வறட்சிப் பகுதியில் காலிஃபிளவர்!

வறட்சிப் பகுதியான கமுதியில் முதன்முறையாக காலிஃபிளவர் சாகுபடி செய்து பொறியியல் பட்டதாரி சாதனை படைத்துள்ளார்.
வறட்சிப் பகுதியில் காலிஃபிளவர்!

வறட்சிப் பகுதியான கமுதியில் முதன்முறையாக காலிஃபிளவர் சாகுபடி செய்து பொறியியல் பட்டதாரி சாதனை படைத்துள்ளார்.

"வறட்சி மாவட்டம்' , "வானம் பார்த்த பூமி' என பல்வேறு அடைமொழிகளுடன் ராமநாதபுரம் மாவட்டம் விளங்கி வருகிறது. இந்த மாவட்டத்தில் நெல், பருத்தி, சோளம், நிலக்கடலை, மிளகாய், உளுந்து என குறிப்பிட்ட மானவாரி பயிர்கள், ஒரு சில தோட்டக்கலை பயிர்கள் மட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது.

கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பருவ மழை சரிவர பெய்யாததால், ஆழ்துளைக் கிணறு, சொட்டுநீர்ப் பாசனம், தெளிப்புநீர்ப் பாசனம் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் குறைந்த அளவு தண்ணீர் செலவாகும் வகையில் விவசாயம் செய்யப்படுகிறது. இதன்படி, மலைப் பிரதேசங்களில் பயிரிடப்படும் தோட்டக்கலை பயிர்கள், காளான் வளர்ப்பு உள்ளிட்ட மாற்று விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், கமுதி அருகேயுள்ள வல்லந்தை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணன் மகன் சுரேஷ்(29) என்பவருக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது.

பொறியியல் பட்டதாரியான இவர், சென்னையில் ஐ-போன் தனியார் நிறுவனத்தில் 6 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். குடும்பச் சூழ்நிலையால் சொந்த ஊருக்கு வந்து 10 ஏக்கர் விவசாய நிலத்தில் தனது தந்தைக்கு உதவியாக இருந்து விவசாயம் செய்து வருகிறார்.

மழையை மட்டும் நம்பாமல் மாற்று விவசாயத்தை மேற்கொள்ள முடிவு செய்து, தனது நண்பர்களின் ஆலோசனையின்பேரில் தனியார் கடையில் காலிஃபிளவர் விதைகளை வாங்கி 1 ஏக்கரில் சாகுபடி செய்துள்ளார். தற்போது நல்ல வளர்ச்சியடைந்து அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ளது. மேலும் தனது விவசாய நிலத்தில் சோதனை அடிப்படையில் முள்ளங்கி, கேரட், சேனைக் கிழங்கு, பீட்ரூட் ஆகிய தோட்டக்கலை பயிர்களையும் நடவு செய்துள்ளார்.

கமுதி பகுதியில் வழக்கமாக சாகுபடி செய்யப்படும் நெல், கடலை, பருத்தி, சோளத்துக்கு மாற்றாக குறைந்த அளவு தண்ணீரில் தோட்டக்கலைப் பயிர்களை நடவு செய்து, சுரேஷ் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்.

இதுகுறித்து சுரேஷ் கூறியதாவது:

""மலைப்பிரதேசங்களில் மட்டுமே சாகுபடி செய்யப்படும் காலிஃபிளவர் வறட்சிப் பகுதியான கமுதியில் பயிரிடப்பட்டு நல்ல விளைச்சலையும் தருகிறது. 6 மாதங்களில் 3 முறை சாகுபடி செய்து நல்ல லாபம் பெறலாம். மா, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு இடையே ஊடு பயிராக காலிஃபிளவர் பயிரிட்டால் நிழல் பாங்கான பகுதியில் செடியின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். 1 ஏக்கருக்கு 8 ஆயிரம் செடிகளை நடவு செய்யலாம். குறைந்த செலவு, குறைந்த தண்ணீர் வசதி இருத்தாலே போதுமானது. மற்ற விவசாயிகளும் மழையை நம்பி இருக்காமல் மாற்று விவசாயத்தில் ஆர்வம் காட்ட வேண்டும்'' என்றார்.

இதுகுறித்து கமுதி தோட்டக்கலை உதவி இயக்குநர் ரவிக்குமார் கூறுகையில், """"சுரேஷ் போன்ற விவசாயிகளைக் கண்டறிந்து ஊக்குவித்து வருகிறோம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com