கிராமங்களுக்கு வழிகாட்டியான பேராசிரியர்

மதுரை அலங்காநல்லூர் பொந்துகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் அம்பலம் எதியோப்பியாவில் பேராசிரியராக பணியாற்றி கொண்டு அங்குள்ள கிராம மக்களுக்கு பல்வேறு  உதவிகள் செய்து வருகிறார். 
கிராமங்களுக்கு வழிகாட்டியான பேராசிரியர்


மதுரை அலங்காநல்லூர் பொந்துகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் அம்பலம் எதியோப்பியாவில் பேராசிரியராக பணியாற்றி கொண்டு அங்குள்ள கிராம மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறார்.

உள்ளூர் மொழி தெரியாது. மொழிபெயர்ப்பாளரை வைத்துக் கொண்டு எதியோப்பிய மொழிகளை பேசுகிறார் கண்ணன் அம்பலம். தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்:

"மதுரை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நான் தியாகராயர் கல்லூரியில் இளங்கலை வேதியியல் பட்டம் பெற்றேன்.சென்னை கிறித்தவக் கல்லூரியில் "பொது நிர்வாகம்' பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றேன். தொடர்ந்து மேல் படிப்பை முடித்த பிறகு ஐ.ஏ.எஸ் தேர்விற்காக என்னைத் தயார் செய்தேன். ஆனால், அது கனவாகவே தொடர்ந்தது. மூன்று முயற்சிகளுக்குப் பிறகும் வெற்றி கிடைக்காத காரணத்தால் வேறு வேலை தேட முயற்சி செய்தேன். அப்போதுதான் ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் ஒல்லேகா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வேலையில் சேர அழைப்பு வந்தது.

2009-இல் ஒல்லேகாவில் பணியில் சேர்ந்தேன். பல்கலைக்கழகத்தில் பயிற்று மொழி ஆங்கிலம்தான். ஆனால் மக்கள் உள்ளூர் மொழியான "ஒரோமோ' தான் பேசுவார்கள். விடுமுறை நாட்களில் பல்கலைக்கழகத்திற்கு அருகே உள்ள கிராமங்களைச் சுற்றிப் பார்க்கச் சென்று வருவேன். துணைக்கு உள்ளூர் மாணவர்கள் சிலரை அழைத்துச் செல்வேன். கிராமங்களை இணைக்கப் பாதை வசதிகள் இல்லை . சுனைகள் நீர் ஊற்றுகள் இருந்தாலும் தெளிவான நீர் கிடைக்காததால் கலங்கிய தண்ணீரையே மக்கள் குடித்து வருகிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டேன்.

கிராமங்களுக்கிடையில் மழைக் காலத்தில் சிற்றாறுகள் ஓடும் போது போக்குவரத்துக்காக சிறு பாலங்கள் இல்லை. மக்கள் பல கி.மீ சுற்றிப் போக வேண்டிய சூழ்நிலை. ஆறுகளின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்குச் செல்லும் போது ஆற்றைக் கடப்பவர்களை இழுத்துக் கொண்டு போய்விடும். இதை மாற்ற வழிவகை செய்தாக வேண்டும் என்று மாணவர்களுடன் கலந்து ஆலோசித்தேன். அவர்கள் மூலம் கிராம மக்களின் ஒப்புதலையும் பெற்றேன்.

பல்கலைக்கழகத்திலிருந்து சுமார் நூறு கி.மீ சுற்றளவில் இருக்கும் 14 கிராமங்களுக்கு சென்றேன். கிராமப்பகுதிகளில் அதிகமான உயரமான மரங்கள் உண்டு. அவற்றை வெட்டி ஆற்றின் இரண்டு கரைகளையும் இணைத்தோம். கிட்டத்தட்ட கட்டுமரம் மாதிரி பாலம் அமைந்தது. இப்படி அமைத்ததில் நடைமுறை சிக்கல் எழுந்தன. மழைக் காலத்தில் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து சில மரப்பாலங்கள் நீரால் அடித்துச் செல்லப்பட்டது. சில பாலங்கள் மேல் -ஆற்று நீர் பாய்ந்து செல்வதால் மரங்களின் மேல்புறத்தில் பாசி, அழுக்கு படிந்து நடக்கும் போது மரம் வழுக்கி நடப்பவர்கள் கீழே விழும் அபாயம் ஏற்பட்டது.

கிராம மக்கள் தங்களது பொருள்களை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு போக கழுதையைப் பயன்படுத்துவார்கள். பொதி சுமந்து செல்லும் கழுதைகள் மரப்பாலத்தைக் கடக்கும் போது மரங்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியில் கால்கள் சிக்கிக் கொள்ளும். சில தருணங்களில் கழுதையின் கால்கள் ஒடிந்துவிடும். இதனைத் தடுக்க மரப்பாலத்தில் காங்கிரீட் செய்வது என்று முடிவுக்கு வந்தோம்.

சிமெண்ட், இரும்புக் கம்பிகள் மாத்திரம் வெளியில் வாங்க வேண்டும். கற்கள், மண், கிராமங்களில் கிடைக்கும். சிமெண்ட், இரும்புக் கம்பிகள் செலவை நான் ஏற்றுக் கொள்வேன். உடல் உழைப்பை கிராமத்தினர் வழங்கினர். மரப்பாலங்களை கான்கிரீட் செய்ததினால் கார்கள் வேன்களும் ஓடத் தொடங்கின. சுமார் 43 இடங்களில் சிறு சிறு பாலங்களைக் கட்டியுள்ளோம். சுனை, நீர் ஊற்று கலங்கலாக வரும் 28 இடங்களில் பல தடுப்புகள் கட்டி நீரைத் தேக்கி தெளியச் செய்து தரமான குடிநீர் கிடைக்க வழி செய்திருக்கிறோம்.

இங்கு கேழ்வரகு அதிகமாக விளைகிறது. நிலக்கடலை விவசாயம் அதிகம். கிராமத்தினருக்கும் கரோனா குறித்த எச்சரிக்கைகளைச் சொல்லி வருகிறேன். தமிழ் நாட்டில் இருந்தால் எதைச் செய்திருப்பேனோ அதைத்தான் எதியோப்பியாவில் செய்து வருகிறேன்''என்கிறார் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறியிருக்கும் கண்ணன் அம்பலம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com