ரோஜா மலரே! - 106: பண்புகளை கற்றுத்தந்த திரையுலகம்! - குமாரி சச்சு

அமைதியான இயக்கத்திற்குச் சொந்தக்காரர், "ப' வரிசையில் படங்களுக்குப் பெயர் வைத்து,  புகழ்பெற்ற இயக்குநர் பீம்சிங். எனக்கு அவரை நன்றாகத் தெரியும். அவருக்கும் என்னைச் தெரியும்.
ரோஜா மலரே! - 106: பண்புகளை கற்றுத்தந்த திரையுலகம்! - குமாரி சச்சு

அமைதியான இயக்கத்திற்குச் சொந்தக்காரர், "ப' வரிசையில் படங்களுக்குப் பெயர் வைத்து, புகழ்பெற்ற இயக்குநர் பீம்சிங். எனக்கு அவரை நன்றாகத் தெரியும். அவருக்கும் என்னைச் தெரியும். அவருடைய படங்களில் உணர்ச்சிகரமான காட்சிகள் இருக்கும், நகைச்சுவை காட்சிகள் நம்மை சிரிக்க வைக்கும். எல்லாம் இருந்தும், அவர் அதைப் படமாக்கும் போது எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அமைதியாகப் படமாக்குவார்.

அவர் எடுத்த "சகோதரி' படத்தில் சந்திரபாபு நடித்திருப்பார். நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக இருக்கும். அவர் இயக்கத்தில் நடிக்க, அப்பொழுது எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் படத்தில் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைபட்டேன். ஆனால் அப்பொழுது பிஸியாக நகைச்சுவை பாத்திரத்தில் நடித்துக் கொண்டு இருந்தேன். ஆனாலும் நானும் சுருளிராஜனும் "கணவன்' என்ற படத்தில் நடித்தோம்.

நாம் செட்டுக்குள் நுழைத்தவுடன் பீம்சிங் சார் கேட்கும் ஒரே கேள்வி, "வசனங்களைப் பார்த்து கொண்டீர்களா?' "ஆமாம்' என்று சொன்னால் ஒரு மானிடர் பிறகு "டேக்' என்பார். திருத்தம் எதுவும் சொல்ல மாட்டார். கதாபாத்திரத்தின் நடிப்பில் நமக்கு இது தான் தேவை என்று அவரே முடிவு செய்து விடுவார். அவரிடம், "இன்னுமொரு டேக் எடுக்கலாம் சார்?', என்று கேட்டால், "வேண்டாம் இது போதும்' என்று சொல்லி விடுவார்.

அவருடைய உதவி இயக்குநர் ஒருவரிடம் ஒரு நாள் கேட்டேன். "என்ன அவர் ஒரே டேக்கில்" ஓகே' என்று சொல்லிவிட்டாரே, நாங்க அதுக்கு மேலே நல்லா பண்ணமாட்டோம் என்று இயக்குநர் நினைக்கிறாரா? இன்னுமொரு டேக் இருந்தால் நாங்க , முதல் டேக்கை விட நன்றாக நடிக்க முடியும் என்று' என்று அவரிடம் சொன்ன உடனே, "அவருக்கு என்ன வேணும் என்று மனதில் தோன்றுகிறதோ, முதலில் கேமரா வரைக்கும் சரியாக இருந்தால், அடுத்த "டேக்' கேட்க மாட்டார். இது பீம்சிங் சாரின் ஸ்டைல்', என்று சொன்னார். அவருடைய "களத்தூர் கண்ணம்மா', "பாசமலர்' படங்களை இயக்கும் போது நான் செட்டில் போய்ப் பார்த்திருக்கேன். என்ன தான் கனமான காட்சிகளைப் படம் எடுத்தாலும், அமைதியாகச் செய்வார். நான் அப்படிப்பட்ட இயக்குநர்களிடம் வேலை செய்திருக்கேன்.

அடுத்தது சொல்லப் போவது இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்ச பற்றி. பஞ்சு சாரை தான் செட்டில் அதிகம் பார்க்க முடியும். கிருஷ்ணன் அப்படியே செட்டில் இருந்தாலும், அமைதியாகப் படப்பிடிப்பை கூர்ந்து கவனித்து வருவார். அவர் பஞ்சு சாரிடம் படப்பிடிப்புக்கு வருவதற்கு முன்னரே, கலந்து ஆலோசித்து விடுவார். படப்பிடிப்பு எல்லாம் பஞ்சு சார் பொறுப்பு. படத்தொகுப்பு கிருஷ்ணன் சார் பொறுப்பு. படப்பிடிப்பை பார்த்து, அவருக்கு ஏதேனும் சந்தேகம் வந்தது என்றால், பஞ்சு சாரிடம் அதைப் பற்றிக் கேட்பார். ஆனால் நடிகர்களிடம் எதுவும் பேசமாட்டார்.

பஞ்சு சார் சரியான நேரத்துக்கு வர வேண்டும் என்று எதிர்பார்ப்பார். அது மட்டுமல்ல; வசனம் சரியாக உச்சரிக்க வேண்டும் என்று விரும்புவார். முகபாவம் அந்த கதாபாத்திரத்திற்குச் சரியாக இருக்க வேண்டும் என்பார். நான் கதாநாயகியாக நடித்த முதல் படம் "அன்னை' . எனக்கு டெஸ்ட் ஷூட் நடத்தியது கிருஷ்ணன்- பஞ்சு. அந்த முறையில் அவரை என்னால் மறக்க முடியாது. அவர் சொல்லும் வண்ணம் நடிகர்கள் செய்யவில்லை என்றால், கொஞ்சம் கத்திப் பேசி, தான் சொல்ல வந்ததைச் சொல்லுவார். ஆரம்பத்தில் பேசவே பயப்படுவேன். பழக ஆரம்பித்தவுடன், சில படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து ஓரளவு புகழ் பெற்றேன். அவரது படங்களிலும் நகைச்சுவை வேடங்களை மட்டுமல்ல, குணசித்திர வேடமும் ஏற்று நடித்தேன். அப்பொழுது நான் இப்படி செய்தால் நன்றாக இருக்குமா? என்று கேட்கும் அளவிற்குப் பயமில்லாமல் நடித்தேன். இதைப் பற்றிப் பஞ்சு சார் சொல்லும் போது "நீ ஆல்ரவுண்டர் ', என்று அவர் வாயால் பாராட்டும் போது மகிழ்ச்சியாக இருக்கும்.

இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணா பிக்சர்ஸில் கண்ணதாசனுடன் இருக்கும் போது எனக்குத் தெரியும். நாங்கள் அவரை கே.எஸ்.ஜி. என்றே அழைப்போம். "குட்டி கவி' என்ற பெயரும் அவருக்கு இருந்தது. நான் நடித்த "அன்னை' படத்தின் வசனமும் கே. எஸ்.ஜி. சார் தான். செட்டில் எல்லோருக்கும் வசனங்களைப் படித்துக் காண்பிப்பார். அப்புறம் அவரது இயக்கத்தில் "குலவிளக்கு' படத்தில் நடித்தேன். படம் மிகவும் கனமான கதை என்பதால், ஒரு காமெடி டிராக்கை தனியாக எடுத்தார்கள். அதன் பெயர் "குபீர் சமையல்'. இன்றுள்ள ரெடிமேட் சமையல் அப்பொழுதுதான் வந்தது.

அதை வைத்து நகைச்சுவை காட்சிகளை அமைத்தார் கே.எஸ்.ஜி சிறந்த வசனகர்த்தா, கவிஞர் வேறு. அவர் பாணி என்ன தெரியுமா? அவர் பாட்டுக்கு வசனத்தைக் கூறிவிடுவார். அவரிடம் பேப்பர், பேனா என்று எதுவுமே இருக்காது. நடிகர்கள் டேக்கில் வசனத்தைப் பேசி முடித்தவுடன், அவர் உதவியாளர் பேப்பரில் பேசிய வசனங்களை எழுதி வைத்து விடுவார். இதுதான் டப்பிங்கில் உதவியாக இருக்கும்.

நாங்கள் எல்லாம் அவர் சொல்லிக் கொடுத்த வசனத்தை, மனப்பாடம் செய்து கொண்டு இருப்போம், அவர் "டேக்' என்று கூறிவிடுவார். "ஆக்ஷன்' என்று கூறுவதற்கு முன், திரும்பவும் எங்களிடம் வந்து, நீங்கள் இப்படி சொல்லுங்கள் என்று ஒவ்வொருவருக்கும் வசனத்தை மாற்றி விடுவார். ஒரு கட்டத்தில் அவரது பாணி எங்களுக்குப் புரிந்துவிட்டது. அதனால் அவர் எதைச் சொன்னாலும்மாற்றிக்கொள்ள நாங்கள் தயாராக இருந்தோம். சுறுசுறுப்புக்கு பெயர் போனவர்.

கே. சங்கர் படத்திலும் நடித்திருக்கிறேன். அவருக்கும் நகைச்சுவை படங்களில் மிகுந்த ஈடுபாடு உண்டு. அவர் எடுத்த "கல்லும் கனியாகும்', "மிருதங்க சக்ரவர்த்தி' போன்ற படங்களில் நடித்திருக்கிறேன். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்- நடிகையர்களை குளோஸ்-அப் காட்சிகளை வைத்து ஊக்குவிப்பார். சாதாரணமாக குளோஸ்-அப் காட்சி தான் படம் பார்க்கும் மக்கள் மனதில் ஆழமாகப் பதியும். அது போலேவே நடனக்காட்சிகளையும் அழகாகப் படமெடுப்பார்.

கோபம் வராது, அப்படியே வந்தாலும் நடிகர்களிடம் காண்பிக்க மாட்டார். நடிகர்களிடம் அழகாக வேலை வாங்கி விடுவார். சமூகப் படங்களும், ஜாலியான படங்களும், கனமான படங்களுக்கும், தெய்வீக சம்பந்தபட்ட படங்களும் அவர் செய்திருக்கிறார். அவர் ஒரு சிறந்த இயக்குநர். அவர் படங்களில் நடித்தது என்னால் மறக்க முடியாத அனுபவம்.

தேவர் பில்ம்ஸ் ஆஸ்தான இயக்குநர் எம். ஏ. திருமுகம். எனக்கு மேடை நாடகம் இருந்தால் மாலை ஆறு மணிக்கு படப்பிடிப்பை முடித்து கொண்டு கிளம்ப வேண்டும்.

சின்னப்பா தேவரிடம் முன்பே சொல்லி இருப்பேன். காலையிலேயே இயக்குநர் திருமுகத்திடமும் நினைவுப்படுத்தி இருப்பேன். அப்படி சொல்லும் போது, திருமுகம் சார் "தேவர் அண்ணனிடம் நீங்கள் சொல்லி விட்டீர்களா?' என்று கேட்பார். சொல்லி விட்டேன் என்று சொன்னால், மாலை படப்பிடிப்பை முடித்து என்னை அனுப்பி விடுவார். முன்பே சொல்லிவிட்டால், நினைவுப் படுத்தக்கூட வேண்டாம். இந்தத் தயாரிப்பு நிறுவனங்களின் மூலமாகத்தான், ஒழுக்கம், நேரம் தவறாமை, முதலிய பல நல்ல பண்புகள் பலவற்றைக் கற்றுக் கொண்டேன். காலை 7 மணிக்கு கால்ஷீட் என்றால் காலை 6-45 மணிக்கே மேக்கப் போட்டுக் கொண்டு தயாராகச் செட்டில் இருக்க வேண்டும். புகழ் பெற்ற நடிகை என்றாலும், நம்மை யாரும் குறைச் சொல்லக் கூடாது.

நான் கொடுத்து வைத்தவள் என்று தான் கூற வேண்டும். நல்ல தயாரிப்பு நிறுவனங்கள், சிறப்பான இயக்குநர்கள், உடன் நடித்த நடிகர்- நடிகைகள், திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர்களுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளேன். அவர்களில் ஒருவர் என்னிடம் மிகவும் எளிமையான முறையில் பழகுவார். யார் அவர்?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com