எத்தனை பெயர்கள்?

காசிக்கு இன்று "வாரணாசி' என்று பெயர்.  இது புத்தர் காலத்தில் மக்களின் பேச்சு மொழியாக வழக்கில் இருந்த பாலிமொழிச்சொல். "வாரணாசி' என்று வெள்ளைக்காரர்களுக்குச் சொல்ல வரவில்லை.
எத்தனை பெயர்கள்?


காசிக்கு இன்று "வாரணாசி' என்று பெயர்.  இது புத்தர் காலத்தில் மக்களின் பேச்சு மொழியாக வழக்கில் இருந்த பாலிமொழிச்சொல். "வாரணாசி' என்று வெள்ளைக்காரர்களுக்குச் சொல்ல வரவில்லை. அதனால் "பனாரஸ்' என்றார்கள்.

கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டே வெள்ளையர்கள் வட இந்தியாவை ஆட்சி செய்தனர். கொல்கத்தா வங்காள தேசத்தைச் சேர்ந்தது. வங்காளிகள் "வ'  என்பதை "ப' என்று வழங்கும் பழக்கமுள்ளவர்கள்.

ரவீந்திரநாத் என்பதை ரபீந்திரநாத் என்றே உச்சரிப்பார்கள். அது போன்று தங்களது மொழி வழக்கப்படி வாரணாசியைப் "பாரணாசி' என்றார்கள். அதைக் கேட்ட வெள்ளையர்கள் பாரணாசியைத் தங்கள் ஆங்கில உச்சரிப்புக்கு வசதியாக "பனாரஸ்' ஆக்கிவிட்டார்கள்.

வாரணாசி என்பதற்கு என்ன பொருள்? இத்தலத்தின் வடக்கு எல்லையாக வருணா என்ற ஆறும் அசி என்ற தெற்கு எல்லை ஆறும் காசிக்கு இருபக்கமும் ஒடுவதால் இவ்விரண்டு ஆறுகளுக்கு உட்பட்டது என்ற பொருள்படி வாரணாசி என்று பெயர் பெற்றது.

அசி என்பது வாளையும், வருணா என்பது கேடயத்தையும் உவமையாகக் குறித்து, இந்நகருக்குக் காவல் செய்வதாகக் கூறுவர்.

வாரயதி, நாசயதி என்னும் இருபெயர்கள் இணைந்த பாவம் நீக்குவது என்ற பொருள் தருவதால் வாரணாசி என்பது ஒரே சொல்தான் என்பாரும் உண்டு.

பார்வதி தேவியார் தன் காதில் அணிந்திருந்த பிரகாசமான குண்டலம் இங்கே விழுந்ததால் அதன் பிரகாசத்தைக் குறிக்கும் ஒளிமயமானது என்ற பொருளில் இத்தலம் காசி என்றாயிற்று என்றும் சொல்கிறார்கள். 

காசி என்ற சொல்லைப் பிரித்துப் பொருள் அறிய வேண்டும். "கா' தோள் சுமை. "சி' பெண் உமையவளாகிய சக்தியைத் தோளில் சுமந்து கொண்டு சிவபெருமான் ஹரித்துவாரிலிருந்து இங்கே வந்து சேர்ந்ததால் இத்தலம் காசி என்று பெயர் பெற்றது என்கிறார்கள்.

காசிக்கு ஆனந்தவனம் என்பது மற்றொரு பெயர். புராணங்களில் காசியை ருத்ரவாசம் என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.

காசியில் கங்கை வடக்கு நோக்கி ஓடுகிறது. மேற்குக் கரையில் தான் காசி இருக்கிறது. காலைச் சூரியன் கங்கையில் பட்டு தெறித்து இந்தத் தலம் முழுவதும் தனது பிரகாசத்தை வாரி இறைக்கிறது. 

காசிக்கு மகா மசானம் என்ற பெயர் வந்தது ஏன்? காசியின் தனிச்சிறப்பைக் குறிப்பதே இந்த பெயர்தான் என்று சொன்னால் வியப்பாக தோன்றலாம். ஆனால் அதுவே உண்மை.

இப்படி எல்லா தலங்களையும் போல காசிக்கும் பல திருப்பெயர்கள் இருந்தாலும், காசி என்பதே எல்லோருக்கும் தெரிந்தாலும் குறிப்பிட எளிதானதும் சொல்லும்போதே ஒரு தெய்வீக உணர்வை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாகவும் அமைந்த பெயராகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com