வழிகாட்டுகிறார் சீர்காழி சீனிவாசன்

சீர்காழி அருகே சக்கர நாற்காலியில் இணைய வசதியுடன்கூடிய நவீன தொலைக்காட்சிப் பெட்டியை மூலம் கிராமப்புற மாணவர்களுக்கு பாடம் நடத்திவருகிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் சு. சீனிவாசன்(53).
வழிகாட்டுகிறார் சீர்காழி சீனிவாசன்

சீர்காழி அருகே சக்கர நாற்காலியில் இணைய வசதியுடன்கூடிய நவீன தொலைக்காட்சிப் பெட்டியை மூலம் கிராமப்புற மாணவர்களுக்கு பாடம் நடத்திவருகிறார் அரசுப் பள்ளி ஆசிரியர்சு. சீனிவாசன்(53).

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் மனோண்மணி நகரைச் சேர்ந்தவர் சு.சீனிவாசன். இவர் சென்னை அடையாறில் உள்ள செவிதிறன், பார்வைதிறன் குன்றியோர்களுக்கான பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர். கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் சீர்காழியை அடுத்த நிம்மேலி-நெப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

மாணவர்களின் நலனில் என்றும் அக்கறைக்கொண்ட ஆசிரியர் சு.சீனிவாசன் அகில இந்திய வானொலி மாணவர்களின் "சிறுவர் சோலை' நிகழ்ச்சியில் கிராமப்புற பள்ளி மாணவர்களை பங்கேற்க பயிற்சி அளித்தவர். அன்பு பாலம் கல்யாணசுந்தரனாரால் பாராட்டுப் பெற்றவர்.நாள்தோறும் தான் பணி புரியும் பள்ளிக்கு முதல் ஆளாக சென்று பள்ளியை திறந்து மாணவர்களின் வரவை எதிர்பார்த்து காத்திருப்பவர். அவர்கள் வந்ததும் ஆர்வமாக பாடம் நடத்தி வருபவர் இவர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா முதல் அலை தமிழகத்தில் பரவ தொடங்கியதால் பள்ளிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படாமல் இருக்க, கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்களை நடத்திவருகிறது தமிழக அரசு. எனினும், கிராமப்புறங்களில் பல இல்லங்களில் தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத அல்லது தொடர்ச்சியாக கேபிள் இணைப்புக்கான கட்டணம் செலுத்தமுடியாத வீடுகளில் கல்வித் தொலைக்காட்சியின் பயனை மாணவர்கள் பெற முடியாத சூழல் உள்ளது.

இந்நிலைதான், நிம்மேலி - நெப்பத்தூர் ஊராட்சிப் பகுதியிலும் எனவே இங்குள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர், சு. சீனிவாசன், தங்கள் பள்ளி மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படாமல் இருக்க புதிய உத்தியை கையாண்டு வருகிறார். இவர், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக, சக்கர நாற்காலியில் 32 அங்குல

அளவுள்ள நவீன தொலைக்காட்சிப் பெட்டி, ஒலிப்பெருக்கி, இணையவசதி, பாடங்கள் அடங்கிய பென்டிரைவ் ஆகியவற்றை தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்து, தங்கள் பள்ளியில் 1முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 192 மாணவர்களின் நலன் கருதி அவர்கள் இருக்கும் பகுதிக்குச் சென்று பாடம் நடத்திவருகிறார்.மாணவர்களின் வீடு, வீடாக சென்று மாணவர்களை சமூக இடைவெளியுடன் ஓர் இடத்தில் அமரவைத்து நடமாடும் நவீன டிவி மூலம் பாடங்களை நடத்தி வருகிறார்.

நிம்மேலி நடுத்தெரு, தெற்குத் தெரு, வடக்குத் தெரு , தீவுகிராமம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதிக்குச் சென்று, அங்குள்ள வீடுகளில் மின்வசதி பெற்று, கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பை மாணவர்களைப் பார்க்கச் செய்கிறார். மேலும், மாணவர்களை சமூக இடைவெளியுடன் அமரவைத்து சுமார் 2 மணி நேரம் பாடங்களையும் கற்பிக்கிறார்.

தனது வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமின்றி, அந்தப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பாடங்களை நடத்துவதோடு, வீட்டுப்பாடங்கள் கொடுத்து அதை கண்காணிக்கவும் செய்கிறார். அப்போது, மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு விளக்கமும் அளிக்கிறார்.இவ்வாறு சுழற்சி முறையில் சுமார் 2 கி. மீ தூரம் வரையில் அமைந்துள்ள மாணவர்களின் வீடுகளுக்கு நடமாடும் வகுப்பறையுடன் சென்று ஆசிரியர் சீனிவாசன் பாடம் நடத்தி வருவதால் கிராமப்புற மாணவர்களின் கல்வி, கரோனா காலத்திலும் தடைபடாமல் தொடர்கிறது என அப்பகுதி பெற்றோர்கள், பொதுமக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர்.

இதுகுறித்து ஆசிரியர் சு. சீனிவாசன் என்ன சொல்கிறார்:

""கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. அரசு தொலைக்காட்சி மூலம் கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.இப்பகுதி கிராமப்புற ஏழை, எளிய பெற்றோர், விவசாய கூலி வேலைக்கு செல்வதால் அவர்களுக்கு வரும் குறைவான ஊதியத்தில் தங்கள் வீடுகளில் உள்ள டிவிக்களுக்கு தொடர்ச்சியாக கேபிள் கட்டணம் செலுத்த முடியாமல் ஒளிபரப்பு தடைப்படுவதால் மாணவர்களின் கல்வியும் தடுமாற்றம் ஏற்படுகிறது. இதனால் கல்வி ஒளிபரப்பை பார்க்க முடியாத மாணவர்கள் அதிகம் உள்ளதால், இந்த ஏற்பாட்டின் மூலம் அவர்களின் கற்றல் தொடர முயற்சி செய்து வருகிறேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com