திசை திருப்பிய கேமிரா!

"வெறும் படிப்பு மட்டுமே வாழ்க்கைக்கு உதவாது. கூடவே துறை ரீதியான அனுபவங்களையும் வளர்த்துக்கொண்டால் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்' என்கிறார் இளம் புகைப்பட கலைஞர் எம்.கே.விக்னேஷ்.
திசை திருப்பிய கேமிரா!

"வெறும் படிப்பு மட்டுமே வாழ்க்கைக்கு உதவாது. கூடவே துறை ரீதியான அனுபவங்களையும் வளர்த்துக்கொண்டால் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்' என்கிறார் இளம் புகைப்பட கலைஞர் எம்.கே.விக்னேஷ். சென்னையைச் சேர்ந்த 26 வயது இளைஞரான இவர் முகேஷ் அம்பானியின் புகைப்பட கலைஞர் மட்டுமல்ல. பாலிவுட் பிரபலங்களுடன் பிரபல விளம்பரங்களை படமெடுக்கும் முன்னணி புகைப்பட கலைஞர்களுள் ஒருவர்.

சென்னையில் அவரை நேரில் சந்தித்து பேசினோம்:

""நான் சென்னைவாசி. தற்போது மும்பையில் வசிக்கிறேன். பள்ளிப் படிப்பை ஜெய்கோபால் கரோடியா பள்ளியிலும், டி.ஏ.விகோபாலபுரம் பள்ளியிலும் முடித்தேன்.தந்தை மனோகரன் ஒரு தொழில்முறை புகைப்படக் கலைஞர். சிறுவயதில் இருந்தே அவர் எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் நானும் உதவிக்கு செல்வேன். அப்போது எனக்கென தனி கேமிரா தந்துவிடுவார். நான் விரும்பும் படங்களை எடுத்து தள்ளுவேன். அப்போது தான் எனக்கு புகைப்பட கலையில் இருக்கும் ஆர்வத்தை அப்பா புரிந்து கொண்டார். நன்றாக படிக்கவும் செய்வேன். அதனால் பிளஸ்2 முடித்தவுடன் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் மருத்துவம் படிக்க விரும்பவில்லை. புணேவில் பி.ஏ புகைப்படக்கலை படிக்க விண்ணப்பித்தேன். மூன்று ஆண்டு படிப்பு இது. படிக்கும் போதே தில்லி அருகேயுள்ள மாநிலங்களுக்கு சென்று விதவிதமான புகைப்படத்தை எடுத்து வருவேன். குறிப்பாக ராஜஸ்தான் சென்று மணல் பரப்பு, விலங்குகள், இயற்கை என வித்தியாசமான படங்கள் எடுப்பது தான் என்னுடைய பொழுது போக்கு.

மூன்று ஆண்டு படிப்பில் சிறந்த மாணவனாக நிறைவு செய்தேன். தொடர்ந்து உலகின் முன்னணி புகைப்பட கலைஞர்களுள் ஒருவரான ஜதின் கம்பானியிடம் உதவியாளராக பணியாற்றினேன். அவரிடம் ஓர் ஆண்டுக்கு மேலாக பணியாற்றி கொண்டிருக்கும் போது நிறைய தொழில் நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன். சூழ்நிலைக்கு தகுந்தவாறு பணியாற்ற தெரிய வேண்டும் என்பது முக்கியமான விஷயம்.

எனக்கு தனியாக வாய்ப்பு வர ஆரம்பித்தது. குறிப்பாக முகேஷ் அம்பானி குடும்பத்திலுள்ள நபர்களை படமெடுக்கும் குழுவில் நானும் இடம் பெற்றேன். அவர்கள் சுவிட்சர்லாந்து அழைத்துச் சென்றார்கள். அங்கே ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கி அவர்கள் அழைத்துச் செல்லும் இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து கொடுத்தேன். இப்போதும் அவர்கள் குடும்பத்திலுள்ள நபர்கள் படம் எடுக்க வேண்டும் என்றால் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள்.

விளம்பர படங்களை எடுப்பது மிகவும் நுட்பமான வேலை. ஒரு புகைப்படம் எடுப்பதற்கு 6 முதல் 7 மணி நேரம் ஆகும். ஒரு புதிய பொருள் விற்பனைக்கு வரும்போது அதை வாங்கத் தூண்டும் எண்ணத்தை அதிகரிப்பதில் விளம்பர புகைப்படம் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக உணவுப் புகைப்படத்தைப் பார்த்தவுடன் நாவில் எச்சில் ஊரவேண்டும். போட்டோகிராபி படிப்பு இக்கலையின் நுணுக்கங்களைக் கற்றுத்தந்தது.

தென்னிந்தியாவின் மிகச்சிறந்த உணவுப் புகைப்படக் கலைஞர் சென்னையைச் சேர்ந்த சசிகாந்திடம் உணவுப் புகைப்பட நுணுக்கங்களைக் கற்றது. ஒவ்வொரு அசைன்மென்டும் ஒரு மறக்க முடியாத அனுபவம்தான்.

புகைப்படம் எடுப்பதற்கு முன் அவர்களுடைய ஸ்கிரிப்ட் என்ன என்பதை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு தகுந்தவாறு ஷூட் எடுக்க தயாராக வேண்டும். படங்களை எடுத்த பின்பு போட்டோ ஷாப், எடிட்டிங், கலர் கரெக்ஷன் போன்ற பணிகளை முடிக்க வேண்டும். விளம்பர புகைப்படக் கலை எதையும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்கும் கலையைக் கற்றுத் தந்தது.

பாலிவுட் பிரபலங்கள்

கங்கனா ரணாவத், சுமீத் வியாஸ், அகன்ஷா ரஞ்சன் கபூர் போன்றவர்களையும் புகைப்படம் எடுத்திருக்கிறேன். அவர்கள் நினைத்தபடி படங்களை எடுத்து கொடுக்க வேண்டும். அப்போது தான் அடுத்த முறை நம்மை தேடி வந்து படமெடுப்பார்கள். ஒரு புகைப்பட ஷூட் எடுக்க 5 லட்சம் முதல் 20 லட்சம் வரை செலவாகும் என்பதால், நாம் எல்லா விஷயங்களுக்கும் தயாராக இருக்க வேண்டும். நம்முடைய கேமிரா ரிப்பேர் ஆகிவிட்டால் அடுத்த கேமிரா தயாராக இருக்க வேண்டும். முன் ஏற்பாடுகளை மிகுந்த கவனத்துடன் செய்திருக்க வேண்டும்.

ஃபேஷன் ஷூட் எடுக்கும் போது மாடல்கள் பேசி இப்படி போஸ் செய்தால் சிறப்பாக வரும் என்று அவர்களிடம் புரிய வைக்க வேண்டும். ஒவ்வொரு சூட்டும் தனித்தனி அனுபவங்களை கற்றுத்தரும்.

உலகம் முழுவதும் பயணம் செய்து விதவிதமான புகைப்படங்களை எடுக்க வேண்டும். முன்னணி புகைப்பட கலைஞர்களுள் ஒருவராக இடம் பிடிக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

இளைஞர்கள் அதிகம் இந்தத் துறைக்கு வர வேண்டும். நேரம்-காலம் பார்க்காமல் ஆர்வத்துடன் உழைத்தால் இந்த தொழிலில் இமயம் தொடலாம்'' என்கிறார் விக்னேஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com