சவாலை நிறைவேற்றிய இளம் வீரர்!

"டெஸ்ட் ஆட்டத்தில் சதமடித்தால் மட்டுமே உன்னுடன் உணவு அருந்த வருவேன்' என்ற தனது பயிற்சியாளர் பிரவீண் ஆம்ரேவின் எதிர்பார்ப்பை தனது மெய்டன் சதம் மூலம் நிறைவேற்றி உள்ளார் இந்திய இளம் வீரர்  ஷிரேயஸ் ஐயர்.
சவாலை நிறைவேற்றிய இளம் வீரர்!

"டெஸ்ட் ஆட்டத்தில் சதமடித்தால் மட்டுமே உன்னுடன் உணவு அருந்த வருவேன்' என்ற தனது பயிற்சியாளர் பிரவீண் ஆம்ரேவின் எதிர்பார்ப்பை தனது மெய்டன் சதம் மூலம் நிறைவேற்றி உள்ளார் இந்திய இளம் வீரர் ஷிரேயஸ் ஐயர்.

நியூஸிலாந்துக்கு எதிராக கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் அறிமுகமான ஷிரேயஸ் ஐயர் 105 ரன்களுடன் மெய்டன் சதமடித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார்.

மும்பையில் 1994-இல் பிறந்த ஷிரேயஸ் ஐயர், சிறுவயதிலேயே கிரிக்கெட் விளையாட்டில் ஈர்க்கப்பட்டு சிவாஜி பார்க் ஜிம்கானா மைதானத்தில் ஆடியுள்ளார். அப்போது அவரை முன்னாள் இந்திய வீரர் பிரவீண் ஆம்ரே அடையாளம் கண்டு ஷிரேயஸின் திறமையை வெளிக்கொணர்ந்தார். கல்லூரி காலத்தில் எதிரணி பந்துவீச்சை பதம் பார்த்த அவர் கடந்த 2014-இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றார்.

அதைத் தொடர்ந்து இங்கிலாந்தின் டிரெண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் அணியில் இடம் பெற்று சிறப்பாக ஆடினார். இதன்பின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளான விஜய் ஹஸாரே, ரஞ்சி கோப்பைகளில் அற்புதமாக ஆடிய ஷிரேயஸ் 2015-16 சீசனில் 4 சதம், 7 அரை சதங்களுடன் 73.39 சராசரியைக் கொண்டிருந்தார்.

கடந்த 2017-இல் ஆஸி. அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 210 பந்துகளில் 202 ரன்களை விளாசியது, அவரது வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

2015 ஐ.பி.எல் சீசனில் ரூ.10 லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தனது சிறப்பான ஆட்டத்தால், ரூ.2.6 கோடிக்கு வாங்கப்பட்டார் ஷிரேயஸ். இதன் மூலம் தரவரிசையில் இல்லாமல் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது. அவரது பயிற்சியாளர் பிரவீண் ஆம்ரே டில்லி டேர்டெவில்ஸ் அணியில் சேர்த்தார்.

அந்த சீசனில் 439 ரன்களை குவித்து, சிறந்த வளரும் வீரர் விருதையும் கைப்பற்றினார் ஷிரேயஸ்.

தொடர்ந்து ஐ.பி.எல் சீசன்களில் சிறப்பாக ஆடிய அவர் 2019-இல் டில்லி கேபிடல்ஸ் அணி கேப்டனாக உயர்ந்தார்.  

டி20, ஒருநாள் இந்திய அணிகளில் இடம் பெற்ற ஷிரேயஸ், தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 8 மாதங்களாக ஓரம் கட்டப்பட்டிருந்தார்.  

இந்நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ராகுல் திராவிட் மீண்டும் ஷிரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு தந்தார். நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் அறிமுகமான அவர் சிறப்பான ஆட்டத்தால் மெய்டன் சதம் அடித்தார்.மும்பைஅணியின் பயிற்சியாளரான பிரவீண் ஆம்ரே "ஒருமுறை நீ டெஸ்ட் ஆட்டத்தில் சதமடித்தால் தான் உன்னுடன் உணவு அருந்த வருவேன்' என தனது எதிர்பார்ப்பை கூறியிருந்தார். தற்போது அதை நிறைவேற்றியுள்ள ஷிரேயஸ் ஐயர், தற்போது தன் இல்லத்தில் உணவருந்த வருமாறு பிரவீண் ஆம்ரேவுக்கு அழைப்பு அனுப்புவேன் என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

ஷிரேயஸ் ஐயரின் தந்தையான சந்தோஷ் கடந்த 4 ஆண்டுகளாக தனது வாட்ஸ் ஆப் டிபியை மாற்றாமல் வைத்திருந்தார். கடந்த 2017-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயமடைந்த கோலிக்கு பதிலாக ஸ்டான்ட் இன் பிளேயராக சேர்க்கப்பட்டிருந்த ஷிரேயஸ்  அதில் ஆடவில்லை. எனினும் வெள்ளை நிற உடையுடன் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை கையில் வைத்திருந்தார். அந்த படத்தை தனது வாட்ஸ் ஆப் டிபியாக வைத்திருந்தார் சந்தோஷ். கெளரவமிக்க அக்கோப்பை தனது மகன் கையில் வைத்திருந்த நிலையில், டெஸ்ட் ஆட்டத்தில் ஆடுவாரா என்ற தனது விருப்பம் தற்போது நிறைவேறியுள்ளது என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் சந்தோஷ்.

"கான்பூர் டெஸ்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஷிரேயஸ் ஐயருக்கு அதற்கான கேப்பை வழங்கினார் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர். தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களில் முக்கியமானவரான கவாஸ்கரால் அறிமுகம் கிடைத்தது நெகிழ்ச்சியான தருணம்'  என்றார் ஐயர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com