
ஜேசன் சஞ்சய் பதிலால் அதிர்ந்த அரங்கம்!
முதல்வர் சி.ஜோசப் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் சிக்மா' திரைப்படம் அக்டோபர் 2 -ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

முதல்வர் சி.ஜோசப் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் சிக்மா' திரைப்படம் அக்டோபர் 2 -ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஜேசன் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் என்பதால், இதன் மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் சேலத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஜேசன் சஞ்சய்யிடம், நீங்கள் திரையரங்குக்குச் சென்று பார்த்த முதல் படம் எது? என்று கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்குப் பதில் அளித்த ஜேசன் சஞ்சய், திருமலை படத்தைத்தான் பார்த்தேன். அப்போது எனக்கு 3 வயது இருக்கும் என்று பதிலளித்திருக்கிறார். விஜய் படம் என்பதால் அவர் அளித்த பதிலைக் கேட்டு மாணவர்கள் அரங்கம் அதிர கத்தியிருக்கின்றனர்.
தொடர்ந்து, உங்களுக்கு இயக்குநர் ஆகவேண்டும் எண்ணத்தைத் தூண்டிய படம் எது? என்ற கேள்விக்கு, யாரும் என்னைத் திட்டாதீர்கள். சிட்டி ஆப் காட்' என்ற பிரேசிலியன் படம் தான். அந்தப் படத்தை சிறுவயதில் நான் பார்த்தேன். அந்தப் படம்தான் நான் இயக்குநராக வேண்டும் என்ற ஆர்வத்தைக் கொடுத்தது என்றிருக்கிறார்.
நீங்கள் இயக்கிய முதல் குறும்படம் எது? என்ற கேள்விக்கு, ஃபுல் தி ட்ரிக்கர். 2022-இல் அந்தப் படத்தை நான் எடுத்தேன் என்று கூறியிருக்கிறார்.
15 வருடங்களுக்குப் பின் சூர்யாவின் தீபாவளி ரிலீஸ்!
இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்துக்கு சீன்' என டைட்டில் வைத்திருக்கிறார்கள். நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்துக்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார்.
தீபாவளி ரிலீஸாக இப்படம் நவம்பர் 6-ஆம் தேதி திரைக்கு வருகிறது. சூர்யாவுக்கும், போலீஸ் கதாபாத்திரங்களுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி எப்போதும் இருக்கும். இப்போது சீன்' படத்தில் இன்பராஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
காவல்துறை மீது அதிக மரியாதை வைத்திருக்கும் சூர்யா, சில வருடங்களுக்கு முன்பு காஃபி வித் டிடி' நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில், காவல்துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை, தீபாவளி, பொங்கல் என எப்போதும் விடுமுறை கிடையாது. இது சம்பளத்துக்காகச் செய்யும் பணி அல்ல. அதுவொரு லவ்! எனக் குறிப்பிட்டிருப்பார்.
இந்த சீன்' படத்தின் இன்னும் சில ஹைலைட்களும் இருக்கின்றன. 15 வருடங்களுக்குப் பிறகு சூர்யாவின் தியேட்டர் தீபாவளி ரிலீஸ் இதுதான். இதற்கு முன்பு ஏழாம் அறிவு' திரைப்படம் 2011-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகியிருந்தது. பேரழகன்' படத்துக்குப் பிறகு மலையாள இயக்குநருடன் சூர்யா இப்படத்தில் இணைந்திருக்கிறார்.
மனதை வருடும் அழகான மெலடி!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்கும் பத்தா' திரைப்படத்தின் முதல் சிங்கிள் மகளே' வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சாய் அப்யங்கர் இசையமைத்துப் பாடியுள்ள இப்பாடலுக்கு கவிஞர் கார்த்திக் நேதா வரிகளை எழுதியுள்ளார்.
இன்றைய தலைமுறை ரசிகர்களால் கொண்டாடப்படும் சாய் அப்யங்கர், மகளே' பாடலில் முற்றிலும் மாறுபட்ட மென்மையான மெலடி பாணியைக் கையாண்டுள்ளார். 1980-களின் புகைப்படங்களும், அக்காலகட்ட இசையும் மீண்டும் ட்ரெண்டிங்கில் இருக்கும் இந்த நேரத்தில், மகளே' பாடலின் விடியோவும் 1980-களின் இசை உலகை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
பழைய கால இசைக்கூடம், அக்கால ரெக்கார்டிங் முறைகள் என அந்தக் காலகட்டத்தின் சூழலை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. அதேநேரத்தில் சாய் அப்யங்கர் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இரட்டை வேடத்தில் தோன்றியிருப்பதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஒரு தந்தை தனது மகளைப் பார்த்து அன்புடன் பேசுவது போன்ற உணர்வில் உருவாகியுள்ள இந்தப் பாடல், மகளின் மீதான பாசத்தையும் அன்பையும் அழகாக வெளிப்படுத்துகிறது.
கிருத்தி சனோனுக்கு கங்கனா பதில்!
ஒரு நகைக் கடை நிறுவனத்தின் ரக்ஷா பந்தன் விளம்பரத்தில் கிருத்தி சனோன் மாடர்ன் உடையை அணிந்து நடித்திருந்தார். இது பற்றி கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இன்றைய பெண்களுக்கு ஜீன்ஸ், புடவை, சுடிதார், பிகினி என எத்தனையோ ஆடை தேர்வுகள் இருக்கும்போது, ரக்ஷாபந்தன் போன்ற ஒரு பாரம்பரிய விழாவுக்கு சகோதரருக்கு ராகி கட்டும்போது ஏன் பிகினி போன்ற உடையில் வரவேண்டும்? இந்த விளம்பரம் வேண்டும் என்றே தவறாக வடிவமைக்கப்பட்டது போல் இருக்கிறது எனத் தெரிவித்திருந்தார்.
அதற்கு கிருத்தி சனோன் காட்டமாகப் பதிலளித்திருந்தார்.
அதற்கு மீண்டும் பதிலடி கொடுத்துள்ள கங்கனா ரனாவத், அவர் என்ன ஆடை வேண்டுமானாலும் அணியலாம். அவரை யார் தடுத்தது? இன்றைய நவீனப் பெண்ணுக்குப் பல ஆடை தேர்வுகள் உள்ளன. ஆனால், பாரம்பரியமான ஒரு நிகழ்வின்போது, எது பொருத்தமான ஆடை என்ற கேள்விதான் எழுகிறது எனக் கூறியிருக்கிறார்.
இந்த ஆடை விவாதம் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பரவவே, சம்பந்தப்பட்ட அந்த நகை நிறுவனம் அந்த விளம்பரத்தை அனைத்துத் தளங்களிலிருந்தும் உடனடியாக நீக்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






