வாழ்வை மாற்றிய வண்ணங்கள்

ஓவியர்களின் கை வண்ணத்தில்  வியக்க வைக்கிறது சென்னை அருகேயுள்ள கண்ணகி நகர்.
வாழ்வை மாற்றிய வண்ணங்கள்

ஓவியர்களின் கை வண்ணத்தில்  வியக்க வைக்கிறது சென்னை அருகேயுள்ள கண்ணகி நகர். அடையார் மத்திய கைலாஷ் பறக்கும் ரயில் நிலையங்களில் தொடங்கி பிரம்மாண்ட சுவர்களில் நவீன ஓவியங்கள் வரைவது கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வப்போது இந்த ஓவியங்கள் மாற்றப்பட்டு வேறு ஓவியங்களையும் வரைகிறார்கள்.

சென்னையின் பெரும்பான்மையான மக்கள் ஐ.டித்துறையில் பணியாற்றுகிறார்கள். வெளியூர்களில் இருந்து வருபவர்களும் இந்தப் பகுதிக்கு வந்து செல்வதால் அவர்களைக் கவரும் பொருட்டு இந்த ஓவியம் வரையப்பட்டன.

மேலும் இந்தியாவின் மிகப்பெரிய குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அமைந்துள்ள இடம் தான் இந்த  கண்ணகிநகர். இதனை  இந்தியாவின் 5-ஆவது கலை மாவட்டமாக உருவாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு ஓவியங்கள் வரையும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள மக்களின் வாழ்க்கையும் மாறியுள்ளது.

குற்றச் செயல்களில் கண்ணகி நகர் அடிக்கடி இடம் பெறுவதை அனைவரும் அறிவார்கள்.  இப்போது சுவர்களில் வரையப்பட்டுள்ள ஓவியம் அங்கு வசிக்கும் மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

கண்ணகி நகரில் குடியிருந்து வரும்  மதியிடம் பேசினோம்:

""நான் இந்தப் பகுதியில் பல ஆண்டு காலம் குடியிருந்து வருகிறேன். "மெட்ராஸ்'  படத்தில் வரும் சம்பவங்கள் போன்று இங்கு அடிக்கடி நடைபெறும். சுவரில் எந்தத் தலைவரை வரைவது என கோஷ்டி மோதல் நடைபெறும். இப்போது இந்த ஓவியங்கள் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.  பலர் திருந்தி வாழ இது போன்ற ஓவியங்கள் காரணமாக இருக்கின்றன.

ஓவியம் ஒன்றை இரண்டு பாகங்களாகப் பிரித்து வரைகிறார்கள். கரோனா முன்பு ஆரம்பித்த வேலை இது. இடையில் கரோனா காலகட்டத்தில் யாரும் ஓவியம் வரைய வரவில்லை. ஓவியம் வரைபவர்களிடம் பேசுவதற்கு எங்கள் பகுதி மக்கள் ஆர்வமாக இருந்தாலும் அவர்களிடம் பேச இயலாது. காரணம் மின் தூக்கி வாகனங்களில் அவர்கள் உயரத்தில் நின்று வரைந்து விட்டு சென்று விடுகிறார்கள். பெரும்பாலான இடங்களில் வரைந்து முடித்துவிட்டார்கள். இரவு நேரத்தில் இந்த ஓவியங்கள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்கிறது''  என்றார்.

ஓவியர்களிடம் பேசினோம்:

""நமது செயல்கள் சுற்றுச்சூழலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, மேலும் நம்மைச் சுற்றியுள்ள சூழல் நம் அனைவரையும் பாதிக்கிறது. அதனைக் கருத்தில் கொண்டு தான் இந்த ஓவியங்கள் வரையப்படுகின்றன. இது புதுவிதமான முயற்சி. இந்தியாவின் மிகப்பெரிய குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதி இது. இங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம், அவர்கள் செயல்பாடுகளில் நிச்சயம் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் தான் இரவு பகல் பார்க்காமல் இந்த ஓவியங்களை வரையும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இந்தியாவின் பல்வேறு பகுதியிலுள்ள 15 ஓவியர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தினோம். இன்னும் தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் பணியாற்றினால் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிடும்.

தனி மனிதர்களினாலோ, ஓவியர்களோ நினைத்தால் இது போன்ற பெரு முயற்சிகள் சாத்தியப்படுத்த முடியாது. அதனால் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆகியவற்றுடன் ஸ்டார்ட் இந்தியா அறக்கட்டளை இணைந்து கண்ணகி நகரை வண்ணமயமாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது''  என்றார் ஓவியர் ஜாயிஸ்டன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com