கோனேரிராஜபுரம் வண்ண ஓவியங்கள்

நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சைத்தரணியில் வழிபாடு சிறப்புடையதும் வரலாற்றுப் பெருமை மிக்கதுமான பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன. சோழநாட்டை வளப்படுத்தும் காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் அமைந்துள்ள
கோனேரிராஜபுரம் வண்ண ஓவியங்கள்

நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சைத்தரணியில் வழிபாடு சிறப்புடையதும் வரலாற்றுப் பெருமை மிக்கதுமான பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன. சோழநாட்டை வளப்படுத்தும் காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் அமைந்துள்ள பல திருத்தலங்கள் மக்களால் போற்றி வணங்கப்படுகின்றன.

திருநல்லம்: 

காவிரி ஆற்றின் தென்கரையில் உள்ள சிறப்பான திருத்தலம் “"திருநல்லம்'”ஆகும். இன்று "கோனேரிராஜபுரம்'” என அழைக்கப்படுகிறது. காவிரித் தென்கரையில் உள்ள பாடல் பெற்ற தலங்களுள் 34-வது தலமாகவும் விளங்குகிறது.

"நல்லாள் நமையாள் வான் நல்லம் நகரானே'” என்ற ஞானசம்பந்தர் பெருமான் போற்றுகின்றார். “"நக்கன் சேர் இல்லம் நண்ணுதல் நன்மையே' என அப்பர் பெருமான் புகழ்ந்து போற்றியுள்ளார். எனவே "பாடல் பெற்ற தலம்' என்ற சிறப்புடன் இத்தலம் விளங்குகிறது.

கும்பகோணம் - காரைக்கால் சாலையில் எஸ்.புதூர் என்று அழைக்கப்படும் ஊரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள இவ்வூருக்குச் செல்லலாம்.

தலம் - தீர்த்தம்: 

திருக்கோயிலில் எழுந்தருளி அருள்புரியும் இறைவன் உமாமகேசுவரர், பூமீசுவரர், பூமிநாதர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். இறைவி தேக செளந்தரி, அங்கவளநாயகி என அழைத்தும் போற்றப்படுகிறார். அரசமரம், தல மரமாகவும் (விருட்சம்), பிரம்மதீர்த்தம் - தலச்சிறப்பினைக் கூறும் தீர்த்தமாகவும் அமைந்துள்ளது.

திருக்கோயில் அமைப்பு: 

மேற்கு நோக்கிய திருக்கோயில் கருவறையில் இறைவன் லிங்க வடிவிலே எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். கருவறையை அடுத்து மகா மண்டபம், இரண்டு திருச்சுற்றுகள், முகமண்டபம், முகப்பு மண்டபம், என்ற அமைப்புகளுடன் விளங்குகிறது. முகப்பு மண்டபம் மராட்டியர் காலத்தைச் சேர்ந்ததாக விளங்குகிறது.

செம்பியன் மாதேவியார் கற்றளி: 

இக்கோயில் வரலாற்றுச் சிறப்பும் உடையது. சோழ மன்னர்களில் கண்டாரதித்த சோழன் சிறந்த சிவபக்தர். தமிழ்ப் புலமையிலும் சிறப்பு பெற்று விளங்கியவர் ஆவார். இம்மன்னன் அருளிய திருவிசைப்பா ஒன்பதாம் திருமுறையில் வைத்து போற்றப்படுகிறது. இவருடைய மனைவி செம்பியன் மாதேவியார். தமிழகத் திருக்கோயில் வரலாற்றில் ஓர் சிறப்பிடம் பெற்று விளங்குகிறார். திருக்கோடிக்காவல், செம்பியன்மாதேவி, குத்தாலம், விருதாச்சலம், திருவக்கரைப் போன்ற திருக்கோயில்கள் செங்கற்கோயிலாக இருந்தவற்றை (கற்றளியாக) கற்கோயிலாக மாற்றியவர். அவர் திருப்பணி பெற்ற கோயில்களில் ஒன்றுதான் "கோனேரிராஜபுரம்' எனப்படும் திருநல்லம் திருக்கோயில் ஆகும். 

செம்பியன்மாதேவி தன் கணவரின் நினைவாகத் திருநல்லமுடையார் என்ற இறைவனுக்கு கருங்கற்களால் ஆலயம் எடுப்பித்ததையும், கண்டராதித்தம் என்ற பெயரிட்டதையும், திருநல்லமுடையாரின் திருவடியை கண்டாரதித்த தேவர் வணங்குவது போன்ற சிற்பமும், அதன் கீழே கல்வெட்டும் காணப்படுவது சிறப்பாகும். இக்கோயிலை கற்றளியாக (கற்கோயிலாக) மாற்றிய சிற்பி ஆலத்தாருடையான் சாத்தன் குணப்பட்டனான அரசரணசேகரன் என்று கல்வெட்டு குறிக்கிறது. கோயிலைக் கட்டிய சிற்பியின் திருவடிவமும் கோயிலில் காணப்படுவதும் சிற்பிக்கு பெருமை அளிக்கும் வகையில் "ராஜகேசரி மூவேந்தவேளான்' என்ற பட்டப்பெயர் அளிக்கப்பட்டதும் கல்வெட்டில் காணப்படுவது மிகச்சிறப்பாக விளங்குகிறது.

ஓவியங்கள்: 

இத்தகைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திருக்கோயிலின் முகப்பு மண்டபத்தின் விதானத்தில் அழகிய வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. சென்ற நூற்றாண்டு கால ஓவியமாக இருந்தாலும் திருக்கோயில் அமைப்பு – திருக்கோயிலின் புராணவரலாறு, இங்கு நடைபெற்ற திருவிழாக்களின் போது இறைவன் வீதி உலா வரும் காட்சி, போன்றவை வண்ண ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளதைக் கண்டு மகிழலாம்.

இத்திருக்கோயிலின் முகப்பு மண்டபத்தில் திருக்கோயிலின் அமைப்பு அழகிய ஓவியமாகக் காணப்படுகிறது. கருவறையில் இறைவன் எழுந்தருளியுள்ளார். "உமாமகேசுவரர்' என்று எழுதப்பட்டுள்ளது. அருகில் உள்ள வைத்தீசுவரன் சந்நிதி அமைந்துள்ளது. இவ்வோவியத்தில் கோயிலின் கீழே “"வைதீசுவரரைத் தரிசித்தால் பெரிய ரோகம் நிவர்த்தி'” என எழுதப்பட்டுள்ளது. கோனேரிராஜபுரம் திருக்கோயிலின் புராணவரலாற்றை "ஸ்ரீ பூமீசுவர சேத்திர மகாத்மியம்' என்ற நூல் சிறப்புடன் எடுத்துக்கூறுகிறது. அதில் கூறப்பட்டுள்ள செய்திகள் ஓவியத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்து அம்மன் சந்நிதியும் வரையப்பட்டுள்ளது. பச்சை நிற புடவை அணிந்து தேவி காணப்படும் ஓவியம் பாதி அழிந்துவிட்ட நிலையில் காணப்படுகிறது.

கருவறை எதிரே பலிபீடம் கொடிமரமும் இரு பக்கங்களின் உள்ள கணபதி - ஷண்முகர் சந்நிதி வடிவங்களும் காணப்படுகின்றன. கருவறை ஓவியத்தின் தென்புறத்தில் தட்சிணாமூர்த்தி வடிவம் அழகிய ஓவியமாகக் காணப்படுகிறது. தட்சிணாமூர்த்தியின் முகப்பொலிவு நம் கருத்தை கவரும் வண்ணம் அமைந்துள்ளது.

இவ்வோவியத்திற்கு கீழே கிணறு ஒன்று காணப்படுகிறது. புருவரசு என்ற மன்னன், கொடிய நோயினால் இன்னலுற்றான். இங்கு வந்து “பூமி தீர்த்தம்” என்ற தீர்த்தத்தில் வழிபட்டு நலமடைந்ததை “பூமீசுவர சேத்ர மகாத்மியம்” கூறுகிறது.

ஓவியத்தின் கீழே தீர்த்த குளத்தின் கரையில் பெரிய மரம் ஒன்று தீட்டப்பட்டுள்ளது. மரத்தில் ஒரு கிளி அமர்ந்துள்ளது. கிளி வடிவில் சுகப்பிரம்ம முனிவர் காணப்படுகிறார். இவர் கெளதம முனிவர்களுக்கு உபதேசம் செய்கிறார். “"கெளதம ரிஷி கூட்டத்துக்கு சுகம் உபதேசம்'  என இவ்வோவியத்தில் எழுதப்பட்டுள்ளது. அருகில் முனிவர்கள் தவம் செய்தபடி காணப்படுகின்றனர்.

கருவறை ஓவியத்தின் மேற்பகுதியில் சிவபெருமானது ஐந்து முகங்களை குறிக்கும் வகையில் ஈசானமூர்த்தி, தத்புருஷமூர்த்தி, அகோரமூர்த்தி, வாமதேவமூர்த்தி, சத்யோஜாதமூர்த்தி வடிவங்களும், மற்றும் ரிக்-யஜுர்-சாம, அதர்வண மூர்த்திகளின் வடிவங்களும், அகத்தியர் வடிவமும் காணப்படுகின்றன. இத்திருக்கோயில் வரலாற்றையும் அழகிய ஓவியங்களையும் குறித்து வரலாற்றுத்துறை பேராசிரியர் கோ.எழில்ஆதிரை என்பவர் ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாசித் திருவிழா: 

இத்திருக்கோயிலில் மாசித் திருவிழா (பிரம்மோத்சவம்) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அத்திருவிழாவில் நாள்தோறும் நடைபெறும் இறைவன் திருவீதி வாகனங்களில் புறப்பாடு போன்றவை அழகிய ஓவியமாகக் காணப்படுகிறது.

ஏகாசன மஞ்சம், யானை சிம்ம வாகன காட்சி, பூத வாகனகாட்சி, சூரியன், சந்திரன் பிரபை வாகனகாட்சி, வேலைப்பாடு மிக்க சப்பரம், போன்ற வாகன காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

திருவிழாவின்போது இறைவன் ரிஷப வாகனத்துடன் எழுந்தருளுகிறார். அழகிய வேலைப்பாடுகளுடன் மாலை அலங்காரம், தலைக்கு மேலே அழகிய குடை. விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமான், சண்டிகேசுவரர், பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு.

இந்நிகழ்ச்சியில் மக்கள் பலர் கலந்து கொள்கின்றனர். திருமண் இட்டும், திருநீறு பூசியும் பலர் காணப்படுகின்றனர். 

முன்பாக நாதசுவரம் வாசிக்கப்படுகிறது. அருகில் நாட்டிய பெண் உருவமும் காணப்படுகிறது. ஓவியத்தின் கீழ்பகுதி முற்றிலுமாக அழிந்துவிட்டது.

சோமாசி மாறனார் வரலாறும் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. இதில் இறைவன் இறைவி வேட்டுவர்களாக (புலையன்-புலத்தி) வந்து அவிர்பாகம் பெற வரும் காட்சி காணப்படுகிறது.

மேலும் சமகால (இருபதாம் நூற்றாண்டு) வாழ்க்கை பற்றி கூறும் ஓவியமும் காணப்படுகிறது. நான்கு ஆங்கிலேயர்கள் தலைதொப்பி அணிந்து நீண்டவாளுடன் காணப்படுகின்றனர். அவர்களுக்கு எதிரே மேஜையில் சந்தனம், பன்னீர்சொம்பு, வெற்றிலைப் பாக்கு போன்றவை வைக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து நடனப்பெண் நடனமாடுகிறார். தலைப்பாகை அணிந்த ஒருவர் நாதசுவரம் வாசிக்க, ஒருவர் மத்தளம் கொட்ட, மற்றொருவர் கைத்தாளம் போடுகிறார். ஆங்கிலேயர்களை வரவேற்பது போன்ற காட்சியாக விளங்குகிறது.

கோனேரிராஜபுரம் ஓவியங்களை 1916-ஆம் ஆண்டு திருவாரூர் வண்ணக்காரன் நடேசன்  தீட்டியாதாகவும், பின்னர் 1935-ஆம் ஆண்டு திருவாவடுதுறை வர்ணக்காரர் மாசிலாமணி தீட்டியதாகவும் இயக்குநர் இரா.நாகசாமி  கூறுகிறார்.

இறைவன் வீதி உலா வரும் காட்சியில் நடனமாடும் பெண் திருவிடைமருதூர் ருக்மணி என்பதும் நாதசுவர, தவில் வித்வான்களாக அம்மாபேட்டை பக்கிரி, மன்னார்குடி சின்னபக்கிரி மற்றும் உள்ளூர் கலைஞர் வையாபுரி எனவும் அறிய முடிகிறது.

கோனேரிராஜபுரம் ஓவியங்கள் வண்ணமயமாகக் காட்சி அளிக்கிறது. இத்திருக்கோயிலின் புராணவரலாற்றுச் சிறப்பினையும், வழிபாட்டுச் சிறப்பினையும் ஒருங்கே எடுத்துக் கூறும் வகையிலும் அமைந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் மக்களின் சமகால வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக்கூறும் சான்றாகவும் விளங்குகிறது.

இக்கோயிலில் காணப்படும் ஓவியங்கள் (சுவரொட்டி வண்ணப்பூச்சுமுறை) "டெம்பரா' என்ற ஓவியப்பூச்சு வகையில் தீட்டப்பட்டுள்ளதால் ஓவியங்களில் பெரும்பாலானவை அழிந்து வருகின்றன. இவற்றைப் போற்றி காப்பாற்ற வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

கட்டுரையாளர் : தொல்லியல் துறை (ஓய்வு) 
புகைப்படங்கள்  :  சிவசங்கர்பாபு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com