நிறம் மாறும் உலகில்...!

சங்க அகப்பொருள் இலக்கியங்களில் முதற்பொருளாகக் கருதப்படும் ஆறு பெரும் பொழுதுகளில் ஒன்று குளிர்காலம்.  
நிறம் மாறும் உலகில்...!


சங்க அகப்பொருள் இலக்கியங்களில் முதற்பொருளாகக் கருதப்படும் ஆறு பெரும் பொழுதுகளில் ஒன்று குளிர்காலம்.  இலையுதிர் காலம் எனக் கூறப்படும் "ஆட்டம்ன்' என்று பொதுவாக அழைக்கப்படும் இக்காலம் அமெரிக்காவில் "ஃபால்'  என்று அழைக்கப்படுகிறது.

நிறம் மாறும் இலைகள் : 

அமெரிக்காவில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்கள் இலையுதிர் காலமாகும்.  இக்காலம் ஆரம்பித்தவுடன் அங்குள்ள "மேப்பிள்' மரத்தின் இலைகள் பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு மற்றும் பிரவுன் நிறங்களாக மாறிவிடும்.  அம்மரங்கள் இருக்கும் வழியெங்கும் மட்டுமல்லாமல் மரங்கள் அடர்ந்து காணப்படும் பகுதிகளிலும் காட்சி தருவது காண்பவர்களை பரவசப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும். இதனை "ஃபால் கலர்ஸ்'  என்றும் 
"ஃபாலியேஜ்' என்றும் குறிப்பிடுவார்கள்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வண்ண மலர்களைக் கொட்டிக் குவித்தாற்போலக் காணப்படும் இந்த அழகைப் பருகக் கண்கள் கோடி வேண்டும். கண்களைக் குளிரச் செய்யும் இயற்கை அன்னையின் இந்த நிறம் மாறிய இலைகளின் அழகைப் பருக பல ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து படையெடுப்பர்.

வட அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களில் "ஃபால் கலர்ஸ்'  உள்ள மரங்கள் அதிகம் காணப்படுவதால் அவற்றை ரசித்து புகைப்படங்களில் பதிவு செய்து தங்கள் வாழ்நாளில் மிகச்சிறந்த தருணத்தைப் பதிவு செய்வதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து மக்களளும் தங்கள் குடும்பத்துடனும் காதலர்களும் மூத்த குடிமக்களும் வருவதுண்டு.

திரைப்படங்களில் மட்டுமே இத்தகைய காட்சிகளைக் கண்டுகளிக்கும் வாய்ப்புக் கிடைத்தவர்கள் நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் அந்தி வானம் சிவந்த மஞ்சள் எனப் பாடி மகிழ்ந்து ஆறுதல் கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை.

மேப்பிள்: 

டைனோசர்கள் இருந்த காலங்களிலேயே இம்மரங்கள் இருந்ததாகக் கருதப்படுகிறது.

இம்மரங்களின் பிறப்பிடம் நம் ஆசியாக் கண்டமே. 128 இனங்கள் உள்ள இம்மரம் 10 மீட்டர் முதல் 40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. இவற்றின் ஆயுள்காலம் 80 ஆண்டுகள் முதல் 400 ஆண்டுகள் வரை எனக் கூறப்படுகிறது.

உலகில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சுற்றுச் சூழலுக்கும் இயற்கைக்கும் முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இயற்கையின் முக்கியத்துவத்தை மதிக்கும் அமெரிக்கா போன்ற நாடுகள் கடவுள் கொடுத்த இயற்கைக் கொடையை அழிக்காமல், அழிக்க விடாமல் போற்றிப் பாதுகாப்பதால் இம்மரங்களின் இனங்கள் அழியாமல் உள்ளன.

வியத்தகு பயன்பாடுகள்: 

மரத்தின் அடிப்பகுதியில் துளையிட்டால் அதிலிருந்து ஒரு வகையான இனிப்பு நீர் பெரும்பாலும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சுரக்கிறது. இந்த நீரை வடிகட்டி காய்ச்சி குடிநீராகப் பயன்படுத்துகின்றனர் அமெரிக்கர்கள். சில வகை உணவுகளில் சுவையைக் கூட்டவும் இந்நீர் பயன்படுத்தப்படுகிறது.

மேப்பிள் மரம் ஒலி அதிர்வுகளை உள் வாங்குவதால் இசைக்கருவிகள் செய்யவும், விலையுயர்ந்த மரச்சாமான்கள் / தளவாடங்கள் செய்யப் பயன்படுவதுடன் இதன் பட்டை பலவகைத் தோல் வியாதிகளுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. கனடா நாட்டு நாணயத்திலும், கனடாவின் கொடிச் சின்னமாகவும் மேப்பிள் இலை உள்ளது எனும் போதே அதன் சிறப்பை உணர முடிகிறது.

அனுபவித்து நுகர :

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்பவர்கள் செப்டம்பர், அக்டோபர் மாதங்களைத் தேர்ந்தெடுத்துச் சென்றால் இந்த வியப்பூட்டும் ஃபால் கலர்களைக்  கண்டு மகிழலாம். வெளிநாடு செல்ல வாய்ப்பில்லாதவர்களும் வருந்தத் தேவையில்லை.

இவ்வதிசய மரத்தின் அழகை நம் நாட்டிலும் சிம்லா, ஸ்ரீநகர் போன்ற இடங்களுக்குச் சென்று அனுபவித்து நுகரலாம். 

படம் : மதுனிகா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com