கைகோர்ப்போம்... கரைசேர்வோம்!

இந்தியாவில் இல்லை இல்லை... உலகிலேயே முதல் முறையாக மீனவர்களுக்கு என்று ஒரு பண்பலை வானொலி சேவை தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது என்பது பெரும்பாலோருக்கு ஆச்சரியத்தைத்தரும்.
கைகோர்ப்போம்... கரைசேர்வோம்!
Published on
Updated on
3 min read


இந்தியாவில் இல்லை இல்லை... உலகிலேயே முதல் முறையாக மீனவர்களுக்கு என்று ஒரு பண்பலை வானொலி சேவை தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது என்பது பெரும்பாலோருக்கு ஆச்சரியத்தைத்தரும். மீனவர்களுக்கென்று வானொலியா... சென்னையில் அப்படி இருப்பதாகத் தெரியலையே... ஒரு வேளை கடலூரில்.. நாகப்பட்டினத்தில்... தூத்துக்குடியில் இல்லை கன்னியாகுமரியில் செயல்படலாம் என்பார்கள்.

மீனவர்களுக்காக பண்பலை வானொலி கடற்கரை. கிராமத்தில் செயல்படுகிறது என்று சொன்னால் இன்னமும் ஆச்சரியப்படுவார்கள். " கடல் ஓசை எப்எம் 90 . 4' ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பாம்பன் என்ற முழு மீனவ கிராமத்தில் மீனவர்களுக்காக மீனவர்களால் நடத்தப்படும் சமூக வானொலி ஆகும். இந்த வானொலி செயல்படத்தொடங்கி ஆறு ஆண்டுகள் ஆகின்றன.

அதிகம் போனால் 15 கி.மீ சுற்றளவு தூரம் மட்டுமே பண்பலை வானொலி நிகழ்ச்சிகளை கேட்க முடியும். அப்படி இருக்கும் போது மீனவர்களுக்காகப் பெரிதாக கடல் ஓசை வானொலியால் என்ன சேவை செய்து விட முடியும் ? வானொலியின் நிறுவனர் ஆர்ம்ஸ்ட்ராங் ஃபெர்னாண்டோ விளக்குகிறார்:

""ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் தமிழ்ப்புத்தாண்டு, குடியரசு தினம், சுதந்திர தினம், நட்புதினம், மகளிர்தினம், ஆசிரியர் தினம், சேமிப்பு தினம், ..போன்ற அனைத்து நினைவு நாள்களை ஏதாவது ஒரு விதத்தில் மீனவர்களுடன் தொடர்புபடுத்துகிறோம். உதாரணத்திற்கு கரோனா காரணமாக பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தங்களுக்குப் பிடித்த ஆசிரியரை ஒன்றரை ஆண்டு காலமாக பார்க்க முடியாமல், பேச முடியாமல் "மிஸ்' செய்வதாக உணருபவர்கள் தங்களுக்குப் பிடித்த ஆசிரியருக்கு கடிதம் எழுதுங்கள் என்று போட்டியை அறிவித்தோம்.

சிறந்த கடிதம் எழுதிய சிறார்களுக்கு பரிசுகளையும் வழங்கினோம். மகளிர் தினத்தையொட்டி பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறோம். இந்த ஆண்டு குழந்தைத் திருமணம் மற்றும் பெண்களுக்கு மறுக்கப்படும் கல்வி குறித்த கவிதை எழுதச் சொல்லி பரிசுகள் வழங்கினோம். சென்ற ஆண்டு குழந்தைகள் தினத்தையொட்டி "மண்ணையும் கடலையும் எங்களுக்கு விட்டு வையுங்கள்' என்ற தலைப்பில் ஆன்லைன் பேச்சுப் போட்டி வைத்தோம். மாற்றம் வீட்டிலிருந்து தொடங்கவேண்டும் என்பதனால் மீனவ சமுதாய பெண்களுக்கும், சிறார்களுக்கும் வானொலி நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் கொடுக்கிறோம். எல்லா நிகழ்ச்சிகளும் கடல், பொறுப்பாக மீன் பிடித்தலின் அவசியம் குறித்து அமையும்.

"கடல் ஓசை' பண்பலை வானொலியை 2016-இல் தொடங்கினேன். தொடக்கத்தில் சில மணி நேர ஒலிபரப்பாகத் தொடங்கி இரண்டு ஆண்டுகளாக இடைவெளி இல்லாமல் தொடர்ந்து முழு நேர ஒலிபரப்பாக மாற்றியிருக்கிறோம்.

காலநிலை, புயல் , கடல் வெப்பம் அதிகமாகியிருப்பது , உயர்ந்து வரும் கடல்நீர்மட்டம் , அதனால் நிலப்பரப்பு கடலால் கபளீகரம் செய்யப்பட்டு நிலப்பரப்பு குறைந்து வரும் அபாயம் , கடலில் மீனவர் பாதுகாப்பு, பிளாஸ்டிக்குகளை கடலில் போடாமல் இருத்தல், பல வகை மீன்களின் விலை, மின்சார விநியோகத்தில் ஏற்படும் மாற்றங்கள், கரோனா குறித்த செய்திகள், தடுப்பு ஊசி கிடைக்கும் இடங்கள், கரோனா விழிப்புணர்வு அறிவிப்புகள், மத்திய-மாநில அரசுகளின் மீனவர் நலத்திட்டங்கள், கடன் வசதிகள், மீனவர்களைப் போய்ச் சேர நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறோம்.

மீனவர்கள் குழந்தைகள் மேற்படிப்பிற்காக என்ன செய்யலாம் மீன் ஆராய்ச்சி குறித்த படிப்புகள் எங்குள்ளன... எப்படி மனு செய்ய வேண்டும் என்பதையும் கடல்படையில், கடலோரக் காவல்துறையில், மத்திய-மாநில மீன் வளத்துறைகளில் வேலைவாய்ப்புகள் என்று அறிமுகம் செய்கிறோம்.

மீன்ஆராய்ச்சி விஞ்ஞானிகளைஅழைத்து மீனவர் சந்தேகங்களை தீர்த்து வைக்கிறோம். பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் சேர்க்காமல், கடலை, கடல் ஆமைகளை, கடல் பசுக்களை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக வலியுறுத்தி வருகிறோம். சிறு மீன்களை பிடிக்காமல் அவை வளர்ந்து பெரிதாகி இனப்பெருக்கம் செய்ய உதவுமாறு அடிக்கடி விழிப்புணர்வு அழைப்பு விடுக்கிறோம். கடலில் விபத்து, படகு கவிழ்ந்து மீனவர் காணாமல் போனால் அது குறித்த செய்திகளை மீண்டும் மீண்டும் ஒலிபரப்பி மீட்பு பணிக்காக அழைப்பு விடுக்கிறோம்.

கடல் ஓசையில் 12 ரேடியோ ஜாக்கிகள் பணிபுரிகிறார்கள். அனைவரும் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள். கடல்ஓசையின் இயக்குநர் காயத்திரி மதுரையைச் சேர்ந்தவர். வானொலி ஒலிபரப்பில் நல்ல அனுபவம் உள்ளவர். ரேடியோ ஜாக்கிகள் களத்தில் இறங்கி மீனவர்களை, மீனவக் குழந்தைகளை பேட்டி கண்டு ஒலிபரப்புவதால் உச்சிப்புளியிலிருந்து ராமேஸ்வரம் வரை எங்கள் கடல்ஓசை இந்தப் பகுதியில் ஒரு லட்சம் மீனவ சமுதாய மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த சிறார்கள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பள்ளி, கல்வி, எதிர்கால கனவுகள், விளையாட்டு குறித்த எண்ணங்கள் "குட்டிசுட்டீஸ்' நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.

வாரி வழங்கும் கடல்தாய்க்கு நாம் வாரி இரைப்பது பிளாஸ்டிக் குப்பை ... பிளாஸ்டிக்கைத் தின்னும் மீன்களின் சுவை, தரம் குறைந்து ஏற்றுமதி செய்யப்படும் போது உரிய விலை கிடைக்காமல் போகும் சூழ்நிலையையும் புரியவைக்கிறோம். அதனால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு உணவுப் பொருள்களைக் கொண்டு போகப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், உறைகளை கடலில் எறியாமல் கரைக்கு கொண்டு வருகிறார்கள்.

ஊர்களில் நகரங்களில் ஆம்புலன்ஸ் இருப்பது போல கடலில் ஆபத்து ஏற்படும் போது விரைந்து சென்று மீனவர்களைக் காப்பாற்ற "கடல்ஆம்புலன்ஸ்' தேவை என்பதைக் "கடல்ஓசை' வலியுறுத்தி வருகிறது. "கைகோர்ப்போம்... கரைசேர்வோம்' என்ற லட்சியத்தில் செயல்படும் "கடல்ஓசை' காற்றில் கரைந்து மீனவர்களின் செவிகளை அடைந்து மனதில் நிறைகிறது'... என்கிறார்ஆர்ம்ஸ்ட்ராங் ஃபெர்னாண்டோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.