ரத்தத்தின் ரத்தமே... - 41

ரத்தத்தின் ரத்தமே... - 41

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஒரு அபாய எச்சரிக்கையை அறிவித்தது.


இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஒரு அபாய எச்சரிக்கையை அறிவித்தது. அதாவது  தானாகவே முன்வந்து ரத்ததானம் செய்பவர்களின் எண்ணிக்கை மிகமிக குறைந்துவிட்டது என்பதுதான் அந்த அபாய எச்சரிக்கை.

2005 - ஆம் ஆண்டில் உலக சுகாதார சங்கம் ஜூன் மாதம் 14- ஆம் தேதியை உலக ரத்ததானம் செய்வோர் தினம் என்று அறிவித்தது. உலகம் முழுவதும் ரத்ததானம் செய்வோருக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும் மேலும் பலபேர் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும் என்பதை பாதுகாப்பான நல்ல ரத்தம் நிறைய தேவை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த ஜூன் 14-ஆம் தேதியை உலக ரத்ததானம் செய்வோர் தினம் என்று அறிவித்தார்கள்.

உலகிலுள்ள மொத்த நாடுகளில் ஜனத்தொகை அதிகமுள்ள இரண்டாவது நாடாகிய இந்தியாவில் சுத்தமான சுகாதாரமான ரத்தம் கிடைப்பதென்பது ஒரு பெரிய பிரச்னையாக எப்பொழுதும் இருந்துகொண்டே வருகிறது. சமீபத்திய கரோனா தொற்று நோயின் தாக்கத்திற்குப் பிறகு இந்த ரத்தப் பற்றாக்குறை பிரச்னை இன்னும் அதிகமாகிவிட்டது.

இந்தியாவில் ரத்ததானம் செய்பவர்களின் எண்ணிக்கை மொத்த இந்திய ஐனத்தொகையில் சுமார் 1 சதவீதம் மட்டுமே. இது மிகவும் வருத்தத்துக்குரிய செய்தியாகும். நல்ல எண்ணம் கொண்ட பெரும் பணக்காரர்கள் கூட பொன்னைக் கொடுக்க தயார். பொருளைக் கொடுக்க தயார். மண்ணைக் கொடுக்கவும் தயார். ஆனால் தனது உடலிலிருந்து எந்தப் பொருளையும் கொடுக்க விருப்பப்படுவதில்லை. "மனமிருந்தால் மார்க்கமுண்டு' என்ற சொல்லுக்குக்கேற்ப ரத்ததானம் செய்வதற்கு மனம் சம்மதித்தால் போதும். வயது ஒரு தடையே இல்லை.

இந்தியாவைப் பொருத்தவரை, தினமும் சுமார் 38 ஆயிரம் பேர் ரத்ததானம் செய்தால் தான், அன்றாட ரத்த தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். உலகிலேயே அதிகமாக ரத்ததானம் செய்யும் குடிமக்களைக் கொண்ட நாடு முதலில் ஆஸ்திரியா, இரண்டாவதாக பிரான்ஸ்,  அடுத்ததாக கிரீஸ், சைப்ரஸ்  ஆகும். ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலான நாடுகள் ரத்ததானம் அதிகம் செய்வதோடு மட்டுமல்லாமல் உடல் உறுப்புகள் தானம் செய்வதிலும் மிகவும் விருப்பமாக இருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் பெரிய மனசு இருக்கிறது.

ரத்ததானம் அதிக புழக்கத்தில் இருக்கக்கூடிய அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, ஆஸ்திரியா போன்ற நாடுகளில் திரவ ரத்தப் பொருளாகிய "பிளாஸ்மா" விற்க, வாங்க இருக்கின்ற வியாபாரச் சந்தைகளில் பல பில்லியன் டாலர் மதிப்பிலான பணப் பரிமாற்றம் நடைபெறுகின்றன. ஆக, இதுவும் ஒரு மிகப் பெரிய வியாபாரமாகத்தான் மேற்கூறிய நாடுகளில் நடந்து கொண்டிருக்கின்றது.

ரத்த வங்கிகள் நமக்கு எதுவும் காசு தராமல், நம்மிடம் இலவசமாக எடுத்துக் கொண்டு, பின் அந்த ரத்தத்தை அவர்கள் நல்ல விலைக்கு விற்றுவிடுகிறார்கள் என்ற தவறான எண்ணம் தான் பலரிடம்  இருக்கிறது. காசு கொடுத்தோ அல்லது இலவசமாகவோ ரத்தத்தை ஒருவரிடமிருந்து வாங்கி இன்னொருவருக்கு காசுக்கு விற்பது என்பது நடைமுறை சாத்தியம் கிடையாது. அப்படி வாங்கி விற்கக்கூடிய அளவுக்கு ரத்தம் ஒரு மிகப்பெரிய கிராக்கியான பண்டமாற்று பொருளும் அல்ல. தேவைப்படவில்லை என்றால் ரத்தத்தை விலை கொடுத்து வாங்கி ஸ்டாக்கில் வைக்க யாரும் முன்வரமாட்டார்கள். தேவைப்படுகிறது என்றால் எந்த விலை கொடுத்தும் வாங்க மக்கள் தயார். ஏனெனில் ரத்தம் உயிர் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம்.

எல்லா மருத்துவமனைகளிலும் ரத்த வங்கிகள் இருப்பதில்லை. சில மருத்துவமனைகளில் தான் இருக்கின்றன. 

ரத்தம் அவசரமாக தேவைப்படும்போது மற்ற மருத்துவமனைகளிலிருந்து ரத்தம் வாங்கிக் கொள்வது வழக்கமே.

சில நாடுகளில், சிலபேர் அவசரத்துக்கு ரத்தத்தை தானமாகக் கொடுத்துவிட்டு, சுமார் 30 டாலர் அதாவது நம்மூர் பணத்திற்கு சுமார் ரூபாய் 2,250 க்கு மேல் வாங்கிக் கொள்கிறார்கள். 

பணத்துக்காக ரத்தத்தை விற்றாலும் சரி, ரத்தத்தை வாங்கினாலும் சரி. அது மிகப்பெரிய தவறுதான். இந்தச் செயலை, நாம் அனுமதிக்கவும் கூடாது. ஆதரிக்கவும் கூடாது.  ரத்தம் அவசரமாக, அவசியமாக தேவை என்ற ஒரு காலகட்டத்தில், மாதவிடாய் நேரங்களில் பெண்கள் ரத்ததானம் செய்யலாமா என்று நிறைய பேர் மருத்துவமனைகளில், ரத்த வங்கிகளில் கேட்கிறார்கள். ரத்ததானம் செய்யலாம். தவறில்லை. ஆனால் அவர்களது ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அளவு 11 சதவீதத்துக்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும். 
கொஞ்சம் வலி, கொஞ்சம் உடல் சோர்வு, கொஞ்சம் களைப்பு, இவைகளையெல்லாம் தாங்கக்கூடிய சக்தி, அந்தப் பெண்ணின் உடலுக்கு இருந்தால்,  மாதவிடாய் ஒரு பிரச்னையில்லை. இருப்பினும் மாதவிடாய்க்கு ஒரு வாரத்துக்குப் பிறகு ரத்ததானம் செய்வது நல்லது.

மது அருந்தியிருக்கிறேனே, ரத்ததானம் செய்யலாமா? என்பது சிலபேர் கேள்வி, ரத்ததானம் செய்வதற்கு 24 மணி நேரம் முன்பு வரை மது அருந்தி இருக்கக்
கூடாது.

ரத்ததானம் செய்தால், உடலில் எடை கூடுமா, குறையுமா? கண்டிப்பாக கூடாது. ரத்ததானம் செய்து உடலில் குறைந்துபோன ரத்தத்தை ஈடு செய்ய, மற்ற நேரங்களைவிட இந்த நேரத்தில் சற்று அதிகமான கலோரி சக்தியை உடலிலிருந்து இழக்க நேரிடும். மற்றபடி உடல் எடை கூடவோ, குறையவோ வாய்ப்பில்லை.

சிகரெட் புகைப்பவர்கள் ரத்ததானம் செய்யலாமா? நாகரிகம் நாளுக்குநாள் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் சிகரெட் உபயோகிப்பவர்கள் ரத்ததானம் செய்யக் கூடாது என்று சொல்லிவிட்டால் ரத்தம் கிடைப்பது மிகப்பெரிய அளவில் குறைந்துவிடும். எனவே சிகரெட் புகைப்பவர்கள் ரத்ததானம் செய்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பும் ரத்ததானம் செய்தபிறகு குறைந்தது இரண்டு மணி நேரமாவது கழித்தும் சிகரெட்டை உபயோகிக்காமல் இருப்பது நல்லது.

ரத்ததானம் செய்வது இருதயத்துக்கு நல்லதா கெட்டதா? தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் ரத்ததானம் செய்துகொண்டு வந்தால் ரத்த அழுத்தம் அதிகமாகாமலும் மாரடைப்பு வராமலும் இருக்க வாய்ப்புண்டு என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

ரத்ததானம் செய்வது கல்லீரலுக்கு நல்லதா? சில கல்லீரல் நோய்களுக்கும் உடலில் அதிக அளவில் இரும்புச்சத்து இருப்பதற்கும் தொடர்பு உண்டு என்று சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ரத்ததானம் செய்யும்போது கல்லீரலில் இருக்கும் இரும்புச்சத்தினுடைய இருப்பு குறைந்து கல்லீரல் ஆரோக்கியமாக வேலை செய்ய வாய்ப்பு அதிகம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

அதிக ரத்த அழுத்த நோயுள்ளவர்கள் ரத்ததானம் செய்யலாமா? நன்றாக தூங்கியிருந்தால் நன்றாக சாப்பிட்டிருந்தால் நிறைய தண்ணீர் குடித்திருந்தால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்போது இவர்கள் ரத்ததானம் செய்வதில் தவறில்லை.

சர்க்கரை நோய் இருப்பவர்கள் ரத்ததானம் செய்யலாமா? செய்யலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு வேறு நோய்கள் எதுவும் இல்லாமல் சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக வாழ்ந்துகொண்டிருக்கும் சர்க்கரை நோயுள்ளவர்கள் கண்டிப்பாக ரத்ததானம் செய்யலாம்.

ரத்ததானம் செய்துவிட்டு தனியாக வீட்டுக்கு ஸ்கூட்டர் அல்லது கார் ஓட்டிக்கொண்டு செல்லலாமா? ரத்ததானம் செய்தபின் சில நேரங்களில் சில பேருக்கு மயக்கம் வருவதுண்டு. எனவே தனியாக ஸ்கூட்டர் கார் ஓட்டிச் செல்வதைத் தவிர்க்கவும்.

ஒருவர் எத்தனை முறை ரத்ததானம் செய்யலாம்? ஒரு ஆண்டில் சுமார் 3 அல்லது 4 முறை ஒருவர் ரத்ததானம் செய்யலாம். மேலும் ரத்தத்திலுள்ள பிளாஸ்மா திரவத்தை மட்டும் ரத்தத்திலுள்ள பிளேட்லெட் அணுக்களை மட்டும் மாதத்திற்கு ஒரு முறை கூட தானமாகக் கொடுக்கலாம்.

18 வயதுக்கு கீழுள்ளவர்கள் ரத்ததானம் செய்யலாமா? 65 வயதுக்கு மேலுள்ளவர்கள் ரத்ததானம் பண்ணலாமா? எனக்கு இன்னும் 18 ஆகவில்லை. ஆனால் எனக்கு ரத்ததானம் செய்ய மிகவும் ஆசையாக இருக்கிறது. எனக்கு 65 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் எனக்கு ரத்ததானம் செய்ய ஆசையாக இருக்கிறது. நாங்கள் ரத்த தானம் செய்யலாமா? என்று தினமும் நாலுபேர் ரத்த வங்கிகளுக்கோ மருத்துவமனைகளுக்கோ வந்து விசாரித்தால் அதற்கேற்றபடி அன்புடன் அவர்களை வரவேற்று பரிசோதித்து பதில் சொல்லலாம். 

ஆனால் ரத்ததானம் செய்ய நான் ரெடி என்று தானாகவே முன்வந்து யாருமே கேட்டு வரவில்லையே? வருவதில்லையே? எல்லோரும் ஓடி ஒளியத்தானே செய்கிறார்கள் ரேஷன் கடைக்கு ரேஷன் பொருட்கள் வந்துவிட்டதா? என்று பலமுறை சளைக்காமல் போய் கேட்டுவிட்டு திரும்பி வருபவர்கள் ஒரே ஒருமுறையாவது ரத்த வங்கிக்குப் போய் ரத்ததானம் செய்யலாமா என்று கேட்கலாமே?

ரத்ததானம் செய்வதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு சளி, இருமல்,காய்ச்சல், ஜலதோஷம், மூக்கில் நீர் வடிவது, தொண்டையில் வலி, எச்சில் விழுங்க முடியாமல் போவது இதுபோன்ற அறிகுறிகள், தொந்தரவுகள் உடலில் இருந்தால், ரத்ததானம் செய்வதைத் தள்ளிப்போடுவது நல்லது.

பட்டினியாய் இருந்து வெறும் வயிற்றில் இருக்கும்போது ரத்ததானம் செய்யப் போகாதீர்கள். குறைந்தது அரை லிட்டர் தண்ணீர் அல்லது பழ ஜூஸ் ஏதாவது குடித்துவிட்டு ரத்ததானம் செய்வது நல்லது. 

ரத்ததானம் செய்தபிறகு இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களாகிய கீரை சூப், காய்கறிகள் சூப், பழஜு ஸ்,  பாதாம் , பிஸ்தா, முந்திரி, வேர்க்கடலை, மீன், இறைச்சி போன்ற உணவுப்பொருள்களை மாற்றி மாற்றி தினமும் உண்டு வந்தால் ரத்தம் விருத்தியாகும். உடலுக்கும் தெம்பு கிடைக்கும். புது ரத்த அணுக்கள் உற்பத்தியாவதற்கும் ஹீமோகுளோபின் அதிக அளவில் உற்பத்தியாவதற்கும் இரும்புச்சத்து அதிகமாகத் தேவை. எனவே இரும்புச்சத்தும் புரதச்சத்தும் அதிகமுள்ள உணவுப் பொருள்களை சாப்பிடுவது 
நல்லது.

அடிக்கடி ரத்ததானம் செய்பவர்கள் அதிக ஆயுளுடன் இருப்பதாக ஆய்வுகள் சொல்லுகின்றன. எனவே அடிக்கடி ரத்ததானம் செய்யுங்கள். அதிக ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழுங்கள்.

 - தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com