வறுமைக்கோட்டிலிருந்து வண்ணக்கோடு!

பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை தங்களைப் போல் வளர்க்க வேண்டும் என நினைப்பது இயல்பு.
வறுமைக்கோட்டிலிருந்து வண்ணக்கோடு!


பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை தங்களைப் போல் வளர்க்க வேண்டும் என நினைப்பது இயல்பு. மருத்துவம் படித்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளை மருத்துவர்களாக்க வேண்டும் என்றும், ஆசிரியராக பணியாற்றுவோர் தங்கள் பிள்ளைகளும் ஆசியரியராக வேண்டுமென அவரவர் பிள்ளைகளை பொருளாதாரம் மற்றும் செல்வாக்கை பயன்படுத்தி தாங்கள் சார்ந்த துறைகளில் இழுத்துச் செல்லும் பெற்றோர்களை சமுதாயத்தில் நம்மால் காணமுடிகிறது. 

ஆனால் தன்னை விட்டு பிரிந்து சென்ற ஓவியர் தொழில் செய்து வந்த தந்தையை விட மிகப்பெரிய ஓவியராக வேண்டும் என வறுமையிலும் சாதிக்கத் துடிக்கும் கமுதி இளைஞர் ஓவியத்தில் பல சாதனைகளைப் படைத்து வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பேரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது தந்தை முனியசாமி அப்பகுதியில் எழுத்து ஓவியராக திகழ்ந்துள்ளார். 

மணிகண்டன் 5 வயது குழந்தையாக இருக்கும் போது இவரது தந்தை முனியசாமிக்கும் தாயார் சண்முகவள்ளிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் மணிகண்டனையும், கை குழந்தையான இரண்டாவது மகன் சிவபிரகாஷையும் சண்முகவள்ளி கூலி வேலை பார்த்து படிக்க வைத்து, தந்தையை விட மிகப் பெரிய ஓவியராக வேண்டும் என அறிவுறுத்தி வளர்த்துள்ளார். சிறுவயதில் தந்தையை பிரிந்த சூழலில் ஓவியம் வரைய மணிகண்டன் தொடங்க ஆரம்பித்து இதுவரை 23 விருதுகள் பெற்று சாதனை படைத்துள்ளார். 

அனைத்து வசதிகள் இருந்தும், பலவித பயிற்சிகள் கொடுத்தாலும் அவர்கள் சாதனையாளர்களாக மாறுவதில்லை. ஆனால், குக்கிராமங்களில் உடுக்க உடையும், உண்ண உணவும் இன்றி பசியுடன் வாழும் ஏழை, எளிய இளைஞர்களிடம் ஏராளமான திறமைகள் மறைந்து கிடக்கின்றன. இவற்றில் சில மட்டும் வெளி உலகிற்கு தெரிய வருகிறது. தனது வறுமையை பொருட்படுத்தாமல் ஓவியத்தில் சாதனை புரிவது ஒன்றே குறிக்கோள் என பல்வேறு படைப்புகளை படைத்து, சாதனைகளுக்கு சொந்தகாரராக மாறி கொண்டிருக்கிறார் இளம் ஓவியர் மணிகண்டன்.

கோட்டோவியம், பென்சில் ஓவியம், நீர்வண்ண ஓவியம், அக்ரலிக், ஆயில் பெயிண்டிங், சுவர் ஓவியம், தத்ரூப ஓவியம் போன்ற அனைத்து ஓவியங்களிலும் சிறந்து விளங்கி வருகிறார். ஓவியம் வரைவது மட்டுமன்றி அடுத்தவர்களுக்கு இதனை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் ஓவிய ஆசிரியர் பயிற்சியும் முடித்தார்.

தான் கடந்து வந்த பாதையில் தன்னைப் போல அடிப்படை வசதி கிடைக்காத கிராமப்புற மாணவர்களை தேர்வு செய்து இலவச ஓவியப் பயிற்சி அளித்து வருகிறார். திருத்தணியில் உள்ள தமிழ்நாடு ஓவிய தொழில் நுட்ப பயிற்சி மையத்தில் 2 ஆண்டுகள் படித்து ஓவியத்தில் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

""சிறு வயதிலேயே தந்தையை பிரிந்து வறுமையின் பிடியில் வாழும் என்னைப் போன்ற இளம் ஓவியர்களுக்கு தமிழக அரசு உதவி, ஊக்கப்படுத்த வேண்டும். எனவே எத்தனையோ அரசு பள்ளிகளில் ஓவிய ஆசிரியர் வேலை காலியாக உள்ள நிலையில், என்னைப் போன்ற இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்'' என்றார் மணிகண்டன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com