறியீட்டைத் திரையில் பார்த்து, அவர் களத்திலேயே துள்ளிக் குதித்து நடனமாடிய விடியோ தற்போது சமூக ஊடகங்களில் பல லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து ட்ரெண்டாகி வருகிறது.

வறுமையை விரட்டிய தடகளப் பயணம் குறித்து வித்யா ராம்ராஜ் கூறியது:

""கோவை மாவட்டம், மதுக்கரை அருகே உள்ள வழுக்குப்பாறை ஊராட்சிக்குள்பட்ட மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் லாரி ஓட்டுநர் ராம்ராஜ் - மீனா தம்பதிக்கு இரட்டைப் பெண் குழந்தைகளில் ஒன்றாகப் பிறந்தேன். என்னுடன் பிறந்தவர் நித்யா. மூத்த சகோதரியும் உள்ளார். குடும்பப் பொருளாதார நெருக்கடி காரணமாக 5-ஆம் வகுப்பு வரை மட்டுமே தனியார் பள்ளியில் படித்தோம். அதன்பின் அரசு உதவி பெறும் பள்ளிக்கு மாறினோம்.

நான் 7-ஆம் வகுப்பு பயின்றபோது, எனது திறமையைக் கண்ட உடற்கல்வி ஆசிரியர் ஒருவர், என்னையும், நித்யாவையும் தடகளப் பயிற்சியில் ஈடுபடுத்துமாறு ஆலோசனை வழங்கினார். ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கி இருவரும் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டோம்.

நித்யாவும் 100 மீட்டர் தடை ஓட்ட வீராங்கனை. கரோனா காலம், குடல்வால் அறுவை சிகிச்சை காரணமாக தேசிய முகாமில் இருந்து வெளியேறிய நான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன். அந்த நெருக்கடியான காலத்தில், வருமான வரித்துறையில் விளையாட்டு ஒதுக்கீட்டில் பணியில் சேர்ந்த நித்யா, எனது முழு ஊதியத்தையும் எனக்கு உணவு, தடகளப் பயிற்சிக்காக வழங்கி உறுதுணையாக நின்றார். என் வெற்றியில் சரிபாதி பங்கு என் சகோதரி நித்யாவையே சாரும்.

பயிற்சியாளர் நேக்பால் சிங் ரத்தோர் அளித்த கடுமையான சிறப்புப் பயிற்சியும், விடாமுயற்சியும் என்னை இந்திய ரயில்வே துறைப் பணிக்கு உயர்த்தியது.

விளையாட்டுக்காகப் பெண் பிள்ளைகளை வெளியூருக்கு அனுப்புகிறார்களே எனத் தொடக்கக் காலத்தில் கிராமத்தில் பலர் குறை கூறினர். எனக்கும், நித்யாவுக்கும் திருமண ஏற்பாடுகளைச் செய்யும்படி வற்புறுத்தினர். விளையாட்டின் மூலம் வாழ்க்கையை மாற்றி, எனது தந்தையின் பல ஆண்டுகால லாரி ஓட்டுநர் சுமையை இறக்கிவைத்து அவருக்கு ஓய்வு கொடுத்தேன். உழைப்பால் தேய்ந்த தாயை முதல் முறையாக விமானத்தில் அழைத்துச் சென்றேன். என் வரலாற்றுச் சாதனையைப் பாராட்டி பி.டி. உஷா தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வாழ்த்துப் பதிவிட்டுள்ளார்'' என்கிறார் வித்யா.

எங்கள் தொடர் முயற்சிக்குக் கிடைத்த ஊக்கப்பரிசு மகள் வித்யாவின் வெற்றி குறித்து தந்தை ராம்ராஜ் கூறியதாவது:

""காயத்தால் நித்யாவால் இந்தப் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது சிறிய வருத்தம் என்றாலும், விரைவில் அவர் மீண்டு வருவார். திருமணம் குறித்து பலர் வற்புறுத்தினாலும், அந்த முடிவை என் மகள்களின் விருப்பத்துக்கே விட்டுவிட்டேன். தடைகளைத் தாண்டி அவர்கள் தொடர்ந்து ஓடுவார்கள். நாட்டின் மூவர்ணக் கொடியை உயர்த்துவார்கள்.

படம் : சச்சின் துவாரகா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.