முகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்
மொழி பெயர்க்கும் செயலி!
By பனுஜா | Published On : 19th December 2021 06:00 AM | Last Updated : 19th December 2021 06:00 AM | அ+அ அ- |

சில முக்கிய செய்தி சானல்களில் செய்தி வாசிக்கும் போது டிவி திரையின் மூலையில் இன்னொருவர் (அவர் பெரும்பாலும் பெண்ணாக இருப்பார்), சைகைகள் செய்து செய்திகளை விவரிப்பார். காது கேளாதவர்கள், பேசத் தெரியாதவர்களுக்கு நாட்டு நடப்பு குறித்த தகவல்கள் போய்ச் சேரவே இந்த ஏற்பாடு.
அதே சமயம் 99 சதவீத பேசவும், காதுகளால் கேட்கும் சக்தி உடையவர்களுக்கு சைகை மொழி தெரியாது. அதனால் சைகை மொழியில் ஒருவர் ஏதாவது சொல்ல முற்பட்டால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியாது. விழிப்பார். காது கேட்காத, பேசத் தெரியாதவர் சைகை மொழியைக் கையாளுவதுடன் எழுதிக் காண்பித்தால், மற்றவர்கள் அதைப் புரிந்து கொள்வதில் எந்தத் தடங்கலும் இல்லை. அதை வாசித்து புரிந்து கொள்ளலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அப்படி எழுதிக் காண்பிக்க இடம், பொருள், ஏவல் சாதகமாக அமையாது. அதனால் தகவல் பரிமாற்றம் நடக்க முடியாமல் போகிறது .
காது கேட்காத, பேசத் தெரியாதவர்க்கும், அந்தக் குறை இல்லாதவர்களுக்கும் இடையில் தகவல் தொடர்புகளை எந்த சிக்கலும் இன்றி நடத்தச் "செயலி' ஒன்றினை அஸ்ஸாமைச் சேர்ந்த மாணவர் உருவாக்கியுள்ளார். தேஜாஸ் சுக்லா. அஸ்ஸாம் மாநிலத்தில் சில்சார் நகரில் உள்ள மத்திய பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
""ஒன்றிய அரசின் இளைஞர்களுக்கான பொறுப்புள்ள செயற்கை நுண் அறிவு திட்டத்தின் கீழ், ஓர் ஆண்டு காலமாக முயற்சி செய்து இந்த செயலியை உருவாக்கியுள்ளேன். சைகை மொழியைக் கையாளுபவரை அலைபேசியில் உள்ள கேமரா மூலம் படம் பிடித்தால் போதும். அவரது சைகைகளை பேச்சொலியாகவோ அல்லது எழுத்து வடிவிலோ உடனடியாக செயலி மொழிபெயர்த்துவிடும். இதனால் சைகை மொழியைக் கையாளுபவர் என்ன சொல்கிறார் என்பதை சைகை மொழி தெரியாதவர் எளிதாகப் புரிந்து கொள்வார்.
அதே போல் ஒருவர் பேசுவதை இந்த செயலி சைகை மொழியாகவும் மொழி பெயர்க்கும். இதனால், பேசத் தெரிந்தவர் என்ன சொல்கிறார் என்பதை பேசும், கேட்கும் திறன் இல்லாதவர் அலைபேசியில் தோன்றும் அனிமேஷன் சைகைகள் மூலம் முழுமையாகப் புரிந்து கொள்வார். அனிமேஷன் சைகைகளுக்கு மொழி அவசியம் இல்லை. இப்போதைக்கு சைகை மொழியை ஆங்கிலப் பேச்சொலியாகவோ, ஆங்கில சொல் தொடராகவோ மட்டுமே மொழிபெயர்க்க முடியும். விரைவில் எல்லா இந்திய மொழிகளில் சைகை மொழியை மொழிபெயர்க்க முடியும். எனது செயலியை ஒன்றிய அரசின் மின்னணுத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை ஏற்றுக் கொண்டுள்ளது. விரைவில் செயல்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும்'' என்கிறார் தேஜாஸ் சுக்லா.