ரோஜா மலரே! - 105: திருப்தி அளித்த டி.வி. தொடர்! - குமாரி சச்சு

எந்தக் கதாபாத்திரமும் ஏற்று நடிக்கத் தயங்கமாட்டேன். அந்தக் கதாபாத்திரத்தை எப்படி வித்தியாசமாகச் செய்ய முடியும் என்று தான் யோசிப்பேன்.
ரோஜா மலரே! - 105: திருப்தி அளித்த டி.வி. தொடர்! - குமாரி சச்சு

எந்தக் கதாபாத்திரமும் ஏற்று நடிக்கத் தயங்கமாட்டேன். அந்தக் கதாபாத்திரத்தை எப்படி வித்தியாசமாகச் செய்ய முடியும் என்று தான் யோசிப்பேன்.  என்னுடைய கதாபாத்திரத்தை கேட்டவுடன் எதற்கு ஆச்சரியப்பட்டேன் தெரியுமா? அந்தப் பாத்திரம் எப்படி வடிவமைக்கப்பட்டிருகிறது என்று தெரிந்தால், என்னைப் போன்றே எல்லோரும் ஆச்சரியப்படுவார்கள். 

தெய்வ நம்பிக்கை உடையவர்கள் ஒரு புறம் இருப்பார்கள் என்றாலும், இந்தப் பாத்திரம் தெய்வ நம்பிக்கை இல்லாத பாத்திரம். அப்படிப்பட்ட பாத்திரத்தை ஏற்பதா? வேண்டாமா? என்று யோசனை செய்தேன். அவர்களிடம் சொன்னேன், "இந்த வேடத்திற்கு என்னைக் கூப்பிட்டு இருக்கிறீர்கள். தெய்வபக்தி  உடைவள் நான். அடிக்கடி கோயில்களுக்குச் செல்வேன். நான் இந்தப் பாத்திரத்தில் தெய்வத்தைத் திட்டுவது போன்று வசனம் இருந்தால் நான் செய்ய மாட்டேன்' என்று அவர்களிடம் சொன்னேன். அவர்களும் அப்படி ஒன்றும் இல்லை என்று என்னிடம் உறுதி அளித்தார்கள். நானும் சமாதானமாகி நடிக்கத் தொடங்கினேன். பல பகுதிகள் நடித்த பிறகு தான் உணர்ந்தேன், அப்படி எந்த ஒரு வசனமும் இல்லை. அது மட்டுமல்லாமல் வசனம் மிகவும்  அருமையாக இருந்தது. இதனால் "நந்தினி' தொடரில் தொடர்ந்து நடிக்க ஆர்வம் ஏற்பட்டது. 

ஒரு காட்சியில் கதாநாயகருக்கான ஜாதகத்தை ஒரு ஜோதிடர் பார்த்துக் கொண்டு இருப்பார். நான் அப்போழுது  உள்ளே நுழைவேன். "என்ன ஜோதிடரே, என்ன பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்', என்று கேட்பேன். ஜோதிடர் "சூரியன், சந்திரன் எல்லாம் எங்கு இருக்கிறது என்று பார்த்துக் கொண்டு இருக்கேன்' என்று சொல்லுவார். நான் அவருக்குப் பதில் சொல்லும் விதமாக, "சந்திர மண்டலத்தில் இப்பொழுது மனிதன் இறங்கிவிட்டான். இன்னும் நீங்கள் இந்த சூரியன், சந்திரன் எங்கு இருக்கிறது என்று தேடிக் கொண்டு இருக்கிறீர்கள்' என்பேன். அதைச் சொல்லும் போது எனக்குச் சிரிப்பு வந்து விட்டது. 

"நந்தினி' தொடர் மூலம் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது.  எல்லோரும் பார்க்கும் தொடரில் நடித்தது எனக்கு மனநிறைவை தந்தது. இன்று கூடக் கேட்கிறார்கள், நீங்கள் ஏன் டிவி தொடர்களில் தொடர்ந்து நடிக்கவில்லை என்று? எனக்குப் பிடித்தமான வேடம் இருந்தால், கண்டிப்பாக நடிப்பேன் என்று என்னுடைய ரசிகர்களுக்குச் சொல்வேன்.     

கே.சோமு  இயக்கத்தில் "நல்ல இடத்து சம்பந்தம்' என்ற படத்தில் முதல் முறையாக நடித்தேன். அந்தப் படத்தில் எனக்குக் குழந்தை வேடமும் இல்லை, பெரியவள் வேடமும் இல்லை.  இடைப்பட்ட வயது உள்ள பெண் வேடத்தில் நடித்து இருப்பேன். அப்புறம் "கிருஷ்ணலீலை', "திருமலை தெய்வம்' போன்ற படங்களில் நடித்து இருக்கிறேன்.  சிலர் வசனத்தைத் தாளில் எழுதி நம்மிடம் கொடுத்து விடுவார்கள். நாம் மனப்பாடம் செய்து படப்பிடிப்பின் போது சொல்லி விட வேண்டும். வேறு சிலர் ஒவ்வொரு ஷாட்டுக்கும் முன்பு, நமக்கு வசனத்தைச் சொல்லி கொடுப்பார்கள். படப்பிடிப்பின் போது வசனத்தை அந்தச் சிறிய நேரத்தில் நாம் உள்வாங்கிக் கொண்டு பேசி விடவேண்டும். 

ஆனால் அந்தப் படத்தின் திரைக்கதை - வசனகர்த்தா  ஏ. பி. நாகராஜன் முறையே வேறு எல்லோரும் மேக்கப் போட்டுக் கொண்டு வந்தவுடன், எல்லோருரையும் ஒன்றாக உட்காரவைத்துக், காட்சியை, எங்கள் எல்லோருக்கும் படித்துக் காண்பிப்பார். அப்புறம் அதில் இடம் பெற்றுள்ள பாத்திரங்களில் நடிப்பவர்கள் வசனத்தை அந்தந்த, நடிகர்களுக்குப் படித்துக் காண்பித்துச் சரியாக வரும் வரை சொல்லிக் கொடுப்பார். இதில் என்ன நடிகர்களுக்கு லாபம் என்றால், ஒரு முழுக் காட்சி வடிவம் தெரிந்து விடும், நடிகர்கள் அந்தப் பாகத்தில் எப்படி நடிக்க வேண்டும், மற்றவர் பேசும் போது, நாம் எப்படி முகபாவங்கள் காட்ட வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம். 

அவ்வளவு தெளிவாக ஒவ்வொருவருக்கும் வசனத்தைப் படித்துக் காட்டிவிடுவார். நாம் எடுக்கப் போகும் காட்சி நமக்கு முன்பே தெரியும் என்றால், நாம் பேசும் வசனம் நமக்கும் மனப்பாடமாகிவிடும். அவருக்கு உள்ளிருக்கும் ரசிப்பு தன்மையால், ஒவ்வொரு நடிகர் இடத்தில், நல்ல நடிப்பை வெளிக்கொண்டு வருவார். அவர் நாடகத்தில் இருந்து வந்தவர் என்பதால், எந்தக் காட்சியை எப்படி வைத்தால் மக்கள் ரசிப்பார்கள் என்று தெரிந்தவர். அவரது படங்கள் எல்லாமே காவியங்கள். அவர் கதாநாயகனாக நடித்த "பெண்ணரசி' போன்ற பல படங்களை ரசித்திருக்கின்றேன். அவர் இயக்கும் படங்களில் நாடக நடிகர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து ஊக்குவிப்பார். அதற்கு உதாரணம், "தில்லானா மோகனாம்பாள்'. நாடக நடிகர்கள் அனைவரையும் அந்தப் படத்தில் நடிக்க வைத்தார். 

முக்தா சீனிவாசனை "மதுரை வீரன்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றும் போதே தெரியும். 

நான் சென்ட்ரல் ஸ்டூடியோவில் நடிக்கும் போதும், அங்கு இணை இயக்குராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். 

அவர் இயக்க நான் நடிக்க, முதல் படம் "தேன் மழை'. அப்புறம் தொடர்ச்சியாக முக்தா பிலிம்ஸில் 6 படங்களில் நடித்தேன். ஏ.பி. நாகராஜனை போலவே நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர். நடிகர்கள் நேரம் தவறாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று விரும்புவார். 

அவர் நகைச்சுவையை ரசிக்கக் கூடியவர்.  அவருடன் "சோ' ராமசாமி அன்று இருந்தார். அவர் படத்தில் கதாநாயகன், கதாநாயகி மாறுவார்களே தவிர, நடிகர் பட்டாளம் மாறாது. எங்கள் கூட்டம் என்று நான் யாரை சொன்னேன் தெரியுமா? நாகேஷ், மனோரமா, சோ, மேஜர் சுந்தரராஜன். நாங்கள் ஒன்று சேர்ந்து விட்டால், அந்த இடம் கலகலப்பாகி விடும். 

முக்தா  சத்தம் போடுவார். "இத்தனை சீனை ஒரு நாளில் முடிக்க வேண்டும். நீங்கள் வந்து நேரத்தை வீணாக்கிக் கொண்டே போகிறீர்கள்', என்பார்.  நடிகர்கள் அவரை நம்பி விமானப் பயணத்தையோ, ரயில் பயணமோ டிக்கெட் போட்டு விட்டு, அவரிடம் சொல்லி விட்டால், சரியான நேரத்திற்குப் படப்பிடிப்பை முடித்து, அனுப்பிவிடுவார். 

அவருடைய படங்களில் கதை இருக்கும், அதிகளவில் நகைச்சுவை இருக்கும். முக்தா சீனிவாசன் மிகப் பெரிய வெற்றி படங்களும் கொடுத்திருக்கிறார், சினிமா மொழியில் சொன்னால் ஆவரேஜ் படங்களும் கொடுத்திருக்கிறார். தோல்வி அடைந்த படங்கள் என்று எந்த ஒரு படத்தையும் சொல்ல முடியாது. 

அவர் அமைதியானவர், அவர் இயக்கும் முறையும் அமைதியாகத்தான் இருக்கும். எந்த விதமான பரபரப்போ, படபடப்போ, ஆர்ப்பாட்டமோ இருக்காது. செட்டிற்கு நாம் வந்து விட்டால், "வசனத்தைப் படித்துவிட்டீர்களா?' என்று கேட்பார். அப்புறம் ஒரு ஒத்திகை பார்ப்பார். பிறகு "டேக்' என்று கூறுவார். நடிகர்கள் சரியாக செய்து விட்டால் "ஓகே' என்பார். அவர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கும் போது ....

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com