நேர வங்கி

வங்கி என்றாலே  சொந்தப்  பணத்தை  பாதுகாப்பாகச்  சேமிக்கவும்,  அவசர பணத் தேவைக்கு கடன் பெறவும்  உதவும் ஓர்  அமைப்பு. 
நேர வங்கி


வங்கி என்றாலே சொந்தப் பணத்தை பாதுகாப்பாகச் சேமிக்கவும், அவசர பணத் தேவைக்கு கடன் பெறவும் உதவும் ஓர் அமைப்பு.
பணத்தைச் சேமிக்கலாம். காலத்தை அல்லது நேரத்தைச் சேமிக்க முடியுமா? நேரத்தைச் சேமிப்பதற்கென்று ஒரு வங்கியும் இருக்கிறதா என்று ஆச்சரியப்படலாம்.
"கால அல்லது நேர வங்கி' (டைம் பாங்க்) என்று சுவிட்சர்லாந்தில் வங்கி செயல்படுகிறது. அங்கே பணத்திற்குப் பதிலாக ஒருவரின் காலம் அல்லது நேரம் சேமிக்கப்படுகிறது. பின்னாளில் நமது தேவைக்காக சேமித்த நேரங்களிலிருந்து கடனாக நேரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
கொஞ்சம் சிந்தித்தால் இந்த நேர வங்கியின் பின்னணியில் ஒரு வாழ்க்கைத் தத்துவமே அடங்கியிருக்கிறது என்று புரியவரும்.
சுவிட்சர்லாந்தில் அரசின் முதியோர் ஓய்வு ஊதியத் திட்டத்தின் கீழ் இந்த "நேர வங்கி' செயல்படுகிறது. "நேர வங்கி'யில், நம்மால் முடிந்த அளவுக்கு நேரத்தை சேமித்து நமது கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.
நேரத்தை எப்படி வங்கியில் சேமிப்பது ? நியாமான கேள்விதான் !
முதலில் நேர வங்கியில் கணக்கு ஒன்றைத் தொடங்க வேண்டும். நமது ஓய்வு நேரத்தில் உதவி தேவைப்படுபவருக்கு அல்லது உதவி தேவைப்படும் முதியவருக்கு அல்லது முதியவர்களுக்கு அவர்கள் வீடு சென்று சேவை செய்ய வேண்டும்.அவருடன் பேசிக் கொண்டு இருக்கலாம். முதியவருக்கு என்ன மருத்துவத் தேவை என்று மருத்துவருடன் கலந்தாலோசித்து நேரத்திற்கு மருந்து கொடுக்கலாம்.
முதியவருக்காக சமையல், வீட்டை சுத்தம் செய்யலாம். உடைகள் சலவை செய்யலாம். இந்த பணிகளில் எத்தனை மணி நேரம் செலவு செய்கிறோமோ அத்தனை மணி நேரம் சேவை செய்தவரின் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த சேவைக்கு ஊதியம் கிடையாது. இப்படி பிறருக்குச் சேவை செய்பவருக்கும் வரும் நாள்களில் முதுமை காரணமாகவோ, எதிர்பாராத சுகவீனம் காரணமாகவோ இன்னொருவரின் சேவை, உதவி தேவைப்படலாம்.
அப்படி தேவைப்படும் போது நேர வங்கியிடம் தெரிவித்தால் போதும். வங்கி சமூக ஆர்வலர் ஒருவரை அனுப்பி வைக்கும்.அந்த சேவையாளர் வந்து முன்னாள் சேவையாளருக்குச் சேவை செய்வார்.அப்படி நமக்கு சேவை செய்வதில் எத்தனை மணி நேரம் அவர் செலவிடுகிறாரோ அத்தனை மணி நேரம் நமது நேரக் கணக்கிலிருந்து கழிக்கப்படும். சேவை செய்தவரின் கணக்கில் அந்த நேரம் வரவு வைக்கப்படும்.
"இன்று உனக்கு உதவி... நாளை எனக்கு உதவி' என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் இந்த "நேர வங்கி' செயல்படுகிறது.இந்தத் திட்டத்தின் உயரிய நோக்கத்தைக் கருதி சுவிட்சர்லாந்தில் பலரும் அதிக அளவில் நேர வங்கியில் கணக்குத் தொடங்கியுள்ளனர். முதியோரின் கடைசி கால சிரமங்களைக் குறைக்கும் ஒரு சமூகத் தீர்வாகவும் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
இந்தியாவில் சுமார் பத்தரை கோடி முதியவர்கள் இருக்கிறார்கள். அதில் ஒன்றரை கோடி பேர்கள் தனியாக வாழ்கிறார்கள். இருபது லட்சம் முதியவர்கள் மட்டுமே முதியோர் காப்பகத்தில் வசிக்கிறார்கள். மற்றவர்கள் கவனிப்பு இல்லாமல் இருக்கிறார்கள்.
இந்தியாவின், தேசிய மனித உரிமை கழகம் 2018-இல் உதவி எதிர்பார்த்து இருக்கும் முதியோர்களுக்காக சுவிட்சர்லாந்தின் "நேர வங்கி' திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இந்தியாவில் நேர வங்கி தொடங்க இன்னும் நேரம் வரவில்லை !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com