வரலாற்று ஆதாரங்கள் தரும் கல்வெட்டுகள்

தமிழ்நாட்டு வரலாற்றுக்கு முக்கியமான அடிப்படை ஆதாரமாக விளங்குபவை கல்வெட்டுகளே ஆகும். நமது நாட்டில் தமிழகத்தில் தான் அதிக அளவில் கல்வெட்டுகள் காணப்படுவது நமக்கு பெருமை அளிக்கக் கூடியதாகும்.
வரலாற்று ஆதாரங்கள் தரும் கல்வெட்டுகள்


தமிழ்நாட்டு வரலாற்றுக்கு முக்கியமான அடிப்படை ஆதாரமாக விளங்குபவை கல்வெட்டுகளே ஆகும். நமது நாட்டில் தமிழகத்தில் தான் அதிக அளவில் கல்வெட்டுகள் காணப்படுவது நமக்கு பெருமை அளிக்கக் கூடியதாகும்.

தமிழ் மக்களின் பண்பாடு மற்றும் வரலாற்றுச் சிறப்பை கல்வெட்டுகளில் காணப்படும் செய்திகளின் வழியே அறிந்து கொள்கிறோம்.

கல்வெட்டுகளில் திருக்கோயில்களில் மட்டும்தான் இருக்கிறது என எண்ண வேண்டாம். நடுகற்கள் மற்றும் ஏரிகளில் காணப்படும் குமிழி, தூம்பு, மடை போன்றவற்றிலும் கோயில்களில் இசைக் கருவிகளிலும், பூஜை பாத்திரங்களிலும் மற்றும் செப்புத் திருமேனிகளிலும் கற்சிற்பங்களிலும் எழுத்துப் பொறிப்புகள் காணப்படுகின்றன.

தமிழக நீர்ப்பாசன அமைப்பு முறையைப் பற்றி குறிப்பிடும் கல்வெட்டுகள் திண்டிவனம், விழுப்புரம் ஆகிய இடங்களில் காட்சியகம் போலவே அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்லில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளைத் தவிர மண்பானை ஓடுகளில் காணப்படும் எழுத்துகள், காசுகளில் காணப்படும் எழுத்துகள், செப்புப் பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் போன்றவையும் தமிழக வரலாற்றுக்கு ஆதாரமாக விளங்குகின்றன.

தமிழ்நாட்டு கல்வெட்டுகளில் தொன்மையான எழுத்தில் அதாவது "தமிழ்' பிராமி - "தமிழி' எழுத்தால் எழுதப்பட்ட கல்வெட்டுகள் சமண சமய முனிவர்கள் வாழ்ந்த இடங்களில் பெரும்பாலும் காணப்படுகின்றன. மதுரை நகருக்கு அருகில் மலைக் குன்றுகளில் இத்தகைய கல்வெட்டுகள் பெருமளவில் காணப்படுகின்றன. சங்க கால மன்னர்கள் பற்றிக் கூறும் மதுரை அருகே மாங்குளம் என்ற இடத்தில் காணப்படும் கல்வெட்டு பாண்டிய மன்னர் பற்றியும், திருக்கோயிலூர் அருகே ஜம்பை என்ற ஊரில் காணப்படும் கல்வெட்டு "அதியமான் நெடுமான் அஞ்சி' பற்றியும், கரூர் அருகே புகளூர் மலையில் காணப்படும் கல்வெட்டு பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படும் சேர மன்னர்கள் பற்றியும் எடுத்துக் கூறுகிறது.

மாங்குளம் கல்வெட்டில் பாண்டியன் நெடுஞ்செழியன் பற்றி குறிப்பிடப்படுகிறது. ஜம்பை கல்வெட்டில் சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பளி என்று குறிப்பிடப்படுகிறது. சங்க இலக்கியங்கள் குறிக்கும் குறுநில மன்னர்களில் ஒருவனான "அதியமான்' மரபினன் பெயரைத் தாங்கியிருப்பது சிறப்பாகும். அம்மன்னனை பெயருக்கு முன்னே உள்ள "சதியபுதோ' என்ற சொல் பேரரசன் அசோகனின் பாறைக் கல்வெட்டில் இடம் பெறுகிறது. "சதியபுதோ' என்ற பிராகிருதச் சொல்லின் மூலவடிவம் தமிழில் உள்ள "அதியமான்' என்பதே ஆகும். ஜம்பை கல்வெட்டில் அதியன் - சதியபுதோ என்ற இரு சொற்களும் இடம் பெற்றிருப்பதின் மூலமாக மெளரியர் கல்வெட்டு குறிக்கும் "சதியபுதோ' அதியமான்களே என்பது உறுதியாகிறது. இதன் காலம் கி.மு.2-ஆம் நூற்றாண்டாகக் கொள்ளலாம்.

கருவூர் அருகே புகளூர் மலையில் காணப்படும் கல்வெட்டில் சங்ககால சேர மன்னர்கள் பற்றி குறிப்பிடும் கல்வெட்டு காணப்படுகிறது. பதிற்றுப்பத்து ஆகியவற்றின் பாட்டுடைத் தலைவர்களான சேர மன்னர்கள் இவர்கள் ஆவர். சேர மன்னர்களின் மூன்று தலைமுறையினர் சொல்லப்படுகின்றனர். கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோ அவன் மகன் இளங்கடுங்கோ ஆகிய அரசர்களைப் பற்றியும் கருவரின் தொன்மைச் சிறப்பினை அறிந்து கொள்ளவும் இக்கல்வெட்டு உதவுகிறது.

மதுரை மாவட்டம் முதலைக்குளம் அரிட்டாப்பட்டி தமிழி கல்வெட்டுகள், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூலாங்குறிச்சி என்ற ஊரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ் கல்வெட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் நெகனூர்பட்டி, தொண்டூர் தமிழிக் கல்வெட்டுகள் ஆகியவற்றை பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது வரலாற்று ஆர்வலர்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இவற்றில் ஒருசில இடங்களில் மலைகளை கற்களுக்காக வெடி வைத்து உடைக்கின்றனர் இதன் காரணமாக கல்வெட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்வெட்டுகள் காணப்படும் இடங்களுக்கு அருகாமையில் கல் உடைப்பதை தடுக்க தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தக் கல்வெட்டுகள், "சாசனம்', "சிலாலேகை' எனவும் அழைக்கப்படுகின்றன. இவற்றை கோயில்களில் பொறிக்க "கல்-தச்சர்களும்' இருந்திருக்கின்றனர். அவர்களின் பெயர்களும் கல்வெட்டின் இறுதியில் குறிப்பிடப்படுவதைக் காணலாம். நாகப்பட்டினத்தில் உள்ள காயாரோகணமுடையார் கோயிலுக்கு முதலாம் ராஜேந்திரசோழன் காலத்தில், மாணிக்கம் - பச்சை முதலிய கற்கள் பொதித்த "வீர பட்டம்' என்ற ஆபரணம் இறைவனுக்கு அளிக்கப்பட்டது. அதன் எடை மற்றும் இதர குறிப்புகள் கல்வெட்டில் காணப்படுகின்றன. இறுதியில் தேவகன்மிகள் சொல்ல கல்வெட்டினேன் நாகப்பட்டினத்து ஏறன் சடையனான தேவர்கண்டாசாரியனேன்' என தச்சர் பெயர் குறிப்பிடப்படுவது சிறப்பானது.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பொறிக்கப்பட்டகல்வெட்டுகள் அனைத்தும் திருக்கோயில் பற்றிய மிகச்சிறப்பான செய்திகளை வழங்குகின்றன. இக்கோயிலில் காணும் கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துகள் மிகவும் அழகாக ஒரே மாதிரியாக பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு சிறப்பாக பொறித்தது யார் என்பது அறிய ஆவலாக உள்ளதல்லவா?

பெரிய கோயிலில் திருச்சுற்று மாளிகையில் 36 பரிவார ஆலயங்களில் ஒன்று உமாபரமேசுவரியாருக்காக எடுக்கப் பெற்றதாகும்.

அவ்வாலயத்தில் காணப்படும் கல்வெட்டில்உடையார் கோயில் கல்லில் எழுத்து வெட்டுவிக்கின்ற அருமொழிதேவவளநாட்டு வண்டாழை வேளூர் கூற்றத்து சாத்தன்குடி வெள்ளாளன் இரவி பாளூருடையார் என்று குறிக்கின்றது.

எனவே தஞ்சை கோயிலில் உள்ள கல்வெட்டுக்களை இரவி பாளூருடையார் என்பவரால் சிறப்பாகப் பொறிக்கப்பட்டது என்பதை அறிகிறோம்.

தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டில் மேலும் ஒரு சிறப்பு காணப்படுகிறது. இத்திருக்கோயிலுக்கு மெய்க்காப்பாளர்கள் நியமிக்கப்பட்ட செய்தியை கூறும்பொழுது கல்வெட்டு வெட்ட இடம் போதவில்லை. எனவே ராஜராஜன் திருவாசலுக்கு வடக்கே ஈசானமூர்த்தி ஆலயம்வரை கல்லில் வெட்டி அங்கு இடம் போதாததால் இங்கே வெட்டப்பட்டுள்ளது" என கல்வெட்டு துவங்குகிறது.

கல்வெட்டு கூறும் செய்தி அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும் மேலும் செய்திகள் ஆவணப்படுத்த வேண்டும் என்ற ராஜராஜ சோழனின் நல்ல எண்ணத்தினை உணர முடிகிறது.

நன்னிலம் வட்டத்தில் ஸ்ரீவாஞ்சியம் கோயில் அருகாமையில் அச்சுதமங்கலம் சோமனாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் திருப்பணிக்காக மூன்றாம் ராஜராஜசோழன் காலத்தில் விஜயாலய முத்தரையன் என்பவன் நிலம் அளித்தான். இச்செய்தியை திருச்சி அருகே உள்ள திருநெடுங்களம் கோயிலிலும் வெட்ட வேண்டுகோள் விடுத்ததை - இப்பிரமாணப்படியே உடையார் நெடுங்களமுடையர் கோயிலிலே கல்வெட்டவும் கடவ எனக் கல்வெட்டு குறிப்பிடப்படுகிறது. விஜயாலய முத்தரையன் பற்றிய செய்திகள் திருநெடுங்களம் கோயில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுவது சிறப்பானது.

கொங்கு நாட்டைச் சேர்ந்த கம்மாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சில தடைகள் நீக்கப்பட்டதை ஈரோடு மாவட்டம் அந்தியூர் செல்வீசுவரர் கோயிலில் காணப்படும் வீர பாண்டியன் (கி.பி.1275) கல்வெட்டில் கூறப்படுகிறது. இதே கல்வெட்டின் தகவல்கள் பேரூர், கரூர், குடிமங்கலம், கடத்தூர், மொடக்கூர், பாரியூர், அவிநாசி ஆகிய கோயில்களிலும் காணப்படுகிறது. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு பல கோயில்களில் வெட்டப்பட்டிருக்க வேண்டும்.

கல்வெட்டுகள் கோயில்களின் சுவர்களிலும் பொறிக்கப்பட்டன. ஸ்ரீரங்கம், திருவானைக்கா, திருவாரூர் சிதம்பரம் போன்ற பெரிய கோயில்களின் மதில் சுவர்களிலும் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை வெயில் - மழையில் தொடர்ந்து இருப்பதால் கற்களின் மேற்பகுதியில் சிதைவுகள் ஏற்பட்டு கல்வெட்டுகள் அழிவதற்கு வாய்ப்பு உண்டு. இதனைக் காப்பாற்ற ரசாயனப்பூச்சு பூசி பாதுகாத்து வருகின்றனர்.

பண்டைய நாளில் கோயில்களின் திருப்பணி செய்யும்பொழுது முக்கியமான கல்வெட்டுகளை படியெடுத்து மீண்டும் பொறித்தனர் என பல கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

திருமழபாடி திருக்கோயில் ராஜராஜசோழனின் 28-ஆம் ஆட்சியாண்டில் கோயில் விமானம் புதுப்பிக்கப்பட்டது. அப்பொழுது கருவறை சுவர்களிலிருந்த கல்வெட்டுகளையெல்லாம் ஏட்டில் எழுதிக் கொண்டார்கள். இதனை-திருமழுவாடி உடையார் ஸ்ரீ விமானம் வாங்கித் திருக்கற்றளி யெடுக்க வென்று உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் அருளிச்செய திருக்கற்றளி எடுக்க ஸ்ரீ விமானம் வாங்கி ஸ்ரீவிமானத்துள்ள கல்வெட்டுப்படி பொத்தகத்தில் சொர்பிக்கவென்று அதிகாரிகள் இருமுடி சோழ மூவேந்த வேளார் நியோகமும் மும்முடிசோழ பிரமாதிராயர் நியோகமும்" என்று கல்வெட்டு குறிக்கிறது.

விமானம் புதுப்பிக்கப்பட்டுக் கற்றளியாக எழுப்பப்பட்டபின் மீண்டும் அவை பொறிக்கப்பட்டன. இதனை ராஜேந்திரனின் 14-ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு குறிக்கிறது.

திருமழுவாடி உடையார் விமானம் முன் வாங்கிச் செய்கிறபோது ஸ்ரீவிமானத்துள்ள கற்படி மாற்று சொர்த்த பொத்தகப்படி மீளக் கல்வெட்டுவிக்க வென்று தண்டநாயக்கன் உய்யக்கொண்டான் வளநாட்டு வெண்ணாட்டு பிரம்மதேயம் கேரளாந்தகச் சதுர்வேதி மங்கலத்து நராக்கன் இராமன் அருமொழியான உத்தம சோழ பிரம்மராயன் ஓலை தமக்காக கணக்கினாலும் கல்வெட்டு விதிதபடி முன்பு கல்வெட்டு சொர்த்த பொத்தகப்படி என்று கல்வெட்டு கூறிச் செல்கிறது. பண்டைய நாளில் கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகளுக்கு அளித்த முக்கியத்துவத்தை அறியமுடிகிறது.

இச்செயலை அக்கல்வெட்டு "பழங்கல்வெட்டுப்படி' "மீளக்கல்வெட்டுவிக்க' எனக் குறிப்பிடுகிறது. கும்பகோணம் அருகில் உள்ள திருக்கோடிக்காவல் கோயிலில் பெரும்பாலான கல்வெட்டுக்ள் மீண்டும் கோயில் திருப்பணி முடிந்தபின் பொறிக்கப்பட்டதை "இதுவும் ஒரு பழங்கற்படி' எனக் குறிப்பிடுவதால் உணரமுடிகிறது.

தமிழ்நாட்டு வரலாற்றுக்கு அடிப்படை ஆதாரமாக விளங்கும் கல்வெட்டுகளை அதன் முக்கியத்துவத்தை உணராமல் தற்போது சில கோயில்களில் கல்வெட்டுகளின் மீது சுண்ணாம்பு வர்ணம் சிமெண்ட் போன்றவற்றை பூசி விடுகின்றனர். இதனால் கல்வெட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே திருப்பணிகள் மேற்கொள்ளும் பொழுது கவனத்தில் கொண்டு கல்வெட்டுகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். இதற்கும் கல்வெட்டுகளே நமக்கு வழிகாட்டுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com