சம்ஸ்கிருதம் பேசும்  ஐஃபுனா நுஜும்!

இஸ்லாமியர் ஒருவரால் சரளமாக  சம்ஸ்கிருதம் எழுதப் படிக்க வருமா? சுலோகங்கள் சொல்ல வருமா?  தமிழகத்தில்  முஸ்லிம் லீக் தலைவர் மேல்விஷாரம்  அப்துல் லத்தீஃப்  சம்ஸ்கிருதத்தை மேற்கோள் காட்டி பேசுவார்.
சம்ஸ்கிருதம் பேசும்  ஐஃபுனா நுஜும்!


இஸ்லாமியர் ஒருவரால் சரளமாக சம்ஸ்கிருதம் எழுதப் படிக்க வருமா? சுலோகங்கள் சொல்ல வருமா? தமிழகத்தில் முஸ்லிம் லீக் தலைவர் மேல்விஷாரம் அப்துல் லத்தீஃப் சம்ஸ்கிருதத்தை மேற்கோள் காட்டி பேசுவார். சுலோகங்கள் சொல்வார்.

எந்த தொடர்பும் இல்லாத சமஸ்கிருதத்தை இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்பிற்காக முதன்மைப் பாடமாக எடுத்ததுடன் நின்றுவிடாமல் இளங்கலை (பி.ஏ) முதுகலை (எம்.ஏ) இறுதித் தேர்வுகளில் திருவனந்தபுரம் கேரள பல்கலைக்கழகத்தின் முதல் ராங்க் மாணவியாக தேர்வு பெற்றுள்ளார் இஸ்லாமிய பெண்ணான ஐஃபுனா நுஜும் (22).

படித்து முடித்து வேலை கிடைக்குமோ கிடைக்காதோ என்று சம்ஸ்கிருதம் பாடத்தைப் படிக்க இந்து சமயத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளே தயங்குவார்கள். இந்தச் சூழலில் இஸ்லாமியப் பெண் எப்படி சம்ஸ்கிருதத்தைப் படிக்கத் தீர்மானித்தார் ? ஐஃபுனா நுஜும் விளக்குகிறார்:

""நான் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தவள். வாப்பா (அப்பா) நஜுமுதீன் பெயிண்ட்டராக தின சம்பளத்திற்குப் போய் வருகிறார். வயது ஐம்பதாகிறது. நாற்பத்தி மூன்று வயதாகும் உம்மா (அம்மா) நபீஸத் பீவி வீட்டு நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்கிறார். நான் ஒரே வாரிசு. அதனால் செல்லம் அதிகம். சிறுவயது முதலே பாடுவது பிடிக்கும். அந்த உந்துதலில் கர்நாடக சங்கீதத்தைக் முறையாகக் கற்றுக் கொண்டேன். கேரள இஸ்லாமிய பாடலில் பிரசித்தி பெற்ற பிரிவான "மாப்பிள்ளைப் பாடல்'களையும் அருமையாகப் பாடுவேன். அப்படிப் பாடி பள்ளி, கல்லூரி கலை விழாக்களில் பரிசுகள் பெற்றுள்ளேன்.

ஐந்தாம் வகுப்பு முதல் சம்ஸ்கிருதம் மொழியை இரண்டாம் மொழியாக எடுத்து படித்து வந்தேன். பள்ளிப் படிப்பு முடிந்ததும் எந்தப் பட்டப்படிப்பில் சேர்வது என்று குழம்பவே இல்லை. எனக்குப் பிடித்த சம்ஸ்கிருதம் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்தேன். மூன்று ஆண்டு படிப்பின் இறுதியில் நடந்த தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று கேரள பல்கலைக்கழகத்தின் முதல் ரேங்க் பெற்று தேர்வு பெற்றேன். அடுத்ததாக சம்ஸ்கிருதத்தில் முதுகலை பட்டப்படிப்பில் சேர்ந்து அதிலும் முதல் ரேங்க் பெற்றுள்ளேன்.

கர்நாடக சங்கீத வகுப்புகளை நான்கு ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். எனது குருக்களுடன் சேர்ந்து கர்நாடக சங்கீத மேடை நிகழ்ச்சிகள் நடத்தியிருந்தாலும், தனியாக வாய்பாட்டு கச்சேரி நடத்தவில்லை. அந்தக் குறையைத் தீர்க்க, விரைவில் தனியாக மேடை கச்சேரி நிகழ்த்த யோசித்து வருகிறேன். கேரளத்தில் கரோனா பாதிப்பு அதிகம் என்பதால் மேடை நிகழ்ச்சி சாத்தியமாகவில்லை.

"எதற்காக சம்ஸ்கிருதம் எடுத்துக் படிக்கிறாய் என்று கேட்காதவர்கள் இல்லை. "எனக்கு சம்ஸ்கிருதம் பிடித்துப் போய்விட்டது. அதனால் படிக்கிறேன்' என்று பதில் சொல்வேன். வீட்டில் பெற்றோர்கள் "உனக்கு என்ன படிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அதைப் படி' என்று சொல்லிவிட்டார்கள். எங்கள் சமூகத்தில் யாரும் நான் சம்ஸ்கிருதம் படிப்பதைத் தடுக்கவில்லை. விமர்சிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை. அரசு கல்லூரி என்பதால் கல்விக் கட்டணம் பெரிதாக இல்லை. எனது வீடு பாலோடுக்கு அருகில் உள்ளது. தினமும் கல்லூரிக்கு வர பஸ்ஸில் இரண்டு மணி நேரம், வீடு திரும்ப இரண்டு மணி நேரம் பயணித்தேன். கரோனா காலங்களில் ஆன்லைன் வகுப்புக்கள் நடந்தன.

கேரளத்தில் அநேக இஸ்லாமிய ஆண்கள், பெண்கள் சம்ஸ்கிருதம் படித்து பள்ளிகளில் கல்லூரிகளில் ஆசிரியர்களாகப் பணிபுரிகிறார்கள். நான் படித்த பல்கலைக்கழகக் கல்லூரியில் மூன்று பெண் உதவிப் பேராசிரியர்கள் இஸ்லாமியர்களே. கேரள பல்கலைக்கழகத்தின் சம்ஸ்கிருதத் துறையின் தலைவராக ஒரு இஸ்லாமியப் பெண்மணி தான் பேராசிரியராக இருக்கிறார்.

முதுகலை வகுப்பில் நான் மட்டும்தான் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவள். சம்ஸ்கிருதத்தின் ஒலி நயம்தான் என்னைக் கவர்ந்தது.

எங்களது வேதம் இருக்கும் அரபு மொழியின் சந்தங்கள் போல சமஸ்கிருதத்திலும் இருப்பதும் என்னை சம்ஸ்கிருதத்துடன் நெருக்கமாக்கியிருக்கலாம். ஹிந்தி, வங்காளி, குஜராத்தி, மராத்தி, காஷ்மீரி, அரியான்வி, நேபாளி, ஒரியா, கொங்கணி, மைதிலி, சிந்தி, பஞ்சாபி, முதலிய மொழிகளுக்கு சம்ஸ்கிருதம் தான் மூல மொழி. சம்ஸ்கிருதத்தில் தண்ணீரைக் குறிக்க 70 சொற்களும், யானையைக் குறிக்க 100 சொற்களும் இருக்கிறதாம். பாடம் எடுத்த சம்ஸ்கிருதப் பேராசிரியர் சொல்வார்.

இலக்கணமும் இலக்கியமும் சிறந்திருக்கும் மொழி சம்ஸ்கிருதம். மலையாளத்திலும் அதிகமான சம்ஸ்கிருதத் சொற்கள் இருக்கின்றன.

ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களின் பல அத்தியாயங்கள் பாடமாக இருந்தன. கோயிலில் செய்யப்படும் பூஜைகள், யாகங்கள் குறித்தும் பாடங்கள் இருந்தன. சம்ஸ்கிருதம் நன்றாக எழுதுவேன். எனது மன ஓட்டத்தை சம்ஸ்கிருதத்தில் அப்படியே வடிக்க முடியும். வேகமாக பேச இயலாது. இதற்குக் காரணம் வகுப்பில் சம்ஸ்கிருதம் சரளமாகப் பேசப்படாததுதான்.

சம்ஸ்கிருதப் பாடப் புத்தங்கள்வெளியே விலைக்கு கிடைக்காது. கல்லூரி, பல்கலைக்கழகத்தின் நூல் நிலையத்தில் இருக்கும் பழைய நூல்களையே பயன்படுத்திக் கொள்வோம். அடுத்தது எம். பில் படிக்கணும். பி.ஹெச். டி செய்யவும் ஆசை இருக்கிறது. பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ சம்ஸ்கிருத ஆசிரியையாக வேண்டும் என்பது லட்சியம்.

நான் சம்ஸ்கிருதம் இளங்கலை பட்டப்படிப்பில் ராங்க் பெற்றுத் தேறியதும் சம்ஸ்கிருத ஆசிரியர் ஒருவர் என்னைப் பாராட்ட வந்திருந்தார். அப்போது "குழந்தைகளுக்காக கேரளத்தில் முதன் முதலாக சம்ஸ்கிருதத் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கப் போகிறேன். படப்பிடிப்பை வந்து பார்..'. என்று அழைப்பு விடுத்தார். நான் நன்றாகப் பாடுவேன் என்று தெரிந்ததும், படத்தில் பாட வாய்ப்பு கொடுத்தார். முதுகலை முதல் ஆண்டு படிக்கும் போதுதான் குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்பட்ட "மதுரஸ்மிதம்' படத்தின் படப்பிடிப்பு நடந்தது. திரைப்படத்தில் தனியாகவும், குழுவினருடன் சேர்ந்தும் தலா ஒரு பாடல் பாடியுள்ளேன். அதே தயாரிப்பாளர் இரண்டாவது சம்ஸ்கிருதப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படமும் குழந்தைகளுக்கானது. அந்தப் படத்திலும் பாடல்களை நான் பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும்..'

எப்படி இஸ்லாமியர்கள் சம்ஸ்கிருதம் படித்து ஆசிரியர்களாகப் பணிபுரிகிறார்களோ அப்படி, நம்பூதிரி பிராமண வகுப்பைச் சேர்ந்த பலரும் அரபி படித்து அரபு ஆசிரியர்களாகப் பணிபுரிகிறார்கள். கோபாலிகா அந்தர்ஜனம் 1980 வாக்கில் பிற சமூகத்திலிருந்து முதல் அரபி ஆசிரியரானார். பிறகு உள்ளூர் இஸ்லாமியர்கள் வருத்தப்படுகிறார்கள் என்று கூறி வேலை மறுக்கப்பட்டது. கோபாலிகா டீச்சர் கேரள உயர் நீதிமன்றம் சென்று ஆணை பெற்றுவந்து வேலையில் சேர்ந்தார்.. 2016-இல் பணி மூப்பு பெற்றார்'' என்கிறார் ஐஃபுனா நுஜும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com