இசைக்குடும்பம்

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள் பாலகணேஷ்-பாகேஸ்வரி இருவரும் நாதஸ்வர தம்பதிகள்.
இசைக்குடும்பம்


திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள் பாலகணேஷ்-பாகேஸ்வரி இருவரும் நாதஸ்வர தம்பதிகள். இப்போது அவர்களது வாரிசுகளும் நாதஸ்வரம் கற்றுக்கொண்டு ஒட்டு மொத்த குடும்பமே நாதஸ்வரம் வாசித்து இசைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார்கள்.

தில்லானா மோகனாம்பாள் புகழ் கலைமாமணி எம்.பி.என் பொன்னுசாமியிடம் சிறுவயதில் நாதஸ்வரம் வாசிக்கக் கற்ற பாலகணேசன் பின்னர் மாவட்ட இசைப்பள்ளியில் மூன்று ஆண்டுகள் நாதஸ்வரம் பயின்று மாவட்டத்திலேயே முதல் மாணவராகத் தேறியவர்.தற்போது கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் நாதஸ்வர வித்வானாக பணியாற்றி வருகிறார். குடும்பமே நாதஸ்வரம் வாசிக்கும் அனுபவம் பற்றி கேட்ட போது சொன்னார்:

""நாங்கள் இருவரும் ஜோடியாக மேடையில் வாசிப்பதை பார்த்த பலர் பிரமிப்பாக பார்ப்பார்கள். கணவன் -மனைவி இருவருக்கும் ஒரே தொழில் என்பதை ஆச்சரியமாக பார்ப்பார்கள். இதே மாதிரி தொழில் எங்களுக்கும் கிடைக்காதா என்பதை பொறாமையாக பார்ப்பார்கள். இப்போது எங்களுடைய இரு மகள்களும் எங்களிடமிருந்து நாதஸ்வரம் வாசிக்க கற்றுவருகிறார்கள். காலையில் குடும்பமே உட்கார்ந்து பயிற்சி செய்வோம். வீடே அமர்க்களப்படும். குறிப்பாக என்னுடைய மனைவி பாகேஸ்வரி என்னுடைய மகள்களுக்கு மட்டுமல்ல பல குழந்தைகளுக்கும் நாதஸ்வரம் வாசிக்க கற்றுக்கொடுத்து வருகிறார்'' என்றார் பாலகணேஷ்.

""நான் சென்னை பெரம்பூரை சேர்ந்தவர். ஏழுவயதில் நாதஸ்வரம் வாசிக்க ஆரம்பித்தேன். பத்து வயதில் சிவாவிஷ்ணு கோயிலில் முதல் அரங்கேற்றம். இசை மீது பற்றுக்கொண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. இசைத்தமிழ் பட்டம் பெற்றேன்.இதுவரை தனியாகவும் கணவருடன் சேர்ந்தும் 3000 நிகழ்ச்சிகளுக்கு மேல் நாதஸ்வரம் வாசித்து இருக்கிறேன். என்னுடைய சிறுவயதில் அப்பா, தாத்தாவை பார்த்து தான் நாதஸ்வரம் வாசிக்க கற்றுக்கொண்டேன். நாதஸ்வரம் என்பது கடினமான வாத்தியம். ஆண்கள் மட்டுமே வாசிக்க முடியும் என்பதை உடைத்து. இப்போது பெண்களும் வாசிக்கிறோம். பெண்கள் அதிகம் இந்தத்துறைக்கு வர வேண்டும்.

இப்போது என்னிடம் 10 முதல் 15 வயதுடைய பெண்கள் 5 பேர் நாதஸ்வரம் வாசிக்க கற்றுவருகிறார்கள். என்னுடைய மகள்கள் ஹரிணி, கனிமொழி இருவரும் எங்களிடமிருந்து நாதஸ்வரம் வாசிக்க கற்றுக்கொண்டதை பெருமையாக நினைக்கிறோம். ஆரம்ப காலத்தில் மேடையில் அப்பாவுடன் வாசிப்பேன். திருமணத்திற்கு பின் கணவருடன் வாசிப்பேன். இப்போது என்னுடைய மகள்களுடன் நாதஸ்வரம் வாசிப்பது மகிழ்ச்சியாக உள்ளது'' என்கிறார் பாகேஸ்வரி.

நாதஸ்வர இசையில் சிறப்பான இடத்தைப் பெறுவதே லட்சியம்'
என்கின்றனர் இந்த நாதஸ்வரத் தம்பதிகள்.

- ராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com