மாணவனுக்கு மரியாதை

நெசப்பாக்கம் பகுதியில் விருகம்பாக்கம் பேரூராட்சி ஏற்பாட்டில்   துவக்கப்பள்ளி கட்டட திறப்பு விழாவுக்கு வருகை தருமாறு பெருந்தலைவர் காமராஜரை ஒன்றிய பெருந்தலைவர் வெங்கடேஸ்வரலு நாயுடு அழைக்கிறார்.
மாணவனுக்கு மரியாதை

நெசப்பாக்கம் பகுதியில் விருகம்பாக்கம் பேரூராட்சி ஏற்பாட்டில்  துவக்கப்பள்ளி கட்டட திறப்பு விழாவுக்கு வருகை தருமாறு பெருந்தலைவர் காமராஜரை ஒன்றிய பெருந்தலைவர் வெங்கடேஸ்வரலு நாயுடு அழைக்கிறார். காமராஜரும் மகிழ்ச்சியோடு ஒப்பு கொள்கிறார்.

நிகழ்ச்சிக்கு முன் தினம் இரவிலிருந்தே காமராஜருக்குக் கடுமையான காய்ச்சல். நிகழ்ச்சியன்று  தலைவரை அழைத்துச் செல்ல வெங்கடேஸ்வரலு நாயுடு திருமலைப்பிள்ளை சாலைக்குச் செல்கிறார். முன் அறையில் தலைவரின் உதவியாளர் வைரவனிடம் தான் வந்ததற்கான விவரத்தை தெரிவிக்கிறார். உடனே வைரவன். "ஐயாவுக்கு இரவிலிருந்தே கடுமையான காய்ச்சல். டாக்டர் செளரிராஜன் வெளியில் எங்கும் செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளார். எனவே நிகழ்ச்சிக்கு வருவது கடினம்' என தெரிவிக்கிறார். செய்வதறியாது வெங்கடேஸ்வரலு நாயுடு திகைத்து  நிற்கிறார்.

 உள்ளிருந்து "வைரவா' என்ற தலைவரின் குரல் கேட்டது. உள்ளே விரைகிறார் உதவியாளர். "நாயுடுவை உள்ளே வரச்சொல். அந்த சட்டையை எடு' என்று உத்தரவு. "ஐயா காய்ச்சல் டாக்டர்' என தயங்கியபடி சொல்கிறார் வைரவன். "செளரி கிட்ட நான் பேசிக்கிறேன். பள்ளிக்கூடத்  திறப்பு விழாவை  விட  என் உடம்பு பெரிசில்லை?' என கூறியப்படியே நொடிப் பொழுதில் கிளம்பிவிட்டார் தலைவர்.

அந்திசாயும் நேரத்தில் நெசப்பாக்கத்தில் நுழைகிறது தலைவரின் கார், பள்ளிக்குச் சிறிது தூரத்திலிருந்தே காவல்துறை இன்னிசை குழுவினரின் வரவேற்பு. கார் மெதுவாக ஊர்ந்து செல்கிறது.  முதன்முதலாக காமராஜரை பார்க்கும் ஆர்வத்தில் நானும் சிலரும் ஓட்டமும் நடையுமாக செல்கிறோம். காமராஜரை பார்க்கும் ஆர்வத்தில் அவரைப் பார்த்தபடியே ஒரு சிறுவன் ஓடுகிறான். சட்டென்று அவனது கால் தடுக்கி விழுந்து விடுகிறான். இதைப் பார்த்த காமராஜர் " சிவசாமி வண்டியை நிறுத்து' என்கிறார். 

நான் ஓடிப் போய் அந்தச் சிறுவனைத் தூக்கி மண்ணைத் துடைத்துவிட்டேன். அச்சிறுவனை அருகில் அழைத்த காமராஜர் அன்போடு "பார்த்து வரக்கூடாதா?  ஏதேனும் அடி  பட்டதா?' என கேட்கிறார். அச்சிறுவன் விழுந்த அடியை தாங்கி கொண்டு கண்ணீர் முட்ட "எதுமில்லை' என்கிறான். "நல்லா படிக்கணும்' எனக்கூற கார் நகர்கிறது.

பள்ளி எதிரில் சிறு மேடை ஒவ்வொருவராக அறிமுகப்படலம் நடந்து கொண்டிருந்தது.

என் முறை வந்த போது வெங்கடேஸ்வரலு நாயுடு தலைவரிடம் "இப்பள்ளி கட்டடத்தைக் கட்டிய பேரூராட்சி தலைவரின் அண்ணன் மகன்  கல்லூரி மாணவன்' என அறிமுகம் செய்கிறார். தோளில் லேசாகத் தட்டி நகர்கிறார். 

பள்ளி கட்டட திறப்புக்கு பின்னே சிற்றுண்டி விருந்து உட்லண்ட் ஓட்டலிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தது. உடல் நிலை சரியில்லாததால் தலைவர் எதையும் எடுத்துக்கொள்ளாமல் பிளாக் காபி மட்டும் வற்புறுத்தியதால் சாப்பிட்டார்.

நிகழ்ச்சி நிறைவுக்குப் பின் வழியனுப்ப அனைவரும் நின்று கொண்டிருக்கிறார்கள். தலைவரும் காரில் அமர்ந்து கிளம்பும் போது சிறிது தள்ளி நின்றிருந்த என்னைப் பார்த்து கையசைக்கிறார். பரப்பரப்பாகி அருகே சென்ற என்னிடம் "அந்தப் பையனுக்கு ஏதேனும் காயம் பட்டிருந்தால் டாக்டரிம் கூட்டி போங்க' என சொல்லி கிளம்பினார். 

சிறுவனிடம் அவர் காட்டிய பரிவும், அறிவுரையும் ஞாபக சக்தியையும் எண்ணி பிரமித்து போனேன்.  முதல் சந்திப்பிலே காமராஜருடன்  மூன்று முறை அறிமுகம்.  ஐம்பது ஆண்டிற்கு முன்பு (6.11.1972) நடந்தது. இன்றும் பசுமையான நினைவு.

தலைவரை பார்க்கும் ஆர்வத்தால் விழுந்து சிராய்ப்பு பெற்ற சிறுவன் புகழ்பெற்ற கேலி சித்திர ஓவியர் ராகியின் மகன் ஓவியர் பாரி என்பதைப் பின்னாளில் தெரிந்து கொண்டேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com