மரபின் பிள்ளை; புதுமையின் தோழன்! - சிற்பி பாலசுப்பிரமணியம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த சிற்பி பாலசுப்பிரமணியம் கவிஞர், மொழி பெயர்ப்பாளர், பேராசிரியர்,இதழாசிரியர், கல்வியாளர் என பன்முகம் கொண்டவர்.
மரபின் பிள்ளை; புதுமையின் தோழன்! - சிற்பி பாலசுப்பிரமணியம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த சிற்பி பாலசுப்பிரமணியம் கவிஞர், மொழி பெயர்ப்பாளர், பேராசிரியர்,இதழாசிரியர், கல்வியாளர் என பன்முகம் கொண்டவர். விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கிய இவர், பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். மொழி பெயர்ப்புக்காகவும், படைப்பிலக்கியத்துக்காகவும்2 முறை சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ள சிற்பி. 2022 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவருடைய சிறப்பு நேர்காணல்:

கவிதைக்கான இலக்கணம் என்ன? ஒரு நல்ல கவிதை என்ன செய்ய வேண்டும்?
"கவிதைக்கு இலக்கணம் சொல்வதும், கடவுளுக்கு இலக்கணம் சொல்வதும் ஒன்றுதான். மரங்களில் இலைகள் துளிர்ப்பது போல் துளிர்ப்பது கவிதை' என்பது கீட்சின் கருத்து. "பொங்கிப் பெருகும் கோதாவரி நதியை சான்றோர் கவி போன்றது' என்று சொன்ன கம்பன், கவிதையின் பண்புகளாக புவிக்கு அணி, சிறந்த பொருள், அறிவுக்கு விருந்து, ஒளிவு, நல்ல ஓட்டம், திணையும் துறையும் மேம்படுதல் ஆகியவற்றைக் கூறுவான்.

பாரதியைக் கேட்டால், "கள்ளையும் தீயையும் சேர்த்து நல்ல காற்றையும் வானவெளியையும் சேர்த்துச் செய்யப்படுவது கவிதை' என்பான்.

கள் போன்ற மயக்கம், தீ யெனத் திகழும் ஆற்றல்,காற்று போன்ற உயிர்ப்பு, வான வெளியென எல்லையொன்றின்மை என்பவற்றைக் கலந்து செய்தது கவிதை என்பான்.

நம் காலத்தில் வாழும் மேதமை மிக்க மலையாளக் கவி சச்சிதானந்தன் சொல்லுவார், "எல்லோரும் உறங்கும்போது விழித்திருக்கும் கண், எந்தச் சட்டங்களாலும் அடக்க முடியாத வாய், சக்கரவர்த்தியின் உம்மணத்தைக் கூவிச் சொல்லும் குழந்தை கவிதை'.

இலக்கணம் சொல்லச் சொல்ல அடங்காமல் விரியும் கவிதையை "தி எக்ஸ்பாண்டிங் யுனிவர்ஸ்' விரிந்து கொண்டேயிருக்கும் பிரபஞ்சம் என்று கூறுதல் பொருந்தும்.

என்னைப் பொறுத்தவரை "நுண்ணுணர்வுகளின் விளையாட்டரங்கம் கவிதை' என்று கூறுவேன். கசப்பான உண்மைகளைக் கூட அடி நாக்கில் தித்திக்கச் சொல்லும் கலை என்றும் செப்பலாம். நல்ல கவிதை மெளன சங்கீதம் போல மனதுக்குள் அலை வீசும் கடலாக இருக்கும்.

புதுக்கவிதை உலகில் வானம்பாடி இயக்கம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது, இளம் தலைமுறையினருக்கு மீண்டும் கூறுங்கள்?

பாரதியிடம் வேர்விட்டு, "மணிக்கொடி'யில் தளிர் விரித்து, "எழுத்து' இதழில் நடவு செய்த நந்தவனமானது புதுக்கவிதை. அதிலிருந்து பிரிந்த கிளைகள் இரண்டு. "கசடதபற', "வானம்பாடி'. எழுத்து மரபைச் செழுமைப்படுத்தியது கசடதபற, எழுத்து மரபிலிருந்து மாறுபட்டு வெகுமக்கள் சிக்கல்களைக் கவிதையாக்க முற்பட்டது வானம்பாடி. அதற்கு ஒரு மார்க்சிய சாய்வும் இருந்தது.

வானம்பாடியின் முழுப் பெயர் "மானுடம் பாடும் வானம்பாடி' என்பதாக இருந்தது. அதுவே அதன் அடையாளம். லட்சிய வெறி கொண்ட, சாதனைத் தீரம் கொண்ட ஓர் இளைஞர் படையாக கோவையில் எழுந்தது வானம்பாடி. இது பெரிதும் தமிழாசிரியர்களின் பாசறையாகவே இருந்தது. மரபுத் தெளிவும், அதனை மீறும் ஆவலும் வானம்பாடிக் கவிஞர்களிடம் இருந்தது.

கவிதை எழுதும் ஆர்வத்தைப் பரவலாக்கியது வானம்பாடி, சிற்றிதழ்களில் கவிதையை மட்டுமே வெளியிடும் இதழாக இருந்தது. பிற்காலத்தில் பெண்ணிய, தலித்திய கவிதைகள் வீறு கொண்டெழ ஒரு விதைப் பண்ணையாக இருந்தது வானம்பாடி. ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது வானம்பாடி.

விமர்சனப் பார்வையைத் தானும் முன்வைத்து, தன்னையும் அதற்குக் களமாக்கிக் கொண்டது வானம்பாடி. கவிதைகளைக் செதுக்கியும் புதுக்கியும் (எடிட் செய்து), ஆசிரியர் குழுவால் விவாதிக்கப்பட்டு வெளியிட்டோம். குறியீடும், உருவகமும், கேலியும் கவிதைகளில் தூக்கலாக இருந்தன. சுதந்திரம் என்ற தலைப்பில், "இரவிலே வாங்கினோம் இன்னும் விடியவே இல்லை' என வெளிவந்த கவிதை கூடப் பளிச்சென்று வாசகனிடம் போனது "எடிட்' செய்ததால்தான். பெரிய வாசகப் பரப்பை இந்தச் சிற்றிதழ் பெற்றிருந்தது. மலேசியா, ஈழம் போன்ற நாடுகளிலும் இதன் தாக்கம் இருந்தது.

எத்தனை சாதித்தோம் என்று சொல்வதை விட எல்லாத் திசைகளில் இருந்தும் தாக்கப்பட்டோம் என்பதே உண்மை.

காவல் துறையின் விசாரணை, தமிழ்ப் புலவர்களின் கடும் எதிர்ப்பு, "கசடதபற' இதழின் தாக்குதல் என எல்லாமே இருந்தது. கனம் இருந்ததால் கல்லடி பட்டோம் என்றும் சொல்லலாம். இதழாக மட்டுமில்லாமல் சில காலமேனும் இயக்கமாக இருந்தோம்.

மீண்டும் அது போன்ற இயக்கங்கள் தோன்றுமா, தோன்ற வேண்டிய அவசியம் உள்ளதா?

"ஜாரின் கொடுமை தாங்கா ருசியம் ஏருற லெனினை ஈன்றே தீரும்' என்பார் பாரதிதாசன். காலமும் சூழலும் பொருத்தமாக அமைந்து, தேவையின் உந்துதலும் இருந்தால் இயக்கம் தோன்றும். அவசியம் உண்டா என்றால் உண்டு.
ஏனெனில் தடைகளும் குறுக்கீடுகளும் வரும்போது எதிர்ப்பு இயக்க வடிவம் பெறும். வானம்பாடிகள் காலத்தில் ஆந்திரத்தில் திகம்பரக் கவிகள் இருந்தார்கள்.

அதுபோல அரசியல் கூர்மையும் பார்வையில் நேர்மையும் இருந்தால் தோன்றும். எனினும் தனிமனித வாதம் அலைக்கழிக்கும் இன்றைய நுகர்வு யுகத்தில் அத்தகைய எழுச்சி ஏற்படுவது அரிது. துணிவு, தொண்டு, தூய இலக்கு ஒன்று கூடினால் இது நேரலாம்.

தமிழில் கவிதை, உரைநடை எவ்வளவு தூரம் வளர்ந்துள்ளது, இன்னும் எத்தனை தூரம் பயணிக்க வேண்டியுள்ளது?

தமிழ் இலக்கியம் மிகச் செழுமையாகவே வளர்ந்து வருகிறது. எல்லாவற்றையும் மேலைநாட்டு அளவுகோல்களையும், கோட்பாடுகளையும் வைத்து அளக்க வேண்டியதில்லை. கவிதையில் பாரதியும் உரைநடையில் புதுமைப்பித்தனும் எல்லைக் கற்கள். வங்கத்தில் தாகூர் போல அவர்களைக் கடப்பது எளிதல்ல.

ஆனால் இன்றைய தலைமுறை ஆயிரம் காலால் எழுந்து நிற்கிறது. மெலிதான வட்டாரச் சுவையேடு இலக்கியம் படைத்த ஆர்.சண்முகசுந்தரத்தின் காலம் அல்ல இது. கரிசல் வட்டாரத்தையே ஒரு வாழ்க்கைப் பரிசோதனைக்களமாக்கிய கி.ரா.வின் காலம். குறைந்த அளவு எழுதிப் புகழ் பெற்ற மெளனியின் காலமல்ல. மலை மலையாய் எழுதிக் குவிக்கின்ற ஜெயமோகன்களின் காலம்.

வாழ்வின் அழுத்தங்களை மையப்படுத்தும் இளம்பிறையும் இங்கு உண்டு. கவிதையின் சுவடுகள் கடந்து சரித்திரங்களாக கங்காபுரம், சராசரி வாழ்வாக சாலாம்புரி என இறக்கை கட்டிப் பறக்கும் வெண்ணிலாக்களும் உண்டு. கண்மாய்க் கரையின் இயற்கையழகில் சோ.தர்மனோடு கைகோர்க்கவும், நுட்பமான வாழ்வின் கூறுகளோடு மனித இயற்கையைப் பிணைக்கும் சு.வேணுகோபாலோடு தோழமை கொள்ளவும் வாய்ப்புகள் உண்டு. இங்கே எழுத்தின் பன்மைத்துவம் அபாரமாக இருக்கிறது. களம் அமைக்க இதழியல் பரப்பளவுதான் போதாததாக இருக்கிறது. வளமான இலக்கியம் படைக்கும் இளம் எழுத்துக்கள் அணிவகுத்து நிற்கும் தருணம் இது.

விருதுகளுக்காக எழுத நினைப்பவர்களுக்குத் தங்கள் அறிவுரை என்ன?

அர்ப்பணிப்பு மிக்க எழுத்துக் கலைஞர்கள் விருதுகளுக்காக இலவு காத்த கிளிகளாக இருக்கமாட்டார்கள். விருதுகளைக் கனவு காண்பவன் தூண்டில்காரன். நமக்குத் தேவை மூச்சடக்கி மூழ்கி முத்தெடுப்பவர்கள். விருதுகளுக்காக அலைவது வீண் வேலை. நல்ல எழுத்து அற்புதமான வாசகனைத் தரும். அதுவே இணையற்ற விருது. என் அனுபவ உரை: விலகி விலகிப்போ, நெருங்கி நெருங்கி வரும்.

சிற்பியின் படைப்புக் கொள்கை என்ன?

நான் மரபின் பிள்ளை: புதுமையின் தோழன். என் களம் என் மண். என் பாத்திரங்கள் என் மனிதர்கள். என் பின்புலம் தமிழ் இலக்கியம். மற்றவையும் மற்றவர்களும் எனக்கு விருந்தினர்கள் மட்டுமே.

சிற்பியைப் பாதித்த படைப்புகள் படைப்பாளிகள் யாவர்?

நாலு பேருக்கு நன்றி என்பது பழமொழி. அந்த நான்கு பேர் இளங்கோ, கம்பன், பாரதி, புதுமைப்பித்தன். தமிழ்த் தேசியத்துக்கு இளங்கோ. மொழியின் ஆழ, நீள, அகலங்களுக்கு கம்பன். தமிழின் விடியலுக்கு பாரதி. உரைநடையின் உச்சத்துக்கும் வாழ்க்கையின் ஆழ்ந்த சித்தரிப்புக்கும் புதுமைப்பித்தன். எஸ்.ஆர்.கே., ஆர்.கே.கண்ணன் எனக்கு ஆதர்சம் தந்தவர்கள். கவிதா விசாலத்துக்கு ஷெல்லியும், பாப்லோ நெருடாவும், அரூப் சிவராமும், மலையாளக் கவி சச்சிதானந்தனும், என் பிள்ளைப் பிராயத்தில் கவிதைச் சுவை கமழ வைத்த "இளவேனில்' படைத்த சோமு.

மொழி பெயர்ப்பு முக்கியத்துவம்...

மொழி பெயர்ப்பு நம் வீட்டுக்கு வாய்த்த ஜன்னல். நான்கு திசைக் காற்றும் நடமாடும் சாளரம். பிற மொழிகளில் பிற நாடுகளில் நடப்பனவற்றை அறிவிக்கும் இலக்கியத் தூதுவன். புதிய உத்திகள், புதிய மொழி நடை, புதிய பண்பாடுகள் ஆகியவற்றை உணர்த்தும் ஒளிவிளக்கு. உலக மக்களிடையே அன்பையும், ஒற்றுமையையும் வளர்க்கும் நட்புப் பாதை. நம்மை மற்றவர்களுக்கு உணர்த்தவும் உரிய வாயில்.

இப்போதும் சிறப்பாக எழுதும் படைப்பாளிகள் என்றால் யாரைக் குறிப்பிடுவீர்கள்?

அள்ளிக் கொள்ள, அரவணைத்துக் கொள்ள எத்தனை வகை வகையான எழுத்துக்கள்.

மூத்தவர்களை விட்டு விட்டுச் சில இளையவர்கள் அல்லது அதிகம் அறிமுகம் பெறாதவர்களைச் சொல்லுகிறேன். சாதாரண சொற்களில் அசாதாரண உணர்வை மீட்டிய நா.முத்துக்குமார், சங்கச் செவ்வியுடன் காதலைச் சொல்லும் பழநி பாரதி, அதிஸ்யா என்ற குழந்தைக் குதூகலத்தோடு வலம் வரும் அம்சப் ப்ரியா, மனிதத்தின் துளிகளை அடையாளம் காணும் ஜே.மஞ்சுளா தேவி, அரூப வாசனைக்காரரான இரா.பூபாலன்.

இன்று இல்லையென்றாலும் என்னோடு எப்போதும் இருப்பவர்கள் ஜெயகாந்தனும், ரகுமானும், மீராவும், கங்கை கொண்டானும். வாழ்பவர்களில் புவியரசு, எஸ்.ரா.ஜெயமோகன், இந்திரன் ஆகியோரின் பணி மறக்க முடியாதது.

உங்களின் வாழ்நாள் லட்சியம் ...

என் வாழ்க்கைக் குறிப்புகளை எழுதுவது, புதுக் கவிதையில் ஒரு குறுங்காவியம் வடிப்பது, சிற்பி அறக்கட்டளை மூலம் இன்னும் சிறப்பாகக் கவிஞர்களைக் கெளரவிப்பது, சங்க இலக்கியம் முழுவதற்கும் எளிய உரை எழுதுவது, திருக்குறளின் தத்துவம் குறித்து நூல் படைப்பது, வாழ்நாளின் கடைசி நாள் வரை எழுதிக் கொண்டேயிருப்பது.

தமிழ் இலக்கிய உலகம் செய்து முடிக்க வேண்டிய கடமைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

இலக்கியம், காலம் போல் முப்பரிமாணம் கொண்டது. அதனை நேற்று இன்று நாளை என்ற திசைகளில் ஆராய்வதும், வளப்படுத்துவதும் தேவை. அதேநேரம் ஒரே பணியைத் திரும்பத் திரும்பச் செய்வது உழைப்பின் வறுமை. நம் குழந்தைகளுக்கான இலக்கிய களம்வளமாக இல்லை. அறிவியல் கதைகளை எழுதிக் குவித்து அவர்களின் சிந்தனையைக் கூர்மைப்படுத்துவது அவசியம்.

புதிய ஆய்வுக் களங்களை அடையாளம் காண வேண்டும். அண்மையில் ஒரு ஆங்கில அகராதியைப் பார்த்தேன்."தி டிக்ஷனரி ஆஃப் இமேஜினரி ப்ளேஸ்' என்பது அந்நூலின் பெயர். இலக்கியங்களில் வரும் கற்பனை ஊர்களைப் பற்றிய ஒர் அகராதி. எண்ணிப் பார்க்காத இத்தகைய நவீன சிந்தனைகளை வளர்க்க வேண்டும் இதற்கு விரிந்த வாசிப்பும் அவசியம்.

புதிது புதிதாக எண்ணுவதும், எழுதுவதும்தான் நம் இலக்கியக் கடமையாக இருக்க வேண்டும். ஒரு எழுத்தாளன் சமுதாயத்தின் மனச்சாட்சியாக மட்டும் இருந்தால் போதாது. மாக்சிம் கார்க்கி சொன்னது போல அவன் அனைத்தையும்
உருவாக்கும் பொறியியலாளனாகவும் "இஞ்ஜினியர் ஆஃப் தி ஹியூமன் úஸால்' எழுத்து ஆன்ம தரிசனம் என்ற உணர்வை உண்டு பண்ணுவது இலக்கிய உலகின் கடமை. இதற்கு மேல் அறிவுரை சொல்ல நான் பொருத்தமானவன் அல்ல.

பத்ம விருது கிடைத்தது பற்றி...

50 ஆண்டுகளுக்கு மேலாக கல்வியாளனாகவும், படைப்பாளனாகவும் இருந்து வருகிறேன். அந்த பணி பாராட்டப்படுகிறது என்ற மகிழ்ச்சியை இந்தத் தேசிய விருது அளிக்கிறது. இதற்காக இந்திய அரசுக்கு என் நன்றி, இந்த விருதுக்கு
என்னைப் பரிந்துரைத்தவர்களுக்கு என் வணக்கம்.

ஒரு வேண்டுகோள் மட்டும் கூற விரும்புகிறேன். இந்திய தேசியம் வலுப்பெறும் வகையில் இந்திய அரசு திருவள்ளுவர் பெயரால், எழுத்தச்சன் பெயரால், இன்னும் தாகூர் பெயரால் இத்தகைய விருதுகளை வழங்கினால் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவும் அன்பு பாராட்டவும் விருதுகள் காரணமாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com