படிக்காத மாணவர் விஞ்ஞானியானார்!
By -வி | Published On : 05th December 2021 06:00 AM | Last Updated : 05th December 2021 06:00 AM | அ+அ அ- |

இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்.
ஸ்டீபன் ஹாக்கிங் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கணிதவியலில் லூக்காசியன் பேராசிரியராக பணிபுரிந்தார். அந்த பல்கலைக்கழகத்தில் 1979-இல் பணிக்கு சேர்ந்த ஸ்டீபன் ஹாக்கிங், அங்கு சுமார் 30 ஆண்டுக்காலம் பணியாற்றினார். பின்னர் தனது 67-ஆம் வயதில், 2009-இல் பணி மூப்பு பெற்றார். சர் ஐசக் நியூட்டனுக்குப் பின், பெருமைமிக்க இந்தப் பொறுப்பு வகித்தவர்.. உலகின் பல நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையங்களின் கெளரவ விஞ்ஞான பதவிகளை வகித்து வந்தார்.
இத்தனை பெருமைகளையும் பெற்ற ஸ்டீபன் ஹாக்கிங்கின் பிறந்த தினம் 1942, ஜனவரி 8-ஆம் நாள். ஹாக்கிங்கின் பிறப்பில் உள்ள சிறப்பு என்ன தெரியுமா? கலிலியோவின் 300-ஆவது நினைவு தினத்தன்று பிறந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங். தன்னுடைய 9- ஆவது வயது வரை மிக மோசமான மாணவராக கணிக்கப்பட்டார். ஆனாலும் கூட அவரின் சில ஆசிரியர்கள், அவர் மிகப்பெரிய மேதையாக வரலாம் என்றும் கணித்தனர்.
ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு 21 வயதாகும்போது, அவருக்கு நரம்பியல் நோய் பாதித்தது. அது கொஞ்சம் கொஞ்சமாக கை, கால் மற்றும் குரலை செயலிழக்கச் செய்தது. மூளையைத்தவிர வேறு எதுவும் பெரிதாக செயல்படவில்லை.. அதன் பின் அவர் இரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழ்வார் என்று மருத்துவர்கள் கணித்தனர். அனைவரது கணிப்பையும் பொய்யாக்கி, அதன்பின் ஸ்டீபன் ஹாக்கிங் 50 ஆண்டுகள் வாழ்ந்தது மட்டுமின்றி பல உலக சாதனைகளையும் சாதித்து பெருமை தேடினார்.