பிரதமர்களின் அருங்காட்சியகம்!

தில்லி பல்வேறு சரித்திரக் கட்டடங்கள், தேசிய அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்களைக் கொண்டது.
பிரதமர்களின் அருங்காட்சியகம்!

தில்லி பல்வேறு சரித்திரக் கட்டடங்கள், தேசிய அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்களைக் கொண்டது. இவற்றில் பிரதமர் நரேந்திர மோடியால் அண்மையில் திறக்கப்பட்ட பிரதமர்களின் அருங்காட்சியகமும் (பிரதான் மந்திரி சங்க்ரஹாலயா) இணைந்துள்ளது.

ஜவாஹர்லால் நேரு,  இந்திரா காந்தி ஆகிய இருவருக்கும் அருங்காட்சியகமும் , நினைவு இல்லங்களும் உள்ளன.  2000 -இல் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் தில்லி லுடியென்ஸ் பகுதியில் இனி எந்த பிரதமர்களுக்கும், தலைவர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் ஏற்படுத்த மாட்டாது என முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மாற்றம் செய்து,  ஒட்டு மொத்தமாக முன்னாள் பிரதமர்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதுவரை நாட்டை 14 பிரதமர்கள் வழிநடத்தியுள்ளனர். 15- ஆவது பிரதமர் நரேந்திர மோடி.   மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைமையின் கீழ் நாடு எவ்வாறு வளர்ந்துள்ளது? ,  அந்தத் தலைவர்களின் அரசியல், சமூக சூழ்நிலை, நாட்டின் முன்னேற்ற நிலையெல்லாம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முழுமையாகக் காண ஐந்தாறு மணி நேரம் காணலாம். அருங்காட்சியகத்திலிருந்து வெளிவரும்போது, காண்போரின் சிந்தனைக்கு தீனியாக பல தகவல்கள் வைக்கப்பட்டுள்ளன. 

2018- இல் அடிக்கல் நாட்டப்பட்டு உருவான அருங்காட்சியகம். இது முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் அருங்காட்சியகம், நூலகம் இருக்கும் தீன் மூர்த்தி பவனுக்கு பின் பகுதியிருந்த புல்வெளியில் நவீன தொழில் நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 25 ஏக்கர் நிலம் கொண்ட இந்த வளாகத்தில் சுமார் 15,619 ச.மீ. பரப்பில் ரூ.306 கோடி செலவில் அடித்தளம், கீழ்தளம், முதல்தளம் என கட்டப்பட்டுள்ளன. மேல் தளத்தில் மாலை நேரங்களில் ஒலி - ஒளிக் காட்சிகளும் தயாராகின்றன. 

பழைய வழக்கமான முறையில் இல்லாமல் ஒரு புத்தாக்க முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது.   பிரதமர்கள் முப்பரிமாண ஒளிப்படவியல், கணினியால் உருவாக்கப்பட்ட தோற்ற மெய்ம்மை  அல்லது மெய்நிகர் உண்மையான தோற்றங்களை மெய்யுருவப்படுத்தப்பட்டுள்ளன.

தி வால்ஸ் ஆஃப் ஹிரோஸ்: இத்தகைய தொழில் நுட்பத்தில் முதலில் சுதந்திரத்துக்கு முந்தைய தலைவர்களான மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் வல்லபபாய் படேல் சம்பந்தப்பட்ட காட்சிகள், காணொலிகளைக் காணலாம். 

அனுபதி (உணர்வுகள்):   2047-இல் சுதந்திரத்தின் நூற்றாண்டை கொண்டாடும் நிலையில் எப்படிப்பட்ட இந்தியாவை காண விரும்புகிறீர்கள் என டிஜிட்டல் மூலமாக அதுவும் பார்வையாளர்கள் கைப்படவே எழுதி பதிவேற்றக் கூடிய வசதிகள் உள்ளன.  மேலதிக வரைபட, ஒலி, உணர்வு தகவல்களை முப்பரிமாணத்தில், நிகழ் நேரத்தில் இணைக்கும் நுட்ப அமைப்பை இணைப்பு நிஜமாக்கம்  போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி தங்கள் அனுமான பிரதமருடன் சுய படம், நடந்து செல்வது (காணொலி) ,  அவர்களது கடிதங்களும் பெற்றுக்கொள்ள முடியும்.  தனிப்பட்ட பயன்பாட்டுக்கு மட்டுமே இத்தகைய கடிதங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.  போட்டியும் வைக்கப்பட்டுள்ளன. 

அருங்காட்சியகத்தில் பல பிரமிப்புகளுடன் 40- க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.  ஜனநாயகத்தின் வாயில்கள் அனைவருக்கும் சமமாகத் திறந்திருப்பதற்கு எடுத்துக்காட்டாக சமூகத்தின் ஒவ்வொரு பிரிவு / வகுப்பிலிருந்தும் பிரதமர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர்.  ஒவ்வொருவரும் வளர்ச்சி, சமூக நல்லிணக்கம், பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் நாட்டின் பயணத்தில் ஒரு முக்கியமான தடம் பதித்துள்ளனர்.

டைம் மிஷின்:  நாட்டில் அணுசக்தி அடைந்த வளர்ச்சி, அணு எரிசக்தி, அணுகுண்டு , அணுவின் ஆக்கபூர்வமான திட்டங்கள் ஆகியவைகளில் நாடு பெற்ற வளர்ச்சியை பிரத்யேகமாகக் காட்டப்படுகிறது. 1945-ஆம் ஆண்டு டாடா நிறுவன ஆராய்ச்சி அறக்கட்டளையில் தொடங்கி 1948-இல் அணுசக்தி ஆணையம் தொடங்கப்பட்டது முதல் நிகழ்கால வளர்ச்சி வரையிலான தகவல்கள் முப்பரிமாண ஒளிப்படவியல் முறையில் இந்த டைம் மிஷன் அரங்கத்தில் காட்டப்படுகின்றன. 

ஆப்ரேஷன் சக்தி : 1998-ஆம் ஆண்டில் ராஜஸ்தான் பொக்ரானில் 45 கிலோ ஹைட்ரஜன் குண்டை அமெரிக்காவின் கண்ணில் மண்ணைத் தூவி வெடித்து சோதனை இடப்பட்ட காட்சியை நேரடியாக காணுவதைப்போன்று ஒலி-ஒளியோ அந்த ஆப்ரேஷன் காட்டப்படுகிறது. இதன் விளைவாக அமெரிக்கா, ஜப்பான், கனடா போன்ற நாடுகள் விதித்த தடை  ரஷியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் ஆதரவுடன் பொருளாதார தடைகளில் மீண்டது போன்ற தகவல்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஹெலிகாப்டர் பயணம்: நாடு எந்தெந்த துறைகளில் எவ்வாறு வளர்ச்சியை பெற்றுள்ளது? மூன்றாவது இடத்தில் காற்றாலை மின் உற்பத்தி, ரோதாங்க் முதல் லடாக் வரையில் உலகிலேயே நீளமான அடல் சுரங்கப்பாதை இணைப்பு இப்படி பல்வேறு வளர்ச்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேல் தளங்களில் லால் பகதூர் சாஸ்திரி,  இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், ராஜீவ் காந்தி, வி.பி. சிங், சந்திரசேகர், பி.வி.நரசிம்ம ராவ், தேவே  கெளடா, ஐ.கே. குஜ்ரால், அடல் பிகாரி வாஜ்பாய், டாக்டர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரின் அரசியல் சமூக தகவல்களையும்,  அறியப்படாத விவகாரங்களையும் உன்னிப்பாக காணலாம் என்கிறார் அருங்காட்சியக துணை இயக்குநர் டாக்டர் கே.ரவி மிஸ்ரா. 

"நானும் பிரதமராக என்ன செய்யவேண்டும்" என்று குழந்தை கேட்ட கேள்விக்கு பிரதமர் இந்திரா பதில் கடிதமும் அனுப்பினார். இதுபோன்ற  கடிதங்கள் எல்லாம் கிடைத்தன. ஆயிரக்கணக்கான கடிதங்கள்காட்சிப்படுத்தப்பட்டுள்ளன" என்கிறார் அருங்காட்சியகக் காப்பாளர் வேலிரி வினிதா.

லால் பகதூர் சாஸ்திரி இறந்த சமயத்தில் அமெரிக்க மாகாணம் இரு சட்டப் பேரவை பிரதிநிதிகள் சபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்ட தகவலும் இடம்பெற்றுள்ளது.

பசுமைப் புரட்சி: லால் பகதூர் சாஸ்திரி ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே பிரதமராக இருந்தார். ஆனால் அவர் பதவி ஏற்ற 1964 -லில் வறுமை, உணவு தானிய பற்றாக்குறை, பாகிஸ்தானுடான போர் என பல்வேறு சிக்கல்களோடு பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்க இந்தியாவிற்கான கோதுமை இறக்குமதிக்கும் தடைவிதிப்பு. சாஸ்திரி மாநில முதல்வர்களை கூட்டி உணவுப் பொருள்கள் வீணாவது தடுக்கும் சட்டம், ஒரு நேர (இரவு) உணவை உண்ணாமல் தவிர்ப்பது என்று நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்து, இந்திய உணவுக் கழகம், இந்திய உணவுக் கிடங்குகள், உரத் தொழிற்சாலை போன்றவைகளை உருவாக்கி 1965 -இல் உணவில் நாட்டை தன்னிறைவும் பெற வைத்து நாட்டு மக்கள் மனதில் நின்றார் சாஸ்திரி என்று கூறி அவர் பசுமை புரட்சி செய்தார் என்கிறது அருங்காட்சியகம். 

இவரது ஆட்சியில் போடப்பட்ட ஹிந்தி சுற்றறிக்கையும் இதையொட்டி 1965 -ஆம் ஆண்டு தமிழகத்தில் அண்ணா தலைமையில் ஏற்பட்ட ஹிந்தி எதிர்ப்பு போராட்ட காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளன.  

இந்திரா காந்தி: அலகாபாத் உயர்நீதிமன்றம் மறைந்த பிரதமர் இந்திராகாந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை தகுதியிழக்க செய்ய 1975 - ஆம் ஆண்டில் நெருக்கடி நிலை பிரகடனத்தை வானொலி வாயிலாக அவரே நேரடியாக அறிவிக்கும் காட்சி, அடுத்த சில நாள்களில் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட சித்திரங்கள் அவரது அரங்கில் உள்ளன. 

அஸ்ஸாம், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் போன்ற மாநிலங்களின் பயங்கர வாதங்கள், சீனாவின் நதுல்லா தாக்குதல், குறிப்பாக மூன்று விமானக் கடத்தல்களை இந்திரா கையாண்டது போன்ற நெருக்கடியான விவகாரங்களோடு, சிறையில் இருந்த தலைவர்கள் இந்திராவிற்கு எழுதிய கடிதங்களும் வைக்கப்பட்டுள்ளன.  

வங்கிகள் தேசிய மயமாக்கல், முதல் தகவல் தொடர்பு செயற்கைக்கோள், பாகிஸ்தான் அதிபருடன் சிம்லா ஒப்பந்தம் எல்லாம் இந்திராவின் சாதனைகளை எடுத்துக்காட்டுகின்றன. 

சந்திரசேகர்: சந்திரசேகர் ஆட்சிக்காலத்தில், வங்கிகளில் சேமிப்பு குறைந்தது, வர்த்தகப் பற்றாக்குறை, ரூபாயின் மதிப்பு இழப்பு போன்ற  பல நெருக்கடிகளும் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங்கின் அடுத்தடுத்த நடவடிக்கைகள்,  எவ்வளவு டன் தங்கம் இங்கிலாந்து வங்கியில் வைக்கப்பட்டது போன்ற தகவல்களோடு சந்திர சேகருக்கும் இந்திரா காந்திக்கும் நடந்த கடிதங்களும் வைக்கப்பட்டுள்ளன. 

நரசிம்ம ராவ்: சந்திரசேகர் ஆட்சியில் இருந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு நரசிம்ம ராவ்  ஆட்சிக் காலத்தில் காணப்பட்ட தீர்வுகளை வெளிப்படுத்தப்பட்டுள்ளன.  

சீர்திருத்தம், உரிமங்கள் முறை (லைசென்ஸ் ராஜ்) ரத்து, தனியார் முதலீடுகள், வெளிநாட்டு முதலீடுகளுக்கான அனுமதி என தாராளமயமாக்கல் நடவடிக்கைகள், வெளிநாட்டு கொள்கைகளில் சீர்திருத்தம் என நாட்டை பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீட்டதாக ராவ் ஆட்சியை புகழப்பட்டுள்ளது. 

நம்பிக்கையில்லா தீர்மானங்கள்: சந்திர சேகர், வி.பி. சிங், வாஜ்பாய் போன்றவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியும் ராஜிநாமாக்களும் விரிவாக எடுத்துவைக்கப்பட்டுள்ளன.  

1999 மார்ச்சில் திமுக ஆட்சியைக் கலைக்காத காரணத்தால் அதிமுக, வாஜ்பாய் அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக்கொண்டது. ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை வாஜ்பாயை இழந்தது எனக் கூறி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல, சிறுபான்மை அரசாக இருந்த நரசிம்மராவ் ஆட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்கட்சி வரிசையில் இருந்த ஜேஎம்எம் கட்சி ஆதரவு பெற்றது லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கு போன்றவைகளும் எடுத்துவைக்கப்பட்டுள்ளன. 

மொரார்ஜி தேசாய்: பாரத் ரத்னா,  பாகிஸ்தானின் நிஜான் -இ-பாகிஸ்தான் ஆகிய இரு விருதுகளைப் பெற்ற ஒரே பிரதமராக மொரார்ஜி தேசாய் பற்றி கூறும் அவரது அரங்கு குஜராத்தில் தொடர்ச்சியாக மூன்று முக்கிய விவகாரங்களுக்காக காவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியவர் என்கிறது.  பத்திரிகை சுதந்திரம், ஆகாஷ்வாணி- வானொலி, தூர்தர்ஷன் போன்றவைகளுக்கு சுய அதிகாரம் வழங்கும் பிரசார் பாரதி, லோக்பால் மசோதா  போன்றவைகளுக்கு அடித் தளம் மொரார்ஜி தேசாய் ஆட்சி என்கிறது. 

சரண்சிங்: இந்திய வறுமை, ஜமீன்தார் முறை நீக்கம் போன்றவை குறித்து சரண் சிங் எழுதிய "கண்ணில் படாத புத்தகங்கள்' அருங்காட்சியகத்தில் உள்ளன.

ராஜீவ் காந்தி: போஃபர்ஸ் ஊழலால் ராஜீவ் காந்தி வீழ்ந்த கதை முழுமையாக வைக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் கார்கில் யுத்த வெற்றிக்கு அதே போஃபர்ஸ் பீரங்கியே வெற்றியை கொடுத்தது என்றும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. 

ஐ.கே.குஜ்ரால்: நெல்சன் மண்டேலா தென் ஆப்பிரிக்க அதிபரானவுடன் முதல் வெளிநாட்டு பிரதமராக சந்தித்த ஐ.கே. குஜ்ரால்,  வி.பி. சிங் ஆட்சியில் காஷ்மீர் பண்டிதர்கள் வெளியேற்றப்பட்டது,  ஜம்மு காஷ்மீருக்கு பயணித்த  தேவே கெளடாவின் அனுபவங்கள் எல்லாம் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன. 

படங்கள்: டி.ராமகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com