அறிஞர் அண்ணா ஒரு வரலாறு

தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து, 1949-இல் திராவிட முன்னேற்றக்கழகத்தை உருவாக்கி,  குறுகிய காலத்திலேயே அண்ணா தன்னுடைய ஆழமான கருத்துக்களினாலும், பேச்சாற்றலினாலும் திராவிட
அறிஞர் அண்ணா ஒரு வரலாறு


தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து, 1949-இல் திராவிட முன்னேற்றக்கழகத்தை உருவாக்கி, குறுகிய காலத்திலேயே அண்ணா தன்னுடைய ஆழமான கருத்துக்களினாலும், பேச்சாற்றலினாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழகத்தில் ஒரு பேரியக்கமாக வளர்த்தார்.

தமிழ் மொழியிலும், ஆங்கிலத்திலும் அண்ணா பேச்சாற்றலில் ஈடு இணையற்றவராக இருந்தார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக (1967 - 1968) சட்டப்பேரவையில் அண்ணா நிகழ்த்திய உரைகளை கேட்டவன் என்ற முறையில், அவரது அற்புதமான சொற்பொழிவுகளைக், கேட்பதற்கு ஒரு "கொடுப்பினை' வேண்டுமென்பது என் கருத்து.

அண்ணாவால் வேகமாக வளர்ந்த தி.மு.க. சட்டப்பேரவைத் தேர்தல்களில் பங்கு கொண்டு, 1957-இல் 15 உறுப்பினர்களுடனும், 1962-இல் 50 உறுப்பினர்களுடன் சட்டப்பேரவையின் பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தது. இருப்பினும், 1962-இல் அண்ணா காஞ்சியில் நடைபெற்ற தேர்தலில், பண பலத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல், வெற்றி வாய்ப்பினை இழந்தார் .

அது ஒருவகையில் நல்ல சம்பவமாக மாறியது . அண்ணா உடனடியாக, மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தன்னுடைய ஆங்கிலப் புலமையையும், பேச்சாற்றலையும், அறிவையும் இந்திய நாட்டிற்கே அறிமுகப்படுத்துவதற்கு நல்வாய்ப்பாக கிடைத்தது. அந்தக்காலத்தில் தி.மு.க. "திராவிட நாடு' கொள்கையில் உறுதியாக இருந்தது. மாநிலங்களவையில், தன்னுடைய கன்னிப்பேச்சில் "ஐ வுட் ராதர் ஹேவ் ஏ கமிட்டி ஆஃப் நேஷன்ஸ் தேன் ஏ காங்கலோமெரேஷன் ஆஃப் ஸ்டேட்ஸ்' என்று தனது கம்பீரமான குரலில் பேசி முடித்தார். அன்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த அடல் பிகாரி வாஜ்பாய், அண்ணா அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்று "உங்களின் கருத்துக்களை நான் ஏற்கவில்லை என்றாலும், நீங்கள் பேசிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது' எனக் கூறினார்.

இந்நிகழ்ச்சி நடந்த ஆறு மாதங்களுக்குள் (1962 நவம்பரில்) சீன நாட்டின் ராணுவப் படைகள் நம்முடைய வடகிழக்கு பகுதியான தேச்பூரை கடுமையாக தாக்கின. உடனடியாக அண்ணா, தன்னுடைய நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி தம்முடைய கட்சி காங்கிரசை கொள்கை ரீதியாக எதிர்த்தாலும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் பாரதப்பிரதமர் பண்டித நேருவின் மத்திய சர்க்காருடன் தி.மு.க. முழுமையாக ஒத்துழைக்கும் என அறிவித்ததுடன்" நாட்டின் பிரிவினை கொள்கையை கைவிட முடிவெடுத்துள்ளது' எனக் கூறி, "திராவிட நாடு' பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

1964-ஆம் ஆண்டு, சென்னை பட்டதாரிகள் தொகுதி வழியாக, தி.மு.க, காங்கிரஸ், சுதந்திரா கட்சியின் வேட்பாளர்களை நிறைய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து, சட்டமன்ற மேலவை உறுப்பினர்ஆனேன். சில மாதங்களுக்குப் பிறகு, ராஜாஜியின் தலைமையேற்று, சுதந்திரா கட்சியின் உறுப்பினராகவும், அதன் தலைவராகவும் மேலவையில் அமர்ந்து, பேராசிரியர் க.அன்பழகனின் (ஆசிரியர் தொகுதியில் இருந்து மேலவை உறுப்பினராக வந்தவர்) நண்பரானேன். அவர் தான் என்னை அண்ணாவிடம் அறிமுகப்படுத்தியவர். அண்ணாவைப் பற்றி பலவாறு கேள்விப்பட்ட நான், அண்ணாவை சந்தித்த நேரத்தில், அவருடைய எளிமையான தோற்றத்தைக் கண்டு வியப்படைந்தேன். பழகுவதற்கு அவர் மிக நல்லவராக இருந்தார். அப்பொழுது அவர் மீது எனக்கு ஏற்பட்ட அன்பிற்கும், மரியாதைக்கும், எல்லையே இல்லை.

சில மாதங்களுக்குப் பிறகு, அண்ணாவின் தலைமையிலான தி.மு.க.விற்கும், ராஜாஜியின் தலைமையிலான சுதந்திரா கட்சிக்கும் 1967 பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்காக கூட்டணி ஏற்பட்டது. 1966-ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் பெரும் மழையால், சென்னையில் பல பகுதிகள் நீரில் மூழ்கின. அன்றைய தி.மு.க. சென்னை மேயர் மைனர் மோசஸþம், நானும் அண்ணாவை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் செய்வதற்காக அவருடைய இல்லத்திற்குச் சென்றோம். அண்ணா சற்று தயக்கம் காட்டி, "நேற்றைய தினமே முதலமைச்சர் பக்தவத்சலம் பார்வையிட்டதற்குப் பிறகு, நான் ஏன் வரவேண்டும்?' என வினவினார்.

எல்லாரும் மவுனமாக இருந்தனர். நான் உடனடியாக "அய்யா, நேற்று, இன்றைய முதல்வர் பார்வையிட்டார், இன்று, நாளைய முதல்வர் நீங்கள் பார்வையிடுகிறீர்கள்' என்று கூறியதும் வருகிறேன் என்றார். பிறகு நாங்கள் அனைவரும் அண்ணா தலைமையில் வியாசர்பாடி பகுதியையும், ஆதி ஆந்திரர்கள் வசிக்கும் பகுதியையும் பார்வையிட்டோம். நான் அங்குள்ள மக்களிடத்தில் தெலுங்கு மொழியில் பேசி, அங்குள்ள ஆதி ஆந்திர மக்களை, அண்ணாவுக்கு அறிமுகப்படுத்தி, அண்ணாவின் பாராட்டுகளைப் பெற்றேன்.

1967-ஆம் ஆண்டுக்கான தேர்தல் வந்தது. சென்னையிலுள்ள சட்டப்பேரவை தொகுதிகளில், ஒரு தொகுதி மட்டும் (பூங்கா நகரம்) சுதந்திரா கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு ராஜாஜி , கம்தார் என்பவரை வேட்பாளராக நிறுத்த முடிவெடுத்திருந்தார். இதனை அறிந்த அண்ணா, ராஜாஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "உங்களுக்குத் தரப்பட்ட தொகுதி ஆதி திராவிடர் மக்கள் நிறைந்த பகுதி. ஹெச்.வி. ஹண்டேவிற்கு அறிமுகமானவர்கள். கடுமையான உழைப்பாளியான ஹண்டேவை அங்கு நிற்க வைத்தால், நம்முடைய கூட்டணிக்கு சென்னையில் முழுமையானவெற்றி கிடைத்து விடும்' எனக் கூறினார்.

திடீரென ராஜாஜி என்னை அழைத்து, "பூங்கா நகர் தொகுதியில் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?' எனக் கேட்டார். நான், "அய்யா, எனக்கு பதவி இன்னும் மூன்றாண்டுகள் உள்ளது' எனக் கூறினேன்." அது எனக்குத் தெரியும். உங்களுக்கு நல்ல வெற்றி வாய்ப்புள்ளதாக அண்ணா கருதுகிறார். மக்களின் நாடி அண்ணாவிற்கு நன்கு தெரியும். நீங்கள் உடனடியாக பூங்கா நகர் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யுங்கள்' என ராஜாஜி கூறினார்.

காங்கிரஸ் கோட்டையாக இருந்த பூங்கா நகர் தொகுதியிலிருந்து நான் 2,854 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். மதியம் 1 மணிக்கு அண்ணா இல்லத்திற்குச் சென்றேன். அவரை கவுரவப்படுத்துவதற்காக நான் கொண்டு சென்ற மாலையை, அண்ணா வாங்கி என் கழுத்தில் போட்டார்.

திடீரென வெளியில் பட்டாசு சத்தம் கேட்டது. அண்ணா வெளியே வந்து, "எதற்காக இந்த பட்டாசு வெடிப்பு?' எனக் கேட்டார். வெளியிலிருந்த அனைவரும், காமராஜர் விருதுநகரில் தோற்கடிக்கப்பட்டார் என சத்தமாக மகிழ்ச்சியுடன் கூறினர். அண்ணா மிகக் கோபமாக "பட்டாசு வெடிப்பதை நிறுத்துங்கள்' எனக் கூறி உள்ளே வந்து அங்கு கூடியிருந்த நிருபர்களை பார்த்து, "அகில இந்திய காங்கிரஸ் தலைவராக உள்ள பெருந்தலைவர் காமராஜரின் தோல்வி எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியதல்ல. அரசியல் வானத்தில், இன்னொரு தமிழன், பெருந்தலைவர் காமராஜர் அளவிற்கு உயருவதற்கு இன்னும் ஆயிரமாண்டுகள் ஆகும்' எனக் கூறினார்.

பொறாமை என்றால் என்னவென்று தெரியாத ஒரே ஒரு தலைவர் அண்ணா . இதுவரையில் ஏதாவது ஒரு தலைவன், ஒரு தொண்டனைப் பார்த்து, "தம்பி, வா! தலைமை தாங்க வா! உன்னுடைய ஆணைக்குக் கட்டுப்பட்டு நடப்பேன்' எனக் கூறியதுண்டா?

தி.மு.க. ஆரம்பித்து சில ஆண்டுகளுக்குப் பிறகு, அண்ணா தன்னுடைய நண்பருடன் இரவு, சென்னையிலிருந்து காரில் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார். காலை 6 மணிக்கு பொழுது விடிந்த நேரத்தில், தொழுதூரில் கார் நின்றது. அக்கம் பக்கத்திலிருந்த கிராம மக்கள் ஓடி வந்து, காரை சூழ்ந்தனர். அண்ணா, கார் கண்ணாடியை இறக்கியவுடன், அவரைப் பார்த்து அந்த கிராமத்தின் மக்கள் "நீங்கள் எம்.ஜி.ஆர். கட்சியா?'எனக் கேட்டவுடன் அந்த மக்களை புன்சிரிப்புடன் பார்த்து அண்ணா, "நீங்கள் எப்படி கண்டுபிடித்தீர்கள்?' எனக் கேட்டதற்கு, அந்த மக்கள் "காரில் இருந்த கொடியைப் பார்த்து நாங்கள் கண்டுபிடித்தோம்' எனக் கூறினார்கள்.

கார் நகர்ந்த பின், காரிலிருந்த தன் நண்பரைப் பார்த்து, "சினிமா துறையின் மூலமாக நண்பர் எம்.ஜி.ஆர், தி.மு.க. கொடியை மக்களுக்கு அறிமுகப்படுத்தியதின் மூலமாக, நம்முடைய இயக்கத்திற்கு எவ்வளவு வலுவைச் சேர்த்துள்ளார், பார்த்தீங்களா?' எனக் கூறினாரே தவிர, எம்.ஜி.ஆரைக் கண்டு பொறாமைப் படவில்லை அண்ணா.

1949-இல் அண்ணாவால் துவக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் 1967, 1971 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியாகவும், 1977, 1980, 1984-களில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியாகவும், மீண்டும் 1989-இல் தி.மு.க, 1991-இல் அ.இ.அ.தி.மு.க., 1996-இல் தி.மு.க, 2001-இல் அ.இ.அ.தி.மு.க, 2006-இல் தி.மு.க, 2011, 2016-இல் அ.இ.அ.தி.மு.க, 2021-இல் தி.மு.க. என ஆட்சிகளாக மாறி, மாறி வந்தாலும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது, இவற்றுக்கு அடித்தளம் போட்டவர் அறிஞர் அண்ணா என்பதைத்தான்.

என்னுடைய 70 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில், மனித நேயம், கருணை உள்ளம், பேரறிவு, பேச்சாற்றல், நாகரீகம், முக்கியமாக பொறாமையின்மை இவையனைத்திற்கும் ஒரு மனித உருவம் கொடுத்தால், அந்த உருவம் பரறிஞர் அண்ணா. இது மிகையன்று.

கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com