காமராஜரை வணங்கிய எம்.ஜி.ஆர்
By DIN | Published On : 13th September 2021 07:38 PM | Last Updated : 13th September 2021 07:38 PM | அ+அ அ- |

தனது இல்லத்திற்கு எத்தனையோ தலைவர்களை அழைத்து விருந்து கொடுத்து மகிழ்வித்தவர் எம்.ஜி.ஆர்.
அவருக்கு, ஒரே ஒரு முறை காமராஜரை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து கொடுக்க வேண்டும் என்பதுதான் அந்த விருப்பம். ஆனால் எப்போது அழைத்தாலும் காமராஜர் சிரித்தபடி"சொல்றேன்' என்கிற ஒற்றை வார்த்தையால் தவிர்த்து விடுவார்.
ஒரு முறை சிவாஜி, எம்.ஜி.ஆர் பங்கு பெற்ற ஒரு விழாவிற்கு முதல்வர் காமராஜர் வந்திருந்தார்.
காமராஜரை வழியனுப்பும் போது மீண்டும் அழைப்பு விடுத்தார் எம்.ஜிஆர். அப்போதும் அதே புன்னகை மாறாமல் "ராமச்சந்திரா நான் உன் இல்லம் வரக்கூடாது என்றில்லை. உன் வீட்டு விருந்து பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். அறுசுவை உணவும் மீன் இறைச்சியும் அசைவ உணவுகளும் நிறைந்திருக்கும் என்று கூறுவார்கள். நான் மக்கள் ஊழியக்காரன் ரெண்டு இட்லி, தயிர் சோறு தான் எனக்கு சரிப்படும் உன் வீட்டில் அறுசுவை உணவு சாப்பிட்டு விட்டால் திரும்பவும் அந்த ருசியை நாக்கு தேடும்..அதுக்கு நான் எங்கே போறது' என்று கூற ஆடிப்போனார் எம்.ஜி.ஆர்.
தன்னையும் அறியாமல் காமராஜரை கைகூப்பி வணங்கினார் எம்.ஜி.ஆர்.