தண்ணீரிலும் கண்ணீர் துடைத்தவர்கள்!

மனித நேயமிக்க மனிதர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதால்தான் இவ்வுலகம் அழிந்து போகாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது.
தண்ணீரிலும் கண்ணீர் துடைத்தவர்கள்!

மனித நேயமிக்க மனிதர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதால்தான் இவ்வுலகம் அழிந்து போகாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது.

பெரு நதரங்களில் கூட இன்னும் மனித நேயம் ஒரு சிலரிடம் உள்ளது. கடந்த வாரம் பெய்த மழையால் சென்னை மீண்டும் வெள்ளக்காடானது. நகரின் பிரதான பகுதிகள் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துகொண்டது. அத்தியாவசியப்பொருள்கள் மட்டுமின்றி மின்சாரம், உணவு, தங்குமிடம் இல்லாமல் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்த மக்கள் பலருக்கு உதவி இருக்கிறது இளைஞர் பட்டாளம் ஒன்று. இந்த இளைஞர் பட்டாளத்திற்கு தலைமை வகித்தவர் ஆட்டோ ஓட்டுநரான அருள்ராஜ். அவரை சந்தித்துப் பேசிய போது சொன்னார்:

""5 ஆண்டுகாலமாக இது போன்ற பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். கடந்த நவம்பர் 1-ஆம் தேதி முதல் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு உதவிகள் செய்யத் தயாரானோம். முதலில் கொளத்தூர் பகுதியில் தண்ணீர் அதிகமாக இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் மூலம் தெரிந்து கொண்டு அங்கே சென்று இரண்டு நாள்கள் உதவினோம். நாங்களே ஏழைகள் என்பதால் எங்களிடம் உதவி செய்ய வசதிகள் இல்லை. கருணை உள்ளம் கொண்ட பிறரிடம் உதவி பெற்று தான் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். இதற்காக "கருணை உள்ளம்' என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து தான் உதவிகள் செய்து வருகிறோம்.

கொளத்தூரை பொருத்தவரை பெரும்பாலானவர்கள் வசதியானவர்களாக இருந்ததால், தேவையான பொருள்களை ஒரு வாரத்திற்கு முன்பே வாங்கி வைத்துவிட்டோம். ஏழைகள் இருக்கும் பகுதிக்கு சென்று உதவுங்கள் என்று சொல்லி அனுப்பினார்கள், குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்தும் காலியாக இருந்தன. ஆண்டு தோறும் இதே நிலை நீடிப்பதால் அவர்கள் மழை வருவதற்கு முன்பே காலி செய்துவிட்டு உறவினர்களின் வீடுகளுக்கு சென்று விடுவது தெரிய வந்தது.

குறிப்பாக இந்த வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது சூளை, புளியந்தோப்பு, முடிச்சூர் பகுதி தான். கழுத்தளவு தண்ணீர் நின்றது. தண்ணீரில் தத்தளிக்கும் மக்களுக்கு உதவ படகு உடனடி தேவையாக இருந்தது. உடனே தனியார் அமைப்பு ஒன்றிடம் கோரிக்கை வைத்தோம். அவர்கள் உடனே சிதம்பரத்தில் இருந்து 3 படகுகளை எங்களுக்கு கொடுத்து உதவ சொன்னார்கள்.

படகுகளை பயன்படுத்தி சூளை, பட்டாளம் ஓட்டேரி, புளியந்தோப்பு பகுதிகளில் உணவு வழங்கினோம். படகுகள் மூலமாக 100-க்கும் மேற்பட்டவர்களை மீட்டு வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்தோம். ஆதரவற்ற மக்கள் பலர் சாலையோரங்களில் கஷ்டப்படுவதை கண்டு அவர்களை மீண்டும் கருணை இல்லங்களில் சேர்த்தோம். சென்னை காவல் துறை மற்றும் காவல் கரகங்கள் மூலமாக புளியந்தோப்பில் போலீசார் உதவிடன் பெண்களுக்குத் தேவையான பொருள்களை வழங்கினோம். திருத்தணியில் இருளர் குடும்பங்கள் கஷ்டப்படுவது தெரிந்ததும் அவர்களுக்கு மளிகை சாமான்கள் மற்றும் படுப்பதற்கு பாய்களை கொடுத்தோம்.

தாம்பரம், முடிச்சூர், மணிமங்கலம் பகுதிக்கு இரவில் சென்றோம். மின்சார தடை செய்யப்பட்டு ஒரு வாரம் ஆகியிருந்தது. அதனால் அவர்களுக்குத் தேவையான வெளிச்சத்திற்கு மெழுகுவர்த்தியும், உணவாக பிரட்டும் கொடுத்தோம். சில தெருக்களில் வயதான தம்பதிகள் வீட்டிலேயே முடங்கி விடுகிறார்கள். அவர்கள் வாரிசுகள் வெளிநாட்டில் வசிப்பவர்களாக இருப்பதால், அவர்களுக்கு யாரும் உதவ முன் வருவதில்லை. தெருவில் தண்ணீர் தேங்கியிருந்தாலும், வீட்டிற்குள் தண்ணீர் வந்தாலும் யாருடைய உதவியையும் கேட்காமல் இருப்பதை சாப்பிட்டுவிட்டு அப்படியே உட்கார்ந்திருப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களைத் தேடி சென்று வெளியே நடக்கும் விஷயங்களைச் சொல்லி அவர்கள் விரும்பும் இடங்களுக்கு கொண்டு விட்டுவிடுவோம். வெள்ளத்திற்கு தெரியாது யார் வசதியானவர்கள், யார் வசதியில்லாதவர்கள் என்று. பாகுபாடு காட்டாமல் அது தன் கடமையை செய்துவிட்டு போகிறது.

பல பகுதிகளில் குடிக்க தண்ணீர் இல்லை, வெளியே கடை கிடையாது, பால் பாக்கெட் கூட வாங்க வழி கிடையாது. மின்சாரம் கிடையாது. பாத்ரூம் போவதற்கு வசதியில்லாததால் ஒரு வாரம் அவதிப்படுவதாக அங்கிருப்பவர்கள் சொன்னார்கள். சாப்பிட்டால் பாத்ரூம் போகணும் அதனால் எங்களுக்கு சாப்பாடு வேணாம் பிரட் மட்டும் தாங்க போதும் என்று கேட்டு வாங்கினார்கள். எங்கள் குழுவில் 28 பேர் தன்னார்வலர்களாக பணிபுரிகிறார்கள். இதில் நான்கு பேர் பெண்கள். அவர்களுக்கென ஒரு வேலை இருந்தாலும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இரவு- பகல் பாராமல் தண்ணீரில் தத்தளிக்கும் மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். இந்த வெள்ளத்தின் மூலமாவது பக்கத்து வீட்டுகாரர்கள், எதிர் வீட்டுகாரர்களிடம் சஜமாக பேசி உதவிகள் பறிமாறிக்கொண்டு வந்தாலே பாதி தெருக்களில் உள்ள பிரச்னைகள் தீர்ந்துவிடும்'' என்றார் அருள்ராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com