வாங்க... எல்லாரும்... சேர்ந்து பாடுவோம்..!
'பாடுவதில் ஆர்வம் இருக்கும் யார் வேண்டுமானாலும் சேர்ந்திசையைப் பாட முடியும்.
'பாடுவதில் ஆர்வம் இருக்கும் யார் வேண்டுமானாலும் சேர்ந்திசையைப் பாட முடியும். வயது, மதம், இசை அனுபவம் என எதுவும் தேவையில்லை. பலரும் சேர்ந்து பாடுவதால், ஒருவரைப் பார்த்து மற்றவர்கள் ஊக்கம் பெறுவதும், ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்து பாடுவதும், சரியான முறையில் ஒருவர் பாடுவதைக் கேட்டு மற்றவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொண்டு பாடுவதும் சாத்தியம். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான குரல் இருக்கும். யாருடைய குரலுக்கு எது பொருந்தும் என்பதைப் பார்த்து, அவர்களைப் பாட வைக்க வேண்டும். நான்கு வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் எங்கள் சேர்ந்திசைக் குழுவில் பாடி வருகின்றனர்' என்கிறார் சேர்ந்திசைப் பாடல்களில் தனி முத்திரை பதித்து வரும் முனைவர் சுதா ராஜா.
சென்னையைச் சேர்ந்த 'சர்கம்' சேர்ந்திசைக் குழுவின் தலைவரான இவர், தமிழகத்தில் சேர்ந்திசைப் பாடல்களைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்த (காலஞ்சென்ற) எம்.பி.சீனிவாசனின் சிஷ்யை. கர்நாடக சங்கீதம், சேர்ந்திசை ஆகிய இரு பிரிவுகளிலும் நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கியிருக்கும் அவருடன் ஒரு சந்திப்பு:
இசையின் மீது ஈடுபாடு ஏன்?
என் தாத்தா ஹரிஹரசுப்பிரமணியன், கர்நாடக சங்கீதம் கற்றவர். அம்மா லட்சுமி, வயலின் கலைஞர். எனக்கும் சிறு வயது முதலே இசையில் மிகுந்த ஆர்வம் இருந்தது. என் அப்பா பொறியாளராகப் பணியாற்றியதால், என் ஆரம்பப் பள்ளிப் படிப்பு ஆந்திரத்திலும், பிறகு பெங்களூரிலும் தொடர்ந்தது.
ஐந்து வயது முதல் ஸ்லோகங்கள், பஜன்ஸ் கற்றேன். இசைக் கல்லூரி முதல்வராக இருந்த சீத்தாராம சாஸ்திரிகளிடம், முறைப்படி கர்நாடக சங்கீதமும் கற்றேன்.
நாங்கள் சென்னைக்குக் குடியேறியவுடன், ராமமூர்த்தி ராவிடமும், பின்னர் அப்பண்ண பாகவதரிடம் இசைப் பயிற்சி பெற்றேன். ஆதர்ஷ் வித்யாலயாவில் 9- ஆம் வகுப்புப் படித்தபோது, விதூசி சுலோசனா பட்டாபிராமனிடம் கர்நாடக இசையை கற்றேன். 15 வயதுக்குள் நிறைய கச்சேரிகள் செய்ய முடிந்தது.
சேர்ந்திசை மீது ஆர்வம் வந்தது எப்படி?
ஆதர்ஷ் வித்யாலயாவில் படித்தபோது, பள்ளி சார்பில் உருவாக்கப்பட்ட சேர்ந்திசைப் பாடல் குழுவில் நான் பாடி பரிசுகளை வென்றேன். எனக்குத் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சம்ஸ்கிருதம், ஹிந்தி போன்ற பல மொழிகள் தெரியும் என்பதால், பல மொழிகளில் தேசபக்திப் பாடல்களை எளிதில் பாட முடிந்தது. அந்த சமயத்தில் எம்.பி. சீனிவாசன் சார் நடத்தி வந்த 'மெட்ராஸ் யூத் கோயர்ஸ்' அமைப்பிலும் இணைந்தேன்.
பல ஆயிரம் பேரை ஓரிடத்தில் திரட்டி, சேர்ந்திசைப் பாடல்களைப் பாட வைத்து சீனிவாசன் ஆவணப்படுத்தி வந்தார். 'வாருங்கள்... வாருங்கள்... சேர்ந்து பாடுவோம்' என்ற அவரது புகழ்பெற்ற ஆவணத்தில் நானும் பாடினேன்.
1982- ஆம் ஆண்டில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றபோது, பண்டிட் ரவிசங்கர் 'ஸ்வாகதம்' என்ற பெயரில் பல மாநிலங்களைச் சேர்ந்த சேர்ந்திசைக் குழுக்களை அழைத்து, தில்லியில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடத்தினார். அதில் எம்.பி.சீனிவாசனின் 'மெட்ராஸ் யூத் கோயர்ஸ்' சார்பில் நானும் பங்கேற்றேன்.
இதுதவிர, வேறு சில நிகழ்ச்சிகளையும் நாங்கள் தில்லியில் நடத்தினோம். பிற மொழிகளில் அமைந்த தேசபக்திப் பாடல்களைக் கற்றோம். 'பாரத சமுதாயம் வாழ்கவே, பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்...' போன்ற தமிழ்ப் பாடல்களை அவர்களுக்கும் கற்றுக் கொடுத்தோம்.
அதற்குப் பிறகு எம்.பி.சீனிவாசன் சாரின் சேர்ந்திசைக் குழுவில் இணைந்து, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சென்னையில் நடக்கும் பாடல் பயிற்சிகளில் பங்கேற்றேன். கர்நாடக சங்கீத வகுப்புக்கும் போய் வந்தேன். ஸ்யாமா சாஸ்திரிகளின் கீர்த்தனைகள், வர்ணங்கள், பாரதியார் பாடல்கள் என்று தீமேட்டிக் பாடல்களைப் பாடி நிறைய காணொலிகளை வெளியிட்டேன்.
உங்கள் குடும்ப வாழ்க்கை...?
ஊட்டச்சத்து அறிவியல், உணவியலில் இளநிலைப் பட்டமும், தடய அறிவியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றேன். திருமணமாகி என் மகன் ரித்விக் பிறந்தவுடன் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் இசையில் எம்.ஏ., எம்.பில். படித்தேன். முனைவர் பாகீரதியின் வழிகாட்டுதலின்
பேரில், 'எம்.பி.சீனிவாசனின் சேர்ந்திசை' குறித்து ஆராய்ச்சி செய்து, 2010- ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றேன்.
என் கணவர் ராஜாவும் எம்.பி.சீனிவாசனின் சேர்ந்திசைக் குழுவில் இணைந்து பாடல்கள் பாடி வந்தார்.1988- ஆம் ஆண்டில் எம்.பி.சீனிவாசன் இறந்தவுடன் அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்களில் சிலர் சில பாடல்களுக்குப் பொறுப்பேற்று வழிநடத்தினோம். கே.கே. நகரில் ஒரு பள்ளியை நான் ஆரம்பித்து பலருக்கும் பாட்டு கற்பித்து வந்தேன். அந்த நேரத்தில், எம்.பி.சீனிவாசனின் சேர்ந்திசைப் பாடல்களை பள்ளி மாணவர்களுக்குக் கற்பித்து வந்தேன்.
நன்றாகப் பாடும் திறமை படைத்த பரோடா வங்கிப் பணியாளர்கள் சிலர் தொடங்கிய 'அக்ஷயம்' என்ற சேர்ந்திசைக் குழுவை வழிநடத்தி பயிற்சி அளிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அந்தக் குழு தேசிய அளவிலான போட்டியில் முதல் பரிசு பெற்றது. இன்றளவுக்கும் அந்தக் குழுவுக்கு நான்தான் பயிற்சி அளித்து வருகிறேன்.
'சர்கம்' சேர்ந்திசைக் குழுவின் பயணம், உங்கள் சாதனைகள் குறித்து...?
2011- ஆம் ஆண்டில் 'சர்கம்' குழந்தைகள், இளைஞர் சேர்ந்திசைக் குழுக்களைத் தொடங்கினேன். பாரதிய வித்யா பவனின் ராமசாமி சார் எங்கள் குழுக்களுக்கு பவனிலேயே இடம் ஒதுக்கித் தந்து, பயிற்சிகளை நடத்த அனுமதித்தார்.
கோவை ஆனைகட்டியிலுள்ள வித்யாவனம் பள்ளியில் படிக்கும் பழங்குடியினக் குழந்தைகளுக்குச் சேர்ந்திசைப் பாட பயிற்சி அளித்தேன். என்னிடம் பயிற்சி பெற்ற மாணவி ஒருவர் மீண்டும் வித்யாவனம் பள்ளியிலேயே இசை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். வாலாஜாவைச் சேர்ந்த வேதவல்லி வித்யாலயா குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்திருக்கிறேன். தாம்பரம் எஸ்.ஓ.எஸ். கிராமம், பெசன்ட் நகர் வண்ணான்துறை, மாணவர்கள் குழுவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குச் சேர்ந்திசையைப் பாட பயிற்சி அளித்திருக்கிறேன். அடையாறு அவ்வை இல்லம், ருக்மிணி அருண்டேல் பள்ளிக் குழந்தைகளுக்கும் வகுப்புகளை நடத்தியிருக்கிறேன்.
சென்னை அரசு இசைக் கல்லூரியில் படிக்கும் 150 மாணவ, மாணவிகளுக்கும் கந்த சஷ்டி கவசத்தைப் பயிற்றுவித்து, வடபழனி முருகன் கோயிலிலும், பழனி கோயிலிலும் பாட வைத்தோம். அவர்களுக்கு 30 திருப்பாவைகள் கற்றுக்கொடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலிலும் பாட வைத்தோம்.
புதுச்சேரி ஆரோவில்லில் நடைபெற்ற முதல் மார்கழி உற்சவத்தில், சர்கம் சேர்ந்திசைக் குழு சார்பில் பங்கேற்று இந்திய சேர்ந்திசைப் பாடல்களைப் பாடினோம். மாற்றுத் திறனாளி மாணவர்களும் இப்போது எங்கள் சர்கம் குழுவில் பாடி வருகிறார்கள். அவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறேன்.
இசைக் கல்லூரி முதல்வராக இருந்த முனைவர் செளம்யா வழிகாட்டுதலின்பேரில், சேர்ந்திசைப் பாடல்களில் பாடத் திட்டத்தை வகுத்துக் கொடுத்தது எனக்கு மன நிறைவைத் தந்தது.
சேர்ந்திசை நிகழ்ச்சிகளில் மறக்க முடியாத நிகழ்ச்சி எது?
'செலிபரேட் இந்தியா' என்ற தலைப்பில் 'சப்ரங்' சேர்ந்திசை குழு சார்பில் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அங்குள்ள குழந்தைகளுக்குச் சேர்ந்திசைப் பாடல்களைப் பயிறுவித்துள்ளேன்.
2017- ஆம் ஆண்டில் லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில் நடைபெற்ற இன்டர்நேஷனல் யூத் ஸ்கொயர் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியில் சேர்ந்திசைப் பாடல்களைப் பாடியது மறக்க முடியாத அனுபவம்.
2013- ஆம் ஆண்டில் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசியா பசிபிக் கோயர் கேம்ஸில் எங்கள் சர்கம் குழு பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றது. 2018- ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றோம். 2012- இல் சின்சினாட்டியில் நடைபெற்ற வோல்ட் கோயர் கேம்ஸ் போட்டியில் நாட்டுப்புறப் பாடல்கள் பிரிவில் அக்ஷயம் குழு வெண்கலப் பதக்கம் வென்றது.
இந்திய அளவில் சர்வதேச அளவில் சிறப்புப் பெற்ற சேர்ந்திசைக் குழு என்ற பெருமை எங்கள் குழுவுக்குக் கிடைத்திருப்பது மிகுந்த நிறைவைத் தருகிறது.
சேர்ந்திசைக் குழுவை நடத்துவதில் உள்ள சிரமங்கள் என்ன?
ஆர்வமும், திறமையும் இருந்தால் மட்டுமே சேர்ந்திசைக் குழுக்களை தொய்வின்றி நடத்த முடியும். அதிக வருமானம் கிடைக்காது. இசை மீது எனக்கு மிகுந்த ஆர்வம் இருப்பதால் பலருக்கும் இசையைக் கற்பிக்கிறேன். பல நேரங்களில் எங்கள் நிகழ்ச்சிக்கு உதவிட யாரும் இருக்க மாட்டார்கள். சொந்தக் காசைப் போட்டுத்தான் பல நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.
பிற மொழி தேசபக்திப் பாடல்களை எப்படிக் கற்பிக்கிறீர்கள்?
எம்.பி.சீனிவாசன் சாரின் மறைவுக்குப் பிறகு, அவரது நண்பர் சர்மாஜி மூலம் 'வள்ளத்தோல் கவிதைகள்' உள்ளிட்ட சில பாடல்கள் எங்களுக்குக் கிடைத்தன. தாசரதி என்பவரிடமிருந்து தெலுங்குப் பாடல்கள், கொல்கத்தாவில் இருக்கும் உமா குஹா மூலம் நிறைய வங்கப் பாடல்களைக் கற்றோம். இப்படிப் பலரிடமிருந்தும் பெற்ற பாடல்களை என் மாணவிகளுக்குக் கற்றுக் கொடுக்கிறேன். சர்கம் இசைக் குழுவில் பாடி வரும் குழந்தைகள் திரைப்படங்களிலும் பாடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

