இந்திய அணுசக்தி நாயகர்!
நாட்டின் பாதுகாப்பு, அமைதி, வலிமையான ஆயுதங்கள், திறமை வாய்ந்த படைபலம் ஆகியன காலத்தின் தேவைக்கேற்ப அவசியமாகின்றன.
நாட்டின் பாதுகாப்பு, அமைதி, வலிமையான ஆயுதங்கள், திறமை வாய்ந்த படைபலம் ஆகியன காலத்தின் தேவைக்கேற்ப அவசியமாகின்றன. இதற்காக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளின் உளவுச் செயற்கைக்கோள்களின் பார்வையில் தப்பித்து, அணுசக்தியில் இந்தியாவின் திறனைக் காட்டியது உலக அரங்கில் உற்றுநோக்கப்பட்டது. இந்தியாவின் அணுசக்தித் திறன்களை வடிவமைப்பதில் விஞ்ஞானி சிதம்பரம் முக்கியப் பங்காற்றினார்.
இவர் 1974-ஆம் ஆண்டில் ராஜஸ்தானின் பொக்ரானில் நடைபெற்ற நாட்டின் முதல் அணு ஆயுத சோதனையில் (சிரிக்கும் புத்தர்) முக்கிய இடத்தை வகித்தார். 1998-இல் நடைபெற்ற பொக்ரான்-2 (ஆபரேஷன் சக்தி) அணு ஆயுத சோதனைக் குழுவின் தலைமைப் பொறுப்பை வகித்தார்.
இதில் அணுக்கரு இணைவில் நடைபெற்ற 3 சோதனைகளும், அணுக்கரு பிளவில் நடைபெற்ற 2 சோதனைகளும் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டன. இரண்டாவது சோதனைக்கு இந்திய அணுசக்தி முகமையின் தலைமைப் பொறுப்பில் இருந்த சிதம்பரமும், டி. ஆர். டி. ஓ. வில் தலைமைப் பதவியில் இருந்த அப்துல் கலாமும் கதாநாயகர்களாக விளங்கினர்.
சென்னையைச் சேர்ந்தவர் 1936-ஆம் ஆண்டில் சென்னையில் பிறந்த ராஜகோபால் சிதம்பரம் என்கிற ஆர். சிதம்பரம், சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியல் பட்டமும், பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். 1962-இல் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணியில் சேர்ந்தார். 1974-ஆம் ஆண்டில் பொக்ரான் சோதனைக்காக அவர் ஆய்வைத் தொடங்கி, டி.ஆர். டி. ஓ.வுடன் இணைந்து பணியாற்றினார்.
இவர் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் (2001-18), பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் (1990-93), அணுசக்தி ஆணையத் தலைவர் & மத்திய அரசின் எரிசக்தித் துறையின் செயலாளர் (1993-2000) உட்பட மதிப்புமிக்க பணிகளில் பணியாற்றினார். இதோடு, அவர் சர்வதேச அணுசக்தி முகமையின் ஆளுநர் குழுத் தலைவராகவும் (1994-95) இருந்தார். 'விஷன் 2020'-இல் உறுப்பினராகப் பணியாற்றி, திட்டத் தொலைநோக்குப் பார்வைக்குப் பங்களித்தார்.
உலகத்தரம் வாய்ந்த இயற்பியலாளரான சிதம்பரம், உயர் அழுத்த இயற்பியல், படிகவியல், பொருள் அறிவியல் ஆகிய துறைகளில் ஆற்றிய ஆராய்ச்சிகளானது அறிவியல் சமூகத்தின் புரிதலைக் கணிசமாக மேம்படுத்தின. அவரது முன்னோடிப் பணிகள் நாட்டில் நவீன பொருள் அறிவியல் ஆராய்ச்சிக்கு அடித்தளமிட்டன.
1974, 1998-ஆம் ஆண்டுகளில் பொக்ரான் சோதனைகளில் மிகக் கடுமையான ரகசியத்தையும் பாதுகாப்பையும் கடைப்பிடித்தபடி, பல்வேறு அறிவியல், பொறியியல் குழுக்களை ஒருங்கிணைக்க வேண்டியிருந்தது. அணுசக்தி சார்ந்த பரிசோதனைகளில் மிகச் சிறிய தவறும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதால், அளவீடு, கணக்கீடு, வடிவமைப்பு, பாதுகாப்பில் மிகுந்த துல்லியம் தேவைப்பட்டது.
1998-ஆம் ஆண்டு அணு சோதனைகளுக்குப் பின்னர் இந்தியா எதிர்கொண்ட சர்வதேசத் தடைகள், தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்பத் திறனை தொடர்ந்து வளர்ப்பது ஒரு முக்கிய சவாலாக இருந்தது. இந்த நிலையில், சிதம்பரம், தேசிய வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் அறிவியல், தொழில்நுட்பத்தின் ஆற்றலை நம்பிய தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவராகத் திகழ்ந்ததோடு, அறிவியல், தொழில்நுட்பத் துறையை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தி எண்ணற்ற திட்டங்களையும் வழிநடத்தினார்.
இந்தியாவில் சூப்பர் கணினிகளின் உள்நாட்டு உருவாக்கத்தைத் தொடங்குவதிலும், ஆராய்ச்சி, கல்வி நிறுவனங்களை இணைத்த தேசிய அறிவு வலையமைப்பைக் கருத்தாக்கம் செய்வதிலும் அவர் முக்கியப் பங்காற்றினார்.
அணுசக்தி துறையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய ஆர். சிதம்பரத்தின் சிறப்பான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு 1975-ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ, 1999-இல் பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன. 20-க்கும் மேற்பட்ட இந்திய, அயலகப் பல்கலைக்கழகங்களில் மதிப்புறு முனைவர் பட்டங்களைப் பெற்றதுடன், பல்வேறு அறிவியல் கழகங்களின் உறுப்பினராகவும் இருந்தார்.
தேசிய வளர்ச்சிக்கு அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதில் தீவிரமாக இருந்த சிதம்பரம், ஊரகத் தொழில்நுட்பச் செயல் குழுக்கள், மின்னணு பரிவர்த்தனைகள், பாதுகாப்புக்கான சங்கம் போன்ற திட்டங்களை நிறுவினார். இவர் 2025- ஆம் ஆண்டில் தனது 88-ஆவது வயதில் மறைவுற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

