வசனத்தால் வசியம் செய்தவர்!:  கதாசிரியர் பாலமுருகன்

தமிழ்த் திரை உலகில் பாடல்கள் ஆக்கிரமிப்பு செய்த காலம் முடிந்து. வசனத்தைக் கொண்டு தமிழ்ப் படங்களை வெற்றிப் படமாக்க முடியும்  என்ற காலச்சக்கரத்தை வசனகர்த்தா இளங்கோவன் ஆரம்பித்து வைக்க
வசனத்தால் வசியம் செய்தவர்!:  கதாசிரியர் பாலமுருகன்


தமிழ்த் திரை உலகில் பாடல்கள் ஆக்கிரமிப்பு செய்த காலம் முடிந்து. வசனத்தைக் கொண்டு தமிழ்ப் படங்களை வெற்றிப் படமாக்க முடியும்  என்ற காலச்சக்கரத்தை வசனகர்த்தா இளங்கோவன் ஆரம்பித்து வைக்க பின் அறிஞர் அண்ணா, ஏ.எஸ்.ஏ. சாமி, கலைஞர் கருணாநிதி, ஏ.பி. நாகராஜன், ஜாவர் சீதாராமன் போன்றோர் பின் தொடர்ந்தனர். 

இந்தக் காலகட்டத்தில் வசனங்களுக்காகவே தமிழ்ப் படங்கள் பேசப்பட்டன. அந்த வரிசையில் போடிநாயக்கனூரை சொந்த ஊராகக் கொண்ட கதாசிரியர் பாலமுருகனும் இணைந்து கொண்டார். நாடகங்களை எழுதி தயாரித்து தென் மாவட்டங்கள் முழுவதும் அரங்கேற்றியவர். சிவாஜி மீது அதிக பற்று கொண்டவர். பாலமுருகனின் நாடகங்களில் சமூகத்திற்கு தேவையான கருத்துகள் அதிகம் எதிரொலிக்கும். இவர் எழுதிய நாடகங்களில் சிவாஜி நடித்துள்ளார்.

சிவாஜி நடிக்கும் படங்களுக்கு கதை-வசனம் எழுத வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை ""அன்புக்கரங்கள்'' என்ற படத்தின் மூலம் நிறைவேறுகிறது. அதன் பிறகு  ""பட்டிகாடா பட்டணமா'', ""ராஜபார்ட் ரங்கதுரை'', "வசந்த மாளிகை'' என்று சிவாஜி நடித்த ஒரு டஜன் படங்களுக்கு மேல் வசனம் எழுதியுள்ளார். 

முதல் படமான அன்புக்கரங்களிலே தன் வசன முத்திரையை அழுத்தமாக பதித்திருப்பார். அண்ணன் - தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் மற்றொரு படம். அண்ணனாக சிவாஜியும் (சிவராமன்) தங்கையாக மணிமாலாவும் (ஆனந்தி) சிவாஜியை ஒருதலையாக காதலிக்கும் காதலியாக தேவிகாவும் (பொன்னம்மா) நடித்திருப்பார்கள். 

படம்  ஆரம்பித்த நான்காவது நிமிடத்தில்  சுவரில் சாய்ந்து குனிந்து கொண்டு நிற்கும் நாகேஷிடம் ""டேய் திருப்பதி நிமிந்து நில்றா'' இது சிவாஜி, "முடியலையே சார் இது.' நாகேஷின் பதில்.  அடுத்து சிவாஜி ""கடமையிலிருந்து தவறிய யாராகயிருந்தாலும், சரி நிமிர்ந்து நிக்க முடியாது'' என்று  கடமையைச் செய்யும் அனைவருக்கும் பொருந்தக்கூடிய வசனத்தை எச்சரிக்கைத் தொனியில் சொல்லியிருப்பார்.  தங்கையின் கல்யாணத்தைப் பற்றி ஜோசியரிடம் பேசும் போது  ""கடல்ல இருக்கிற முத்து இடம் மாறினாதானே கடலுக்கும் பெருமை முத்துக்கும் பெருமை'' என்பார் சிவாஜி. 

திருவிழாவிற்குச் சென்ற பொன்னம்மாவும் ஆனந்தியும் சந்தர்ப்ப சூழ்நிலையில் பிரிந்து சென்று தனித்தனியாக வீடு திரும்புவார்கள். தேடிக் காணாமல் போன தன் தங்கையை நினைத்து வருத்தமாக வீடு திரும்பும் போது தங்கை ஆனந்தி வீட்டில் இருப்பார்.  இதைக் கண்ட சிவாஜி தங்கை ஆனந்தியை கோபத்தினால் திட்டித் தீர்த்த ஒரு சில நொடிகளில் தங்கையை அணைத்துக்கொண்டு  "அம்மா  ஒரு குடும்பம் பெருமையடையறதும் சிறுமையடையறதும் வீட்டுப் பெண்கள் கைலதான் இருக்கு'' என்ற வசனத்தை அறிவுறையாகச் சொல்வார்.  

குடும்பப் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை திருக்குறளைப் போன்று இரண்டு வரியில் சொல்லியிருப்பார் பாலமுருகன்.   ஒரு காட்சியில் சிவாஜியின்  தங்கை ஆனந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு படுத்திருப்பார். அங்கு மருந்து கொடுக்க வந்த செவிலியர் மருந்தைக் கொடுத்து விட்டு கடுஞ்சொற்களால் திட்டிவிட்டு செல்வார். இதை மற்றொரு செவிலி நல்லம்மா மூலம் கேள்விப்பட்ட டாக்டர்,  மறுநாள் ஆனந்தியைக் கூட்டிக்கொண்டு வார்டுக்குள் வருவார். அப்போது நேற்று திட்டிய செவிலியர் மற்றொரு நோயாளியைத் திட்டிக்கொண்டிருப்பார். இதைப் பார்த்த டாக்டர் செவிலியரிடம் ""மற்றவங்க மனசு புண்படும்படி இப்படிப் பேசலாமா, நாம கொடுக்குற மருந்த விட நோயாளிங்ககிட்ட நாம காட்டுற அன்புலதான் சீக்கிரம் குணமாகும்'' என்பார். ஒரு டாக்டர் செவிலியரைக் கண்டிக்கும் போது கூட அதில்  சமூக அக்கறை கலந்த வசனத்தை எழுதுவது பாலமுருகனின் வழக்கம். 

இப்படத்தில் நகைச்சுவைக்காக நாகேஷும் மனோரமாவும் நடித்திருப்பார்கள். நாகேஷ் மனோராமா கையை பிடித்ததால் அதை பஞ்சாயத்திற்கு கொண்டுவருவார்கள். அந்தக் காட்சியில் நாகேஷ், "பஞ்சாயத்திற்கு வந்தா பாதிப் பொண்டாட்டி, அபராதம் கட்டினா அரைப் பொண்டாட்டி, ஆக மொத்தம் ஒரு பொண்டாட்டி' என் பொண்டாட்டி மாமா என்று பஞ்சாயத்து பழமொழியை எடுத்து விடுவார்.

பாலமுருகன் கிராமத்து பின்புலம் கொண்டவர் என்பதால், கிராம பஞ்சாயத்தில் சொல்லப்படும் பழமொழிகளில் ஒன்றை எடுத்து எழுதியிருப்பார்.  தன் வாழ்க்கையைக் கண்ணனுக்கு கொடுத்ததன் மூலம் தான் ஒரு குழந்தைக்குத் தாயாகி விட்டதை உணர்ந்த ஆனந்தி வீட்டை விட்டு வெளியேறுவார். அம்மா முன்பு தங்கையாக நடிக்கும் பொன்னம்மாவைப் பெண் பார்த்து விட்டுச் சென்ற பிறகு பொன்னம்மாவிற்கும் சிவாஜிக்கும் நடக்கும் வாய்த் தகராறில்,  தான் ஒரு கொலைக் குற்றவாளி என நினைத்து பொன்னம்மா "குஷ்டரோகிகூட ஒரு பெண் வாழ்ந்திடலாம் ஆனால், குற்றவாளிகூட ஒரு பெண் வாழமுடியாது' என சொல்வார். 

குஷ்டரோகம் உள்ள நோயாளியை மணந்து கொண்டு மனதால் வாழ்ந்துவிடலாம். ஆனால்,  கொலைக் குற்றவாளியை திருமணம் செய்து கொண்டு மனதால் கூட வாழமுடியாது என்று  ஒப்புமைப்படுத்தி எழுதியிருப்பார். இப்படி காட்சிக்குக் காட்சி வலிமையான வசனத்தை வரைந்திருப்பார் பாலமுருகன். 

கதையை தயாரிப்பாளர் பெரியண்ணா இயக்குநர் கே. சங்கரிடம் சொல்கிறார். கதையைக் கேட்ட இயக்குநர்,  இக்கதைக்கு ஜாவர் சீதாராமன் வசனம் எழுதட்டுமே என்று வேண்டுகோள் வைக்க,  இல்லை இல்லை, கதை-வசனம் இரண்டையும் பாலமுருகனையே எழுதச் சொல்லிட்டார் சிவாஜி, அதை மாற்ற முடியாது என்கிறார் பெரியண்ணா. கதாசிரியர் பாலமுருகனை தமிழ்த் திரைப்பட உலகிற்கு அறிமுகப்படுத்தியதிற்கு சிவாஜிக்கும் பெரியண்ணாவிற்கும் திரைப்பட ரசிகர்கள் என்றென்றும் நன்றிக்குரியவர்கள். 19-02-1965 -இல் வெளிவந்த இப்படத்திற்கு வயது 54, ஆனால், பாலமுருகன் எழுதிய வசனத்தின் வசியத்தால் இப்பழைய படத்தை புதிய தலைமுறையினரும் பார்க்க வேண்டிய புதியபடமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com