ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

கேளீர் தமிழ் வரலாறு-11: தமிழுக்கும் தமிழர்க்கும் புதுவிழிப்பைத் தந்த 'தமிழ்நாட்டுத் தலைவர்'!

இன்றும் பாரதியாரை எல்லோரும் நினைவு வைத்துக்கொண்டிருக்கிறோம். போற்றிக் கொண்டிருக்கிறோம்.

Updated On :

இன்றும் பாரதியாரை எல்லோரும் நினைவு வைத்துக்கொண்டிருக்கிறோம். போற்றிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அவரை முதன்முதலில் ஆதரித்து வளர்த்துவிட்ட, 'தமிழ்நாட்டுத் தலைவர்' என்று அவராலேயே போற்றப்பட்ட, அவருடைய 'பரமகுரு'வை நினைவில் வைத்திருக்கிறோமா?

கடைசியாக அந்தப் 'பரமகுரு'விற்கு எள்ளத்துணை சிறிய மரியாதையை இந்தச் சமூகம் செய்திருந்தது! ஆம். சென்னை, திருவல்லிக்கேணியின் பாரதி சாலையில், அவர் வாழ்ந்த வீட்டிற்கு அருகிலேயே ஒரு கிளைநூலகத்திற்கு அவர் பெயரைச் சூட்டியிருந்தார்கள்! எல்லாம் கனவாய், பழங்கதையாய்ப் போய்க்கொண்டிருக்கிறது. இப்போது அந்த நூலகமும் அங்கே இல்லை. இருந்த கட்டடத்தை இடித்து மாற்றிப் புதிய கட்டடம் எழுந்துகொண்டே இருக்கிறது...

அவர் 'தமிழ்நாட்டுத் தலைவரா?' என்று வரலாறு தெரியாத இன்றைய தலைவர் யாருக்கேனும் சந்தேகம் வந்தால் அவர்களுக்காக ஒரு செய்தி.

1885 டிசம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் பம்பாய் நகரத்தில் முதன்முதலாகக் காங்கிரஸ் சபை கூடியது. பகல் பன்னிரண்டு மணி. காங்கிரசுக்கு வித்திட்டவர்களில் ஒருவரான ஆங்கிலேயர் ஏ.ஓ. ஹ்யூம், வங்காளத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞர் உமேச சந்திர பானர்ஜியைக் காங்கிரஸ் சபைக்குத் தலைமைதாங்க முன்மொழிந்தார். தலைமையேற்ற பானர்ஜி உரையாற்றி அமர்ந்தார். அதை அடுத்து முதல் தீர்மானத்தை முன்மொழிந்ததோடு வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை ஆற்றிய 'தமிழ்நாட்டுத் தலைவர்' அவர்தான்! ஆங்கிலேயர் அழைத்தார். வங்காளி தலைமைதாங்கினார். அடுத்த இடத்தில் தமிழ்நாடுதான் முதன்மைபெற்றது. அந்தத் 'தமிழ்நாட்டுத் தலைவர்' ஆற்றிய உரையை 1888 ஆகஸ்டில் இலண்டனிலிருந்து வெளிவந்த, அமெரிக்காவிலும் மறுபதிப்பான 'தி வெஸ்ட்மினிஸ்டர் ரிவியூ' என்னும் காலாண்டிதழ் சிறப்பாகவும் விரிவாகவும் குறிப்பிட்டிருந்தது.

அப்படி உலக அளவில் சிறப்பான கவனம் பெற்றவர்தான் யார்?

பாரதியாரின் 'பரமகுரு'வான அந்தத் தலைவர் -

ஜி. சுப்பிரமணிய ஐயர்!

இந்திய இராணுவ - நிருவாகச் செலவினம் பற்றி விசாரணை நடத்த அமைக்கப்பட்ட 'வெல்பி' பிரபு தலைமையிலான 'இராயல் கமிஷன்' முன்பு 1897-இல் இங்கிலாந்து சென்று சாட்சியமளித்துப் பேசிய நால்வரில் ஜி. சுப்பிரமணிய ஐயர் ஒருவர். இன்னொருவர் கோகலே என்பதை அறிந்தால் ஜி. சுப்பிரமணிய ஐயரின் வரலாற்று முக்கியத்துவம் நமக்கு நன்கு புரியும். ஆங்கிலேயர் கோபம் கொள்ளும் அளவிற்கு ஜி. சுப்பிரமணிய ஐயர் உள்ளிட்டோரின் குரல்கள் இலண்டன் 'வெல்பி' கமிஷனில் ஒலித்தன.

பம்பாய், இந்தியாவின் பிற மாகாணங்கள், இங்கிலாந்து எனப் பிற இடங்களில் மட்டுமல்ல, தமிழ்நாடெங்கும் அரசியல் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு மக்களிடையே தேசப் பற்றை, அரசியல் உணர்வை, உரிமை உணர்ச்சியை விதைத்தவரும் அவர். அப்படி ஒருமுறை ஈரோட்டிற்குப் பேசச் சென்றபோது 1908-இல் இரயில்நிலையத்தில் வரவேற்ற ஈரோட்டுப் பிரமுகர்களில் ஒருவர் பெரியார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் தமிழில் அரசியல் சொற்பொழிவுகளைப் பேசும் முறையை முன்னெடுத்தவர் ஜி. சுப்பிரமணிய ஐயர். ஒருமுறை சென்னைக் கடற்கரையில் விபின சந்திர பாலர் விடுதலை பெற்றதையொட்டி நடந்த கூட்டத்தில் சிலர் 'ஆங்கிலத்தில் பேசுங்கள்' எனக் குரல் எழுப்பிய போதிலும் 'இன்று தமிழில்தான் பேசப் போகிறேன்' எனக் கூறித் தமிழில் பேசியவர் அவர். சிறு சிறு அரசியல் விழிப்புணர்வுப் பிரசுரங்களைத் தமிழில் எழுதி வெளியிட்டவர் மட்டுமல்ல, அவற்றைத் தான் பேசும் கூட்டங்களில் இலவசமாக வழங்கிப் பரப்பிய வகையிலும் அவர் முன்னோடிதான்!

1915 ஜனவரி. இந்தியாவிலேயே தங்கித் தாய்நாட்டுக்குச் சேவைசெய்வதென்ற முடிவோடு தென்னாப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட மகாத்மா காந்தி பம்பாய் வந்திறங்கினார்.

ஏப்ரலில் தமிழ்நாட்டுக்குப் பயணமான அவர் 17-ஆம் தேதி சென்னைக்கு வந்தார். காந்தியின் இரண்டாவது தமிழ்நாட்டுப் பயணம் இது. சென்னையில் அவர் சிலரை அவர்களுடைய வீட்டிற்கே சென்று சந்தித்தார். அந்தச் சிலரில் ஒருவர் ஜி. சுப்பிரமணிய ஐயர்.

தொழுநோயால் அவர் துன்பப்பட்டுக்கொண்டிருந்த காலம் அது. காந்தியடிகளோடு உரையாடுகையில் அவரது தொண்டினைப் போற்றிப் பேசிய ஜி. சுப்பிரமணிய ஐயர், தன்னால் ஏதும் செய்யச் சக்தியற்று இருப்பதைச் சொல்லும்போது அவரது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அதைக் கண்டு உணர்ச்சிவசப்பட்ட காந்தி 'நீங்கள் நாட்டிற்குப் பெரும்பணி செய்திருக்கிறீர்கள். வருத்தப்படுவதற்குக் காரணம் ஏதுமில்லை' என்று சொல்லியபடியே அருகில் சென்று தமது துண்டால் ஜி. சுப்பிரமணிய ஐயரின் கண்ணீரைத் துடைத்துவிட்டதோடு தொழுநோயின் காரணமாக அவரது உடம்பிலிருந்த புண்களிலிருந்து வடிந்த நீரையும் துடைத்துவிட்டார். அப்போது அருகில் ஜி.ஏ. நடேசனும் வி.எஸ். சீனிவாச சாஸ்திரியும் இருந்தனர். இரண்டு மகாத்மாக்கள் சந்தித்துக்கொண்ட உருக்கமான நிகழ்வு அது. இந்தச் சந்திப்பிற்குப் பின் ஓராண்டே ஜி. சுப்பிரமணிய ஐயர் உயிரோடு இருந்தார்.

இந்திய விடுதலை இயக்கத்திற்கு இணையாக அவர் பங்களித்த இன்னொரு களம் சமூகச் சீர்திருத்தக் களம். இருபதாம் நூற்றாண்டு பிறப்பதற்கு முன்பாகவே சமூகச் சீர்திருத்த அமைப்பை உருவாக்கியவர். சில கூட்டங்கள் அவர் வீட்டிலேயே நடந்ததும் உண்டு. பொது அரங்குகளில் நடந்தவை பல. அந்தக் காலத்தில் 'சோசியல் ரிபார்ம்' என்பது தமிழில் 'ஆசாரத் திருத்தம்' என அழைக்கப்பட்டது. சி. சங்கரன் நாயர், வீரேசலிங்கம் பந்துலு முதலியோரெல்லாம் அவரோடு இணைந்து செயல்பட்டனர். தீண்டாமை முதலான அனைத்துச் சமூக இழிவுகளுக்கு எதிராகவும் அவர் பாடுபட்டார். சீர்திருத்தத்தைத் தன் குடும்பத்திலேயே நடைமுறைப்படுத்த முயன்ற அவர் இளம் வயதில் விதவையான தன் மகளுக்கு மறுமணம் செய்துவைத்தார். அந்தத் திருமணம் 1889-ஆம் ஆண்டு பம்பாயில் கூடிய ஐந்தாம் காங்கிரஸ் சபையிலேயே ரானடே முதலியோர் முன்னிலையில் நடைபெற்றிருக்கிறது. இந்தத் திருமணத்தின் காரணமாக பிராமண சமூகத்தாரின் கடுமையான புறக்கணிப்புத் துன்பங்களை எதிர்கொண்டார். பெண்ணுரிமை, பெண்கல்விக்காகச் செயல்பட்டவராகவும் விளங்கினார். 1914 -ஆம் ஆண்டில் அவரது சமூகச் சீர்திருத்தச் சிந்தனைகள் 'ஆசாரத் திருத்த வியாசங்கள்' என நூலாக வெளிவந்தது.

Story image

சென்னை மாகாணத்தில் இன்னொரு புதிய முயற்சியையும் முன்னெடுத்தவர் அவர். சாதி, மத வேறுபாடின்றி நம் நாட்டு இளைஞர்களுக்கு நிதியுதவி வழங்கி ஜப்பான் முதலிய நாடுகளுக்கும் பம்பாய் முதலிய மாகாணங்களுக்கும் சென்று தொழில்களைக் கற்றுக்கொண்டு வந்து தொழில் தொடங்க உதவும் அமைப்பொன்றை அவர் உணர்வாளர்களோடு சேர்ந்து தொடங்கினார். 'சென்னை சுதேசிய நிதியும் தொழிற்சங்கமும்' என இது அழைக்கப்பட்டது. தாய்நாட்டின் தொழில் வளர்ச்சியின் பொருட்டு இந்த அமைப்பு உருவானது. இதன் ஒரு கௌரவ செயலாளர் ஜி. சுப்பிரமணிய ஐயர். இன்னொரு கௌரவ செயலாளராகத் தோளோடு தோள்கொடுத்துச் செயல்பட்டவர் பச்சையப்பன் கல்லூரி அறிவியல் பேராசிரியர் பி. இலட்சுமி நரசு. தீபாவளிக் காலங்கள் முதலியவற்றில் வீடு வீடாகத் தெருத் தெருவாக உண்டியல் குலுக்கியும் நன்கொடை திரட்டியும் சுதேசிய நிதி உருவாக்கப்பட்டது. பல இளைஞர்கள் ஜப்பான் முதலிய நாடுகளுக்குச் சென்று தொழில் கற்றுவந்து தொழில் தொடங்கினர்.

1908-ஆம் ஆண்டு. உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டுக் குற்றாலத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த ஜி. சுப்பிரமணிய ஐயர் தனது பத்திரிகையில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக எழுதிய இராஜதுவேசக் குற்றச்சாட்டிற்காகக் கைது செய்யப்பட்டார். சென்னை கொண்டுவரப்பட்டு மூன்று வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இறுதியாக நிபந்தனைகளோடு இரு தனிநபர்கள் தலா ரூபாய் 2,500 ஜாமீன் தொகை செலுத்தியபின் ஜி. சுப்பிரமணிய ஐயரை அரசாங்கம் விடுதலை செய்தது.

அவரது விடுதலைக்காக ரூபாய் 2,500 ஜாமீன் தொகை செலுத்திய இருவரில் ஒருவர் யாரென்று அறிந்தால்கூடப் போதும், தமிழ்ச் சமூகம் ஜி. சுப்பிரமணிய ஐயரின் பெருமையை உணர.

அவர் - அம்பேத்கரால் தனது பௌத்த சிந்தனைகளுக்கு முன்னோடியாகப் போற்றப்பட்டவர்; 1948-இல் அம்பேத்கரால் முன்னுரை எழுதிப் பம்பாயிலிருந்து பதிப்பித்து வெளியிடப்பட்ட 'தி எஸ்ùஸன்ஸ் ஆப் புத்தா' என்னும் நூலின் ஆசிரியர்; அம்பேத்கரால் தென்னிந்தியாவின் மேதை எனவும், சமூகச் சீர்திருத்தம் முதலியவற்றில் உறுதியான முன்னோடி எனவும் கொண்டாடப்பட்டவர். அவர்தான் பேராசிரியர் இலட்சுமி நரசு.

ஜி. சுப்பிரமணிய ஐயரும் அவரது நண்பர்

மு. வீரராகவாச்சாரியாரும் முதன்மையாக இருந்து ஆங்கில 'இந்து' நாளிதழைத் தோற்றுவித்தனர். இருவரும் பண்டைத் தமிழிலக்கியப் பதிப்பு முயற்சிகளுக்குக் குறிப்பிடத்தக்க உதவியைப் புரிந்ததையும், மேலும் உதவ முன்வந்த செய்தியையும் சி.வை.தாமோதரம் பிள்ளை தாம் முதன்முதலில் 1887-இல் பதிப்பித்த சங்க இலக்கியமாகிய கலித்தொகையின் பதிப்புரையிலே விரிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

சி.வை.தா.வின் இந்தக் குறிப்பு, இன்னும் பலரையும் அவரது தமிழ்த்தொண்டிற்கு உதவத் தூண்டியது என்பது வரலாறு.

சென்னையின் திருவல்லிக்கேணியில் ஓர் இரவுப் பள்ளிக்கூடம். ஏழை எளிய பிள்ளைகளுக்குக் கல்விக்கண் திறக்க! பகலில் வேலைகளுக்குச் செல்வதால் படிக்க வாய்ப்பில்லாதவர்களுக்காக! விழிப்புணர்வு பெறத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டிலா? இல்லை! 1892 -இல். யார் புரிந்தது இந்த மகத்தான திருப்பணியை? ஜி. சுப்பிரமணிய ஐயர்தான்!

ஏற்கெனவே திருவல்லிக்கேணியில் இருந்த 'ஆரியன் உயர்நிலைப் பள்ளி' என்னும் பள்ளிக்கூடத்தை இடமாகக் கொண்டு ஜி. சுப்பிரமணிய ஐயர் ஆற்றிய இந்தப் பணிகளை அவரிடம் உதவி ஆசிரியராக இருந்தவரும் தமிழறிஞரும் ஜி. சுப்பிரமணிய ஐயரின் வரலாற்றை எழுதியவருமாகிய குருமலை சுந்தரம் பிள்ளை எடுத்துரைத்திருக்கிறார். அண்மையில் எனது தேடலில் அந்த இரவுப் பள்ளிக்கூடம் பற்றிய ஓர் அரிய ஆவணம் பத்திரிகை அறிவிப்பாகக் கிட்டியது. ஜி. சுப்பிரமணிய

ஐயரின் அரிய பணியை உறுதிப்படுத்தும் ஒப்பற்ற சாசனமாக அது விளங்குகிறது.

அந்த அறிவிப்பு ஆவணம் இப்படி அமைந்திருந்தது.

கவனியுங்கள்! கவனியுங்கள்!!

மத்தியான்னிய பாடசாலைகளில் சேர்ந்து வாசிக்க முடியாத ஏழைப் பிள்ளைகள், திக்கில்லாதவர்கள், கைத்தொழிலாளிகள், சேவகர் முதலியவர்களுக்கென்று ஏற்படுத்தப்பட்டு நாலு மாதமாய் நடந்து வருகிற ராத்திரிப் பாடசாலை மாலை ஆறரை மணி முதல் எட்டரை மணி மட்டும் ஞாயிற்றுக் கிழமை தவிர எல்லாத் தினங்களும் சம்பளமில்லாமல் இனாமாகச் சொல்லிக்கொடுக்கப்படுகிறது.

முதல்தரமான படிப்பு: இங்கிலீஷ், தமிழ், தெலுங்கு பாஷைகளில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

நாள்தப்பாமல் மாசம் முழுதும் பாடசாலைக்கு வரும் பிள்ளைகளுக்கு அணா மூன்றும், இப்படி ஆறு மாசமும் கிரமமாய் வரும் பிள்ளைகளுக்கு வஸ்திரங்களும் வெகுமதி செய்யப்படும்.

அச்சுக்கூடம், மண்டிக்கடை, கைத்தொழிற்சாலை முதலிய ஆபீசுகளின் அதிகாரிகள் சிரத்தை எடுத்துக்கொண்டு தம்முடைய வேலைக்காரர்களை அனுப்புவார்கள் என்று கோருகிறோம். வயதான பிள்ளைகளானாலும் சேர்த்துக்கொள்ளப்படும்.

இடம் - திருவல்லிக்கேணி வீர ராகவ முதலி தெருவு, 'ஆரியன் ஹைஸ்கூல்'

மானேஜர் - ஸ்ரீ ஜி. சுப்பிரமணிய ஐயரவர்கள் பி.ஏ.

ஹெட்மாஸ்டர் - ஸ்ரீ வரதையர் எப். டி. எஸ்.

1892 ஜனவரி 23, திருவல்லிக்கேணி

எத்தகைய முன்னோடிப் பணி! எப்படிப்பட்ட

மக்கள் தொண்டு!

1904 -ஆம் ஆண்டு. பாரதியார் சென்னைக்கு வந்த தொடக்க நாள்கள். தனது 'பரமகுரு'வை முதற்கட்டத்தில் சந்தித்த காலத்தில் அவர் எப்படி இருந்தார் என்பதைத் தான் படைத்த 'சந்திரிகையின் கதை'யில் ஒரு கதாபாத்திரமாகவே சித்திரித்துக் காட்டியிருக்கின்றார் பாரதியார். அப்போது ஐம்பது வயது நிறையவில்லை ஜி. சுப்பிரமணிய ஐயருக்கு.

'ஜி. சுப்பிரமணிய ஐயர் சில தினங்களுக்கப்பால் பம்பாயில் நடைபெறப் போகிற 'காங்க்ரஸ்' என்ற பாரத ஜன ஸபைக்கொரு பிரதிநிதியாகச் செல்ல வேண்டுமென்ற கருத்துடன் யாத்திரைக்கு வேண்டிய உடுப்புகள், தின்பண்டங்கள் முதலியன தயார் செய்துகொண்டிருந்தார்.

அக்காலத்தில் திருவல்லிக்கேணி வீர ராகவ முதலித் தெருவில் ஜி. சுப்பிரமணிய ஐயர் மஹா கீர்த்தி பெற்று விளங்கினார். அவருக்குக் கொடிய ரோகமொன்றினால் உடம்பெல்லாம் முகமெல்லாம் சிதைந்து முள் சிரங்குகள் புறப்பட்டிருந்தன. இருந்தாலும் நிகரற்ற மனோ தைர்யத்துடன் அவர் தேசப் பொதுக் காரியங்களை நடத்திவந்தார். மேற்கூறிய 1904 டிஸம்பர் மாஸத்திடையே ஒருநாட் காலையில் அவர் தம் வீட்டு மேடையின் மேல் தம்முடைய விஸ்தாரமான புஸ்தகசாலையினருகே ஒரு சாய்நாற்காலியின்மீது சாய்ந்துகொண்டு பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தார்.'

Story image

பாரதியின் இந்தச் எழுத்துச்சித்திரம், வாழ்க்கை தந்த கொடுந்துன்பங்களைத் தாண்டி ஜி. சுப்பிரமணிய ஐயர் கொண்டிருந்த நிகரற்ற மன வலிமையையும், ஆற்றிவந்த தேசத் தொண்டையும் நமக்குக் காட்டுகின்றது.

1916-இல் ஜி. சுப்பிரமணிய ஐயர் இறந்தபோது பாரதியார் தான் அவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன் எனக் குறிப்பிட்டுவிட்டுத் தமிழ்நாட்டின் உயர்வுக்குக் கருவிகளாக அவர் கருதிய விஷயங்களை வரிசைப்படுத்தியிருந்தார். 'தமிழ்நாட்டார் தமிழே பேசவும் தமிழே எழுதவும் கற்கும் கலைகளெல்லாம் தமிழிலேயே கற்கவும் வேண்டும்' என்பது ஜி. சுப்பிரமணிய ஐயரின் முதற்கருத்தாம். இன்றைக்கும் தேவைப்படுகிறதே!

'இராமலிங்க சுவாமிகளும் ஜி. சுப்பிரமணிய ஐயரும் இவர்களைப் போன்ற வேறு சில மகான்களும் தமிழ்நாட்டின் புதிய விழிப்பிற்கு ஆதிகர்த்தாக்களாக விளங்கினர்' என ஒருமுறை மகாகவி பாரதியார் எழுதியிருந்தார்.

தமிழ்நாட்டின் புதிய விழிப்பிற்குக் காரணமான முன்னோடிகளுள் இராமலிங்க அடிகளுக்கு அடுத்த பெயராக ஜி. சுப்பிரமணிய ஐயர் பெயரைப் பாரதியார் சொல்லியிருக்கிறாரே!

ஜி. சுப்பிரமணிய ஐயர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் அந்த நாள் தலைவர் என்பதும், சமூகச் சீர்திருத்த முன்னோடி என்பதும், தியாக சீலர் என்பதும் இப்போது தெரிகிறது. தமிழ்நாட்டின் புதிய விழிப்பிற்கான முன்னோடி என்பது எப்படி? தமிழ்வரலாற்றில், அதுவும், 'கேளீர் தமிழ் வரலாற்'றில் அவருக்கு இடம் ஏன்?

தமிழில் சொற்பொழிவுக் கலையை அரசியல் களத்தில் எளிய தமிழில் முன்னெடுத்ததற்காகவா?

தமிழில் முன்னோடியாக அரசியல்துறை முதலிய துறை நூல்களை எழுதினார் என்பதற்காகவா?

பரிதிமாற்கலைஞர், மகேச குமார சர்மா முதலியோரின் முக்கியமான நூல்களுக்கு முகவுரை தந்தாரே அதற்காகவா?

சி.வை.தாமோதரம் பிள்ளைக்கு உதவ முன்வந்ததற்காகவா?

இவற்றைக் காட்டிலும் பெரிதினும் பெரிதான ஒருபெரும் பணிக்காகத்தான் தமிழ்வரலாற்றில் அவருக்கு இந்த வரலாற்றுப் பேரிடம்!

பாரதியின் 'பரமகுரு' என்பதற்காகவா?

-எதனால் அவர் பாரதிக்குப் 'பரமகுரு'வோ அதனால்!

ஆம். தமிழின் வரலாற்றில் முதன்முறையாக உலகளாவிய தமிழின் முதல் நாளிதழைத் தொடங்கியவர் என்பதற்காக! அதன் ஆசிரியர் என்பதற்காக!

உலகளாவிய முதல் தமிழ் நாளிதழ் 'சுதேசமித்திரன்'!

எப்படிப் 'பரமகுரு'? எப்படி 'உலகளாவிய' முதல் நாளிதழ்?

இனிச் 'சுதேசமித்திரனி'ன் பக்கங்களிலிருந்து புதிய தமிழின் வரலாறுகளைக் காண்போமா!

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.