பென்சிலில் சாதனை

"பென்சில்' என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் விருப்பம். பென்சிலைக் கொண்டு எழுதலாம், வரையலாம், கிறுக்கலாம்.
பென்சிலில் சாதனை


"பென்சில்' என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் விருப்பம். பென்சிலைக் கொண்டு எழுதலாம், வரையலாம், கிறுக்கலாம். அத்தனையையும் அழிக்கவும் செய்யலாம். அந்த வசதியைப் பென்சில் தருகிறது. எழுதி எழுதித் தேய்ந்து போனால் குழந்தைகள் அதைத் தூக்கிப்போட்டு விடுவார்கள். ஆனால், இந்த வித்தியாசமான பென்சில் பயன்படுத்தும்போதும் எழுதுவதைத் தவிர வேறு பல நன்மையும் தருகிறது... எழுதித் தேய்ந்து போனாலும் பயன்படுகிறது. எப்படி இது சாத்தியம் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? அதைத் தெரிந்து கொள்வதற்கு முன் அதை சிறுவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டாமா? 

ஓராண்டுக்கும் மேலாகப் பாடாய்ப்படுத்தும் கரோனா நோய்த்தொற்று காலத்தை மிகவும் பயனுள்ளதாகப் பயன்படுத்தி, வீட்டிலிருக்கும் சிறுவர்களின் திறமையை வெளிக்கொணர்ந்து, அவர்களது நேரத்தை,  தனிமையைப் பயனுள்ளதாக்கி வெளியுலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டிருக்கிறார் ஹைக்கூ கவிஞர் கன்னிக்கோவில் ராஜா. இவர் எழுத்துலகத்துக்குப் புதியவரல்லர். குறிப்பாக சிறுவர் இயக்கிய உலகுக்கு மிகவும் பரிச்சயமானவர்தான். 

சிறுவர்களுக்குப் பிடித்த "லாலி பாப்' இனிப்பைத் தலைப்பாக வைத்து, சென்ற ஆண்டு  "லாலி பாப் சிறுவர் உலகம்' எனும் பதிப்பகத்தைத் தொடங்கி சுமார் 15 நூல்களுக்கும் மேல் வெளியிட்டுள்ளார். இதில் சிறப்பு என்னவென்றால், குழந்தைகளுக்கு, சிறார்களுக்குப் பிடித்த கதைப் பாடல்கள், சிறுகதைகள் பலவற்றை அவர்களைக் கொண்டே பாட வைத்து, கதைகளைச் சொல்ல வைத்து, சிறுவர்களையே கதையும் எழுதவைத்து, ஓவியங்கள் வரையவைத்து அதை ஊக்கப்படுத்தி, அவற்றை யூடியூபில் ஒலி ஒளி காட்சியாகப் பதிவேற்றி, பலரையும் கண்டு, கேட்டுக் களிக்கும்படிச் செய்து வருகிறார். குழந்தைகளைத் திருக்குறள் சொல்லவைத்து, அதையும் தொடர்ந்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார். சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் இவர் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

தற்போது சிறுவர்கள் பலரையும் கவர்ந்துள்ளது இவர் பரிசளிக்கும் பென்சில். அப்படி என்ன இருக்கிறது இதில்? பென்சில் எழுதுவதற்கு மட்டுமல்லாமல், சிறார்களுக்குப் பல வகையில் பயன்படும்படி அதில் திருக்குறளை அச்சடித்து, திருவள்ளுவர் படத்தையும் வெளியிட்டுள்ளார். அந்தப் பென்சிலை வாங்கிப் பயன்படுத்தும் சிறுவர்கள் கட்டாயம் திருக்குறளை படிக்காமல் இருக்க 
மாட்டார்கள்.

அதுமட்டுமல்ல, இந்தப் பென்சில் எழுதித் தீர்ந்து சிறிதாகப் போய்விட்டால், அதன் அடிப்பகுதியை பூமியில் புதைத்தால் அதிலிருந்து செடி, கொடிகள், பூக்கள், மரங்கள் வளர்ந்து சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும்படி அதன் அடிப்பகுதி அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பென்சிலின் அடிப்பகுதியிலும் பலவிதமான விதைகள் அடைக்கப்பட்டுள்ளன. இறுதியாக இந்தப் பென்சிலை குப்பையில் போடாமல் பூமியில் போட்டால் செடி, கொடிகள், மலர்கள் மலரும்.

மேலும், குழந்தைகள் படிக்கும் புத்தகங்களில் வைக்கும் "புக் மார்க்' எனப்படும் புத்தக அடையாள அட்டையைக்கூட சிறார் விரும்பும் வண்ணம் "லாலி பாப் சிறுவர் உலகம்' மூலம் வெளியான நூல்களை அதில் வடிவமைத்துக் குழந்தைகளின் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறார்.

அதுமட்டுமா? தாவர விதைகள் உள்ள பென்சிலுடன், புக் மார்க் அட்டைகளும் தந்து, கூடவே வெண்டை, புடலை, கத்தரி, முடக்கறுத்தான், சுரைக்காய் முதலியவற்றின் விதைகள் அடங்கிய குட்டிப் பையும் (தொகுப்பு) கொடுத்து சிறுவர்கள் மனதில் (பென்சில் மூலம்) திருக்குறளை விதைத்து, அதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மரங்களை வளர்ப்பதற்கான விதைகளையும் கொடுத்து, கூடவே லாலி பாப் இனிப்பையும் வழங்கி, சிறார்களை மகிழ்வித்து வருகிறார்.

இன்றைய கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் இத்தகைய பணியை மேற்கொண்டுள்ள கன்னிக்கோயில் ராஜா,  சென்னை வாசி. தனியார் நிறுவனத்தில் நூல் வடிவமைப்புப் பிரிவில் பணிபுரிந்து வருபவர். அப்பணியைத் தவிர ஒவ்வொரு நாளையும் சிறுவர்களுக்காகவே செலவிடுபவர். புதுக்கவிதை, ஹைக்கூ தொடர்பாக ஏழு நூல்களையும், சிறுவர்களுக்கான 24 கதை நூல்களையும், சிறுவர் பாடல்கள் கொண்ட 5 நூல்களையும் எழுதியுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com