நிஜ கதாநாயகர்கள்

ஆகஸ்ட் 15 சுதந்திர தினம். இந்திய மக்களாகிய நாம் இன்றளவும் சுதந்திரத்தை அனுபவித்து வருவதற்கு பின்னால் பல வீரர்கள்  ரத்தம் சிந்தியுள்ளனர்.
நிஜ கதாநாயகர்கள்


ஆகஸ்ட் 15 சுதந்திர தினம். இந்திய மக்களாகிய நாம் இன்றளவும் சுதந்திரத்தை அனுபவித்து வருவதற்கு பின்னால் பல வீரர்கள்  ரத்தம் சிந்தியுள்ளனர். தன்னலம் பார்க்காமல் நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க எல்லையில் எந்நேரமும் விழிப்புடன் பணியாற்றும் நம் ராணுவ வீரர்கள் தான் தேசத்தின் உண்மையான ஹீரோக்கள். அவர்களின் சேவைகளை நினைவுகூறும் சிறு தொகுப்பு இது. 

மேஜர் ஜெனரல் ஐயன் கர்டோசோ 

1971-ஆம் ஆண்டு நடைப்பெற்ற பாகிஸ்தானுடனான போரில் பல சாதனைகளை படைத்திருக்கிறார் இவர். அப்போது இவர் மிக இள வயது ராணுவ வீரராக இருந்தார். போரின் போது எதிர்பாராத விதமாக கண்ணி வெடியில் காலை வைத்து அழுத்தி விடுகிறார். அது அழுத்தம் ஏற்பட்ட பிறகு தான் ஐயனுக்கே தான் இப்போது கண்ணி வெடியில் கால் வைத்திருப்பது தெரியவருகிறது. உடனடியாக சுதாரித்த ஐயன் சுற்றி வந்து கொண்டிருந்த வீரர்களை எச்சரிக்கிறார். எல்லாரும் விலகிச் செல்லுங்கள் கண்ணி  வெடியை மிதித்து விட்டேன் என்று கத்துகிறார். உடனடியாக முகாமுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அங்கிருந்து மருத்துவக்குழு மற்றும் நிபுணர்கள் வருகிறார்கள்.

மருத்துவர்கள் வருவதற்குள்ளாக சுமார் மூன்று மணி நேரம் ஆகிவிட்டிருந்தது. அவ்வளவு நேரமும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அதே அழுத்தத்தை கொடுத்தபடி நின்றிருந்தார். நிபுணர்களும் கையை பிசைந்து கொண்டு நிற்கிறார்கள். "டாக்டர் என் கால எடுத்துடுங்க' என்கிறார் ஐயன்.

எல்லாரும் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றனர். "என்ன பேசுகிறோம் என்று தெரிந்து தான் பேசுகிறாயா? நன்றாக இருக்கிற காலை இந்த காரணத்திற்காக அகற்ற முடியாது' என்று சொல்லிவிட்டார் மருத்துவர். யோசித்துக் கொண்டேயிருந்தார்கள்.... ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஐயன் தன் சக வீரரிடம் ஒரு கத்தியை கொடு என்கிறார். அந்த கத்தியால் தன்னுடைய காலை வெட்ட ஆரம்பிக்கிறார். எல்லாரும் இங்கேயே நின்றிருந்தால் எப்படி இன்னும் வெகுதூரம் நாம் கடக்க வேண்டும் என்றதோடு பிற வீரர்கள் துணையுடன் ஒரு காலை மட்டும் இழந்த படி காப்பாற்றப்படுகிறார் ஐயன்.

ஒரு காலை இழந்த போதும் தொடர்ந்து ராணுவத்தில் பணியாற்றினார். இந்திய ராணுவத்தின் முதல் மாற்றுத்திறனாளி அதிகாரியாக ஐயன் நியமிக்கப்பட்டார். மற்ற அதிகாரிகளை விட மாற்றுத்திறனாளியாக இருந்த ஐயன் தொடர்ந்து பல்வேறு உடல் தகுதி தேர்வுகளில் முதலிடத்தில் வெற்றி பெற்றார்.

கேப்டன் கரம் சிங் 

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சங்குருர் மாவட்டத்தில் உள்ள செஹ்ன என்ற கிராமத்தில் பிறந்தவர் கரம் சிங்.  இவர் தான் முதன் முதலாக உயிருடன் இருக்கும் போது பரம் வீர் சக்ரா விருது பெற்ற முதல் வீரர் ஆவார். 1993 -ஆம் ஆண்டு தன்னுடைய 77-ஆவது வயதில் மரணமடைந்தார் கரம் சிங். இந்திய அரசாங்கம் மற்றும் பிரிட்டிஷ் அரசாங்ககளிடமிருந்து மிக உயரிய விருதுகளை பெற்ற ஒரே வீரர் இவர் தான். இவரின் வீரத்தை சொல்ல 1948 -ஆம் ஆண்டு அக்டோபர் பதிமூன்றாம் தேதி நிகழ்ந்த போர் நிகழ்வை நினைவு கூறுகிறார்கள். காஷ்மீரின் ரிச்மர் கலி பகுதியை கைப்பற்றும் பொருட்டு பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவத்தின் மீது தீடீரென்று தாக்குதல் நடத்த துவங்கியது. இந்திய ராணுவத்தின் பதுங்கு குழிகள் எல்லாம் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் முற்றிலும் அழிந்தது. 

கமாண்டரிடம் தகவல் கூட கொடுக்கமுடியவில்லை அதற்கான அவகாசம் கூட இல்லை. 

இப்போது கரம் சிங் முன்னால் ஒரேயொரு வாய்ப்பு தான் இருந்தது. அங்கு இருக்கும் மிக சொற்ப அளவிலான வீரர்கள் அவர்களிடம் இருக்கிற ஆயுதங்களை கொண்டு எதிரி நாட்டினரை எதிர்ப்பது. முழு முயற்சியுடன் வீரர்களுக்கு கட்டளையிட்டுக் கொண்டே முன்னேறிக் கொண்டே சென்றார். கரம் சிங்கிடம் இருந்த வீரர்களை விட பன்மடங்கு வீரர்கள் இவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே எதிரில் வந்தனர். வீரர்கள் மற்றும் கரம் சிங் ஒரு பெரிய அகழியில் மறைவாக நின்று கொண்டனர். பின் வாங்கிவிடலாம் என்று பிறர் சொன்ன போதும் அதை மறுத்து விட்டார் கரம் சிங் எதிரி நாட்டினர் மிக அருகில் வந்தவுடன் அந்த அகழியிலிருந்து குதித்து வெளியேறி இரண்டு வீரர்களை கொன்றார்.

கேப்டன் விக்ரம் பத்ரா

கேப்டன் விக்ரம் பத்ரா  இவரை கார்கில் போரின் ஹீரோ என்று வர்ணிக்கிறார்கள். காஷ்மீரில் நடைப்பெற்ற மிக கடினமான போர் ஒன்றில் பங்கேற்று போரிட்டார். 17 ஆயிரம் அடி உயரத்திற்கு சென்று இவர் போரிட வேண்டியிருந்தது. அதற்கு முன்பே இவர் பலமாக காயமடைந்திருந்தார். 

இந்திய ராணுவம் மேற்கொண்ட போரில் இது தான் மிக கடுமையானது என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 16 ஆயிரம் அடி உயரத்தில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தியிருந்தார்கள்.மலையேறி சென்று கொண்டிருந்த போது பனிப்பாறை சரிந்தும் ஏராளமான வீரர்கள் உயிரிழந்தார்கள். அனைத்து இன்னல்களையும் கடந்து முன்னேறிக் கொண்டிருந்தார் பத்ரா ஒரு கட்டத்தில் தடுமாறி விழ அவரை இன்னொரு வீரர் தூக்கி விடுகிறார் அதற்குள் பாகிஸ்தான் படையினரின் தாக்குதல் துவங்கிவிட்டது. இந்த தாக்குதலில் பத்ரா கொல்லப்பட்டார்.

கடினமான போர்களத்திற்கு செல்லும் முன்பே இது வாழ்வா சாவா என்ற போராட்டம் திரும்ப வர மிக குறைந்த அளவிலான வாய்ப்பே இருக்கிறது என்பதை அறிந்திருந்த பத்ரா அங்கிருந்து தந்தையிடம் பேசுகிறார். அப்போது, "நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் நான் நிச்சயமாக திரும்ப வருவேன். ஒன்று நம் மூவர்ண கொடியை அங்கே நட்டு வெற்றியுடன் திரும்புவேன் இல்லையென்றால் மூவர்ண கொடி என் மேல் போர்த்தப்பட்டு திரும்ப உங்களிடமே வருவேன். எப்படியும் நான் வந்துவிடுவேன்' என்றாராம். 2003-ஆம் ஆண்டு வெளியான ஹிந்தி திரைப்படமான "எல் ஓ சி கார்கில்' திரைப்படத்தில் அபிஷேக் பச்சன் கேப்டன் பத்ரா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

லான்ஸ் நாயக் ஆல்பர்ட் 

லான்ஸ் நாயக் ஆல்பர்ட் இக்கா என்னும் ராணுவ வீரர் கிழக்கு பாகிஸ்தானின் "கங்கா ஸாகர்" என்னும் ராணுவ முகாமை அழிக்க அனுப்பப்பட்டார். அந்த முகாமை நெருங்க முடியாமல் வழியெல்லாம் பதுங்கு குழிகளை வெட்டி, அதிலிருந்து பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுத் தள்ளினார்கள். இதனால் நம் ராணுவத்தினர் முன்னேற முடியாமல் தவித்தார்கள். பார்த்தார் ஆல்பர்ட், இதை முறியடிக்க ஸ்டென் கன்னிலிருந்து தப்ப, வேறு வழியாக, மெல்ல ஊர்ந்து போனார். "எங்கு போகிறீர்கள் இந்த அபாயகரமான சூழ்நிலையில்?' என்று அவருடைய உதவிக்கு வந்த படைவீரர்கள் கேட்டதற்கு, "கூடிய சீக்கிரமே, இதற்கு விடை உங்களுக்கு கிடைக்கும்' என்று ஊர்ந்து சென்றார். இருந்தாலும் இரண்டொரு குண்டுகள் அவர் உடம்பில் பாய்ந்தன. அதையும் பொருட்படுத்தாமல், பதுங்கு 

குழிக்கு சென்று, அதில் பதுங்கியிருந்த இரண்டு பாகிஸ்தான் வீரர்களை தன் துப்பாக்கி முனையிலிருந்த கத்தியால் குத்திக் கொன்றார்.

பதுங்கு குழியிலிருந்து குண்டு வெடிப்பு நின்றதும், நம் இந்தியப் படை சற்றே முன்னேறியது. ஆனால் மறுபடி இரண்டாவது பதுங்கு குழியிலிருந்து "ஸ்டென்கன்" ரவைகள் பறந்தன. ஆனாலும், உடம்பில் குண்டுகள் துளைத்ததினால் ரத்தம் வழிந்தோட, அதை சற்றும்  பொருட்படுத்தாமல், ஊர்ந்து கொண்டே இரண்டாவது பதுங்கு குழிப்பக்கம் போய், அதிலிருந்து இரண்டு பாகிஸ்தான் வீரர்களையும் துப்பாக்கி முனையிலிருந்த கூர்மையான கத்தியால் குத்தினார். இதனால் அங்கிருந்து வெடிச்சத்தம் வருவது நின்றதால், இந்திய படை வீரர்கள் மேலும் முன்னேறினார்கள்.

குண்டுகள் உடலைத் துளைத்தெடுத்ததால் மேலும் முன்னேற முடியவில்லை வீரர் ஆல்பர்ட்டினால். அப்பொழுது நம் வீரர்கள் அவரைத் தூக்கி நிறுத்தினார்கள். மற்ற வீரர்கள் எதிராளியான பாகிஸ்தான் சேனை வீரர்களைச் சுட்டுத் தள்ளினார்கள். இப்படி படிப்படியாக முன்னேறி "கங்காஸாகர்" முற்றுகை இடத்தை அடைந்து, நம் சேனைவீரர்கள் சரமாரியாக எதிரிப்படையினர் மீது குண்டு வீசி அழித்தார்கள். சமாளிக்க முடியாமல் பாகிஸ்தானியர்கள் ஆயுதங்களை அங்கேயே போட்டு விட்டு, ஓடிப்போனார்கள்.

உடல் முழுவதும் குண்டுகளால் துளைத்தெடுக்கப்பட்ட வீரர் ஆல்பிரட்டை நம் படை வீரர்கள் "கங்கா ஸாகர்" முகாமிற்கு கொண்டு வந்து முதல் உதவி சிகிச்சை செய்தார்கள். சிலர் அவருக்கு தண்ணீர் கொடுத்தார்கள் ; சிலர் அவர் உடலிலிருந்து வழியும் ரத்தத்தை துடைத்தார்கள். அதிலெல்லாம் ஆல்பர்ட்டின் சிந்தனை ஓடவில்லை.

மிகுந்த ஆயாசக்குரலில், முதலில் பாகிஸ்தான் முற்றுகையிட்டிருந்த இடத்தில் பாரதத்தின் மூவர்ணக் கொடியை ஏற்றும் படி ஆணையிட்டார். கொடியை ஏற்றிவிட்டதும், அதைப் பார்த்து சமாதானமடைந்து மெல்ல புன்னகைத்தார்.
பிறகு மார்பில் தொங்கிக் கொண்டிருந்த சிலுவைக்குறியை மெல்ல தொட்டு, "பாரத மாதாவிற்கு ஜே" என்று மிகுந்த ஆயாசக்குரலில் சொல்லிக் கொண்டே உயிரை விட்டார்.

அவருடைய துணிச்சலான செயல் மற்றும் நாட்டின் மீதுள்ள விசுவாசத்தைப் பார்த்து, அங்கிருந்த மற்ற போர்வீரர்கள் கண்ணீர் விட்டார்கள். பிறகு அந்த தைரியமுள்ள, மிகுந்த ஆபத்திலும் உயிரை மதிக்காமல், போராடின அவருக்கு வீரவணக்கம் செய்தார்கள். இந்த மரணத்திற்குப் பின் அவருக்கு "மகாவீரச்சக்கரம்' பதக்கம் அரசு கொடுத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com