சம்ஸ்கிருதம் பேசும்  சகுந்தலை

சம்ஸ்கிருதத்தில் திரைப்படங்கள் தயாரிக்கப்படுவது மிக அரிது. மறைந்த சம்ஸ்கிருதப் பண்டிதரும், பட இயக்குநருமான ஜி.வி.ஐயர் இந்தியாவின் முதல் சம்ஸ்கிருதப் படமான "ஆதி சங்கராச்சாரியார்' 1983-இல் தயாரித்து இயக்கினார்.
சம்ஸ்கிருதம் பேசும்  சகுந்தலை


சம்ஸ்கிருதத்தில் திரைப்படங்கள் தயாரிக்கப்படுவது மிக அரிது. மறைந்த சம்ஸ்கிருதப் பண்டிதரும், பட இயக்குநருமான ஜி.வி.ஐயர் இந்தியாவின் முதல் சம்ஸ்கிருதப் படமான "ஆதி சங்கராச்சாரியார்' 1983-இல் தயாரித்து இயக்கினார். படத்தின் ஒளிப்பதிவிற்காக தேசிய விருது கிடைத்தது. மீண்டும் 1993-இல் "பகவத் கீதை' படத்தைத் தயாரித்து இயக்கியிருந்தார். ஜி.வி. ஐயரின் மறைவுக்குப் பிறகு சம்ஸ்கிருதம் படத் தயாரிப்பில் நீண்ட இடைவெளி தவிர்க்க முடியாமல் போய்விட்டது.

ஜி.வி.ஐயரின் வழியில் கர்நாடகத்தைச் சேர்ந்த துஷ்யந்த் ஸ்ரீதர் காலடி எடுத்து வைத்துள்ளார். 1900 ஆண்டுகளுக்கு முன், காளிதாசர் சம்ஸ்கிருத மொழியில் எழுதிய (அபிக்ஞான ) "சகுந்தலம்' காப்பியத்தை சம்ஸ்கிருதத்தில் துஷ்யந்த் இயக்குகிறார். படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்துள்ளது.

துஷ்யந்த் "ஹரி'கதா' சமயச் சொற்பொழிவாளரும் எழுத்தாளரும் ஆவார். அதிகம் பேர்களை சென்று அடைய வேண்டும் என்றுதான் திரைப்படம் தயாரிக்கிறார்கள். அப்படி இருக்கும் போது கொஞ்சம் பேர்கள் மட்டுமே பேசும் சம்ஸ்கிருத மொழியில் எதற்காக சாகுந்தலத்தைத் தயாரிக்க வேண்டும் ?

துஷ்யந்த் விளக்குகிறார்:

""இந்தியாவில் இதர மொழிகளை போல மிக அதிகம் பேர்களால் பேசப்படும் மொழியல்ல சம்ஸ்கிருதம். அத்தகைய சம்ஸ்கிருதத்திற்கு எனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதற்காக சம்ஸ்கிருதத்தில் திரைப்படத்தை இயக்குகிறேன். செய்வதை சொல்லிக்கிற மாதிரி பெரிதாகச் செய்ய வேண்டும் என்பதற்காக புகழ் பெற்ற காப்பியமான சகுந்தலத்தை திரைப்படம் ஆக்குகிறேன். சாகுந்தலம் இதர இந்திய மொழிகளில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அவை, தமிழின் சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்தில் தயாரித்தால் எப்படி இருக்குமோ அப்படி அமைந்துவிட்டன. அப்படிப்பட்ட தயாரிப்புகள் வெறும் நெருடலாக அமையும். அதனால்தான் சகுந்தலம் எழுதப்பட்ட மொழியான சம்ஸ்கிருதத்தில் உருவாக்கியிருக்கிறேன்.

சிறுவயது முதல் சாகுந்தலம் படித்து வந்தாலும், அதை அகலத் திரையில் கொண்டுவருவதில் சிரமங்கள் உள்ளது. காளிதாசர் எழுதியதை எல்லாம் திரைப்படத்திற்குள் கொண்டுவர முடியாது. இப்போதைய புதிய தலைமுறையின் ரசிப்புத் தன்மையை மனதில் வைத்து "சகுந்தலை' திரைக்கதையை வடிவமைத்திருக்கிறேன். நான்காம் நூற்றாண்டின் "சிங்கிள் மதராக' மகனை வளர்த்த சகுந்தலையின் காதல், பட்ட துன்பங்கள்... அவமானங்கள் பற்றிய கதைதான் சாகுந்தலம்.

"கதக் கலைஞரான பாயல் ஷெட்டி சகுந்தலையாக நடிக்கிறார். சுபம் ஷராவத் துஷ்யந்தன் பாத்திரத்தை ஏற்றிருக்கிறார். பாயலும், சுபமும் புதுமுகங்கள். இவர்களுக்கு சமஸ்கிருதம் எப்படி பேச வேண்டும் என்று பயிற்சி கொடுத்துள்ளோம். சிவகுமார், ஒய்.ஜி. மகேந்திரன், மோகன்ராமன், தி.வி.வரதராஜன் படத்தில் சம்ஸ்கிருதம் பேசி நடிக்கிறார்கள்.

படத்தில் அந்த எல்லா நடிகர்கள் அணியும் உடைகள் இயற்கை வண்ணம் ஏற்றப்பட்ட கதரில் தைக்கப்பட்டது. இறவா கவிஞர், ஞானி பாரதியாரின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதி படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘லைஃப் ஆஃப் பை' ஆங்கிலப் படப் புகழ் சாய் ஷரவண் பங்களிப்பும் இந்தப் பட த்திற்கு கிடைத்துள்ளது. படத்தைத் தொகுத்திருப்பவர் பி. லெனின். திரைப்பட உலகில் ஒப்பனைக்காக விருதுகள் பல பெற்றிருக்கும் பட்டணம் ரஷீத் கையாண்டுள்ளார். ஸ்ரீனிவாஸ் கன்னா படத்தைத் தயாரித்துள்ளார்.

படத்தில் 95 சதவிகிதம் சம்ஸ்கிருத வசனங்கள் வரும். மீது பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் ஆங்கிலத்தில் சப் டைட்டில்கள் காண்பிக்கப்படும். படத்தில் வரும் நடன, பாடல் காட்சிகளில் பாரத நாட்டியம், ஒடிசி, மோகினியாட்டம் , யக்ஷகானம் வடிவில் இருக்கும். பாடல்கள் கர்நாடக, ஹிந்துஸ்தானி ராகங்களில் அமைத்திருக்கிறோம். படத்தின் பாடல் வரிகள் எல்லா மொழிகளிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளன. தமிழில் திருக்குறளிலிருந்து சில வரிகளை கையாண்டுள்ளோம். படக் காட்சிகள், அரங்க அமைப்புகள் சாளுக்கிய, பல்லவ, ஹொய்சள, விஜயநகர ஆட்சிக் கால கலை நுணுக்கங்களைப் பிரதிபலிக்கும்.

ஓடிடி தளம் உலகெங்கும் விரிந்து கிடக்கிறது. சகுந்தலம் ஓடிடி தளத்தில் டிசம்பர் மாதம் வெளியாகும். மக்களின் ரசனை மாறியுள்ளது. இப்போது மொழி ஒரு பிரச்னையே அல்ல. மக்கள் பல மொழி படங்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். கொரிய மொழியில் வரும் நிகழ்ச்சியை கொரிய மொழி தெரிந்தா எல்லாவரும் பார்க்கிறார்கள்... அவர்கள் நிச்சயம் சம்ஸ்கிருதத்தில் வெளியாகும் சகுந்தலத்தையும் பார்த்து ரசிப்பார்கள்'' என்கிறார் துஷ்யந்த் ஸ்ரீதர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com