இயற்கையை  நோக்கி பயணம்!

2018  வரை சுதாகர் -  நெளஷாத்  ஜோடிக்கு  நகர வாழ்க்கை கசக்கவில்லை. சுதாகர் நெல்லையைச் சேர்ந்தவர். ஆனால் மும்பைவாசியாகிவிட்டார். நெளஷாத் தஞ்சாவூரைச் சேர்ந்தவர்.
இயற்கையை  நோக்கி பயணம்!


2018 வரை சுதாகர் - நெளஷாத் ஜோடிக்கு நகர வாழ்க்கை கசக்கவில்லை. சுதாகர் நெல்லையைச் சேர்ந்தவர். ஆனால் மும்பைவாசியாகிவிட்டார். நெளஷாத் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். இருவரும் பெங்களூருவில் சந்தித்துக் கொண்டனர். இருவருக்கும் அங்கே தான் வேலை. கார்ப்பரேட் கலாசாரம், நகர வாழ்க்கை இந்த ஜோடியை மூச்சு முட்டச் செய்தது. நகரை விட்டு விலகி இயற்கையோடு இணைந்த எளிமையான வாழ்க்கை வாழ இருவரும் முடிவு செய்தார்கள்.

எப்படி இந்த முடிவு சாத்தியமானது? சுதாகரிடம் கேட்ட போது சொன்னார்:

""தொடக்கத்தில் பாண்டிச்சேரிக்கு அருகிலுள்ள ஆரோவில்லுக்குப் பக்கத்தில் தெரிந்தவரின் பண்ணை இருக்கிறது. அங்கே போய் இயற்கை விவசாயம் செய்யலாம் என்று முடிவு செய்தோம். மண்ணைப் பண்படுத்தி, களைகளை அகற்றி இயற்கை விவசாயம் குறித்த பால பாடத்தைப் படித்தோம்.

பூர்விகம் திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் பாபநாசம். அங்கே சென்று கொஞ்சம் நிலம் வாங்கி நிரந்தரமாகத் தங்கலாம் என்று தீர்மானித்தோம். நாங்கள் இருவரும் திருநெல்வேலி சுற்றுவட்டாரத்தில் நிரந்தரமாகத் தங்கத் தீர்மானித்ததற்கு காரணங்கள் உண்டு. அதற்காகப் பல ஆய்வுகள் செய்தோம். பாபநாசம் சுற்றுவட்டாரத்தில் கடந்த 100 ஆண்டுகளாக எந்தவித நிலநடுக்கம் ஏற்பட்டதில்லை. கடல் பகுதியிலிருந்து நீண்ட தூரம் விலகி இருப்பதால் கடல் நீர் மட்டம் உயர்ந்து, நிலப்பரப்பை கடல் மெல்ல மெல்ல விழுங்கினாலும் இந்தப் பகுதிக்கு இப்போதைக்கு ஆபத்தில்லை.

இங்கே பெய்யும் மழையின் அளவு 1000 மிமீ தான். மும்பையில் பெய்யும் மழையின் அளவு 3000 மிமீ. அதனால் இந்தப் பகுதியில் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு இல்லை. வற்றாத ஜீவ நதியாக தாமிரபரணி ஓடுகிறது. அதனால் தண்ணீருக்குப் பஞ்சமில்லை. இந்தப் பகுதி இன்னமும் நகரமயம் ஆகவில்லை. நாங்கள் வாங்க நினைத்த இடம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ளது. மலையில் நடந்தால் அகஸ்திய மலைக்குச் சென்று வரலாம். மலையும், அடர்ந்த மரங்களும், பச்சை நிலப்பரப்பும் இருப்பதால் அக்கினி நட்சத்திரம் சுட்டு எரிக்கும் காலத்தில் கூட வெப்பம் உணராமல் வாழலாம். இந்தப் புரிதலுக்குப் பின்தான் நாங்கள் பாபநாசம் பகுதியில் நிரந்தரமாகத் தங்கத் தீர்மானித்தோம்.

அங்கே பச்சை பசேல் இடத்தில் பதினொன்றரை ஏக்கர் நிலத்தை வாங்கினோம். கழிவுகளை பிறப்பிக்காத இயற்கை வாழ்க்கைதான் எங்கள் லட்சியம். எங்களது நிலம் வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகில் உள்ளது. அதனால் பலவித காட்டு விலங்குகள் எங்கள் வயலுக்கு வந்து போகும். பராமரிப்பு இல்லாமல் சுமார் 40 தென்னை மரங்கள் எங்கள் நிலத்தில் இருந்தன.

முதலில் நிலத்திற்கு வேலி கட்டினோம். பிறகு வேளாண்மையில் இறங்கினோம். தென்னை மரங்களை பராமரிக்கத் தொடங்கினோம். புதிய தென்னங்கன்றுகளை, பழ மரங்களை நட்டோம். அதில் வாழையும் பப்பாளியும் அடங்கும். இஞ்சி, மஞ்சளையும் ஊடு பயிராக பயிரிட்டோம். காய்கறி செடிகளையும் வளர்க்க ஆரம்பித்தோம். சாப்பிட உணவு வேணுமே.... அரிசியை எதற்கு வெளியில் வாங்கணும் என்று வயலில் ஒருபுறம் நெல் விதைத்தோம். உள்ளூர் பசுக்கள் பத்து வாங்கி வளர்க்க ஆரம்பித்தோம். எங்களின் தேவைக்கு போக மிச்சம் வரும் பாலைத் தயிராக மாற்றி விற்க ஆரம்பித்தோம். கோழிப்பண்ணையும் உண்டு. கிடைக்கும் முட்டைகளை விற்போம்.

வசிக்க வீடு வேண்டுமே... களி மண்ணால் வீடு கட்டினோம். சுண்ணாம்பு, பசும் சாணத்தைப் பூசினோம். பழைய வாசல், கதவுகள், ஜன்னல்களை வாங்கிப் புதுப்பித்துப் பொருத்தினோம். சிமெண்ட்டை தேவையான இடங்களில் மட்டும் பயன்படுத்தினோம். சுவர்களுக்கு சுண்ணாம்பு பூச்சுதான். ரசாயனம் கலந்த வண்ணக் கலவைகளைத் தவிர்த்தோம். சுவர்கள் கட்ட சூரிய ஒளியில் காய வைக்கப்பட்ட செங்கல்களை பயன்படுத்தினோம்.

உள்ளூர் கொத்தனார்கள்தான் வீடு கட்டிக் கொடுத்தார்கள். தென்னை ஓலையால் கூரை வேய்ந்தோம். வீடு கட்ட இயற்கையான பொருள்களால் வீடு கட்டும் "தணல்' அமைப்புடன் கலந்து ஆலோசித்தோம். வீடு கட்டுவதில் அனுபவமுள்ள நண்பர் ஒருவரும் உதவினார். சமூக வலைத்தளங்களின் மூலம் சில தன்னார்வலர்களும் வீடு கட்டுவதில் உதவினார்கள்.

தென்னை மரங்களில் கிடைக்கும் தேங்காய்களிலிருந்து "குளிர் அழுத்த' முறையில் தேங்காய் எண்ணெய் தயாரித்து விற்கிறோம். துளசி, கருவேப்பிலை இலைகளை உலர்த்தி பொடி செய்து விற்கிறோம். நிலங்களின் வேலிகளை ஒட்டி நிறைய பனை மரங்கள் உண்டு. அதில் பதநீரை இறக்கி இயற்கை முறையில் ரசாயனம் கலக்காமல் கருப்பட்டி தயாரித்து விற்கிறோம். இந்தப் பகுதியில் யாரும் கருப்பட்டி தயாரிப்பதில்லை. இந்த பாரம்பரிய தொழிலை பாதுகாக்கும் அவசியம் ஏற்பட்டுள்ளது'' என்கிறார் இயற்கை வாழ்க்கை வாழும் சுதாகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com