ரத்தத்தின் ரத்தமே... - 39

ஒரு லிட்டர் எண்ணெய் நிரப்பப்பட்ட ஒரு பிளாஸ்டிக் பாட்டில் அல்லது ஒரு லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு உலோக பாட்டில் சுமார் 3 அடி உயரத்திலிருந்து எதிர்பாராதவிதமாக நமது கால் விரல்களின் மீது திடீரென 
ரத்தத்தின் ரத்தமே... - 39

ஒரு லிட்டர் எண்ணெய் நிரப்பப்பட்ட ஒரு பிளாஸ்டிக் பாட்டில் அல்லது ஒரு லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு உலோக பாட்டில் சுமார் 3 அடி உயரத்திலிருந்து எதிர்பாராதவிதமாக நமது கால் விரல்களின் மீது திடீரென விழுந்துவிட்டால் முதலில் ஆ.... வென்ற சத்தத்துடன் வலியில் துடிப்போம். கத்துவோம். கதறுவோம். பின்னர் எடை அதிகமாகவுள்ள அந்த பாட்டில் விழுந்த விரல்களைப் பார்ப்போம். விழுந்த இடத்தில் தோல்கள் பிரிந்திருக்கிறதா அந்த இடத்தில் வீக்கமும், தோலின் நிறம் மாற்றமும் உண்டாகி இருக்கிறதா என்று கவனிப்போம்.

இம்மாதிரி, எடை அதிகமாக உள்ள ஒரு பொருள், நமது உடலின் கை விரல்களிலோ, கால் விரல்களிலோ, அல்லது உடலின் வெளிப்புறப் பகுதிகளிலோ, திடீரென எதிர்பாராத நேரத்தில் வேகமாக விழும்போது, காயம்பட்ட இடத்தில் தோல் பிரியாமலே, தோல் கிழியாமலே, வீக்கமும், நிறம் மாற்றமும் ஏற்படுவதை ரத்தக் கட்டு, ரத்தக் கட்டி, ரத்தம் அடங்கிய வீக்கம், ஊமைக் காயம் என்று பலவாறாக நாம் சொல்வதுண்டு.

கார் கதவை அடைக்கும்போது கைவிரல்கள் மாட்டிக் கொள்வது, வீட்டில் கதவிடுக்கில் கைவிரல்கள் சிக்கிக் கொள்வது, வேலை செய்யும் இடங்களில் கனத்த பொருள் கால் விரல்கள் மீது விழுவது, விளையாடும்போது கிரிக்கெட் பந்தோ, வாலிபால் பந்தோ, கால் பந்தோ வேகமாக வந்து முன் நெற்றியில், முகத்தில் அடிப்பது,..... இப்படி பல்வேறு இடங்களில், பல்வேறு செயல்களில் ஊமைக் காயங்கள் ஏற்பட்டு உடலைப் பாதிப்புக்குள்ளாக்குவது என்பது, அடிக்கடி நமது வீடுகளில் நடக்கும் ஒரு சாதாரண செயலே. இது எதிர்பாராமல் ஏற்படுவது. இதைத் தடுக்கவும் முடியாது. தவிர்க்கவும் முடியாது.

ஒருவரது முகத்தில், இன்னொருவர், மிக வேகமாக கையைக் கொண்டு ஒரு பலமான குத்து விட்டால் கூட, குத்துப்பட்ட நபரின் முகம் புடைத்து விடும். வீக்கம் வந்துவிடும். ரத்தம் கட்டிவிடும். தோலின் நிறம் மாறிவிடும். காயம்பட்ட இடத்திலுள்ள மிகச்சிறிய ரத்தக் குழாய்கள் சேதமடைந்து ரத்தக்குழாயிலிருந்து ரத்தம் வெளியே வந்து, தோலின் உள்புறத்தில் ரத்தம் கொஞ்சம் கொஞ்சமாக சேர ஆரம்பிக்கும். தோலின் கீழே சேரும் ரத்தம் தான், முதலில் வீக்கத்தைக் கொடுக்கும். பின்னர் தோலின் நிறத்தில் மாற்றத்தைக் கொடுக்கும்.

காயம்பட்ட இடத்தில் தோல் சிதைந்து, தோல் பிரிந்து, தோல் கிழிந்து போய்விட்டால், அது வெளிக்காயம் என்று சொல்லப்படும். இப்படி வெளிக்காயம் ஏற்படும்போது, தோல் கிழிந்து போய்விடுவதால், ரத்தம் வெளியே கசிய ஆரம்பித்துவிடுகிறது. இதை நாம் கண்ணால் பார்க்கவும் முடிகிறது. ஊமைக்காயத்தில் ரத்தம் வெளியே கசியாது. அதனால் அடிபட்ட இடத்தில் ரத்தத்தை நம் கண்ணால் பார்க்க முடியாது. காயம் ஏற்பட்ட இடத்திலிருந்து வெளிவரும் ரத்தம் தோலுக்கு அடியிலேயே சேர ஆரம்பித்து, ஒரு பெரிய வீக்கத்தை வேகமாக உண்டாக்கி விடுகிறது. 

வீக்கம் ஏற்பட்ட இடத்திலுள்ள தோலின் நிறம் முதலில் நல்ல சிவப்பாகவும், பின்னர் நேரம் போகப்போக ஊதா நிறமாகவும், பின்னர் அடுத்த நாள் பழுப்பு நிறமாகவும், சில நேரங்களில் கறுப்பு நிறமாகவும் காயம் குணமாக குணமாக நிறம் மாறிக் கொண்டே போகும்.

மேலெழுந்த வாரியாக ஏற்படும் பெரும்பாலான ஊமைக் காயங்களில் ரத்தம் தோலுக்கு அடியில் சேர்ந்து, ரத்தக் கட்டு ஏற்படுமே தவிர, ரத்தம் உறைதல் ஏற்படுவதில்லை. ரத்தக் கட்டு என்பது வேறு, ரத்தம் உறைதல் என்பது வேறு. ரத்தக் கட்டு தோலுக்கு சற்று உள்ளே, உடலின் வெளிப்பாகத்தில் ஏற்படுவது. இது சிறிது காலம் இருக்கும். பின்னர், கரைந்துவிடும். 

ரத்தம் உறைதல் உடலின் உள்பகுதியில் ஏற்படுவது. இது பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. ரத்தம் உறைதல் விஷயத்தில் ரத்தம் சேர்ந்து ரத்தக் கட்டியாக மாறி, ரத்தக் குழாய்கள் வழியாக பயணம் செய்து இருதயத்திலோ, மூளையிலோ, காலின் உள் பகுதியிலோ, வயிற்றின் உள் பகுதியிலோ சென்று ரத்த சப்ளையை அடைத்து, நிறுத்தி, மிகப்பெரிய பாதிப்பை உடலுக்கு ஏற்படுத்திவிடும். ரத்தக் கட்டு, ரத்தக் கட்டாகவே இருந்து குணமாகி விடவேண்டும். ரத்தக் கட்டு, ரத்தக் கட்டியாக மாறிவிடக் கூடாது.

ரத்தக் கட்டு நமது உடலில் ஜந்து மில்லி மீட்டர் அதாவது அரை சென்டிமீட்டர் அதாவது ஒரு மிளகு அளவில் ஏற்படலாம். அதே நேரம், ஜந்து சென்டிமீட்டர் அதாவது ஒரு நெல்லிக்காய் அளவில் கூட ஏற்படலாம். இந்த ரத்தக் கட்டின் அளவு, தாக்கப்படும் பொருளின் எடையையும், வேகத்தையும் பொறுத்தது. ரத்தக் கட்டு, தலை முதல் கால் வரை, உடலின் எந்த பாகத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். இதில், கைவிரல்களும், கால் விரல்களும் தான் அடிக்கடி அடிபடக்கூடிய இடங்கள். 

சில நேரங்களில், சாலை விபத்துகளில், வெளியிலே காயம் தெரியாமல் உள்காயம் அதாவது ஊமைக்காயம் உடலின் உள்ளே ஏற்படுவதுண்டு. வெளியிலே காயம் தெரியவில்லை என்பதற்காக அலட்சியமாக இருக்க வேண்டாம். உடலின் உள்ளே ஏற்படும் காயம் ரத்தக் கசிவை கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும். 

மிக ஜாக்கிரதையாக மிகக் கவனமாக இருக்க வேண்டும். சாலை விபத்தில் அடி ஏற்பட்டு புடைப்போ அல்லது வீக்கமோ வயிற்றிலோ தலையிலோ ஏற்பட்டால் வெளியே வீக்கத்தைத் தவிர வேறெதுவும் தெரியாது. ஆனால் உள்ளே ரத்தம் கசிந்து கொண்டிருக்கும். இதை எப்படிக் கண்டுபிடிப்பது? வயிற்றில் அதிக வலி இருக்கும்.  வயிறு லூஸாக, தளர்வாக இல்லாமல், டைட்டாக, இறுக்கமாக இருக்கும். மண்ணீரலில் அடிபட்டு இருக்கிறதென்றால், இடது தோள்பட்டை, இடது கையில் வலி இருக்கும். கல்லீரலில் அடிபட்டு இருக்கிறதென்றால், வலது தோள்பட்டை, வலது கையில் வலி இருக்கும். சிறுநீரகங்களில் அடிபட்டு இருக்கிறதென்றால், சிறுநீரில் ரத்தம் கலந்து வரும். உடல் ஜில்லென்று ஆகி வியர்த்துக் கொட்டுகிறது என்றால், ஆபத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதிக எடையுள்ள, அதிக கனமான ஒரு பொருள், நமது உடலின் ஏதோ ஒரு பகுதியில் மிக வேகமாக விழுந்து, ஊமைக்காயத்தை ஏற்படுத்திவிட்டால், அடுத்து உடனே என்ன செய்ய வேண்டும்? அடிபட்ட பகுதியில் வலி மிக அதிகமாக இருக்கத்தான் செய்யும். இருப்பினும் பதட்டப்படாமல், முதலில் அந்த இடத்திலேயே உட்கார்ந்துவிட வேண்டும். 

அடுத்ததாக, அடிபட்ட இடத்தில், தோல் சிதைந்து, கிழிந்து இருக்கிறதா அல்லது தோலில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். தோல் கிழிந்து போகவில்லை என்றால், புடைப்பு ஏற்பட்ட இடத்தில் ஐஸ் கட்டிகளைக் கொண்டு சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் ஐஸ் ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஐஸ் ஒத்தடம் ஒரு நாளைக்கு 5 அல்லது 6 முறை கொடுக்க வேண்டும். காயம்பட்ட இடத்தில், வலி தொடர்ந்து இருக்கிறதென்றால், ரத்தக் கசிவு உள்ளே இன்னும் இருக்கிறது என்று அர்த்தம்.

காயம்பட்ட இடத்திற்கு உடனடியாக மசாஜ் செய்யக்கூடாது. அப்படி வேகமாக அழுத்தி அமுக்கி மசாஜ் செய்தால், மேலும் நிறைய ரத்தக்குழாய்கள் உடைந்து, ரத்தக்கசிவு அதிகமாகும். அதனால் உடனடியாக ஐஸ் ஒத்தடம் கொடுப்பதே  மிகச் சிறந்தது. புடைத்து இருக்கும் இடத்தை கொஞ்சம் இறுக்கமாக துணியால் கட்ட வேண்டும். அடிபட்ட பகுதி கைகளோ, கால்களோ என்றால் தொங்கப் போடாமல் மேலே தூக்கி வைத்திருக்க வேண்டும்.

சர்க்கரை வியாதி உள்ளவராக இருந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரையின் அளவு கூடுதலாக இருந்தால், வீக்கம் குறைவதற்கு நாள்கள் அதிகமாகும். சில சமயங்களில் ரத்தக் கட்டு, சீழ் கலந்த ரத்தமாக மாறி கட்டியாகி விடும். எனவே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக மிக முக்கியம்.

சுத்தமான மஞ்சள் பொடியை மருந்தாக நினைத்துக் கொண்டு, மஞ்சள் பொடியுடன் சிறிது வெந்நீர் விட்டு கலந்து, பிசைந்து, அந்தக் கலவையை ரத்தக் கட்டு உள்ள இடத்தில் நன்றாக களிம்பு போல் தினமும் தடவிவர வேண்டும்.

ரத்தக்கட்டு ஏற்பட்ட இடத்தில் ஊசியை வைத்து குத்தி, அதனுள் இருக்கும் திரவத்தை வெளியே எடுக்க நம்மில் பலபேர் முயற்சி செய்வதுண்டு. ஆனால் இம்மாதிரி செய்யும்போது, சில சமயம் வெளியிலிருந்து தொற்று உள்ளே போய் விட வாய்ப்புண்டு. எனவே மற்ற நடவடிக்கைகளை எடுக்காமல், குணமாக்குவதற்கு உண்டான வழியைப் பார்க்க வேண்டும். 

ரத்தக் கட்டு மிகச் சிறியதாக இருந்தால், ஓரிரு வாரங்களில் சரியாகி விடும். மிகப்பெரியதாக இருந்தால், ஒரு மாதம் கூட எடுத்துக் கொள்ளும். ரத்தக் கட்டின் மீது வெள்ளரிக்காயை வைத்துக் கட்டுவது, மஞ்சள் தூளை வைத்துக் கட்டுவது, கற்றாழைக் கசிவைக் கட்டுவது, சந்தனத் தூளை பன்னீரில் சேர்த்துக் கட்டுவது, இதுபோன்ற பல பாட்டி வைத்தியங்கள், தாத்தா வைத்தியங்கள் இன்னும் நிறைய இன்றைக்கும் கூட உபயோகத்தில் இருக்கின்றன. மேற்கூறிய வைத்தியங்கள், ரத்தக் கட்டை நல்ல முறையில் சீக்கிரம் குணப்படுத்துகிறது என்கிறபோது, அதை உபயோகிப்பதில் தவறில்லை. அந்தக் கால எளிய முறை வீட்டு வைத்தியங்கள் அனைத்துமே, அறிவியல் சார்ந்த வைத்தியங்கள் தான்.

உடலில் ஏற்படும் ரத்தக் கட்டை குணப்படுத்த, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு எப்பொழுதும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். மனதில் ஏற்படும் ரத்தக் கட்டை குணப்படுத்த சந்தோஷமும், மன அமைதியும் எப்பொழுதும் இருக்க வேண்டும்.

- தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com